Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

அகில இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒழித்துவிட்டு காவி மயமாக்க புதிய அமைப்பா?

$
0
0

அகில இந்திய மருத்துவக் கவுன்சிலை ஒழித்துவிட்டு

காவி மயமாக்க புதிய அமைப்பா?

டாக்டர்களின் எதிர்ப்பினை வரவேற்கிறோம் - பழைய நிலையே தொடரவேண்டும் என்றும் வற்புறுத்துகிறோம்

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

நடைமுறையில் இருக்கும் தேசிய மருத்துவக் கவுன்சில் முறையை ஒழித்துவிட்டு, தாங்கள் ஏவும் பணியை நிறைவேற்றக் கூடியவர்களாக, ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்களைக் கொண்டு நிரப்பும் புதிய அமைப்பினை எதிர்த்து தமிழக டாக்டர்கள் போராடுவதை திராவிடர் கழகம் வரவேற்கிறது என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்   விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவத் துறைப் படிப்புகளின் தரத்தை நிர்ணயம் செய்ய, மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு முதல் பல்வேறு அம்சங்களை ஆராய்ந்து, மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்த நீண்ட காலமாக இருந்து வந்த அமைப்பு - இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India)
ஆகும்.

அதுபோலவே, சட்டப்படிப்புகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இவற்றை ஒழுங்குபடுத்திட, ‘பார் கவுன்சில்’ இந்தியா (Bar Council of India)  என்ற அமைப்பும் உள்ளது.

மருந்தியல் படிப்பை ஒழுங்குபடுத்த மருந்தக கவுன் சில் என்ற அகில இந்திய பார்மசி கவுன்சில் Pharmacy Council of India) மருந்தியல் படிப்புகளை ஒழுங்குபடுத்த உள்ளது.

மருத்துவக் கவுன்சிலை ஒழிக்கத் திட்டம்

இந்நிலையில், மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, இந்த மருத்துவக் கவுன்சிலை (MCI) ஒழித்துவிட்டு, தங்களால் நியமிக்கப் படும் ஒரு குழுவே இனிமேல் அப்பணிகளைக் கண்காணிப்பார்கள் என்று திட்டமிட்டு, செயல்பட முனைப்புடன் உள்ளது!

இந்த மருத்துவக் கவுன்சிலில் பல மாநிலங்களைச் சேர்ந்த டாக்டர்கள் உறுப்பினராகி, மாநில மருத்துவக் கவுன்சிலுக்கு பிரபல டாக்டர்கள் தேர்தல் முறை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொண்டூழியம் செய்யும் வகையில் முன்வருகிறார்கள்!

நினைவிருக்கிறதா கேதன் தேசாய்?

ஏற்கெனவே இதன் தலைவராக இருந்தவர் பல வகையான ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டுக்கு ஆளான ‘கேதன் தேசாய்’ என்ற பார்ப்பனர். (இவர்தான் மண்டல் கமிஷனுக்கு எதிராக டில்லியில் ஏராளமான மருத்துவக் கல்லூரி மற்றும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை கிளர்ச்சி செய்யச் செய்தும், தீ வைத்துக் கொள்ளவும் தூண்டுதலுக்கு மூல காரணமானவர் என்று கூறப்படுகிறது).

‘மிகவும் சக்தி வாய்ந்த’ இந்த மனிதர் தன்மீது சி.பி.அய். சுமத்தியுள்ள குற்றச்சாற்று சாதாரணமானதல்ல.  அவர் வீட்டில் எடுத்த தங்கத்தின் அளவு திருப்பதி வெங்கடாசலபதிக்கு உள்ளதைவிட அதிகம் என்று அப்போது பல ஏடுகள் எழுதின.

அவர் எப்படியோ, குஜராத்தில் மேலிடத்தின்  அவர்களது ஆதரவுடனோ என்னவோ, மீண்டும் புனருத்தாரணம் பெற்று, திரும்பவும் உலக அமைப்புக்குத் தலைவராக - ஊழலுக்குப் பரிசுகள் - போனசும் கிடைத்ததுபோல கிரீடம் சூட்டப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் பல முக்கிய அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் பொறுப்பேற்று, மருத்துவக் கவுன்சில் சரியானபடி இயங்க ஏற்பாடுகளைச் செய்தனர்!

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நியமனம்

எப்படி திட்டக் கமிஷனை ரத்து செய்து ‘நிதி அயோக்‘ என்று ஒரு அமைப்பினை தங்களது ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகவோ  ஆதரவாக உள்ளவர்களையோ அமைத்து நடத்துவதுபோல, வரலாற்றுத் துறை ஆய்வு மய்யம் போன்ற பல மத்திய அமைப்புகள் அத்தனையையும் ‘காவி மயமாக்கி’, தங்களது துணை அமைப்புபோல அதனை நடத்திட ஆழ்ந்த திட்டத்துடன்தான் மருத்துவக் கவுன்சிலைக் கலைக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது!

டாக்டர்களின் கோரிக்கை நியாயமானதே!

இதனை எதிர்த்து டாக்டர்கள் பலரும் எதிர்ப்புக் குரல் கொடுத்து அறப்போரில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டுவரும் மருத்துவக் கவுன்சிலை ரத்து செய்யக்கூடாது என்று ஓங்கிக் குரல் கொடுக்கும் அவர்களின் கோரிக்கையினை வரவேற்கிறோம்.

திராவிடர் கழகம் முழு மனதுடன் ஆதரித்து அவர்களின் நியாயமான கோரிக்கையான மருத்துவக் கவுன்சில் தொடரவேண்டும்; அவர்களின் முயற்சி வெல்ல வேண்டும் என்றே விரும்புகிறோம் - வற்புறுத்துகிறோம்.

 

கி.வீரமணி  
தலைவர், திராவிடர் கழகம்.


சென்னை
18.11.2016

 

 

 


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles