இன்றும் தேவைப்படும் அறிவாயுதங்கள்!
அற்புதப் போர்க் கருவிகள்!!
அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைக் குடும்பத்தின் தலைமகன். அவரே பெருமிதத்தோடு கூறியபடி அவர் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியாரே!
தந்தை பெரியார் ஒரு புத்தர் என்றால், அறிஞர் அண்ணா ஆட்சிக்குச் சென்றதும், அதை தனது தலைவருக்கே காணிக்கை என்று சட்டமன்றத்திலேயே பிரகடனப்படுத்தி, சரித்திரம் படைத்த ஓர் இரண்டாம் அசோகன் ஆவார்!
அண்ணா வரித்துக் கொண்டது அய்யாவின் கொள்கைகளை மட்டுமல்ல; பெரியாரின் அன்புமிகு அடக்கத்தை, ஏற்றமிகு எளிமையை, எப்போதும் வெல்லும் தொண்டறத்தை!
ஈடு இணையற்ற அவரது ஓராண்டு ஆட்சியின் முப்பெரும் சாதனைகள் -
1. சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம்.
2. தாய் மண்ணுக்குத் தமிழ்நாடு பெயர் மாற்றம்.
3. இரு மொழிக் கொள்கை
என்று அண்ணா அறுதியிட்டுச் சொன்னார்:
"இம்மூன்றும் தமிழ்நாட்டில் எவ்வளவு காலம் தொடருகிறதோ அவ்வளவுக் காலமும் அண்ணாதுரை தான் ஆளுகிறான்" என்று பொருள் என்றார்.
எனவே, அண்ணாவை வெறும் படமாகப் பார்க்காமல் பாடமாகப் பார்த்து, கொள்கைப்பூர்வமான ஆட்சியை நடத்தினால் அதுவே அரசியல் கலங்கரை வெளிச்சமாகும்.
திராவிட மண்ணைக் காவி மண்ணாக்கிட ஹிந்தி - சமஸ்கிருதத்தைத் திணித்திட, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்திட, ஏழை ஒடுக்கப் பட்டோர் உயரும் சமூக நீதி வழியை அழித்திட, மதச்சார்பின்மை என்பதை ஒழித்திட பாசிச பயங்கரவாதம் படமெடுத்தாடும் இந்தக் காலத்தில் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் - ஏன் காமராசரும் கூட தேவைப்படுகின்றனர். நமக்கு அவர்கள் வழிகாட்டிகள் மட்டுமல்ல; வார்த்தெடுக்கப்பட்ட கொள்கைப் போருக்கான வாட்கள் - உரிமைப் போரில்!
மறவாதீர்! மறவாதீர்!!
அண்ணா வாழ்க! அவர் போராடிய கொள்கைகள் வெல்கவே!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
15.9.2019