எங்கள் அன்னையின் நூறாவது பிறந்த நாள் இன்று!
தந்தைக்குத் 'தாயுமானார்' எம் அன்னை!
சரித்திரத்தின் விசித்திரங்களில் உச்சம் இது!!
அவரது 'எச்சத்தால்' பெறப்பட்ட 'சொச்சங்களே'
நாங்கள்; சோர்வின்றிப் பயணிக்கிறோம்!
ஈரோட்டுப் பாதை ஒரு நேரிய பாதை
நிமிர முடியாதவர்களை நிமிர்த்திய பாதை.
ஆசானின் மறைவை மறையச் செய்து
மாளாத பெரும் பணியைத் தொடர்ந்து
எங்களை படை வீரர்களாக்கி, தடைக் கற்களை தாண்டச்செய்த எங்கள் தலைமையே!
தளராத உறுதியுடனும், தளர்ந்த உடலோடும்
தன்பொருள் அனைத்தும் மக்களுக்கே ஈந்து
அய்யாவின் அறிவு வெளிச்சத்தை எங்கும் பரவச் செய்த
எங்கள் அன்னையே, அகிலத்தின் வியப்பே!
உங்கள் நூறாம் ஆண்டுப் பிறந்த நாளில்
உங்களால் வளர்க்கப்பட்ட செல்வங்களின்
புன்னகையில் உங்களைக் கண்டு மகிழ்கின்றோம்
கழகம் குவிக்கும் வெற்றிகளில் உங்கள்
வீரநடையின் கம்பீரம் பளிச்சிடுகிறது!
பகைப் புலத்தைக் காணாமற்
போகச் செய்த பண்பின் பாடநூலே!
பெண்ணினத்தின் பெற்றியை நிலைநிறுத்தி
ஏச்சுப் பேச்சு, ஏளனங்கள் என்ற
உரத்தால் செழித்த எங்கள்
கொள்கையின் விளைச்சலே,
உங்களால் எங்கள் 'தொண்டுப் பசி'
தீரட்டும்; தொடரட்டும் எம்பயணம்!
மலரட்டும் லட்சிய வெற்றி!
சூளுரைக்கிறோம் - உமது சொக்கத்
தங்கங்களாம் பிள்ளைகள்யாம்!
அன்னையார் மறையவில்லை; எம் இரத்த நாளங்களில் கொள்கையாய் உறைந்து விட்டீர்!
வாழ்க பெரியார், வாழ்க அன்னை மணியம்மையார்!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
10-3-2019