பொது ஒழுக்கம் கொல்லப்படுவதைத் தடுக்க முன்வாருங்கள் - இப்பொழுது இல்லாவிட்டால் பின் எப்போது?
தேர்தல் ஆணையம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் சுதந்திரமாக செயல்படவேண்டும்; பணநாயகமாகவும், ஜாதி நாயகமாகவும், ஊழல் நாயகமாகவும் தேர்தல் நடைபெறுவது தடுக்கப்படவேண்டும் - இப்பொழுது இல்லாவிட்டால் வேறு எப்பொழுது இதனை செய்வது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை வருமாறு:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு' என்கிற பெருமை பெற்ற நமது நாட்டில் 17 ஆவது நாடாளு மன்றத் தேர்தலும், சிற்சில மாநிலங்களிலும், சில மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்களும்கூட கடந்த 19.5.2019 ஆம் தேதியோடு முடிவடைந்தன.
வரும் 23.5.2019 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன - வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு!
உண்மை ஜனநாயகம் உலா வர என்ன செய்யவேண்டும்?
இந்த இடைவெளியில் நமது ஜனநாயகம், உண்மையிலேயே ஜனநாயக முறைப்படி தனது தேர்தல்களை நடத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந் தெடுக்கிறதா? என்று சற்று விருப்பு வெறுப்பின்றி, ஒவ்வொரு கட்சியும் மட்டுமல்ல; வேட்பாளரும் அவையெல்லாவற்றையும்விட பொது ஒழுக்கச் சிதைவைத் தடுக்க விரும்புவோரும் கவலையோடும், பொறுப்பேடும் "சுய பரிசோதனை'' செய்து, இந்த நிலைமையை அடியோடு மாற்றி உண்மை ஜனநாயகம் உலா வர என்ன செய்யவேண்டும் என்று அத்தனை அரசியல் கட்சிகளும், பொது நோக்கர்களும், ஊடகங்களும் (ஜனநாயகத்தின் நான்காவது தூண்'' என்று பெருமை உடையதால்) - கடமையாற்றவேண்டும்.
தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் கண்ட காட்சிகளும், நடப்புகளும், வேதனைக்கும், வெட்கத் திற்கும் உரியதாகும்.
பண நாயகமாகவும், 'ஜாதி நாயகமாகவும்', ஊழல் நாயகமாகவும்' மாறாமல்...
'நீங்கள் உத்தமர்தானா சொல்லுங்கள்' என்று அனைவரும் அவரவர் மனசாட்சியைக் கேட்டுக் கொண்டு, வருங்கால சந்ததியினரையாவது, மாசு படுத்தாமல் - ஜனநாயகம் - பண நாயகமாகவும், ஜாதி நாயகமாகவும்', ஊழல் நாயகமாகவும்' மாறாமல், மற்ற வெளிநாடுகளில் நேர்மையோடு நடத்தப் பெறும் தேர்தல் முறைகளைப்பற்றிய உரத்த சிந்தனைக்கு ஆளாக்கிக் கொள்ளவேண்டும். மாற்றங்களைப் புகுத்தவேண்டும்.
பொது ஒழுக்கச் சிதைவு தடுத்து நிறுத்தப்படவேண்டும்!
கட்சிக் கண்ணோட்டம், இன்னார் இனியார்' என்று நினைக்காமல், வேண்டுதல் - வேண்டாமை, விருப்பு - வெறுப்புக்கு இடமின்றி, பொது ஒழுக்கச் சிதைவு தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இதுபற்றிய பரிகாரத்தை, தீர்வைக் கண்டாகவேண்டும் என்பதால் எழுதுகிறோம்.
பகுத்தறிவுள்ள மனிதர்கள் - தங்கள் தங்களது சுயநலப் பார்வையைச் சற்று மாற்றிக் கொண்டு சமுகநலச் சிந்தனையோடு இப்பிரச்சினையை அணுகிடவேண்டும்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாக உருவாகவேண்டும்
முதலில் நடுநிலையோடு - ஓர்ந்து கண்ணோடாது சாய்ந்த தராசாக' இல்லாமல் செயல்படும் சுதந்திரச் சிந்தனை உள்ள தேர்தல் ஆணையம் - ஆளும் கட்சிகளால் நியமிக்கப்படாமல் சுதந்திரமான - Autonomous அமைப்பாக உருவாகவேண்டும். ஓய்வு பெற்ற அதிகாரிகளின் மறுவாழ்வுக் கூடமாக அது இருக்கவே கூடாது; தற்போது அப்படியிருப்பதால் அந்த நியமனம் பெற்றதால், நடுநிலைக் கண்ணோட்டம் பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பது யதார்த்த உண்மை.
தேர்தல் சட்டம், விதி, நடைமுறை வெகுவாக- தற்போது உள்ளவைகளிலிருந்து மாற்றப்படல் வேண் டும். வாக்களிப்பதைக் கட்டாயமாக்கிட வேண்டும்; வாக்களிக்கத் தவறினால் தண்டனையோ, சலுகை ரத்து - ரேஷன் கார்டு, ஆதார் அட்டை சஸ்பென்ஷன் உண்டு என்று சட்டத் திருத்தம் வரவேண்டும்.
நகரும் வாக்குச் சாவடிகள் அமைத்து தக்கப் பாது காப்புடன் குறிப்பிட்ட பகுதிக்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு வரும் என்று அறிவித்து அதனை நடத்திடலாம்.
வாக்குகளை விலைக்கு வாங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக வாக்குகளை விலைக்கு வாங்கும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்போர், வாங்குவோர் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்துத் தண்டிக்கவேண்டும். நகரும் (மொபைல்) நீதிமன்றங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, அபராதமின்றி சிறைத் தண்டனை விதிக்க வேண்டும்.
ஜாதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்படுதலே நிரந்தரத் தீர்வு!
தேர்தலில் எந்த ஜாதி உணர்வையும் வெளிப் படுத்திட வாய்ப்பின்றி, பெரும்பான்மையான ஜாதி யைச் சேர்ந்தவர் அந்தத் தொகுதியில் நிற்காமல் வேறு தொகுதியில் வேட்பாளராகவே நிற்கும் வகை யில் ஜாதி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்படுதலே நிரந்தரத் தீர்வு.
தமிழ்நாடு இதில் மிகவும் தாழ்ந்த தமிழகமாக மாற்றப்பட்டு விட்டது என்பதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்ளவேண்டும்.
ஜனநாயகத்தினைக் கொல்லும் புற்றுநோயாக இது ஆகிவிட்டது.
அரசியல் என்றாலே பதவி என்பதுதானே இன்றைய நிலை?
கட்சிகள், தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்து வதற்கு எந்த ஜாதி? எவ்வளவு செலவு செய்வீர்கள்?'' என்ற இரண்டே தகுதிகள்தானா அளவுகோல்? இதை வளரவிட்டால், உண்மையாகவே தொண்டு புரிந்தவர்கள் - கட்சித் தியாகிகள் கதி என்ன? அரசியல் என்றாலே பதவி என்பதுதானே இன்றைய நிலை?
கூட்டங்களுக்கு ஆட்களைத் திரட்டிட, வேன்கள் வைத்து, ஒவ்வொருவருக்கும் தலைக்கு 100 ரூபாய், 200 ரூபாய் என்று தந்தும் (உணவு தொலையட்டும்), சாராயம்கூட வாங்கித் தருவதெல்லாம் ஆரோக்கிய மானதுதானா? ஆட்களை அழைத்து வரும் கங்காணி''களாக கட்சிப் பொறுப்பாளர்களை மாற்றுவது நியாயம்தானா? தலைமைகள் சிந்திக்கவேண்டும்.
ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் பெருங்கூட்டம் கூடியது என்று படம் பிடித்துக் காட்ட ஒரு கோடி ரூபாய், 2 கோடி ரூபாய் ஒரு நாள் சில மணிநேரக் கூத்துக்குச் செலவிடுவதா? அப்படியானால், அம்பானி, அதானிகள்தான் கட்சிகள் நடத்த முடியும் என்றல்லவா ஆகிவிடும்?
பொதுவாழ்வில் எளிமை, நேர்மை, அடக்கம் எல்லாம் இனி கல்லறையில் புதைக்கப்படவேண்டியவையா?
கட்சிகள் - கட்சித் தலைவர்கள் இனி நாம் எவரும் காசு கொடுத்து ஆட்களைக் கூட்டி வரமாட்டோம்; வாக்கு வாங்கப் பணம் செலவழிக்கமாட்டோம் என்று துணிந்து அறிவிக்கும் நாள் எந்த நாளோ? கருத்திணக்கம் வரட்டும்!
பன்மடங்கு சம்பாதிக்க ஆசைப்படுவார்களா? இல்லையா?
வாக்குக்குப் பணம் தருவோர், தேர்தலில் வெற்றி பெற்றால், அதைவிட பன்மடங்கு சம்பாதிக்க ஆசைப் படுவார்களா? இல்லையா? அப்புறம் ஏன் அவர்களை குற்றம் சொல்லுகிறீர்கள்?
பொது ஒழுக்கம் - இப்படியா கொல்லப்படுவது? பலரும் விவாதியுங்கள் - பொது நெறியாளர்களே இதற்கு முடிவு கட்ட முன்வாருங்கள்!
இப்போது இல்லாவிட்டால், பின் எப்போது முடியும்?
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
21.5.2019
மர்மம் என்ன?
மே மாதம் முதல் வாரத்தில் கவுகாத்தி நகரில் (அசாமில்) இந்தியாவிற்கான இஸ்ரேலிய தூதர் டாக்டர் ரான்மல்கா, அசாம் மாநில முதலமைச்சர், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆகிய மூவரும் சந்தித்து இரகசியமாகப் பேசியதன் பின்னணி என்ன?
சந்திப்புக்கு முன்னதாக கவுகாத்தியில் ஒரு வாரம் மோகன் பாகவத் தங்கிச் சென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.