தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிதான் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
மத்திய அரசு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு - முறையாக எடுக்கவேண்டிய ஏற்பாடுகளை செய்யாமல் திணறிக்கொண்டு இருக்கிறது
ஆபரேசன் வெற்றி - நோயாளி செத்தான் என்ற நிலையே!
புதிய ரூபாய் நோட்டில் சமஸ்கிருத எண்ணைத் திணித்தது ஏன்? சந்தடி சாக்கில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைத் திணிப்பா?
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்
சிதம்பரம், நவ.14- புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளில் சமஸ்கிருத இந்திப் பண்பாட்டுப் படையெடுப்பு நடந்திருக்கிறது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
13.11.2016 அன்று சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேட்டியளித்தார். அப்பேட்டி வருமாறு:
நோயை விட, சிகிச்சை மோசமாக இருக்கின்றது என்று சொல்லக்கூடிய நிலை
செய்தியாளர்: கருப்புப் பண ஒழிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள்பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்திருக்கிறார்களே அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: கருப்புப் பணத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது - அதனை டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளவேண்டும். அதைத் தாண்டுகிறவர்கள், மார்ச் 30 ஆம் தேதிக்குள் செய்யவேண்டும் என்பதெல்லாம் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தது, பொதுவாக வரவேற்கத்தகுந்ததாக இருந்தாலும்கூட, நடைமுறையில் அதற்கு மாற்று ஏற்பாடு என்பது - சாமானிய மக்கள் பாதிக்காத அளவிற்கு செய்யப்பட்டிருக்கவேண்டும்.
இதற்குமுன்னால், எனக்குத் தெரிந்து 1946 ஆம் ஆண்டு சி.வி.தேஷ்முக் அவர்களால், இதேபோன்று ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதேபோன்று 1978 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் அவர்களால் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் என்ன ஒரு முக்கியத்துவம் என்றால், இப்பொழுது உள்ளது போன்று ஏ.டி.எம். வசதிகள் எல்லாம் அப்பொழுது கிடையாது. ஆனால், அந்த நேரத்திலும்கூட, மாற்று ஏற்பாடுகளை தக்க வகையில் செய்திருந்தனர். இதுபோன்ற சிக்கல்கள் ஏற்பட வில்லையே! பணியாற்றுகின்றவர்கள் எல்லாம் பணிகளை விட்டுவிட்டு, அதிலும் ரிக்ஷா தொழிலாளர்கள் போன்றவர்கள், அன்றாடத் தொழிலாளர்களாக இருப்பவர்கள், தங்களுடைய அன்றாடத் தேவைக்கே கூட பணத்தை மாற்றினால்தான் முடியும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஒன்று வங்கிக்குச் செல்கிறார்கள்; அங்கே சென்றாலும், 2000 ரூபாய் நோட்டுதான் இருக்கிறது; 500 ரூபாய் நோட்டு இன்னும் வரவில்லை என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.
மேலும் மேலும் நாங்கள் நாட்களை நீட்டிக் கொண்டிருக்கிறோம், பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு என்று சொல்வது இன்னும் கொஞ்சம் குழப்பதை உண்டு பண்ணக்கூடியதாகும்.
வெளிநாட்டில் இருக்கின்ற கருப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வந்து, குடிமக்களின் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று சொன்னீர்களே, அது என்னாயிற்று என்ற கேள்வியை, எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, சாமானியவர்களும்கூட கேட்க ஆரம்பித்ததை சந்திக்கவேண்டும் என்கிற முறையில்தான், எப்படியாவது இப்படியொரு வேலையைச் செய்தால், அது மிகப்பெரிய பயன் ஏற்படும் என்று நினைக்கிறார்கள்.
இதில் ஒரே ஒரு பயன் கள்ள நோட்டுகள் புழங்க முடியாதது என்பதுதான் உருப்படியான ஒரு பயனாகும்.
அதேநேரத்தில், இந்தப் பயன் மூலமாக மக்கள் பாதிக்கப்படக் கூடாது. போதுமான ஏற்பாடுகளை செய்யவேண்டும். ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பிவிட்டு, அதற்குப் பிறகு எடுக்கலாம் என்று சொன்னார்கள். அதிலும் எத்தனை மாற்றங்கள் - 4000 ரூபாய் எடுக்கலாம்; 2000 ரூபாய் எடுக்கலாம் என்று மாற்றி மாற்றி, மக்கள் வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருந்து நின்றுவிட்டுத் திரும்புகிறார்கள் என்று சொல்லும்பொழுது, இது நிச்சயமாக அரசாங்கம் சரியாக திட்டமிடாத ஒரு சூழல். ஏதோ அவசர கோலத்தில் அள்ளித் தெளித்தது போன்ற ஒரு முயற்சி. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் பெரும் பணக்காரர்கள் அல்ல; சாமானிய மக்கள்தான். அவர்களுடைய வாழ்க்கைதான் கடந்த சில நாள்களாக சிக்கலாகிக் கொண்டிருக்கிறது.
நம்முடைய மக்கள் இயல்பாகவே - நல்ல அளவிற்கு நோக்கத் தைப் புரிந்துகொண்டார்கள் என்றாலும், அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில், அவர்கள் படுகின்ற கஷ்டம் மிக அதிகம். ஒரு ஊரில், நோயாளிகளுக்குக்கூட இலவசமாக சாப்பாடு போட்டிருக்கிறார் ஒரு ஓட்டல்காரர். இதுபோன்ற சூழல்கள் எல்லாம் இருக்கிறது என்று சொன்னால், இது விரும்பத்தக்கதா? எனவே, உடனடியாக இந்தத் தவறுகளை மத்திய அரசாங்கம் திருத்திக் கொண்டு, மற்றவர்கள் உடனடியாக செய்யவேண்டிய பணிகளை அவர்கள் பார்க்கவேண்டும்.
சரியாக திட்டமிடாததினுடைய விளைவு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. நோயை விட, சிகிச்சை மோசமாக இருக்கின்றது என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.
புதிய நோட்டுகளில் சமஸ்கிருத இந்திப் பண்பாட்டுப் படையெடுப்பு நடந்திருக்கிறது
மேலும், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வந்து, புதிதாக 2000 ரூபாய் நோட்டு, 500 ரூபாய் நோட்டு வரும் என்று சொல்லியதில், இதுவரையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரவில்லை. 2000 ரூபாய் நோட்டு புதிதாக வந்திருக்கிறது - அதில் ஒரு பெரிய முக்கியத்துவம் என்னவென்றால், தேவநாகரி எழுத்தில் - இதற்கு முன் வந்த நோட்டுகளில் இல்லாத நிலையில் - சமஸ்கிருத இந்திப் பண்பாட்டுப் படையெடுப்பு நடந்திருக்கிறது. இது கொடுமையான ஒன்று. சந்தடி சாக்கில் ஆர்.எஸ்.எஸ். கொள்கையை திணித்துள்ளார்கள். ஒத்தக் கருத்துள்ளவர்கள் இதனை கடுமையாக எதிர்த்தாகவேண்டும்.
ஜனநாயகத்தில் குடிமக்களின்
உரிமைகள் மிக முக்கியம்
செய்தியாளர்: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், கருப்புப் பண முதலாளிடமிருந்து எனக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார். மேலும், கருப்புப் பணத்தையும், பினாமி சொத்துகளையும், டிரஸ்டு சொத்துகளையும் மீட்பதுதான் அடுத்த கட்ட வேலை என்றும் சொல்லியிருக்கிறாரே இதுபற்றி...?
தமிழர் தலைவர்: வெளிநாட்டில் இருக்கின்ற கருப்புப் பணத்தைக் கொண்டு வருவோம் என்றுதான் அவர்கள் முதலில் சொன்னார்கள். யார் யார் கருப்புப் பணத்தை வெளிநாட்டில் வைத்திருக்கிறார்கள் என்கிற பட்டியலில் உள்ள பெயர்களைக்கூட அவர்கள் வெளியிடவில்லை. ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அந்தப் பட்டியலை வெளியிடவேண்டும் என்று சொன்னபொழுதுகூட, பட்டியலை வெளியிட முடியாது என்று சொன்னார்கள். இந்த மோடி ஆட்சி - முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறதா? அல்லது சாதாரண தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருக்கிறதா? என்பதை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
சாமானிய மக்கள், ஏழை எளிய மக்கள், விவசாய மக்கள், பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆபரேசன் வெற்றி! நோயாளி செத்தார் என்ற நிலை வரக்கூடாது.
தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்குபற்றி....
செய்தியாளர்: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது?
தமிழர் தலைவர்: தமிழ்நாட்டினுடைய சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது எல்லோருக்கும் மிகத் தெளிவாகவே தெரியும். நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கொலைகளும், கொள்ளைகளும் சிறப்பாக நடந்துகொண்டு வருகின்றன. இதற்குமுன் 5, 6 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற கொலைகளையும் கண்டுபிடிக்கிறோம், கண்டுபிடிக்கிறோம் என்று நீதிமன்றத்திலேயே அவகாசத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், கூலிப் படைகளால் தொல்லைகள் அதிகமாக இருக்கின்றன. இதில் இன்னும் விசித்திரமான நிலை என்னவென்றால், சிறையில் இருக்கின்றவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலைதான் இருக்கிறது.
மத்திய அரசாங்கம்
மாநில அரசாங்கத்தை நடத்துகிறதா?
செய்தியாளர்: கடந்த 7 ஆம் தேதிவரை தலைமைச் செயலகமாக செயல்பட்டு வந்த சென்னை அப்பல்லோ மருத்துவமனை இப்பொழுது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை மக்கள் மத்தியில் - தமிழக அமைச்சர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: மிகவும் வருத்தப்படவேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், அந்த அம்மையார் குணமாகிறார் என்பது ஒரு ஆறுதலான செய்தி. அதேநேரத்தில், அமைச்சர்களாக இருக்கிறவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எந்தெந்த மத்திய அரசு திட்டங்களை ஏற்கமாட்டோம் என்று சொன்னார்களோ, குறிப்பாக உதய் திட்டம், ஜி.எஸ்.டி.யில் ஒரு பகுதி, நுழைவுத் தேர்வு போன்ற திட்டங்கள். இப்பொழுது அவையெல்லாம் மாற்றி நடப்பதற்கு யார் காரணம்? யார் முடிவெடுத்தார்கள்? என்று சொல்லும்பொழுது, எங்கேயிருந்து வந்தது? இதற்கு என்ன காரணம்? மறைமுகமாக டில்லியின் வற்புறுத்தலால் நடைபெறுகிறதா? இங்கு ஜனநாயக ஆட்சி என்ற பெயரால் - அமைச்சரவையின் பெயரால் - குடியரசுத் தலைவரினுடைய வேறொரு நிழல் படுகிறதா? அல்லது மத்திய அரசாங்கமே, மாநில அரசாங்கத்தை நடத்துகிறதா? என்கிற மிகப்பெரிய சந்தேகம் இப்பொழுது மக்களுக்கு வந்திருக்கிறது. இது அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களின் கவலைகூட. இந்தப் போக்கு உடனடியாக மாற்றப்படவேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுக்கடுக்கான கேள்விகள்!
செய்தியாளர்: தமிழகத்தைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. ஆட்சிதான் நடைபெறுகிறதா என்பதற்கு எதிர்க்கட்சியாக இருக்கின்ற திராவிட முன்னேற்ற கழகமே பதில் சொல்ல மறுக்கிறதே?
தமிழர் தலைவர்: இல்லை, இல்லை. மறுப்பதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை. மனிதாபிமானம்தான். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை. நேற்று முன்தினம் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில், தமிழகத்தில் நிதிநிலை சரியில்லையா? குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவரவேண்டுமா? என்பதுபோன்ற அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டது ஒன்றே போதும், இங்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்கு.
செய்தியாளர்: தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறதா? இல்லையா?
இன்னும் இரண்டு நாள்களில் நாடாளுமன்றத்தில் தெரியும்!
தமிழர் தலைவர்: அந்தக் கேள்வியைத்தான் உயர்நீதிமன்றம் கேட்கிறது. அதற்கு இன்னும் பதில் வரவில்லை.
செய்தியாளர்: நரேந்திர மோடியின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தீவிரமாக எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளதுபற்றி...?
தமிழர் தலைவர்: பொதுவாகவே நாடாளுமன்றம் ஏற்கெனவே எப்படி நடக்கிறது என்று தெளிவாகவே உங்களுக்குத் தெரியும். இந்தப் பிரச்சினையின் மூலமாக, அதனுடைய அதிர்ச்சி, உலுக்கல் இன்னும் இரண்டு நாளில் தெரியும்.
ஊழலுக்காக வக்காலத்து வாங்கியவர்கள் ஊழலை ஒழிக்கிறார்களாம்!
செய்தியாளர்: கடந்த காலங்களில் ஊழல் பெருச்சாளிகளுக்காக வாதாடியவர்கள் யார் என்றால், ராம்ஜெத்மலானி, சுப்ரமணிய சாமி, அருண்ஜெட்லி போன்றவர்கள் எல்லாம் பல கோடி ரூபாய் ஊழல் வழக்குகளில் சிக்கியவர்களுக்காக வாதாடியவர்கள். இன்றைக்கு அவர்களுடைய ஆட்சி - கருப்புப் பணத்தை ஒழிப்போம் - ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக் கொண்டு வருவோம் என்று சொல்வது நகைச்சுவையாக இருக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து?
தமிழர் தலைவர்: நீங்களே அற்புதமான கேள்வியும் கேட்டு, அதற்கான பதிலையும் சொல்லிவிட்டீர்கள். இதைவிட தலைசிறந்த நகைச்சுவை இந்தக் காலட்டத்தில் வேறு கிடையாது. ஏனென்று சொன்னால், சில நேரங்களில் எடுத்துக்கொண்டு ஓடுகிறவர்கள், வேறு ஒருவரை அடையாளம் காட்டுவார்கள் என்று சொல்வது வழக்கம். அதனை நடைமுறையில் பார்த்திருக்கிறோம். இப்பொழுது அது அரசியலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நதிநீர்ப் பிரச்சினைக்களுக்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியதாக தெரியவில்லையே!
செய்தியாளர்: எந்த நதிநீர்ப் பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியதாக தெரியவில்லை! உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தண்ணீர் திறக்கவில்லையே, அதுபற்றி...
தமிழர் தலைவர்: நாங்கள், நீங்கள் எல்லாம் இப்பிரச்சினையில் பேசக்கூடாது. இது வாழ்வாதாரப் பிரச்சினை. இப்பிரச்சினை கட்சிகளுக்கு அப்பாற்பட்ட - அரசியலுக்கு அப்பாற்பட்டது. முதல் மூன்று நாள்கள் நடைபெற்ற உச்சநீதிமன்ற வழக்கில், முதல் நாள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல், ஏற்றுக்கொண்டுவிட்டு, திடீரென்று இரண்டாவது நாள் பா.ஜ.க. அரசான மத்திய அரசு மாற்றிக் கொண்டது ஏன்? முழுக்க முழுக்க கருநாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான், இந்தத் திருவிளையாடல்களை செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்த செய்தி.
ஆகவே, இந்த நிலைகளை உருவாக்கவேண்டுமானால், நதிகளை தேசிய மயமாக்குகிறோம் என்ற ஒரு உத்தரவைப் போட்டாலே - அவசர சட்டத்தைப் போட்டாலே போதுமானது.
காவிரி மேலாண்மை வாரியம் வந்தால், தங்களுடைய வசதிப்படி கருநாடகம் நிலைப்பாட்டை எடுக்க முடியாது. காவிரி மேலாண்மை வாரிய உத்தரவின்படி, நதிகளின் நீர் இருப்பின்படி முடிவுகள் எடுக்கப்படும். ஆகவேதான், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கருநாடக மாநில எதிர்க்கிறது. அதன்படியே மத்திய அரசும் நடந்து வருகிறது.
இதற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான். இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும், தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஆட்சி வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதேநேரத்தில், கருநாடகத்தில் ஏற்கெனவே அவர்கள் ஆட்சியில் இருந்த காரணத்தினால், இப்பொழுது நடைபெறுகின்ற காங்கிரசு ஆட்சியை இறக்கிவிட்டு , பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதற்காக இந்தப் பிரச்சினையை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த நினைக்கிறார்கள். விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். அதனுடைய விளைவுதான் இப்பொழுது விவசாயிகளின் தற்கொலை என்பது நாளும் பெருகிய வண்ணம் இருக்கக்கூடிய வேதனையான போக்காகும்.
காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழகத்தில் ஒருங்கிணைப்பு இல்லையே!
செய்தியாளர்: காவிரி நீர்ப் பிரச்சினையைப் பொருத்தவரையில் தமிழகத்தில் உள்ள கட்சிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாததற்குக் காரணம் என்ன?
தமிழர் தலைவர்: தமிழகத்தில் இருக்கின்ற கட்சிகளின் ஒருங்கிணைப்பு இருந்தாலும், இல்லையென்றாலும், ஒரே குரலில்தான் எல்லோரும் சொல்கிறார்கள். அரசாங்கமே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவில்லையே! அப்படி கூட்டினால், அனைவரும் ஒரே நிலைப்பாட்டைத்தான் சொல்வார்கள். ஆளுங்கட்சி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவில்லை என்றவுடன், அதற்கடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார். அதற்கும் சிலர் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறார்கள். எங்கும் அரசியல் - எதிலும் அரசியல் என்ற இந்தத் தவறான போக்கு தமிழக அரசியல் தலைவர்களிடமிருந்து வெளியேறவேண்டும்
கருநாடகத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இவ்வளவு நடந்தும், அரசும் அசையவில்லை; சில அரசியல் கட்சிகளும் தங்களுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, விவசாயிகளுடைய வாழ்வாதாரப் பிரச்சினை பொதுவானது என்று நினைக்கவில்லை.
தீப்பற்றி எரியும்போது, யார் தண்ணீர் கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கவேண்டிய அவசியமில்லை. தண்ணீரையும், மணலையும் கொண்டு வருகிறார்களே, அவர்கள் அத்தனைப் பேரையும் தீயை அணைக்கப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதுதான் புத்திசாலித்தனமாகும்.
தமிழகத்தில் நீங்கள் சொல்லியதுபோல இல்லாதது - வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது; கண்டனத்திற்குரியது.
செய்தியாளர்: உள்ளாட்சித் தேர்தலைப்பற்றி...
தமிழர் தலைவர்: அது நடைபெறும்பொழுது பார்த்துக் கொள்ளலாம்.
கட்டிய பணத்தை முதலில் வாங்கட்டும்!
செய்தியாளர்: தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரபாண்டியன் அவர்கள், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் போன்று, திராவிட கட்சிகளும் செல்லாததாகும் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்களே...?
தமிழர் தலைவர்: அவர்களுக்கு எத்தனையோ ஆசை; அதில் இது ஒரு ஆசை. தான் இருக்கிறோம் என்பதற்காக, உங்களைப் போன்ற செய்தியாளர்களிடம் ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நடைபெறவிருக்கின்ற மூன்று தொகுதி தேர்தலில், முதலில் கட்டிய பணத்தைத் திரும்ப வாங்கட்டும் பார்க்கலாம்.
- இவ்வாறு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பதிலளித்தார்.