Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

‘‘காவிகளைக் காலூன்ற விடோம்!''

$
0
0

திருத்துறைப்பூண்டி சொல்லும் செய்தி!(Message)

‘‘காவிகளைக் காலூன்ற விடோம்!''

தொகுப்பு: மின்சாரம்

(திருத்துறைப்பூண்டியில்கடந்த வெள்ளி, சனி ஆகிய நாள்களில் நடை பெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, பொதுக்கூட்டம் பற்றிய ஒரு திறனாய்வு)

மே 12, மே 13 நாள்களில் திருத்துறைப் பூண்டிக்கு நல்லதோர் வரலாறு கிடைத்தி ருக்கிறது. இந்த இரண்டு நாள்களிலும் அவ்வூரில் சிறீ அங்கை மகாலில் திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை செம்மையுற நடைபெற்றது. நூறு இருபால் இளைஞர்கள் பங்கேற்றனர். பட்டதாரிகள், பிளஸ் டூ வரை படித்தவர்கள் என்பது அவர்களுக்கான கல்வித் தகுதி. கழகக் குடும்பத்தைச் சேர்ந்த கொள்கை வாரிசுகளும் இதில் அடங்கும்.

தஞ்சை வல்லம் - சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சிப் பட்டறை நடந்துகொண்டுள்ளது. அதே காலகட்டத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்  பட்டறை திருத்துறைப்பூண்டியில்.

இந்தியா முழுவதும் இந்துத்துவா ஆட்சி என்ற கட்டமைப்புக்குக் கடைக்கால் போடப்பட்டு, அதற்கான மேல்மட்டப் பணிகள் அதிவேகத்தில் நடந்துகொண்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பல்வேறு ‘திருக்கல்யாண’ சேட்டைகளைச் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டனர். இதன்மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறும் மத்திய பி.ஜே.பி.க்கு மக்கள் அங்கீகாரம்  கிடைத்துவிட்டது, கிடைத்துவிட்டது என்று ‘ஜே’ போட ஆரம்பித்துவிட்டனர். கால் பதிக்க வக்கில்லாத சில மாநிலங்கள்மீது, அக்கட்சியின் கள்ளப் பார்வை திரும்பியுள்ளது - அதில் முக்கியமானது தமிழ்ப் பூமிதான்.

தமிழ் மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல், தடுமாறும் அரசு சூழல் இவற்றைக் கெட்டிக்காரத்தனமாகப் பயன்படுத்தி தனது கிடையை மேயச் செய்யலாம் என்ற ஆசையில் சப்புக் கொட்டிக் கொண்டு திரிகிறது பி.ஜே.பி.யும் - அதன் பரிவாரங்களும்.

இன்னொரு பக்கத்தில் களப் பணிகளிலும் தன் கண்களைப் பாய்ச்சி இருக்கிறது. ஒன்றரை லட்சம் களப் பணியாளர்கள் அமர்த் தப்படுகின்றனராம். பஞ்சாயத்துத் தோறும் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை நடத்துவது என்பது அவர்களின் திட்டம்.

இந்த இந்துத்துவா பார்ப்பனியத்துக்கு நேர் எதிரானது தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கி உருக்கொடுத்து வைக்கப்பட்டுள்ள சுயமரியாதை - பகுத்தறிவு - சமத்துவ சிந்தனைச் சீலமாகும்.

தமிழ்நாட்டில் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள இந்தச் சித்தாந்தம்தான் இந்திய அளவிலும் பி.ஜே.பி.யின் இந்துத்துவா நோயைப் பூண் டோடு அழிக்கும் மகத்தான மருத்துவக் குணம் மிகுந்த மூலிகையாகும்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காவிகளின் கால்கோல்களைக் கண்ணி கண்ணியாக எதிர்த்து முறியடிக்கும் பணிகளைத் திராவிடர் கழகம் திட்டமிட்ட வகையில் களப்பணி முதற்கொண்டு செய்து கொண்டுதான் உள்ளது.

தமிழ்நாட்டின் பிற கட்சிகளும், தலைவர் களும் இம்முக்கிய பிரச்சினையில் கவனம் செலுத்துவார்களாக!

வாரந்தோறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை என்பது அந்தக் கூறுகளுள் கூர்மை யான ஒன்று. தந்தை பெரியார் ஓர் அறிமுகம் - பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு - சுயமரியாதை இயக்கம் - நீதிக்கட்சி - திராவிடர் கழகம், வேத, புராண, இதிகாசங்கள், மூடநம்பிக்கைகள் - பெண்ணடிமை - இந் துத்துவா - தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், முனைவர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் வகுப்பு களைத் தக்க ஆதாரங்களுடன் நடத்தினர்.

வகுப்புகள் நிறைவுற்று முதல் நாள் மாலையில் (6 மணிமுதல் 8.30 மணிவரை) இருபால் பயிற்சியாளர்களின் கருத்தறிவுக் கலந்துரையாடல் நடைபெற்றது. அது இக்கால இளைஞர்களின் மனவோட்டம், அணுகுமுறைகள்பற்றி அறிந்திட அரிய வாய்ப் பாக இருந்தது.

இணைய தளங்கள், முகநூல்கள், டுவிட்டர்கள், வாட்ஸ்அப்களில் இடம்பெறும் சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்தெல்லாம் விமர்சனங்கள் இடம்பெற்றன. ‘நீட்’ தேர்வின் பின்னணிகள் அலசப்பட்டன.

திராவிடர் இயக்கத்தின் சமூக நீதிக் கொள்கை இந்தியாவை ஆட்கொண்ட சூழலில், நூற்றுக்கு நூறு சுளைகளையும் சுளையாக விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டிருந்த பார்ப்பனர்களுக்கு - அந்தச் சமூகநீதி - இட ஒதுக்கீடு ஏற்பாடுகள் என்பவை பெரும் முட்டுக்கட்டைகளாக அமைந்துவிட்டன.

இதனைத் தகர்ப்பதுதான் பார்ப்பனீய இந்துத்துவாவை உயிர் மூச்சாகக் கொண்ட பி.ஜே.பி. உள்ளிட்ட சங் பரிவார்களின் உள்ளீடு - அடிநாதம்!

மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பரிந் துரையான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு என்ற அறிவிப்பினை வெளியிட்ட வி.பி.சிங் ஆட்சியினை, தனது ஆதரவை விலக்கிக் கொண்டதன் மூலம் கவிழ்த்த கும்பல் இந்தப் பி.ஜே.பி.

அதனை இந்தப் பொருத்தமான நேரத் தில்நினைவுக்குக்கொண்டுவருவது பொருத்தம். ஆட்சி அதிகாரத்தைத்தம்கையில்வைத்துக் கொண்டுள்ள பி.ஜே.பி.  தேசிய புதிய கல்வி என்றும் (வேத கணிதம், குருகுலம் உள்பட), ‘நீட்’ என்றும் திணிப்பு ஏற்பாட்ட முறையை நடத்திக் கொண்டுள்ளன.

இதுகுறித்தெல்லாம் பயிற்சிப் பட்டறை மாணவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இரண்டாம் நாள் (நேற்று) திருத்துறைப் பூண்டி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விரிவாகவே எடுத்துரைத்தார்.

2007 ஆம் ஆண்டுமுதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது. அதன் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரும் பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெற்றதால், ஏராளமான எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகளில் காலடி எடுத்து வைக்கும் காலப் புரட்சி நிகந்தன.

எடுத்துக்காட்டாக 2016 ஆம் ஆண்டை எடுத்துக்கொள்ளலாம். திறந்தபோட்டியில் (Open Competition) தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 884. அதில் பிற்படுத்தப்பட்டோர் 599. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159. முசுலிம் 32, தாழ்த்தப்பட்டோர் 23, மலைவாழ் மக்கள் 1, அருந்ததியர் 2, முசுலிம் 32, முன்னேறியோர் 68.

நுழைவுத் தேர்வு இல்லாதிருந்ததால், திறந்தபோட்டியிலும் கூட முதல் தலைமுறையைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் கணிசமான இடங்களை மெச்சத் தகுந்த நிலையில் கைப்பற்றினர்.

தி.மு.க. ஆட்சியில் நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், நீதிமன்றத்தில் தி.மு.க. அரசு கொடுத்த ஒரு புள்ளி விவரம் நீதிபதிகளையும் திருப்திப்படுத்தியது.

2004 - 2005 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் 5 லட்சம் பேர். அதில் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 10 ஆயிரம் இருபால் மாணவர்கள்.

அதில் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்குக் கிடைத்த இடங்கள் வெறும் 227 தான். நுழைவுத் தேர்வு நடத்தினால், இதுதான் கிராமப்புறத்துப் பிள்ளைகளின் பரிதாப நிலை.

இப்பொழுதுள்ள நுழைவுத் தேர்வு (‘நீட்’) போன்றதல்ல அது - அப்படிப்பட்ட நிலையிலேயே கிராமப்புற மாணவர்கள் உரிய இடங்களைப் பெற்றிட இயலாத நிலையை எண்ணிப் பார்த்தால், இந்த ‘நீட்’ என்னும் குத்தீட்டி ஒடுக்கப்பட்ட மக்களின் இருதயத்தில் பாய்ந்து குருதியைக் குடிக்கும் ஏற்பாடே!

NEET என்பதற்கான விரிவு National Eligibility Entrance Test என்பதாகும். தேசிய தகுதி நுழைவுத் தேர்வு என்றும் சொல்லப்படுகிறது.

அப்படி என்றால், இந்தத் தேர்வு என்பது அனைத்து மாநில மாணவர்களுக்கும் கேட்கப்படும் கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்தால்தானே அவர்களின் ‘தகுதியை’ நிர்ணயிக்க முடியும்? ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறான கேள்வித் தாள்கள், ஒரே மாநிலத்தில்கூட தாய்மொழியில் தேர்வு எழுதுவோருக்கு ஒருவகையான கேள்விகள், ஆங்கிலத்தில் எழுதும் மாணவர்களுக்கு வேறு வகையான வினாத்தாள்கள் என்றால், அது எப்படி பொது நிலையிலிருந்து தேர்வு செய்யப்படுவதாகும்?

குஜராத் மாநிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன; மற்ற மாநிலங்களில் கடுமையாகவே இருந்தன என்ற உண்மைகள் வெளிவந்துள்ளனவே. இதன் பொருள் என்ன? இதன் பின்னணி என்ன? என்பதைத் தெரிந்துகொண்டால், இந்த ‘நீட்’ தேர்வின் நச்சு கொடுக்கின் தன்மை எளிதாகப் புரிந்துவிடுமே.

இதனைத் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் திருத்துறைப்பூண்டிப் பொதுக்கூட்டத்தில்  பொது மக்கள் மத்தியில் எடுத்து வைத்தபோது - மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்தியா முழுவதும் ஒரே வகையான கல்வித் திட்டம் இல்லாதபோது, ஒரே மாநிலத்துக்குள் பல்வேறு வகைகளான கல்வித் திட்டம் நிலவும்போது - அகில இந்தியாவுக்கும் ஒரே ‘நீட்’ தேர்வு என்பது கண்டிப்பாக இதன் பின்புலம் சூழ்ச்சியும், உள்நோக்கமும் கொண்டது என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை எரிமலை வெடித்துக் கிளம்பும்போதுதான் - இந்த ‘நீட்’ தேர்வு சூத்திரதாரிகளின் சூழ்ச்சிகள், புரட்டும் பொடிப் பொடியாகும்.

மத்திய அரசு, மருத்துவக் கவுன்சில், நீதிமன்றமும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்ற மிக முக்கியமான கருத்தினை கனமான ஒரு பெட்டிச் செய்திமூலம் திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்ட கருத்து - ‘நீட்’ தேர்வு முடிவுகளுக்குப் பின் மிக முக்கியமாகப் பேசப்படும் என்பதில் அய்யமில்லை.

பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் களப் பணிகளில் கால் பதிப்பார்கள் என்பதில் அய்யமில்லை. அந்த இளம் சிங்கக் குட்டிகளை ஆங்காங்கே உள்ள கழகப் பொறுப்பாளர்கள் ஆற்றுப்படுத்திக் கொள்வார்களாக!

மற்றபடி பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்ட விதம், உணவு ஏற்பாடுகள் ‘சபாஷ்! சபாஷ்!’ என்று பாராட்டத்தக்க வகைகளில் சுவை மிகுந்தவைகளாக அமைந்தன.

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு சி.முருகையன் தலைமையில் அமைந்த ஒரு  செயல்திறன் மிக்க பட்டாளம் எல்லாவற்றையும் அ முதல் ஆயுத எழுத்துவரை அமர்க்களமாக செய்திருந்தனர் - அவர்களுக்கு நமது பாராட்டுகள்! பாராட்டுகள்!!

புதுப் பேருந்து நிலையம் அருகில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தந்தை பெரியார் 138 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் குறிப்பிடத்தகுந்ததாகும். இன்றைய தமிழ்நாட்டில் ‘தகதக’ தீயின் சூடும், அகில இந்தியாவில் நடைபெறும் ஆரிய ஆட்சித் தர்பாரும், பார்ப்பனீய இந்துத்துவா  கண்ணோட்டத்தில் விவசாயம் பாவத் தொழில் ஆதலால், அத்தொழில் தாயற்ற பிள்ளையாக தாக்கப்படுவதும், அத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் ஈன நிலையில் நடத்தப்படுவதும் பற்றிய அலசல்கள் அக்கூட்டத்தில் இடம்பெற்றன.

திருத்துறைப் பூண்டி வட்டாரத்தில் சிறுவன் வீரமணியாக ஒவ்வொரு கிராமத்திலும் அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்ததையும், அந்தக் காலகட்டத்தில் கழகப் பணியாற்றிய கருஞ்சட்டை கழகப் பெருமக்களையெல்லாம் மறக்காமல் நினைவு கூர்ந்தார் கழகத் தலைவர். அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நெக்குருகிப்போவார்கள் அல்லவா!

திருவாரூர் மு.கருணாநிதி என்று அறியப்பட்ட அந்தக் காலகட்டத்தில் அவரும், சிறுவன் வீரமணி என்று தாம் அறிமுகப்படுத்தப்பட்ட அந்தத் தருணத்தில் இருவரும் - மேல் கூரையில்லாத கட்டை வண்டியில் இரவு முழுவதும் பயணித்து விடியற்காலையில் கழகத் தோழர் வீட்டுத் திண்ணையில் படுத்துறங்கியதையும், பொழுது விடிந்த நிலையில் கதவைத் திறந்த அந்தக் கழகப் பெருமகன் அதிர்ச்சி அடைந்ததையெல்லாம் பசுமையாக நினைவு கூர்ந்தார் தமிழர் தலைவர்.

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற கருப்புச் சட்டை மாநாடு - அந்த மாநாட்டின் திறப்பாளர் திருவாரூர் இளைஞர் மு.கருணாநிதிதான். உடல் முழுவதும் கொப்புளங்கள் (அம்மை நோய்ப் பாதிப்பால்). ஆனால், அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல், அதனை மறைக்கும் வகையில் செருவாணி உடை அணிந்து வந்து அம்மாநாட்டில் மார்புப் புடைக்க வீர உரை நிகழ்த்தியதை நினைவூட்டினார் கழகத் தலைவர். (இன்றைய இளைய உலகம் - அதிலும் குறிப்பாக திராவிட இயக்க இளைஞர்கள், மாணவர் பட்டாளம் - எண்ணவும், செயலாக்கம் பெறவும்  ஆசிரியரின் நினைவூட்டல் பயன்படட்டும்! பயன்படவும் வேண்டும்).

நமது இயக்கம் பதவிக்காகப் பிறந்ததல்ல. மற்றவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட பேரியக்கம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக அடக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காகத் தோற்றுவிக்கப்பட இயக்கம் இது! 100 ஆண்டு வரலாற்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வரதராசனை நீதிபதியாக்கிய இயக்கம், உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற முதல் தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதியும் அவரே!

இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்தவர்கள், பதவி வகித்த வர்கள் சிறப்பாகச் செயல்படவில்லையா? தகுதி திறமை அழிந்து விட்டதா? பச்சைத் தமிழர் காமராசர் கேட்டாரே ‘பறையனைப் படிக்க வைத்தேன் - டாக்டரானான் ஊசி போட்டான், எந்தப் பிள்ளை செத்தது சொல்! பறையனைப் படிக்க வைத்தேன் - பாலம் கட்டினான், எந்தப் பாலம் இடிந்தது சொல்?’ என்று கேட்டார் காமராசர் என்றால் அதன் பொருள் என்ன? அவரின் உணர்வுகளில் தந்தை பெரியார் இருந்தார் என்று தமிழர் தலைவர் சொன்னபொழுது பலத்த கர ஒலி!

விவசாயிகள் பிரச்சினையில் முக்கியமான கருத்துகளை கழகத் தலைவர் குறிப்பிட்டார்; திருத்துறைப்பூண்டி பகுதி என்றால் விவசாயம்தானே - அம்மக்களின் வாழ்வாதாரமும் அதுதானே. பெரும்பாலான மக்களும் விவசாயிகள்தானே; இப்பிரச்சினையில் மத்திய பிஜேபி ஆட்சி நடந்து கொள்ளும் அணுகுமுறையைக் கண்டித்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்தாமல் கருநாடக அரசோடு சேர்ந்து கொண்டு மத்திய பிஜேபி ஆட்சியும் நடந்து கொள்வது வெட்கக்கேடு அல்லவா! காவிரி நதி நீர் ஆணையத்தை நான்கு நாள்களில் அமைத்திடுக என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவைப் பிறப்பிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று ஒரு மத்திய அரசு உச்சநீதிமன்றத்திலேயே சொல்லுகிறது என்றால் அதன் பொருள் என்ன?

ஒற்றை ஆட்சி - கூட்டாட்சிக்கு இடமில்லை - ஏக இந்தியா - எல்லா அதிகாரங்களும் தமக்கே நீதித்துறை உள்பட என்கிற முறையில் மோடி அரசு அமைந்திருக்கிறது என்பதைக் கழகத் தலைவரின் கருத்துரை பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தியது. தமிழ்நாட் டில் காலூன்றத் துடிக்கிறது காவிக் கூட்டம். அதற்கு நம்மக் களிலே கருடாழ்வார்கள் மலிவாகவே கிடைக்கிறார்கள். அதனால் தான், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ‘உன்னை விற்காதே’ என்று பாடினார்.

அதிமுக இரு அணிகளும், அதிமுக அரசும் மத்திய பிஜேபி அரசிடம் முற்றிலும் தன்னை சரணடையச் செய்து விட்டன. மடியில் கனங்கள் இருப்பதால் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்கலாமா என்ற வினாவை எழுப்பினார் கழகத் தலைவர்.

தமிழக விவசாயிகள் டில்லியிலே சென்ற 40 நாள்களுக்கு மேல் போராடினார்கள். பல வகையிலும் போராட்டம் நடத்தினார்கள். ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் பிரதமர் மோடி, அவர்களைச் சந்திக்க ஒரு அய்ந்து நிமிட நேரம் ஒதுக்கிக் கொடுத்திருக்கக் கூடாதா? விவசாயம் என்றால் கேவலமா? அவர்கள் செய்வது பாவத் தொழிலா?

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலம் போராடிப் பெற்றத் தீர்ப்புகளை கழிவு நீர்க்குட்டையில் தூக்கி எறிந்த அரசுதான் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு.

நடுவர் மன்றங்கள், ஆணையங்கள் கலைக்கப்பட்டு ஒற்றை நடுவர் மன்றத்தை அமைக்கிறதாம்! (எல்லாம் ஒற்றைதான் - ஒற்றை சாளர முறைதான் - ஒற்றை மாநிலம் தான் - ஒற்றை மொழி சமஸ்கிருதம்தானோ)

புதிய ஒற்றை ஆணையம் வந்தால்...

50 ஆண்டுகளுக்கு முன் நாம் செல்ல வேண்டி வரும். ஆரம்பம் முதல் வாதாட வேண்டியிருக்கும்.

அஸ்திவாரத்திலிருந்து ஆரம்பம் செய்து தீர்ப்புகளை வழங்குவதற்குள் - அனேகமாக தமிழ்நாடு பாலைவனமாகி இருக்கும்.

11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் கருநாடகம் காவிரியிலிருந்து நீர்ப்பாசனம் பெறக் கூடாது என்பது நடுவர் மன்றத்தின் தீர்ப்பு. ஆனால் நிலைமை என்ன தெரியுமா? 18 லட்சத்து 85 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்குக் கருநாடகம் விரிவுபடுத்தியுள்ளது. கரு நாடகா இந்தப் புள்ளி விவரத்தை உச்சநீதிமன்றத்திலேயே அதிகாரப் பூர்வமாகச் சொல்லுவதும், அதனை சிறிதும் சலனமில்லாமல் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொள்வதும் விபரீத மான வேடிக்கையே!

இவ்வளவுக்கும் 1990இல் கருநாடகத்தின் பாசனப் பரப்பு என்ன தெரியுமா? வெறும் அய்ந்தே அய்ந்து இலட்சம் ஏக்கர்தான். அது இன்றைக்கு நான்கு மடங்கு உப்பிப் பெருத்திருக்கிறது.

அதே நேரத்தில் பாழய்ப் போன ‘தரித்திர நாராயண னாகி’ விட்ட தமிழ் மண்ணின் அவலம் என்ன தெரியுமா?

1970இல் 50 இலட்சம் ஏக்கர்

1990இல் 23 இலட்சம் ஏக்கர்

2010இல் 17 இலட்சம் ஏக்கர்

2014இல் 16 இலட்சம் ஏக்கர்

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று என்பார்களே. அது இது தானோ?

‘தேசியம் பேசும் அண்ணாச்சி - காவிரி நீர் என்னாச்சி?’ என்று நமது கருஞ்சட்டை இளைஞர் ஏறுகள் கழகப் பேரணிகளில் இப்படி ஒரு முழக்கத்தை அடிவயிற்றிலிருந்து ஆர்ப்பரித்து முழங்குவார்களே, அதனை மீண்டும் இந்த இடத்தில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

எந்த மாநிலமும் காவிரி நீர் நிலைகளில் இருந்தோ, அணைகளிலிருந்தோ குடிநீருக்காக 20 சதவீகிதத்தைக் கடந்து பயன்படுத்தக் கூடாது என்பது காவிரி நடுவர் மன்ற ஆணை. ஆனால் கருநாடகத்திடம் இந்த ஆணையெல்லாம் செல்லுபடியாகுமா? 30 விழுக்காட்டுத் தண்ணீரை விழுங்கிக் கொள்கிறார்கள்.

ஒரு பக்கத்தில் ‘இந்துத்துவா’ - இன்னொரு பக்கத்தில் சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டு வரும் மத்திய பிஜேபி அரசினை அடையாளம் கண்டு அதனைத் தமிழ்நாட்டில் காலூன்ற இடம் கொடுக்கக் கூடாது என்று முத்தாய்ப்பு வைத்தார் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவர்தம் திருத்துறைப் பூண்டி உரை கட்டமைக்கப்பட்ட கருத்துக் கருவூலமாக மிளிர்ந்தது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மேனாள் சட்டப் பேரவை உறுப்பினரும், தீவிர சுயமரியாதைக்காரருமான மா.மீ. என்று அப்பகுதி மக்களால் அன்போடு அழைக்கப்படும் மா.மீனாட்சிசுந்தரம் அவர்கள் (திமுக) தமிழர்கள் ஒவ்வொரு வரும் ‘விடுதலை’ ஏட்டை நாள்தோறும் படிக்க வேண்டும். தமிழர் களுக்கான தகவல்கள், சமூகநீதிச் சிந்தனைகள், பகுத் தறிவுக் கருத்துகள், அறிவியல் தகவல்கள், உலகச் செய்திகள் என்று எல்லோருக்கும் தேவையான, அவசியமான கருத்து களை நாள்தோறும் வழங்கிக் கொண்டு இருக்கிறது என்று பட்டுத் தெறித்தது போலப் பதிவு செய்தார்.

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலர சன் (திமுக) அவர்கள் கோயில் நிலங்களிலிருந்து குடியிருப் போரை வெளியேற்றும் நடவடிக்கையைத் தடுத்திட தமிழர் தலைவர் அவர்கள் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் மே 12, 13 சனி, ஞாயிறு இரு நாள்களும் திருத்துறைப்பூண்டிக்கு மிக முக்கிய மான நாள்கள். திருத்துறைப்பூண்டியில் அறிவிக்கப்பட்ட செய்தி  கள் (MESSAGE) தமிழ்நாடெங்கும் பரவ வேண்டியவையே!

15 லட்சம் ரூபாய் எங்கே?

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆளுக்கு 15 இலட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் வந்து சேரும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அந்தக் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து, அந்தப் பணத்தின்மூலம் இதனைச் செய்வோம் என்று சொன்னாரே - அதனைச் செய்தாரா? நெருக்கிக் கேட்டவுடன் ‘நாங்கள் எப்பொழுது அப்படிச் சொன்னோம்‘?’ என்று அப்பட்டமாகப் பொய் சொல்லுகிறார்கள். பொய் சொல்லுவதில் பி.ஜே.பி., சங் பரிவார் களை அடித்துக் கொள்ள உலகில் வேறு யாரும் இருக்க முடியாது.

ஆதாரம் இதோ:

கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பி.ஜே.பி.யின் பிரதமருக் கான வேட்பாளரான நரேந்திர தாமோதர தாஸ் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் ஜக்தால்பூரில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் (7.11.2013) என்ன பேசினார்?

“தீனதயாள் உபாத்தியாயா, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் தேசத்தை சீர்திருத்த பிறந்தவர்கள். இவர்கள் விவசாயக் குடும் பத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் பரம் பரைப் பணக்காரர்கள் அல்ல; இவர்களுக்கு என்று அலகாபாத் போன்ற நகரங்களில் ஆடம்பர அரண்மனை போன்ற மாளிகை இல்லை.

நாட்டின் 80 விழுக்காடு மக்கள் விவசாயி கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் புரிபவர்கள். பஞ்சாப், அரியானா, உ.பி., பீகார் போன்ற மாநிலங்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளன. ஆனால், இந்த விவசாயிகளின் உழைப்பை நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு வீணாக்கி விட்டது. இங்கு என்ன வளம் இல்லை; நமது வளங்களை எல்லாம் காங்கிரசார் இத்தனை ஆண்டுகளாக கொள் ளையடித்து குபேரனாகி விட்டார்கள்.

இவர்கள் கொள்ளையடித்த பணத்தை எல்லாம், கருப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார்கள். இவர்கள் கொள்ளை யடித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்த கருப்புப் பணத்தின் மதிப்பு மிகவும் அதிகம். நான் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் இந்த கருப்புப் பணத்தை மீட்டுவிடுவேன். அப்படி மீட்ட பணத்தை இந்த நாட்டின் ஒவ்வொரு ஏழையின் வங்கி கணக் கிலும் ரூ.15 லட்சம் போடுவேன்; வெளி நாட்டில் உள்ள கருப்புப் பணத்தின் அளவு அதிகமாக உள்ளது.

இந்தக் கருப்புப் பணத்தை மீட்டாலே இந்தியாவை தங்கக் கிளியாக மாற்றி விடலாம். அதன் பிறகு இந்தியா உலகின் பொருளாதார வல்லரசாக மாறிவிடும்.

காங்கிரசாரின் ஊழல்பட்டியல் மிகவும் நீளமாக உள்ளது. 2-ஜியிலிருந்து, ஆதர்ஸ் ஊழல், போபர்ஸ் பீரங்கி ஊழல், பங்கு வர்த்தக ஊழல், மாட்டுத் தீவனத்தில் ஊழல், ஸ்டாம்ப் பேப்பரில்கூட ஊழல் புரிந்துள்ளனர். இப்படி ஊழல் புரிந்து கொள்ளை யடித்த பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய மக்கள் தொகையைவிட லட்சம் மடங்கு அதிகம். இதையெல்லாம் மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்றால், நீங்கள் எனக்கு வாக்களியுங்கள். எனக்கென்று மகன், மகள், மருமகன் இல்லை. வெளிநாட்டுக்குச் சென்று சொத்துகளை பதுக்கவேண்டிய அவசியமில்லை, நான் உங்கள் உடன் பிறந்தவன், உங்களுடனே இருப்பவன்.’’

இது யூ-டூயூப்பிலும் ஒலிக்கிறது.

15 லட்சம் ரூபாயை ஒவ்வொருவருக்கும் தருவோம் என்று மோடி சொன்னதற்கு ஆதா ரம் இப்படி இருக்கும்பொழுது ‘‘அப்படிக் கூறவில்லை’’ என்று சொல்லுவது அண்டப் புளுகு அல்லவா? இப்பொழுது என்ன நிலவரம் தெரியுமா? 15 லட்சம் ரூபாய் பணம் கொடுப்பேன் என்று சொன்னவர்கள் - இப்போது வங்கிகளில் நாம் போடும் பணத்தை எடுத்தால் பணம் கட்டவேண்டும் என்று சொல்கிறார்கள்.

- தமிழர் தலைவர் இதைச் சொன்னபொழுது கூட்டத்தில் ஒரே சிரிப்பலைதான்.

 

திருத்துறைப்பூண்டியில் தந்தை பெரியார் அவர்களின்

138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திருத்துறைப்பூண்டி, உழவர் சந்தை அருகில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் 13.5.2017 அன்று மாலை 6 மணிக்கு திருத்துறைப் பூண்டி தெற்கு வீதியில் மாவட்டத் தலைவர் கி.முருகையன் தலைமையில் நடைபெற்றது.

மண்டலத் தலைவர் இரா.கோபால், மண்டலச் செயலாளர் க.முனியாண்டி, மா.வி.தொ. அணிச் செயலாளர் வீ.மோகன், மாவட்டச் செயலாளர் ச.பொன்முடி, துணை தலைவர் கு.காந்தீசுவரன், மகளிர் அணி அமைப்பாளர் சி.கலைவாணி, மாவட்ட அமைப்பாளர் ந.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

நகரத் தலைவர் தி.குணசேகரன் வரவேற்புரை நிகழ் த்தினார். வேதாரண்யம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சி சுந்தரம், திருத்துறைப் பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ப.ஆடலரசன் ஆகி யோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு  செய்து உரையாற்றினர்.

கழகப் பொதுச்செயலாளர்கள் துரை.சந்திரசேக ரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக தமிழர் தலைவர் அவர்கள் சிறப்புரையாற் றினார். தந்தை பெரியார் கொள்கைகள் இன்றும், என்றும் தேவை என்பதற்கு ஆதாரபூர்வ மாக பல வரலாற்றுச் செய்திகளை எடுத்துக் கூறி னார். கழக தலைமை செயற்குழு உறுப்பினர் ஒரத்த நாடு இரா.குணசேகரன் ப.க. தலைவர் புயல் குமார், செயலாளர் சு.சி.ஆசைத்தம்பி, இரா.புக ழேந்தி, ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன், நகரச் செயலாளர் ப.நாகராசன், இளைஞர் அணி தலைவர் கவிதம்பி, மு.மதன், பெரியார் செல்வன், மா.வி.தொ.அணி தலைவர் ப.நாகராசன் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

மண்டல மகளிர் அணிச் செயலாளர் மகேஸ் வரி, நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்டச் செயலாளர் ஜெ.பூபேஸ்குப்தா, திருவாரூர் மாவட்டத் தலைவர் சவு.சுரேசு, மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ண மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் விக்கிர பாண்டியம் மணி, திருக்குவளை ரெங்கநாதன், வேதை நகரத் தலைவர் தெ.ஆறுமுகம், ப.க.அமைப்பாளர் சி.பஞ்சாபபேசன், வேதை நகர துணை தலைவர் கோ.சு.மணி, அ.இரமணன், மகளிர் அணி சுகன்யா, மாணவரணி சு.உமாசங்கர் மற்றும் மணியம்மை பெண்கள் சுயநிதி குழு உறுப்பினர்கள், திருவாரூர் மாவட்ட மகளிரணி செயலாளர் கிடாரங்கொண்டான் மரகதம், திருவாரூர் மாவட்ட ப.க. செயலாளர் இரா.சிவக்குமார் உள்ளிட்ட கழக பொறுப்பாளர் கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிறைவாக ஒன்றியத் தலைவர் சு.சித்தார்த்தன் அனை வருக்கும் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles