2017 ஜூலை 27, 28, 29: ஜெர்மனியில் பன்னாட்டு பகுத்தறிவு - சுயமரியாதை மாநாடு அமெரிக்கா, ஜெர்மன் பிரதிநிதிகள் தமிழர் தலைவருடன் ஆலோசனை
ஜெர்மன் நாட்டு கோலோன் பல்கலைக் கழகத்தில் பன்னாட்டு பகுத்தறிவு - சுயமரியாதை மாநாடு அடுத்த ஆண்டு, 2017 ஜூலை மாதம் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாள்களும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நடைபெறவிருந்த மாநாடு சில பொதுக் காரணங்களால் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 2017 ஆம் ஆண்டில் நடைபெறவேண்டிய மாநாடு ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் 11.8.2016 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
மாநாட்டினை ஒருங்கிணைத்து நடத்தவிருக்கின்ற பெரியார் பன்னாட்டு மய்யத்தின் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி நாட்டு பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அமெரிக்கா - சிகாகோவினை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன், ஜெர்மனி - கோலோன் நகரத்தில் செயல்பட்டு வரும் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் கூட்டத்தில் பங்கேற்று, மாநாட்டு ஏற்பாடுகள் பற்றிய கருத்து மற்றும் பரிந்துரைகளை வழங்கினர்.
கூட்டத்திற்குத் தலைமையேற்ற தமிழர் தலைவர் தமது முன்னுரையில் கூறியதாவது:
உலகில் நாத்திகம்பற்றிப் பேசக்கூடிய அமைப்புகள் உள்ளன. மனிதநேயம், மனித உரிமைபற்றி வலிந்து பேசக்கூடிய அமைப்புகள் பல உள்ளன. கடவுள் நம்பிக்கையுடன் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யக்கூடிய அமைப்புகளும் இருக்கின்றன. ஆனால், மனிதர்க்கு இயல்பாகவே அமையப்பெற்ற ‘சுயமரியாதை’ உணர்வினை எடுத்துரைத்து மனிதர்கள் கண்ணியத்துடன் வாழக்கூடிய அவசியத்தை வலியுறுத்திய ஒரே அமைப்பு தந்தை பெரியார் நிறுவிய சுயமரியாதை இயக்கம்தான். உலகில் எந்த நாட்டிலும் ‘சுயமரியாதை’பற்றி பேசக்கூடிய முற்போக்கு அமைப்புகள் எதுவுமில்லை. பகுத்தறிவும், சுயமரியாதையும், மொழி, இனம், நாடு இவைகளைக் கடந்து மானிடர் முழுமைக்கும் சொந்தமான இயல் புப் பண்புகள். அந்தப் பண்புகள் ஆங்காங்கே நிலவிடும் அடக்குமுறைச் சூழலுக்கு ஆளாகி, அதன் முழுமையான வெளிப்பாடு, நடைமுறை முடக்கப்பட்டு உள்ளது என்றும், பகுத்தறிவு - சுயமரியாதை எனும் மானிடப் பண்புகளை பரப்புரை செய்திடும் வகையில், ஜெர்மனியில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு, பன்னாட்டுப் பகுத்தறிவு - சுயமரியாதை மாநாடு எனப் பெயரிடுவது பொருத்தமானது.
தமிழர் தலைவரின் முன்னோட்டஉரைக்குப் பின்னர் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துகளை வழங்கினர். கூட்டத்தில் மாநாடு நடத்துவதுபற்றி கீழ்க்கண்டவாறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஜெர்மன் நாட்டு கோலோன் பல்கலைக் கழக வளாகத்தில் மூன்று நாள் பன்னாட்டு பகுத்தறிவு - சுயமரியாதை மாநாடு நடைபெறும். முதல் நாள், 2017 ஜூலை 27 - பிற்பகல் மாநாட்டு தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும். இரண்டாம் நாள், ஜூலை 28 - ஜெர்மனி நாட்டு பல்வேறு பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெறும். அன்று பிற்பகல் உலக பகுத்தறிவாளர்கள் பங்கேற்கும் அரங்க நிகழ்ச்சி நடைபெறும். மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மூன்றாம் நாள், ஜூலை 29 - பல நாட்டு தமிழ்க் குடும்பங்கள், ஜெர்மனியில் வாழும் தமிழக் குடும்பங்கள், குறிப்பாக கோலோன் நகரில் உள்ள தமிழர்கள் பங்கேற்றிடும் அரங்க நிகழ்ச்சி நடைபெறும். அன்று நண்பகல் உணவு வழங்கலுடன் மாநாடு நிறைவுபெறும்.
பன்னாட்டு மாநாட்டில், பகுத்தறிவு - சுயமரியாதை இயக்கத்தின் உருவாக்கம், சாதனைகள், ஏற்பட்ட இந்திய அரசியல் சூழல்களை விளக்கிடும் ஒளிப்படக் கண்காட்சி அமைக்கப்படும். மாநாட்டு வருகையாளர்களுக்கு ‘பெரியார்’ திரைப்படம் - ஆங்கில உரையாடல் பதிவுடன் கூடிய ஒளிப்பதிவு திரையிட்டுக் காட்டப்படும்.
மாநாட்டிற்கு சுவிட்சர்லாந்து - ஜெனீவா நகரில் செயல்பட்டுவரும் அய்க்கிய நாடுகள் சங்க மனித உரிமை அமைப்பினரை அழைத்திட முடிவு செய்யப்பட்டது.
மாநாட்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் கோலோன் நகரத்து மேயர் மற்றும் கோலோன் பல்கலைக் கழக துணைவேந்தர் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றிட அழைத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடுகள் ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்யப் பெற்று மாநாட்டில் வெளியிடப்படும். மொழியாக்கப் பணியில், தந்தை பெரியாரின் வாழ்க்கைக் குறிப்புகள், கடவுளும் மனிதனும், தமிழர் தலைவரின் பகுத்தறிவு இயக்க வழி நடத்தல் ஆகிய தலைப்புகளில் ஜெர்மனி மொழியாக்கப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. ஜெர்மன் நாட்டு பகுத்தறிவு தத்துவச் சிந்தனையாளர்களுடன், தந்தை பெரியாரின் சிந்தனைகளை ஒப்பிட்டு, ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் நூல்கள் வெளிவர முடிவு செய்யப்பட்டது.
அய்ரோப்பிய சுற்றுப் பயணத்தில் தந்தை பெரியார் ஜெர்மனி நாட்டிற்குச் சென்ற குறிப்புகளும் மொழியாக்கம் செய்யப்படும்.
- தமிழ் கற்ற, தெரிந்த பிற நாட்டு மொழி அறிஞர்களும் மாநாட்டில் பங்கேற்றிட அழைக்கப்படுவார்கள்.
- பிற நாட்டினர், குறிப்பாக ஜெர்மன் நாட்டினர், ‘இந்தியா’ என்றால் ஒரு ஆன்மீக நாடு, மத உணர்வுகள் மேலோங்கிய நாடு எனக் கருதும் நிலை உள்ளது. இந்தியாவில் உள்ளவர்களே அப்படி நினைப்பதும் ஒரு வகையில் உண்மையே. ஆனால், பழங்காலத்திலேயே சாருவாகர், கபிலர் ஆகிய பகுத்தறிவாளர்கள் வழங் கிய கருத்துகளின் அடிப்படையில் உலகிற்கே கடவுள் மறுப்புக் கொள்கையை வழங்கிய பெருமை இந்த மண்ணிற்கு உண்டு. அப்பொழுது தொடங்கிய புத்தர் காலத்திய பகுத்தறிவுக் கருத்துகள் பரந்துபட்டு, அரசாட்சி செய்வோரும், அந்தக் கருத்துகளை ஆத ரிக்கும் நிலை உருவானது. பின்னர் பல்வேறு ஆதிக்க அடக்குமுறைகளால் மத உணர்வுகள் மேலோங்கின. 20ஆம் நூற்றாண்டில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் பகுத்தறிவு - சுயமரியாதை கருத்துகள் மீண்டும் தழைத்தோங்கி, இயக்கச் செயல்பாட்டின்மூலம் அரண் அமைத்து அரசியல் தளங்களிலும் அது தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஜெர்மனியில் நடைபெறவிருக்கின்ற பன்னாட்டு பகுத்தறிவு - சுயமரியாதை மாநாடு, தந்தை பெரியார் ஏற்படுத்திய தாக்கத்தினை பிற நாட்ட வர்க்கு உணர்த்திடும் வகையில். இந்த மண்ணின் உண்மையான இயல்பை பண்பாடு மற்றும் வாழ் வியல் சூழல்களை எடுத்துக்காட்டிடும் வகையில் அமைந்திட கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.
- மாநாட்டிற்குத் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் நாட்டினர் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்களை அழைத்திட முடிவு செய்யப்பட்டது. பெரும்பாலும் இளைஞர்களை அழைத்திட, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- கலந்துரையாடல் கூட்டத்தில் அமெரிக்க நாட்டு டாக்டர் சரோஜா இளங்கோவன், டாக்டர் சோம.தமிழவேள், சந்துரு மற்றும் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
குறிப்பு: கோலோன் நகரம் ஜெர்மனி நாட்டின் கோலோன் நதிக்கரையில் அமைந் துள்ள கோலோன் பல்கலைக் கழகம் 1388 இல் ரோமப் பேரரசின் கீழ் அமைக்கப்பட்ட பழைமை வாய்ந்தது. கல்வி நிலையங்கள் மிகுதியாக உள்ள நகரம். ஜெர்மனியில் மூன்று நாள் மாநாடு முடிந்தவுடன், விருப்பப்படும் வருகையாளர்களை அய்ரோப்பிய நாடுகளுக்கு பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி நாடுகளுக்குப் பகுத்தறிவுச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லும் முடிவும் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கான பயணச் செலவு, தங்குமிடம் மற்றும் உணவுச் செலவு, மாநாடு பங்கேற்பு கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும். இந்தியாவிலிருந்து அதிக அளவாக 50 பேராளர்கள் மட்டுமே அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் பதிவு செய்து கட்டணம் செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே (ஜனவரி 2017) மாநாட்டுக்குச் செல்பவர்கள் பட்டியல் நிறைவு செய்யப்படும்.
ஜெர்மன் மொழியில் ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ இதழ்!
கூட்டத்தின் மாநாட்டு தொடக்கத்தில் தந்தை பெரியாரால் 1971 இல் நிறுவப்பட்டு, தொடக்கம்முதல் தமிழர் தலைவரை ஆசிரிய ராகக் கொண்டு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தால் வெளியிடப்பட்டு வரும் ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஆங்கில மாத இதழினை ஜெர்மன் மொழியில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. தமிழர் தலைவரை முதன்மை ஆசிரியராகக் கொண்டு, ஜெர்மன் நாட்டு பேராசிரியர் முனைவர் உல்ரிக் நிக்லஸ் அவர்களை இணை ஆசிரியராகக் கொண்டு ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஜெர்மன் மொழியில் விரைவில் வெளிவரும்.
ஆண்டுக்கு நான்கு முறை.....
ஆண்டுக்கு நான்கு இதழாக வெளியிட முடிவு செய்யப்பட்டது. ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழின் பிரெஞ்ச் மொழி பதிப்பும் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.