Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

வரலாறு படைத்த கழக மாநாடுகள் வாகை சூடின!

$
0
0

வேலூரில் அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவும் வரும் மார்ச்சு 10இல் வரலாறு படைக்கும்

தமிழர்களே திரள்வீர்! திரள்வீர்!!

தஞ்சையில் இரு பெரும் மாநாடுகளை நடத்தி வரலாறு படைத்த நாம், நமது அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவையும் -& அவர் பிறந்த வேலூரில் வரும் மார்ச்சு 10ஆம் தேதி நடத்தி வரலாறு படைப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நமது மாநில மாநாடுகள் தஞ்சையில் நடை பெற்றவை மிகவும் குறுகிய கால அவகாசத்துடன் - சுமார் 20, 25 நாட்களிலேயே எல்லா மாநாட்டுப் பணி களும் நடந்தேற வேண்டிய நெருக்கடியும், நிர்பந்தமும் ஏற்பட்டும், தஞ்சைத் தோழர்கள், பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள் - எல் லோரது ஒன்றுபட்ட உழைப்பும், வரவேற்பும் வியக்கத் தக்கதாகவும் பாராட்டத்தக்கதாகவும் அமைந்தன!

முக்கியமாக அம்மாநாட்டின் சிறப்புகளில் தலையாயது திராவிடக் கொள்கை அறிக்கைப் பிரகடனம் (Dravidian Manifesto) அறிவிப்பும்,  அதற்குக் கிடைத்த மகத்தான வரவேற்பும், ஆதரவுமே!

பங்குகொண்ட கட்சிகளில் பலரும் அதனை ஏற்று வழிமொழிந்ததுபோல் ஆற்றிய உரைகள், இது ஒரு வரலாற்றுக் கொள்கை ஆவணம் என்பதற்குச் சிறந்த சான்றுகளாகும்!

இரண்டு மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் கலந்துகொண்ட அத்துணைக் கட்சித் தலைவர்களும் மிகவும் மகிழ்ச் சியுடன் வரவேற்றுப் பாராட்டி வழிமொழிந்து உரை யாற்றியது தனித்ததோர் வரலாற்றுப் பெருமையாகும்!

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் நூற்றாண் டின் முன்னோட்டக் கருத்தரங்கம் நம் மாநாட்டின் வெற்றி மகுடத்தில் பதிக்கப்பட்ட முத்து ஆகும்!

தளபதி மு.க. ஸ்டாலின் பிரகடனம்!

தி.மு.க. தலைவராக, முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞருக்குப் பின், பொறுப்பேற்ற  தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மதவெறி, ஜாதிவெறி, பதவி வெறிச் சக்திகளுக்கும், பார்ப்பன ஆதிக்கச் சக்திகளுக்கும் முகத்தில் அறைந்தது போன்று செய்த கொள்கைத் திட்டப் பிரகடனம் சுட்டிக்காட்டப்பட வேண்டிய சிறப்புடைய ஒன்றாகும்!

பெரியார் திடல்தான்!

"பெரியார் திடல்தான் கலங்கரை வெளிச்சமாய் நின்று தி.மு.க.வுக்கு வழிகாட்டும்" என்ற அவரது பிரகடனம் போன்ற முழக்கம், திராவிடர் இயக்க வர லாற்றுத் தொடர்ச்சியாய் என்றும் நிற்கும் தெளிவுமிக்க ஒன்றாகும்!

பார்ப்பன ஏடுகளும், சில எழுத்தாளர்களும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், திராவிடர் கழகத்திலிருந்து சற்றே விலகி நில்லும் பிள்ளாய் என்ற வீண் அறிவுரையை வழங்கினர்.

அவர்கள் இதன்மூலம் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியிருப்பார்கள் என்பது நிச்சயம்!

கடுமையாக உழைத்த கழகச் சிங்கக் குட்டிகளுக்கு இது நல்ல கொள்கை விளைச்சலின் அறுவடையாகும்! அரிய பரிசாகும்!

வருகின்ற தேர்தலில் மதவெறி, ஜாதிவெறி, பதவி வெறிச் சக்திகளைத் தோற்கடிக்க விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள், சரியான நேரத்தில், சரியான வழி காட்டுதலாக அமையும் என்பது நிச்சயம்!

தஞ்சையில் இருநாள் மாநாடுகளின் எழுச்சி!

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, திருச்சி, தஞ்சை மற்றும் சில நகரங்களில் நமது மாணவரணி  - இளைஞரணி - மகளிரணி - கழகப் பொறுப்பாளர்கள் ஒத்துழைப்போடு கடைவீதி வசூல் என்ற பிரச்சாரப் பெரு மழையைப் பொழிந்தார்கள்.

நம்மைப் பொருத்தவரை மக்கள் இயக்கமாகவே என்றென்றும் தொடருகிறது என்பதற்கான சான்று அதுதான்!

நமக்கு நன்கொடை நல்கியோர் யார்?

வழக்கமான  'முதலாளி இல்லை'; என்று உரிமை யாளரே சொல்லும் பொய்யைக் கேட்டுப் பழகிய நமது மாணவ, இளைஞர், மகளிர் அணித் தோழர்கள் சற்றும் பொறுமை இழக்காமல், அவர்கள் குறுக்கே கேட்ட கேள்விகள் - "உங்களுக்கில்லாத பணமா?" என்றவர்களிடம் - 'ஏன் வசூல் செய்கிறோம்' என்றும், நமது கழகம் நடத்தி வரும் கல்வி, மருத்துவ, சமூக நலப் பணிகளைப் பற்றியும், பல்கலைக் கழகம் முதல், ஆரம்ப மழலையர் பள்ளி வரை நாம் நடத்தும் தொண்டறப் பணிகளைப் பற்றியும் நமது இளஞ் சிறுத்தைகள் நியாயம் கலந்த குரலில் சொல்லி விளக்கியபின் உணர்ந்து பலரும் நன்கொடை தந்து அனுப்பிய செய்தி, நமக்குத் தேனாகச் சுவைத்த செய்தியாகும்!

இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் விரும்பத் தகாத  செயல்கள் ஒரு சில அரசியல் கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெருத்த ஆடம்பரம் பொதுக் கூட்டங்களில் என்பது ஒருபுறம் வழமை என்பதோடு, தானாக வருகின்றவர்கள் கூட்டம் குறைந்து பணம் கொடுத்தும், எழுதவே கூசுகிற இன்னும் சிலவற்றையும் தந்து சுற்றுலாபோல் அழைத்து வரும் வழக்கம் வந்து நிலைத்து விட்டது!

மாநாடு, கூட்டம், விழாக்கள் முடிந்து பணப் பட்டு வாடாக்கள் சிறிதும் 'லஜ்ஜை'யில்லாமல்  நடை பெறுவதும் கண்கூடாக நாம் காணும் வெட்கப்பட வேண்டிய காட்சி!

மாணவர்கள் தேர்வு - பெற்றோர்கள் பலர் வர இயலாமல், பல்வேறு திருமணங்கள் நடைபெற்ற நாட்களாக அமைந்தும் தோழர்கள் கூடினர். பேரணி பெரு வெற்றியில் அமைந்தது.

இதற்கெல்லாம் ஆட்படாது, நன்கொடை கொடுத்து விட்டு, அவரவர் சொந்தச் செலவில் வந்து கூடி, திரும்பும் கொள்கைக் குடும்பங்கள் சங்கமமாகத் திகழ்ந்தது என்கிறபோது பாலைவனத்து சோலையாக - 'ஓயாசிஸ்சி' ஆக 'நமது இயக்கம் 2 நாள் மாநாடுகள் (பொதுவாக இப்போது பெருத்த வசதியுள்ள கட்சிகள்கூட, 2 நாள் மாநாடுகள் நடத்துவது இல்லை) கூட்டி, கலந்துரையாடி, கொள்கைப் பிரகடனங்களைச் செய்து, தீர்மானங்களை நிறைவேற்றி 'கொள்ளை மகிழ்ச்சி'யுடன் ஊர்திரும்பும் கருஞ்சட்டைக் கடமை வீரர்கள் பட்டாளம் நம்முடையது.

தஞ்சையே கழகக் கொடிகளின் காடாகக் காட்சி அளித்தது. சமுகநீதி மற்றும் அறிவியல் கண்காட்சிகள் கண்ணுக்கும், கருத்துக்கும் மிகப் பெரிய  விருந்தல்லவா? சோர்வோ, சுணக்கமோ இன்றி, சுறுசுறுப்பில் எறும்பையும், தேனீக்களையும் மிஞ்சியவர்களாக ஓடோடி கடமை புரிந்தனர் நமதரும் தோழர்கள்.

நம் அழைப்பு ஏற்று வந்து கருத்துரை வழங்கிய நமது தலைவர்கள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், உரை வீச்சுகளே உன்னதங்களின் உச்சம்; வீழ்ந்து படாத விழுமியங்களின் எச்சம் என்பதாக அமைந்திருந்தன.

அவர்கள் அத் துணைப் பேருக்கும் நமது அன்பும், மரியாதையும் கலந்து நன்றியினைத் தெரி வித்துக் கொள் கிறோம்.

எப்போதுமே நமது இயக்கம் ஒரு பெருவிழா  - திருவிழா-  நடத்தி விட்டு ஓய்ந்து விடாது; கீழே சாய்ந்து விடாது!

இதோ அடுத்த 10 நாட்களில் வேலூர் - நம் அன்னையார் பிறந்த ஊரில் - அவரது நூற்றாண்டு விழா (ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் பிரச்சாரப் பெரு விழாவின்) துவக்கப் பணிகளைத் துவக்கிவிட்டோம்!

மாநில அமைப்பாளர் தோழர் உரத்தநாடு குணசேகரன், அமைப்புச் செயலாளர் தர்மபுரி ஊமை ஜெயராமன் ஆகியோர் திட்டமிடும் பணிக்குத் தோழர்களைக் கலந்து நடத்திட தலைமைக் கழகத்தால் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவு தந்து வேலூர் விழாவை வெற்றி விழாவாக்கிடுவது - ஒவ்வொரு கழகப் பொறுப்பாளர்களின் தலையாய கடமையாகும்.

அனைத்து அணிகளும் தத்தம் கடமை ஆற்றிட இப்போதே ஆயத்தமாகி, வேலூர் அன்னையார் நூற்றாண்டு விழாவை சரித்திரம் படைத்த விழா வாக்கிக் காட்டுங்கள் என்று உங்கள் தொண்டன், தோழன் வேண்டுகிறேன்.

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

26-2-2019


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles