‘‘தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதா?
நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளோம் என்று தமிழக அரசு பிரகடனம் செய்யப் போகிறதா?’’ என்ற உயர்நீதிமன்றத்தின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு என்ன பதில்?
இனியாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு செயல்படுமா?
தமிழர் தலைவர் ஆசிரியர்
முக்கிய அறிக்கை
‘‘தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதா? நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளோம் என்று தமிழக அரசு பிரகடனம் செய்யப் போகிறதா? என்று உயர்நீதிமன்றம் அடுக் கடுக்கான கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளது என்றும், இனிமேலாவது தமிழக அரசு விழித்துக்கொண்டு செயல்படுமா? என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் நடக்கும் அ.தி.மு.க. அரசு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மூலம் நாளொரு மேனியும் கடும் கண்டனத்திற்கு ஆளாவது சர்வ சாதாரணமான வாடிக்கையான வேடிக்கையாகி வருகிறது!
அத்தனைத் தீர்ப்புகளிலிருந்தும் நீதிபதிகளின் கண்டனக் கணைகளைத் தொகுத்தால் அது ஒரு மாபெரும் ‘மகாபாரதம்‘ ஆகிவிடக்கூடும்!
தமிழக அரசிற்கு நல்லதல்ல
தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், ஏடுகள், ஊடகங்கள்மீது சுமார் 60-க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போட்டு அவர்களை, அவர்கள் அரசை, முதலமைச்சரை விமர்சிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக - ஜனநாயகத்தில் குடிமக்கள் எல்லோருக்கும் உள்ள பறிக்கப்பட முடியாத உரிமைகள் என்பதை மறந்துவிட்டு, இப்படி ஒரு ‘இடிப்பாரை’ இல்லாத ஏமரா மன்னனாகவே நீடிக்கவேண்டும் என்று விரும்புவது அவர்களுக்கே - தமிழக அரசிற்கே நல்லதல்ல.
அது ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் சர்வாதிகார நடவடிக்கையின் பிரதிபலிப்பாகும்.
எத்தனை முறை தமிழக அரசு அதிகாரிகள்மீது நீதிமன்றத்தின் அம்புகள் பாய்ந்துள்ளன!
எத்தனை முறை அரசின் முக்கிய அதிகாரிகள்மீது அபராதங்கள் விதிக்கப்பட்ட அவலங்கள்!
திமு.க. தலைவர் கலைஞரின்
அரிய சாதனை!
அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை - ஆசியாவின் ஒப்பற்ற நூலகம் என்ற வரலாற்றுச் சாதனை படைத்த நூலகத்தை - முன்பு ஆளுங்கட்சியாக இருந்த, திமு.க. தலைவர் கலைஞரின் அரிய சாதனை என்ற ஒரே காரணத்தால் காழ்ப்புணர்வு காரணமாக அதனை மருத்துவமனையாக மாற்றுவோம் என்று அடாவடித்தன முடிவை அறிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 3, 4 ஆண்டுகளுக்குமேல் - அதன் முடிவுக்குத் தடை விதித்துக் காப்பாற்றியுள்ளது!
உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கை!
அதற்குப் பிறகும் வீண் வறட்டுப் பிடிவாதத்திலிருந்து சிறிதுகூட இறங்கி வராமல், அதனைப் பராமரிக்கவோ, புதிய நூல்களை வாங்கிச் சேர்த்து, நவீன நூலகம் என்று பெருமை அதற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவோ இடந்தராமல், சீர்கேடு அடையச் செய்வது, சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி, தனி ‘அட்வகேட்’ கமிஷனர்கள் நியமித்து, அறிக்கை வாங்கியும், பெரிய மாற்றம் ஏதும் செய்யாமல், ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்ற நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுத்து வருவதால், 50 நாள்களுக்குள் (2017 பிப்ரவரிக்குள்) இதனைச் சரிப்படுத்தவேண்டும்; இன்றேல் சென்னை உயர்நீதிமன்றமே முன்வந்து தனிக்குழு அமைத்து நிர்வாகத்தை மேற்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்!
உயர்நீதிமன்றத்தின் உச்சக்கட்ட கண்டனம்
இன்று வந்துள்ள ஏட்டில், பள்ளிக் கல்வித் துறையின் பதில் பற்றியும் கண்டனம் தெரிவித்து ஆணையிடும் நிலையில், அவகாசம் கொடுத்து வழக்கை வேறு தேதிக்கு தள்ளிப் போட்டுள்ளார்கள்!
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், நேற்றைய ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உச்சக்கட்ட கண்டனம் வெளியாகியுள்ளது.
நீதித்துறைக்குத் தமிழக அரசும், மத்திய அரசும்தான் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.
இது தமிழ்நாடு அரசால் சரியாகச் செய்யப்படவில்லை; நீதித்துறையின் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய, போதிய ஊழியர்களை நியமிக்கவும் வேண்டும்; அதற்கான செலவுகளுக்கான போதிய நிதியை ஒதுக்கிட தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று மூன்று வழக்குரைஞர்கள் போட்ட பொதுநல வழக்கு 2001, 2002 ஆம் ஆண்டுமுதல் இருந்து வந்தது!
இவ்வாட்சிக்கு முன்பு முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் தலைமை நீதிபதியை அவரது இல்லத்திற்கே சென்று நேரிடையாக விவாதித்து நீதித்துறையின் தேவைக்காக மிகக் கணிசமான பெருந்தொகையை ஒதுக்கி, பல புதிய ஊர்களில் நீதிமன்றங்கள் திறக்கவும் ஏதுவாக வாய்ப்பளித்தார்!
அடுக்கடுக்கான கேள்விக் கணைகள்
ஆனால், அதற்குப் பிறகு நடந்தென்ன? தலைமை நீதிபதி தலைமையில், ‘மூன்று நீதிபதிகளைக் கொண்ட முழு அமர்வு’ (திuறீறீ ஙிமீஸீநீலீ) நேற்று முன்தினம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து, தமிழகத்தில் குடிஅரசு ஆட்சி அமலாகும் சூழ்நிலை ஏற்படும் அளவுக்கு, தமிழ்நாட்டின் மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதா? என்று சரமாரியாக, அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைப் பொழிந்துள்ளனர்.
இது தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசுக்குப் பெருமை தருவதா?
அதுமட்டுமா?
‘‘மத்திய அரசு ஒதுக்கிய ரூ.150 கோடி நிதியை தமிழக அரசின் திறமையற்ற மற்றும் இயலாத்தனத்தால் அந்த நிதியைப் பெறக்கூடிய பணிகளை மேற்கொள்ளவில்லை.
அதனால் அந்த நிதி காலாவதி ஆகிவிட்டது! மத்திய அரசுக்கே அந்த நிதி திரும்பச் சென்று விட்டது. இதற்கு தமிழக அரசுதான் முழுக் காரணமாகும்; இதன் காரணமாக மத்திய அரசு ரூ.50 கோடியைத்தான் 2016-2017 ஆம் நிதியாண்டில் ஒதுக்கியுள்ளது! இந்த நிதி போதாது; கூடுதலாக நிதிவேண்டும் என மத்திய அரசிடம் - தமிழக அரசு இப்போது கோருகிறது என்று அவ்வுத்தரவில் குறிப்பிட்டுவிட்டு, மேலும் கூறியுள்ள சில கருத்துகள் மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடிய கண்டனமாகும்.
தமிழகத்தில்
குடிஅரசுத் தலைவர் ஆட்சி
மேலும்,
‘‘1. தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளதா?
2. பிற துறைகளுக்கு எல்லாம் போதிய நிதிகளை ஒதுக்க முடியாமல் திணறுகிறதா?
3. நிதி நெருக்கடியில் உள்ளோம் என்று தமிழக அரசு பிரகடனம் செய்யப் போகிறதா?
என்பதுதான் எங்களுடைய கேள்வியாகும்!
அப்படி ஒரு சூழ்நிலை நிலவினால், இந்திய அரசியல் சட்டப் பிரிவு 356-இன் கீழ் தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைத்தான் அமல்படுத்தவேண்டி ஏற்படும்.
மேலும், நிதியை இப்படித்தான் கையாளவேண்டும் என்று ஒவ்வொரு மாநில அரசுக்கும் மத்திய அரசு தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும் என்பதை முதலில் மனதில் கொள்ளவேண்டும்.
எனவே, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது என்று பிரகடனம் செய்யப் போகிறதா? என்பதுபற்றி தமிழக நிதித்துறை செயலாளர் விரிவான பிரமாண மனுவைத் தாக்கல் செய்யவேண்டும்.’’
- இவ்வாறு கூறியுள்ளதை, சாதாரணமாக தமிழக அரசு ‘யாருக்கோ பெய்த மழை’ என்பதுபோல எடுத்துக்கொள்ள முடியுமா?
தமிழக அரசு விழித்துக்கொண்டு செயல்படத் தொடங்கவேண்டும்
இந்த எச்சரிக்கை மணி அடித்த பிறகாவது,
தமிழ்நாட்டின் அ.தி.மு.க. அரசு விழித்துக்கொண்டு செயல்படத் தொடங்கவேண்டும் என்பதே நமது வற்புறுத்தல்!
இல்லையேல், தமிழக அரசு கடும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
12.11.2016