செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்
காரைக்குடி, ஜன.23 கருத்துச் சொல்ல உரிமை இருக் கிறது; அதை திரித்துச் சொல்ல உரிமையில்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மதுரை, காரைக்குடியில் நேற்று (22.1.2020) செய்தி யாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
மதுரையில்...
நீட் தேர்வு, மத்திய அரசினுடய புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே சமூகநீதி ஒழிப்பு ஆகிய வைகளையெல்லாம்பற்றி மக்கள் மத்தியில் ஒரு விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காக குமரியில் தொடங்கி திருத்தணி - சென்னையில் முடிவடையக் கூடிய பரப் புரை பெரும் பயணத்தில் நாங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்று மூன்றா வது நாள். நேற்று மதுரையில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
அதற்குப் பிறகு வரிசையாக தொடர்ந்து பிரச்சாரம் செய்யக்கூடிய பயணத்தில் மக்கள் ஏராளமாகத் திரளு கிறார்கள். நீட் தேர்வின் காரணமாக இதுவரை 8 மாணவிகளுடைய உயிர் பறிக்கப்பட்டு இருக்கிறது; பெற்றோர்களுடைய உயிர் பறிக்கப்பட்டு இருக்கிறது.
அதுபோலவே, ஊழலற்ற ஒரு ஏற்பாட்டை செய்கி றோம் என்று சொல்லி, ஆள் மாறாட்டம் உள்பட ஊழல் கள் ஏராளம் நடந்துகொண்டிருக்கின்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால்தான், நம்முடைய பிள்ளைகள் மாண வப் பருவத்தில் எளிமையாக படிக்கின்ற வாய்ப்புகள் வரும்.
பிஞ்சு மாணவர்களின் மத்தியில் மன அழுத்தத்தை உருவாக்கக் கூடிய கொடுமை தொடரக்கூடாது
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை - மத்திய அரசாலேயே அமல்படுத்தப்படாத இந்தக் காலகட்டத் தில், ராஜாவை விஞ்சிய ராஜ விசுவாசிபோல மாநில அரசு 5 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு, 11 ஆம் வகுப்பிலே பொதுத் தேர்வு என்று தேர்வுகளை உண்டாக்கி, பிஞ்சு மாண வர்களின் மத்தியில் மன அழுத்தத்தை உருவாக்கக் கூடிய கொடுமை தொடரக்கூடாது என்பதையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றோம்.
ஆகவேதான், அந்தப் பிரச்சாரப் பயணத்தினுடைய நோக்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது. சமூகநலன் சார்ந்த விஷயங்கள்; நம்முடைய பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதைத் தடுப்பதற்காகத்தான் இந்தப் பிரச்சாரப் பயணம். அதனைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம். மக்களு டைய பேராதரவு இந்தப் பயணத்திற்குக் கிடைத்திருக் கின்றது. ஜாதி, மத, கட்சி வேறுபாடில்லாமல் எல்லோரும் திரண்டு வந்து கேட்கிறார்கள்.
தேவைப்பட்டால் சிறை நிரப்பும் போராட்டம்
மத்திய - மாநில அரசுகள் நீட் தேர்வை கைவிட வேண்டும். அதேபோல, புதிய கல்விக் கொள்கை என்ற பெயராலே, 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு என்று வரிசையாக பொதுத் தேர்வு, தேர்வு என்று மாணவச் செல்வங்களுக்கு மன அழுத்தத்தை ஏற் படுத்தக் கூடிய நிலைகளைக் கைவிடவேண்டும். அந்த நிலையிலிருந்து அவர்கள் பின்வாங்காவிட்டால், மக் களைத் திரட்டி, இறுதியில் ஒரு மாபெரும் போராட்டம் - தேவைப்பட்டால் சிறை நிரப்பும் போராட்டத்தைக் கூட செய்யக்கூடிய அளவில் இருக்கின்றோம்.
உண்மைக்கு மாறான தகவல்களை
சொல்ல யாருக்கும் உரிமையில்லை!
செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்த், தான் சொன்ன கருத்திற்காக மன்னிப்புக் கேட்க மாட்டேன், வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: இதைப்பற்றி நேற்றே ஏராளமான ஊடகங்கள் கேள்வி கேட்ட நேரத்தில், தெளிவாகச் சொல்லியிருக்கிறோம்.
ஒரு தவறான கருத்தைப் பரப்புகின்ற நேரத்தில், அதற்குரியவர்களிடம் ஆதாரபூர்வமாக அப்படி நிகழவில்லை என்று சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை.
மன்னிப்புக் கேட்பதோ, வருத்தம் தெரிவிப்பதோ அது மனிதப் பண்பாட்டினுடைய பெருந்தன்மையைப் பொறுத்தது. அது அவரவர் உரிமை.
ஆனால், அவர் மன்னிப்புக் கேட்பதோ, கேட்காததோ அவருடைய உரிமையாக இருந்தாலும், பெரியாரைக் கொச்சைப்படுத்த, உண்மைக்கு மாறான தகவல்களை சொல்ல, அவருக்கோ அல்லது வேறு யாருக்கும் உரிமை கிடையாது.
எனவேதான், நீதிமன்றத்தில் அவர் பதிலளிக்கவேண் டிய காலகட்டம் வரும் என்று நேற்றே நான் சொல்லியிருக்கிறேன்.
அந்த அடிப்படையில், அவர் பேசியதற்கு ஆதாரம் இருந்தால், நான் உண்மையைத்தான் பேசினேன் என்பதற்கு ஆதாரம் இருந்தால் காட்டட்டும்.
‘துக்ளக்' என்ற வார ஏட்டில், வந்தது என்று அவர் தெளிவாகச் சொல்லி, அதற்காகத்தான் அவர் ‘சோ'வுக்கு பாராட்டைக் கூறினார். ஆனால், ஏனோ அந்த ஏட்டைக் காட்டுவதற்குத் தயாராக இல்லை. காரணம், அது உண்மையில்லை என்பதுதான் உண்மை.
ஆகவேதான், அவர் நீதிமன்றத்திற்கு வந்து, அதனு டைய நெடிய படிக்கட்டுகளில் ஏறி, பதில் சொல்ல வேண்டிய கட்டம் வரும்.
‘துக்ளக்' ஏட்டை ஏன் அவர் காட்டவில்லை?
செய்தியாளர்: ‘அவுட் லுக்' பத்திரிகையை ஆதார மாகக் காட்டினாரே?
தமிழர் தலைவர்: நான் ஏற்கெனவே சொன்ன பதிலில் இதுவும் அடக்கம்.
அவர் சொன்னது முழுக்க முழுக்க ‘துக்ளக்' ஏட்டிலே அட்டைப் படம் போட்டார்கள் என்று சொன்னார். ‘துக்ளக்' ஏட்டை ஏன் அவர் காட்டவில்லை என்பதுதான் நம்முடைய கேள்வி. இந்தக் கேள்வி இங்கே மட்டுமல்ல, நீதிமன்றத்திலும் இருக்கும்.
பெரியார் இன்னமும் ‘லைவ்'வாக இருக்கிறார்
செய்தியாளர்: பாரதீய ஜனதா கட்சியின் அதி காரப்பூர்வ டுவிட்டரில், தந்தை பெரியார் அவர்களையும், மணியம்மையாரையும் இழிவுபடுத்துவது போன்ற செய்திகளைப் பதிவிடுகிறார்கள்; பிறகு நீக்கி விடு கிறார்கள். பா.ஜ.க.வைச் சார்ந்த கட்சிகள் முழுவதும் பெரியாரை இழிவுபடுத்துவது போன்று செய்திகளை வெளியிடுகிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க் கிறீர்கள்?
தமிழர் தலைவர்: பெரியார் வாழ்க்கையில், இது போன்று கொச்சைப்படுத்துகின்றவர்களை ஆயிரம் பேரை பார்த்திருக்கிறார்கள். அவர்கள்தான் காணாமல் போயிருக்கிறார்கள். பெரியார் இன்னமும் ‘லைவ்'வாக இருக்கிறார்.
காரைக்குடி
செய்தியாளர்: மத ஏற்பாளர்களும், மத எதிர்ப்பா ளர்களும் உள்ளதுதான் சமூகம். அந்த சமூகத்தில் உள்ள வர்கள் யாரும் கருத்துகளை கூறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அந்தக் கருத்துகளுக்கு எதிர் கருத்துகளை சொல்லாமே யொழிய, போராட்டம் செய்வதோ, நீதிமன் றத்திற்குச் செல்வதோ சரியான நடைமுறை கிடையாது என்று பழ.கருப்பையா சொல்லியிருக் கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: கருத்து சொல்வதற்கு எல்லோ ருக்கும் உரிமை உண்டு என்பதை நாங்கள் மறுக்க வில்லை.
ஆனால், ஒரு சம்பவத்தைப்பற்றி சொல்லும் பொழுது, அந்த சம்பவம் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம். பொறுப்புள்ள ஒரு தலைவர், ஒரு இயக்கத் தினுடைய தலைவர் கலந்துகொள்கின்ற ஒரு சம் பவத்தைப்பற்றி சொல்லும்பொழுது, தவறான தகவல் களை சொல்லக் கூடாது.
கருத்து சொல்வது என்பது வேறு; நடந்த சம்பவத் தைத் திரித்துச் சொல்வது என்பது வேறு.
இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டால், சொல்கிறவர்களுக்குக் குழப்பம் ஏற்படாது.
கருத்துரிமையை நாங்கள் மறுக்கவில்லை; ஆனால், திரித்துக் கூறுகின்ற உரிமை
யாருக்கும் கிடையாது
செய்தியாளர்: இதற்குப் போராட்டமோ, நீதிமன்ற மோ தீர்வு காண முடியுமா?
தமிழர் தலைவர்: போராட்டம் என்பதல்ல. எங் களுடைய தலைவர், அனைவருக்கும் உரிய தலைவர். அவர் சொல்லாத ஒன்றை சொல்லி, அவரைக் கொச் சைப்படுத்தலாம் என்று நினைப் பதை - நீங்கள் திருத்திக் கொள்ளவேண்டும் என்று சொல்லும்பொழுது, திருத்திக் கொள்ளாத வர்கள் மத்தியில், பொதுமக்களிடையே அவர் களை அம்பலப்படுத்தவேண்டும் என்பதற்கான ஒரு அறப்போராட்டம்தான் அது. போராட்டம் நடத்த உரிமை உண்டு.
கருத்தை யார் வேண்டுமானாலும் சொல்ல லாம்; கருத்துரிமையை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், திரித்துக் கூறுகின்ற உரிமை யாருக்கும் கிடையாது.
அவர் சொன்ன கருத்து என்னவோ, அந்தக் கருத்தை அவரேகூட மறுத்திருக்கிறார். நடந்த சம் பவம் என்று சொல்லாமல், அது என்னுடைய கருத்து என்று அவர் சொல்வாரேயானால், அதைப்பற்றி நாங்கள் யாரும் கவலைப்பட வில்லை. அதற்காக யாரும் நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை.
பெரியாரைக் கொச்சைப்படுத்தி, 50 ஆண்டு களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த சம்பவத்தில், மீண்டும் அவதூறான ஒரு செய்தியை சொல்லுகின்ற பொழுது தான், உண்மையை நிலை நாட்ட நீதிமன்றம்தான் வழி.
உதாரணத்திற்கு கடவுள் மறுப்பைப்பற்றி எங்கள்மீது வழக்குப் போட்டார்கள்; அதனுடைய உண்மை நிலையை நாங்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்தோம்.
ஆகவேதான், ஒருவர், ஒரு கருத்தைத் திரித்துச் சொல்லும்பொழுது, உண்மையா? பொய்யா? என்று நிரூபிக்கவேண்டிய இடம் நீதிமன்றம்.
ஆகவே, மக்கள் மன்றத்தைத் தாண்டி, நீதிமன்றம் வந்தால், மக்கள் மன்றம் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படும்.
ரஜினிகாந்த் பேச்சில் உள்நோக்கம் இருக்கிறதா?
செய்தியாளர்: ரஜினிகாந்த் அவர்கள் அப்படி பேசியதற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்கலாம் என்று உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா?
தமிழர் தலைவர்: தாராளமாக. ஏனென்றால், பி.ஜே.பி. என்ற அந்தக் காவி அமைப்பு, வேறு எந்த ரூபத்திலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை என்பதினால், இப்படி ஒரு பிரச்சினையை உண்டாக் கலாம் என்பது ஒரு நோக்கமாக இருக்கலாம்.
இரண்டாவது நோக்கம், இப்பொழுது பி.ஜே.பி.,க்கு தமிழ்நாட்டில் நிறைய எதிர்ப்பு, மோடி அரசுக்கு எதிர்ப்பு, விலைவாசி ஏற்றம், பொருளாதார கீழ்நிலை இவைகளை திசை திருப்புவதற்காகக்கூட இந்தப் பிரச்சினையை ஒரு ஆயுதமாகக் கையாண்டிருக் கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது.
மக்கள் மன்றத்தினுடைய தீர்ப்பு
வேறுவிதமாக இருக்கும்!
செய்தியாளர்: குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று சொல்லியிருக் கிறதே, அதுபற்றி...?
தமிழர் தலைவர்: இடைக்காலத் தடை விதிப்பதும், விதிக்காததும் உச்சநீதிமன்றத்தின் உரிமை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட வில்லை. ஆனால், அதேநேரத்தில், இது தவறானது, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோத மானது என்ற கருத்தை நிலைநாட்டுவதற்கு, நிச்சயமாக நீதிமன்றத்தை நாடு வோம் - பல நேரங்களில் நீதிமன்றத்தினுடைய தீர்ப்பு எப்படி இருந்தாலும், மக்கள் மன்றத்தினுடைய தீர்ப்பு வேறு விதமாக இருக்கும்.
- இவ்வாறு செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.