பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று, சமூக விடுதலையையும், சமத்துவத்தையும் வென்றெடுக்க சூளுரை கொள்வோம்! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற சமூகநீதிப் போராளிகள்!
இன்று பாபா சாகேப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் (ஏப்ரல் 14).
மனித குல சமத்துவமும், சுதந்திரமும், சகோதரத்துவமும் அதன் பறிக்கப்படக் கூடாத பண்புகள்; அவைகளைப் பறித்து ஆதிக்கம் செலுத்தி மற்ற மக்களை ஒடுக்கப் பட்டவர்களாக, சூத்திர பஞ்சமர்களாக்கிடும் வர்ண ஜாதி முறையைக் குழிதோண்டிப் புதைத்தால் ஒழிய இந்தியச் சமூகம் ஒருபோதும் வளர்ச்சியோ, முன்னேற்றமோ அடையாது என்பதை நன்கு சிந்தித்து, இதற்காக உழைப்பது, போராடுவது தவிர வாழ்வில் வேறு லட்சியம் எங்களுக்கில்லை என்ற சமூகப் புரட்சியாளர்கள் இருபதாம் நூற்றாண்டு தந்த இணையற்ற சமூகநீதிப் போராளிகள் தெற்கில் தந்தை பெரியாரும் - வடக்கில் ‘பாபா சாகேப்' டாக்டர் அம்பேத்கருமே ஆவர்.
உலகின் ஒப்பற்ற சிந்தனையாளர்!
‘‘அம்பேத்கர் உலகின் ஒப்பற்ற சிந்த னையாளர்; புரட்சியாளர்; மனித குலத் திற்குப் புது விடியலை ஏற்படுத்தப் போராட்டக் களத்தில் நிற்கத் தயங்காத மாமேதை'' என்பதை எடுத்துக்காட்டிய தோடு, அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமூகநீதிப் போர், இந்து சனாதன ஆரிய மதத்திலிருந்து இழிவிலிருந்து விடுபடல் இவைகளுக் காகவே இருவரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக நின்று போராடினர்.
தந்தை பெரியார் அவர்கள் சுமார் நான்கு முறை சந்தித்து கலந்துரையாடிய ஒரே தேசியத் தலைவர் காந்தியாருக்கு அடுத்தபடியாக டாக்டர் அம்பேத்கர்.
அம்பேத்கரின் அறிவு நாணயமும், ஒப்பற்ற துணிச்சலும் எடுத்துக்காட்டானவை.
சுயமரியாதைச் சிங்கம்
டாக்டர் அம்பேத்கர்!
தனது ‘ஹிந்து சட்ட திருத்த மசோதா (Hindu Code Bill) என்ற பரவலான ஹிந்து சட்டத் திருத்தத்தில் - பெண்களுக்குச் சொத்துரிமை என்பதை அன்றைய சனா தனிகள் ஆட்சியில் (குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் உள்பட) ஒப்புக்கொள்ள மறுத்த நிலையில், பிரதமர் பண்டித நேரு இருதலைக் கொள்ளி எறும்புபோலான நிலையில், தனது சட்ட அமைச்சர் பதவி யைத் தூக்கி எறிந்துவிட்டு வெளியேறிய சுயமரியாதைச் சிங்கம் டாக்டர் அம்பேத்கர் அவர்கள்.
அரசமைப்புச் சட்டத்தை எரிப்பதிலும்
நானே முதல் ஆளாக இருப்பேன்!
அதுமட்டுமா?
அவர் மாநிலங்களவையில் உறுப்பி னராக பின்னாளில் இருந்தபோது, அன்றைய ஆளுங் காங்கிரஸ் அமைச்சர் கே.எம்.கட்ஜூ போன்றவர்கள், இவரைப் பார்த்து, ‘‘நீங்கள்தானே இந்த அரசமைப்புச் சட்டத்தை எழுதினீர்கள்'' என்று திசை திருப்பியபோது, சுரீரென்று முகத்தில் அறைந்ததுபோல், ‘‘நீங்கள் எங்கே எனக்குச் சுதந்திரம் கொடுத்தீர்கள்? என்னை ஒரு வாடகைக் குதிரை (Hack) யாக ஆக்கிக் கொண்டுதானே சவாரி செய்தீர்கள்? நான் எழுதியதாகச் சொல்லப்படும் இந்த அரசமைப்புச் சட்டத்தை எரிப்பதிலும் நானே முதல் ஆளாக இருப்பேன்'' என்று கர்ஜித்தாரே - (ஆந்திர மாநிலம், மொழி வாரி மாநில பிரிவினை மசோதா சட்ட விவாதம் - 3.9.1953 அது ஒன்று போதாதா?)
அவரது அரசியல் அறிவு, நேர்மை, துணிவு, நாணயத்துக்கு எடுத்துக்காட்டு!
இன்று காவிகள் அம்பேத்கரை அணைத்து அவரது சமூகநீதி - சமத்துவ - வர்ணாசிரம ஒழிப்பினை - ஹிந்து மத புரட்டு அம்பலத்தை கபளீகரம் செய்ய முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியார் - அம்பேத்கர்
வாசகர் வட்டங்கள்
ஆனால், இளைஞர்களும், இளைய தலைமுறையும் ஏமாற மாட்டோம் என்று தான் உலகம் முழுவதும் - இந்தியாவின் வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு எல்லா திசைகளிலும் பெரியார்- அம்பேத்கர் ஆகியவர்களின் பெயரால் வாசகர் வட்டங் களை உருவாக்கி - விடியலுக்கான விடை அவ்விரு புரட்சியாளர்களின் தத்துவங்கள் என்பதை உணர்ந்து அவர்தம் கொள்கை களை ஏற்று முழங்குகிறார்கள்!
சுயமரியாதைச் சூடு போட்டு உணர்த்துங்கள்!
முகிலைக் கிழித்த முழு மதியாக அவர்தம் தத்துவமும், வித்தகமும் சமூக விடுதலை, சமத்துவத்தை வென்றெடுக்க சூளுரையேற்போம் - சுயமரியாதைச் சூடு போட்டு உணர்த்துங்கள்!
வாழ்க பெரியார்!
வாழ்க அம்பேத்கர்!
வருக அவர் காண விரும்பிய புதிய உலகம்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.4.2020