இன்று காலை தஞ்சைக்கு வந்த மாநாட்டுத் தலைவர் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு!
தஞ்சாவூர், பிப்.22 தஞ்சாவூர் திலகர் திடலில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நினைவுப் பந்தல் - மறைந்த கழகப் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி அரங்கத்தில் நாளையும், நாளை மறுநாளும் (23, 24.2.2019) நடைபெறவிருக்கும் திராவிடர் கழக மாநில மாநாடு, சமூகநீதி மாநாடுகள் இப்பொழுதே களைகட்டி விட்டன.
இன்று (22.2.2019) காலை உழவன் விரைவு ரயில் வண்டிமூலம் தஞ்சாவூர் சந்திப்பு சென்றடைந்த தமிழர் தலைவரை - மாநாட்டுத் தலைவரை கழகத் தோழர்கள் திரளாகக் கூடி வரவேற்றனர். சால்வைகளும் அணிவித்து வரவேற்பு முழக்கங்களை விண்முட்ட முழங்கினர்.
மாநாட்டு விளம்பரங்கள், பதாகைகள், சுவர் எழுத்து கள், நகரமெங்கும் கழகக் கொடிக் காடுகள், மாநாட்டுக்குக் கட்டியங் கூறுகின்றன.
தஞ்சை மக்கள், திலகர் திடலில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தல் - கண்காட்சி அரங்கினை ஆர்வமுடன் வந்து பார்க்கத் தொடங்கினர்.
திராவிடர் கழகம் தேர்தலில் நிற்கும் கட்சியல்ல - சமுதாயப் புரட்சி இயக்கம் என்றாலும், தேர்தல் நெருங்கிவரும் நேரமாதலாலும், மாநாடுகளில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கலந்துகொண்டு அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை அலச இருப்பதாலும், இரு மாநாடுகளிலும் தனித்தனியே இந்தக் காலகட்டத்திற்குத் தேவையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாலும், குறிப்பாக திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை ஒன்றினை (Dravidian Manifesto) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வெளியிட இருப்பதாலும் மாநாடுகள் மிகுந்த எதிர்ப்பார்ப்பாகவே நடைபெற உள்ளன.
மாநாட்டையொட்டிய பேரணி நாளை - சனி பிற்பகல் நகரத்தை வலம் வர இருக்கிறது.
தஞ்சை மேலவீதி மத்திய கூட்டுறவு வங்கி அருகில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தனி மேடையில் இருந்து பேரணியைப் பார்வையிடுகிறார்.
ஊர்வலத்தில் பல்வேறு அம்சங்களும், இராணுவ மிடுக்கான அணிவகுப்புகளும் உண்டு.
மும்பை, பெங்களூரு முதலிய வெளிமாநிலங் களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக தனித்தனி வாகனங்களிலும், பேருந்துகளிலும் குவிகிறார்கள், குவிகிறார்கள்.
எத்தனை எத்தனையோ மாநாடுகளை நடத்தி மகுடம் சூடிய தஞ்சை, இப்பொழுதும் புதுக் காவியம் படைக்க இருக்கிறது - வாரீர்! வாரீர்!! என்று வரவேற்புக் குழுவினர் அழைக்கிறார்கள்!
நாளை (23.2.2019) மாநாட்டில்
திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை - அறிவிப்பு
(Dravidian Manifesto)
கழகத் தலைவர் வெளியிடுகிறார்