தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
பாகிஸ்தான், பங்களாதேஷ் முதலிய நாடு களையும் இணைத்து அகண்ட பாரத தேசம் அமைக்கவேண்டும் என்றும், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவேண்டும் என்றும் இந்து முன் னணி நிறுவன அமைப்பாளர் கூறியிருப்பது - அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதுதானே - இவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டாமா? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
‘‘இந்தியாவில் உள்ள அத்துணை மக்களும் இந் துக்களே, இந்து என்றுதான் அனைவரும் அழைக்கப்பட வேண்டும்.'' இப்படி ஒரு கருத்தை அண்மையில் நாகபுரியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்கள் கூறியுள்ளார்!
இப்படி இவர் கூறுவது முதல் தடவை அல்ல; இந்துத்துவா கொள்கையை நடைமுறைப்படுத்த முழு ஆயத்தத்தோடு தயாராகி, நாட்டின் பொது அமைதி குலையக் காரணமாக அமைந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், குடியுரிமைப் பதிவு ஏடு - இவை போன்றவைகளை வைத்து இம்முயற்சிக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் அதன் பிரதமரும், அமைச்சரவை யினரும் ஆதரவாகவே நடந்துகொள்கின்றனர்!
இது அவர்கள் பதவியேற்கும்முன் எடுத்த இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்கும், அடிக்கட்டுமானத் திற்கும், மதச்சார்பின்மை, சமூகநீதிக்கும் விரோதமானது மட்டுமல்ல; அதை அடியோடு பெயர்த்தெறியக் கூடிய அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளும் ஆகும்!
இராம.கோபாலன் கூறுவது என்ன?
கடந்த 22.12.2019 அன்று திருச்சியில் இராம.கோபா லன் அவர்கள் ‘‘இந்து விரோத முறியடிப்பு மாநாடு'' என்ற ஒரு மாநாட்டில் பேசியுள்ள பேச்சு, அண்டை நாடுகளை வம்புக்கு இழுக்கும் வல்லடிப் பேச்சாகும்.
‘‘இழந்த நிலங்களை மீட்கும் வகையில், பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை மீண்டும் இந்தியா வுடன் இணைக்க வேண்டும்; இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்கவேண்டும்'' என்று பேசியுள்ளார். (ஆதாரம்: ‘இந்து தமிழ் திசை', பக்கம் 4சென்னை 23.12.2019).
இதைவிட நாட்டின் அமைதியைக் குலைக்கத் தூண்டும் பேச்சு வேறு இருக்க முடியுமா? உலக அரங்கில் இந்தக் கருத்து எட்டுமானால் அந்த நாடுகள் அண்டை நாடான நம் நாட்டின்மீது நல்லெண்ணத்துடன் உறவு கொள்ள முடியுமா?
‘அகண்ட இந்துஸ்தானமே' எங்கள் கொள்கை என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ஒவ்வொரு ஆண்டும் கோட்சேவின் அஸ்திமுன் சபதம் ஏற்பதை இப்போது வெளிப்படையாகப் பிரகடனம் செய்வது - நாட்டின் பாதுகாப்புக்கு, வெளியுறவுக் கொள்கை, இறை யாண்மைக்கு உகந்ததா?
இதனை ஆளுங்கட்சி உடனடியாக மறுக்கவேண் டாமா? கண் ஜாடை காட்டி மகிழ்வதைப்போல இருக்கலாமா?
பன்மதங்கள், பல கலாச்சாரங்கள், பல மொழிகள் உள்ள நாட்டில், ஒருபுறத்தில், ‘‘வேற்றுமையில் ஒற்றுமை'' (‘‘Unity in Diversity'') பேசிக் கொண்டு இத் தகைய பேச்சுகளையும் ரசித்துக் கொண்டிருப்பதுதான் மத்திய அரசின் அணுகுமுறையா?
இந்து நாடு இது; இதையே இந்து நாடு என்று அறிவிக்கவேண்டும் என்று முழங்கும் இராம.கோபாலன் களுக்கும், மோகன் பகவத்துகளுக்கும் நம்முடைய கேள்வி -
அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறதா?
இந்திய அரசமைப்புச் சட்டம் இதை அனுமதிக் கிறதா? ‘‘அரசமைப்புச் சட்டத்தைக் கடைப்பிடிப்போம்; காப்பாற்றுவோம்'' என்று பதவிப் பிரமாணம் எடுத்த பிரதமர், உள்துறை அமைச்சர், அதற்கு மேல் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் - இவர்களுக்கு இக்கருத்து உடன்பாடானதா?
இது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத் தையே வீழ்த்துவதல்லவா?
என்ன பதில்?
‘இந்து' நாடு என்று அழைக்கவேண்டும் என்று கூறும் இந்துத்துவாவாதிகளான பெருமக்களே,
வேதங்கள், உபநிஷதங்கள்,
பகவத் கீதை, மனுஸ்மிருதி
மற்றும் புராண, இதிகாசங்கள் இவற்றில் எதிலாவது உங்கள் மதத்திற்கு ‘இந்து' என்ற பெயர் உண்டா? காட்ட முடியுமா?
அந்நியர்கள் கொடுத்த பெயர் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறுகிறாரே, ‘இந்து' என்ற சொல் எந்த மொழி? இந்திய மொழிச் சொல்லா? என்று பதில் கூறுவீர்களா?
‘‘இந்து மதம் என்ற பெயரே அந்நியன் கொடுத்தது; வெள்ளைக்காரன் வெளியில் இருக்கிறவன் நமக்குக் கொடுத்தது அந்தப் பெயர். நமக்கு ஒரிஜினலாக இருந்த பெயர் பிராமண மதம் - சனாதன மதம் என்பதுதான்.''
சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி,
‘‘தெய்வத்தின் குரல்'' முதல் பாகம், பக்கம் 269
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
28.12.2019
சென்னை