மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டட இடிப்பு நேர்த்தியான முறையில் அதிகாரிகளின் ஒத்துழைப்பில் நடந்தது பாராட்டத்தக்கது!
இனிமேலாவது மவுலிவாக்கங்களை அடையாளங்கண்டு வருமுன்னர் காக்கட்டும் அரசு!
தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை
2014 ஆம் ஆண்டில் மவுலிவாக்கத்தில் கட்டடம் இடிந்து 61 பேரின் உயிர்கள் குடிக்கப்பட்ட நிலை, வருங்காலத்தில் நடைபெறாமல் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சென்னை புறநகரான மவுலிவாக்கத்தில் பன்னடுக்கு 11 மாடிகள் கொண்ட கட்டடம் சில ஆண்டுகளுக்குமுன் திடீரென்று இடிந்து விழுந்து 61 பேர் பலியான கோர விபத்து நடைபெற்றது (28.6.2014 இல் நிகழ்ந்தது).
மவுலிவாக்கம் கட்டட விபத்துக்கு மூலகாரணமான உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிய பாரபட்ச மற்ற சி.பி.அய். விசாரணை தேவை என்று 4.8.2014 இல் அன்றைய எதிர்க்கட்சித் துணைத் தலை வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.
நீதிமன்ற உத்தரவு
அதுபோலவே, இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அருகிலுள்ள ஆபத்தான மற்றொரு 11 மாடி அடுக்குக் கட்டடத்தையும் இடிக்கவேண்டுமென்று உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் எல்லாம் சென்று தி.மு.க. சட்டப் போராட்டம் ஒன்றைத் தனியே நடத் தியது.
அன்றைய அ.தி.மு.க. அரசு 2 மாத கால அவ காசம் கேட்டதற்கு, உயர்நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 20 நாள்களில் இடிக்க ஆணையிட்ட நிலையில், 18.10.2016 ஆம் தேதிக்குள் இடித்து விடுகிறோம் என்று உறுதி கூறியது அ.தி.மு.க. அரசு.
அதிகாரிகளின் நேர்த்தியான ஒத்துழைப்பு
அதன்படிதான் நேற்று அங்கு 11 மாடி கட்டடம் - அக்கம் பக்கத்து குடியிருப்பாளர்களுக்கு நிம்மதியைத் தரும் வகையில் - நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் திறமையான மேற்பார்வை - திட்டமிடுதல், அதிகாரிகள், காவல்துறை, மற்ற துறையினரின் ஒத்துழைப்போடு, மூன்று விநாடிகளில் மாலை 6.52 மணிக்கு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. யாருக்கும் சேதமில்லாத அளவு ஒருங்கிணைந்த அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை முதலிய அனைவரும் முயன்று சிறப்பாக இடித்து முடித்தது ஓரளவு நிம்மதியான சட்ட நிறைவேற்றம் நடந்தேறியது ஆகும்.
தேவை நட்ட ஈடு!
பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு உரிய நட்ட ஈடு தமிழக அரசுமூலம் தருவது அவசர அவசியமாகும்!
இப்படி முறையற்ற வகையில் கட்டடம் கட்டட காரணமான, அனுமதியளித்த - எல்லோருக்கும் அபராதம் விதித்து - அதனை வசூலித்து - வீடு வாங்கி - இன்று அழுது புலம்பி தெருவில் நிற்கும் மக்களுக்கு ஆறுதலாக அந்த நட்ட ஈடு அமைதல் அவசியம்.
நியாயமற்ற விசாரணை முடிவு
இதிலிருந்து பாடம் பெறவேண்டிய துறைகளும், துறைகளின் அதிகாரிகளும் அநேகம். குறிப்பாக தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ளட்டும்!
இப்படிப்பட்ட உயிர்க்கொல்லி நிகழ்வான விசா ரணையில்கூட, பூசி மெழுகிடும் விசாரணை, அதி காரப் போக்கு பெருத்த சமூக விரோத, நியாயமற்ற செயல் ஆகும்!
மனிதநேயக் கண்ணோட்டத்தோடு அணுகவேண் டிய, நீதி கிடைக்கவேண்டியப் பிரச்சினை இது.
நாட்டில் உள்ள மற்ற ‘மவுலிவாக்கங்களையும்‘ அடையாளம் கண்டு, வருமுன்னர் காப்பதும் அவசியம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
3.11.2016