Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மத்தியிலுள்ள பிஜேபி (ஆர்எஸ்எஸ்) ஆட்சியையும், தமிழகத்திலுள்ள கொத்தடிமை ஆட்சியையும் ஒழித்துக்கட்டுவோம்!

$
0
0

ஒவ்வொருவரும் பிரச்சார எந்திரங்களாக மாறவேண்டும்

சிபிஅய் மாநாட்டில் தமிழர் தலைவர் முழக்கம்!

கோவையில் நேற்று (27.2.2019) நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் கி. வீரமணி, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுவுடமை இயக்க முன்னோடிகள் கே. சுப்பராயன், ஆர். நல்லக்கண்ணு, தா. பாண்டியன், மகேந்திரன், இரா. முத்தரசன், டி. ராஜா மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் மத்திய மாநில அரசுகளை வீழ்த்த கரம் கோத்து நின்ற காட்சி!

கோவை, பிப். 28- மத்தியிலுள்ள பிஜேபி ஆட்சி யையும், தமிழகத்திலுள்ள கொத்தடிமை ஆட்சியையும் ஒழித்துக்கட்ட ஒவ்வொருவரும் பிரச்சார எந்திரங்களாக மாறவேண்டும் என்று சிபிஅய் மாநாட்டில் திரண்டிருந்த  மக்களிடையே தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.

இந்தியாவை மீட்போம்! தமிழகத்தை காப்போம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இந்தியாவை மீட்போம்! தமிழகத்தை காப்போம்! என்ற முழக்கத்தோடு திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்ற அரசியல் எழுச்சி மாநாடு 27.02.2019 புதன் மாலை 5 மணியளவில் கோவை கொடீசியா அருகிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது.

தமிழர் தலைவர் உரை

இம்மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று பேசியதாவது;

இருட்டை அகற்றி வெளிச்சத்தைத் தரக்கூடிய கலங்கரை விளக்கமான தீர்மானங்களை இம்மாநாடு நிறைவேற்றியுள் ளது. மதவெறி, ஜாதி வெறி, பண வெறி, பதவி வெறி ஆகிய வற்றோடு எந்தக் கொள்கையும் இல்லாமல் கூட்டுச் சேர்ந் திருக்கின்ற அணியை வீழ்த்த போர் வீரர்களை தயாரிக்கும் மாநாடு தான் இம்மாநாடு,  இது அறிவியல் மனநிலையை ஊட்டும் மாநாடு.

கொத்தடிமை ஆட்சி

தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சி என்பது அடிமை ஆட்சி அல்ல.  அது ஒரு கொத்தடிமை ஆட்சி.  இந்த கொத்தடிமை ஆட்சியாளர்கள் மத்தியில் நடைபெறும் மதவெறிப் பிடித்த  ஆர்எஸ்எஸ் ஆட்சியாளர்களிடம் தமிழகத்தை அடகு வைத்துவிட்டார்கள்.  ஆகவே  அடகு வைத்த பொருளுக்குரியவர்களாகிய நாம் அனைவரும் இணைந்து தமிழகத்தை மீட்க வேண்டும்.

காமராஜர் ஆட்சி தருவார்களாம்!

திருப்பூருக்கு வந்த மோடி காமராஜர் ஆட்சியைத் தருவோம் என்று பேசியிருக்கிறார்.  வெட்கமாக இல்லையா? காமராஜரை பட்டப்பகலில் டில்லியில் கொலை செய்யத் துணிந்த கூட்டம் தானே சாமியார்கள் கூட்டம்! அது எங்களுக்கு மறந்துவிடுமா? ஆர்எஸ்எஸ்-அய் போன்று மூன்று முறை தடைசெய்யப்பட்ட இயக்கம் நாட்டில் உண்டா? இந்தத் தகவல்களை எங்களைப் போன்றோர் இன்றைய தலைமுறைக்கு நினைவுபடுத்தாமல் இருப்போமா? திருப்பூரில் உள்ள பின்னலாடைத் தொழிலை மோடியின் ஆட்சி சீரழித்திருக்கிறது.  நாடெங்கிலும் சிறு,குறு தொழில்கள் மூடுவிழா கண்டுள்ளன. இதன் விளைவாக வேலை வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிலைமை இப்படி இருக்கையில் ஆட்சியை திறம்பட நடத்தி தொழில் வளத்தையும், வேலை வாய்ப்பையும் உரு வாக்கத் தகுதியற்ற மதவெறி பிடித்த மத்திய ஆட்சியும், தமிழ கத்திலுள்ள கொத்தடிமை ஆட்சியும் தற்போது நாடாளு மன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் 6000 ரூபாய் தருவ தாக அதுவும் மூன்று தவணையாக கொடுப்பதாக சொல்வது வேடிக்கையாகவும், வெட்கமாகவும் இல்லையா?

"தி எண்ட் ஆஃப் இந்தியா" என்ன கூறுகிறது?

ஆர்எஸ்எஸ், பிஜேபி ஆட்சியைப் பிடித்துவிட்டால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது,  இந்தியா இருக்காது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே குஷ்வந்த்சிங் என்பவ ரால் எழுதப்பட்ட "தி எண்ட் ஆஃப் இந்தியா" என்கின்ற நூல் விளக்குகிறது.  மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பல மதங்கள்,பல கலாச்சாரங்கள் இருக்கின்ற நாட்டில் ஒரே நாடு,ஒரே மதம் என்ற சர்வாதிகாரப்போக்குடன் என் மதம் தான் ஆளவேண்டும் என்ற நிலை உருவாகி மதச்சிறுபான்மையருக்கு, கம்யூனிஸ்ட்களுக்கு, நாத்திகர் களுக்கு இடம் கிடையாது என்ற நிலை உருவாகும். இந்திய அரசியல் சட்டம் இருக்காது. அதற்குப் பதிலாக மனுதர்மம் சட்டமாக்கப்பட்டு விடும்.

நாடெங்கிலும் எதிர்ப்பு

காஷ்மீரில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. மோடிக்குக் கருப்புக்கொடி தென்னிந்தியாவில் மட்டுமல்ல;  வட இந்தியாவிலுள்ள வடகிழக்கு மாநிலங்களான அசாம் போன்ற மாநிலங்களில் கூட மோடிக்குக் கருப்புக்கொடி காட்டி மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது வடமாநிலங்களில் நடை பெற்ற தேர்தல்களில் பிஜேபிக்கு மக்கள் சரியான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

வாழ்வா? சாவா? என்கிற போராட்டமே!

தமிழகத்தில் ஒரு கொத்தடிமைக்கூட்டணி உருவாகியிருக்கிறது என்பதை வெட்கத்தோடு சொல்கிறோம். அதை முறியடிக்கும் கூட்டணி தான் திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணி,  வீரக்கூட்டணி! இது பணத்திற்காகவோ, தேர்தலுக்காகவோ சேர்ந்த கூட்டணி அல்ல, இது அடுத்த தலைமுறைக்கான கூட்டணி. தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திற்கான தேர்தல். மோடியால் சமூகநீதி கொல்லப்பட்டுள்ளது. பிஜேபியின் தமிழக கொத்தடிமை ஆட்சியாளர்கள் தேர்தல் கூட்டணிக்கு பெயர் வைக்கக்கூட உரிமையில்லாதவர்களாய், சுதந்திர மற்றவர்களாய் கை கட்டி, வாய் பொத்தி நிற்கிறார்கள்.

சிண்டு முடியும் வேலை எடுபடாது! வெற்றி பெறுவோம்!

ஆகவே இவர்களிடமிருந்து நாட்டை மீட்க வெகுமக்கள் ஒவ்வொருவரும் பிரச்சார எந்திரங்களாக மாற வேண்டும். இந்தத் தேர்தல் இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ப தற்கான தேர்தல் அல்ல. இனத்திற்கான, இன உரிமைக்கான தேர்தல்! திமுக கூட்டணிக்குள் சிண்டு முடிகின்ற வேலையை யார் செய்தாலும் அதை நாங்கள் முறியடிப்போம் ! வெற்றி பெறுவோம்! வெற்றி பெறுவோம்! தமிழகத்தைக் காப்போம்! இந்தியாவை மீட்டெடுப்போம்! நன்றி! வணக்கம். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! இவ்வாறு கழகத் தலைவர் உரையாற்றினார்.

நிகழ்ச்சி நிரல்

இம்மாநாட்டில் சிபிஅய் மாநில துணை செயலாளர் திருப்பூர் கே.சுப்பராயன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் இரா.முத்தரசன் அனைவரையும் வரவேற்றார். சிபிஅய் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இரா.நல்லக்கண்ணு,தா,பாண்டியன், சி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.

சிபிஅய் தேசிய செயலாளர் டி.ராஜா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சிபிஅய்(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன்,மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, சிபிஅய் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், கோவை மாவட்ட சிபிஅய் செயலாளர் வி.எஸ்.சுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநாட்டின் நிறைவுரையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றினார்.

மாநாட்டின் நிறைவாக சிபிஅய் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் நன்றி கூறினார்.

திமுக கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்தோர், ஒத்த கருத்துடையோர் என பல்லாயிரக்கணக்கானோர் மாநாட்டில் வெள்ளம்போல் திரண்டிருந்தனர்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles