டில்லியில் முழக்கம்
புதுடில்லி, டிச.15 நான் ஒன்றும் சாவர்க்கர் போல மன்னிப்புக் கேட்கும் மனிதர் அல்ல; என் பெயர் ராகுல் காந்தி என்று முழக்கமிட்டார் ராகுல் காந்தி.
டில்லியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் மக்கள் கடலின்முன் நேற்று (14.12.2019) அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் உரை வருமாறு:
இந்தியாவின் பலமே அதன் பொருளாதாரம் தான் என்பதால், நம் நாட்டின் எதிரிகள் அனைவரும் அதை அழிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இருந்தபோதிலும் அவர் களால் அதை செய்யமுடியவில்லை. ஆனால் பிரதமர் மோடி தனி ஆளாக இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார். தொடர்ந்து அந்த வேலையை செய்து கொண்டு இருக்கிறார். தன்னை தேசபக்தர் என்று சொல் லிக்கொள்ளும் அவருக்கு, தனது பதவியை பற்றிய நினைப்பு மட்டுமே உள்ளது.
மன்னிப்பு கேட்கமாட்டேன்
ஆட்சி அதிகாரத்துக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் பாரதீய ஜனதா கட்சியினர் நாட்டின் பொருளாதாரம் சீரழிவது பற்றியோ, இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பது பற்றியோ கவலைப்படவில்லை. ஆனால் நாட் டின் நலனுக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய காங்கிரசார் தயாராக இருக்கிறார்கள்.
இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறை சம்பவங்கள் பற்றி நான் கூறிய கருத்துக்காக, நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்கள். நான் ராகுல்; சாவர்க்கர் அல்ல. என் பெயர் ராகுல் காந்தி. உண்மையை பேசியதற்காக நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கமாட்டேன். உயிர் துறப்பேனே தவிர, மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரசாரும் மன்னிப்பு கேட்கமாட்டார்கள்.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீரழித்த தற்காக பிரதமர் மோடியும், அவரது உதவியாள ரும்தான் (உள்துறை அமைச்சர் அமித்ஷா) நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மக்களைப் பிளவுபடுத்துவதா?
மோடி அரசின் நடவடிக்கையால் (குடி யுரிமை சட்ட திருத்த மசோதாவை நிறை வேற்றியது) அசாம், மேகாலயா, திரிபுரா போன்ற வட கிழக்கு மாநிலங்கள் தீப்பற்றி எரிகின்றன. அங்கு போராட்டங்கள் ஓய வில்லை. மக்களிடையே பிரிவினையை ஏற் படுத்தி நாட்டை பலவீனப்படுத்தும் நடவடிக் கைகளை மோடி மேற்கொண்டு இருக்கிறார்.
மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த அவர், தனது நடவடிக்கைகள் மூலம் அவர்களுடைய பணத்தையெல்லாம் பறித்துக் கொண்டார். எல்லா நேரத்திலும் தான் மட்டுமே தொலைக்காட்சியில் தோன்றவேண் டும் என்று விரும்புகிறார்.
ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்களின் பாக்கெட்டுகளில் பணம் இல்லாதவரை நாடு முன்னேற முடியாது.
நாட்டில் நேர்மையான தொழில் அதிபர்கள் பலர் இருக்கிறார்கள். விவசாயிகள், தொழிலா ளர்களைப் போல் நாட்டின் முன்னேற்றத்துக்கு அவர்கள் பங்காற்றமுடியும் என்று நம்புகிறேன்.
சரிந்த உற்பத்தி வளர்ச்சி
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து இருப்பதற்கு ஜி.எஸ்.டி. வரி முக்கிய காரணம் ஆகும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4 சதவீதமாக உள்ளது. இதை அளவிடுவதற்கான முறையை பாரதீய ஜனதா மாற்றிய பின் னரும்கூட, வளர்ச்சி இப்படித்தான் இருக் கிறது. முந்தைய முறையை பயன்படுத்தி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை அளவிட்டால் வெறும் 2.5 சதவீதமாகத்தான் இருக்கும்.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக மோடி அரசு கூறியது. ஆனால் பண மதிப் பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தால் அதன் பிறகு மீளவே முடியவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.