மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு
நூலகம் இவற்றில் அரசியல் கண்ணோட்டமின்றி ஆட்சி செயல்பாடு அமையட்டும்
கடந்தமுறைகையாண்ட
அணுகுமுறையில் மாற்றம் ஏற்படட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
மதுரவாயல் - சென்னை துறைமுகத்திற்கிடையே திமுக இடம் பெற்ற அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மேற்கொள்ளப்பட்ட திட்டம் அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டது. அண்ணாவின் நூற்றாண்டையொட்டி திமுக ஆட்சியில் நிறுவப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சிதைக்கும் வகையில் செயல்பாடுகள் உள்ளன. கடந்த முறை அதிமுக ஆட்சி மேற்கொண்ட அரசியல் நோக்குக் கண்ணோட்டத்திருந்து விடு பட்டு. ஓர் ஆட்சி என்பது முந்தைய ஆட்சியின் தொடர்ச்சி என்ற ஜனநாயகக் கண்ணோட்டத்தில் செயல்முறைகள் அமையவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல் முடிந்து, புதிய அதிமுக அரசு பதவியேற்றுள்ள நிலையில், அதன் பழைய அணுகு முறைகள் எப்படியிருந்தபோதிலும் இப்போது மக்கள் தந்துள்ள தீர்ப்புக்கு ஏற்ப, புதியதோர் அணுகுமுறையைக் கடைப்பிடித்து ஜனநாயக அரசு என்று உலகுக்குக் காட்ட வேண்டிய அவசியம் அதற்கு உண்டு.
குறிப்பாக முதல் அமைச்சர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் முந்தைய ஆட்சிக்காலத்தில் கடைப்பிடித்த சிலவற்றை மாற்றி, மக்கள் நலம் பொதுநலம் - வளர்ச்சிக் கண்ணோட்டத்தினை முன்னிறுத்தி செயல்பட வேண்டும்.
மதுரவாயல் - சென்னை துறைமுகம்
பறக்கும் சாலை
சென்னை துறைமுகத்தில் அதிக எடை கொண்ட சரக்குகளை நிறுத்துவதற்கு வசதியாக கப்பல் நிறுத்தும் தளம் 15.5 மீட்டர் அளவு ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக ஆழம் கொண்ட கப்பல் நிறுத்தும் தள வசதி கொண்ட நாட்டின் முதல் துறைமுகம் என்ற பெருமை நமது சென்னை துறைமுகத்துக்கு கிடைத்துள்ளது. 8 ஆயிரம் கன்டெய்னர்களை ஏற்றிவரும் சரக்குக் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு இனி எளிதாக வந்து செல்ல முடியும்.
சென்னை துறைமுகத்திலிருந்து நமது நாட்டுத் தொழிற் சாலைகளுக்கும் பெங்களூரு, அய்தராபாத் முதலிய பகுதி களுக்குச் செல்ல வசதியாக திமுக ஆட்சியில் 2006 இல் மதுர வாயல் -துறைமுகம் (சென்னை) பறக்கும் சாலைத் திட்டத்திற்கு - மத்திய அரசின் உதவியுடன் 1800 கோடி ரூபாய் செலவில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் திமுக அங்கம் வகித்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின்போது திட்டம் அனுமதிக்கப்பட்டு, சாலை நெடுக தூண்களும் அடிக்கட்டுமானத்திற்கு ஏற்ப நிறுவப்பட்டு, அதிமுக ஆட்சி வந்தபிறகு அப்படியே கிடப்பில் போடப்பட்டது.
பிரதமரின் முயற்சியும் தோல்வி!
ஒருபுறம் சென்னை உயர்நீதிமன்றத்தின் வற்புறுத்தல். மறுபுறம் முந்தைய பிரதமர் தமது தனிச்செயலாளர் நாயர் என்பவரையே முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் அனுப்பி இத்திட்டத்தினை நிறைவேற்ற மாநில அரசு ஒத்துழைப்புத் தர வேண்டுமென்று கேட்ட நிலை!
இருந்தும் போடப்பட்ட முட்டுக்கட்டை அப்படியே இருக்கிறது இன்று வரை. அதன் விளைவு நம் துறைமுகத்திற்கு கப்பல் மூலம் வரும் வருவாய் ஆந்திரப் பகுதிக்குச் செல்வதும், மக்கள் வரிப்பணம் வீணானதும் போக்குவரத்து நெரிசல் அதிகமானதும் தான் மிச்சம்.
1) எனவே இம்முறை உடனடியாக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயலாற்றி, சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத்திட்டத்தை விரைந்து முடித்திடும் பணிக்கு முன்னுரிமை தர வேண்டும்.
2) ஆசியாவிலேயே வேறு எங்கும் இல்லாத பெருமை மிகுந்த ஒரு நூலகத்தை சென்னை கோட்டூர்புரச்சாலையில் முந்தைய கலைஞர் ஆட்சியில் - அண்ணாவின் நூற்றாண்டினை வர லாற்று ரீதியாக பதிவு செய்யும் வகையில் 184 கோடி ரூபாய் செலவில், சகல வசதிகளுடனும், புதுமையாகவும் நிர்மாணித்து செயல்பட்ட அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை அதிமுக ஆட்சி வந்தவுடன் அதனை மருத்துவமனையாக்கிடப் போகிறோம் என்று அதிர்ச்சியான அறிவிப்புக் கொடுத்ததும், அதனை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, தமிழக அரசு வழக்கு ரைஞரைப் பார்த்து புதிய மருத்துவமனை கட்ட இதைத் தவிர சென்னையில் தமிழக அரசுக்கு வேறு இடமே கிடைக்கவில்லையா என்று கேட்டு தடையாணை பிறப்பித்தார்.
அதிமுக அரசுக்கு
பெருமை சேர்க்குமா?
அதிலிருந்து அந்நூலகம் பராமரிப்பு அற்ற, சிதைந்த நிலையில் தான் நடைபெற்று வருகிறது. பல முறை நீதிபதிகள் அதனைத் தடுக்க வழக்குரைஞர் குழுபோட்டு அறிக்கை பெற்று, தமிழக அரசுக்கு ஆணை போடுவது போல இனிமேல் நாங்களே (நீதிமன்றமே) எடுத்து நடத்தலாமா? என்று சுருக்கென்று கேட்டனர்.
அறிஞர் அண்ணா பெயரில் உள்ள ஒரு நூலகம் - அதுவும் அண்ணா பெயரைக் கொண்ட ஒரு கட்சி ஆட்சியில் இப்படி அவலத்திற்கு ஆளாக்கப்பட்டு, இத்தனை பொதுமையாளர்களின் வேதனைக்கும் சுட்டிக்காட்டலுக்கும் ஆளானது அதிமுக அரசுக்குப் பெருமை தருவதாக ஒரு போதும் ஆகாது!
முன்பு எப்படி நடந்திருந்தாலும், இனியாவது அம்முடிவைத் திரும்பப்பெற்று, தமிழக அதிமுக அரசு தனது போக்கில் வன்மம் இனி தலை தூக்காது என்று மக்களுக்குக் காட்ட வேண்டியது அவசரக்கடமையாகும்.
ஜனநாயகத்தின் தீர்ப்பை மதிக்கட்டும்!
அதுபோல தமிழ்செம்மொழி அமைப்பு, செம்மொழி நூலகம், ‘‘அடையாறு பூங்கா’’ என்று மாற்றப்பட்ட ‘‘தொல்காப்பியர் பூங்கா’’ திறப்பு எல்லாம் முக்கியம். தமிழக அரசு புதிய அணுகுமுறையோடு ஓர் ஆட்சி முந்தைய ஆட்சியின் தொடர்ச்சி என்ற அணுகு முறையோடு ஜனநாயகத் தீர்ப்பை மதிக்கட்டும்! செயல்படட்டும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
2.6.2016