Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

நம்முடைய நாட்டில் மிக சுலபமானது கட்சி தொடங்குவதுதான்!

$
0
0

என்ன கொள்கை? என்ன திட்டம்? என்று அறிவித்துவிட்டு  நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால்
வரவேற்பதா? எதிர்ப்பதா? திராவிடர் கழகம் முடிவு செய்யும்!
தேனியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

தேனி, மே 21- நம்முடைய நாட்டில் மிகவும் சுலபமானது கட்சி தொடங்குவதுதான். என்ன கொள்கை? என்ன திட்டம்? என்பதை அறிவித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அதனை வரவேற்பதா? எதிர்ப்பதா? என்பதைப்பற்றி பிறகு முடிவு செய்யும் பகுத்தறிவுள்ள மனிதர்களாகிய திராவிடர் கழகம் என்று செய்தியாளர்களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மே 20, 21 ஆகிய இரண்டு நாள்களில் தேனி மாவட்டம் சுருளி அருவி அருகே நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்பதற்காக நேற்று (20.5.2017) வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

பேட்டி வருமாறு:

பெரியாரியல் பயிற்சிப்
பட்டறையின் நோக்கம்

திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் தொடங்கி, தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலும் நாங்கள் நடத்தி வருகிறோம்.

மாணவர்கள், இளைஞர்களுக்கு பெரியாரியல் கொள்கைகள் புரியவேண்டும். அதில் ஆர்வம் காட்டுகின்றவர்களுக்கு நல்ல பயிற்சியை கொள்கை ரீதியாகக் கொடுத்து, சீரிய பகுத்தறிவாளர்களாக, இன உணர்வாளர்களாக, நல்ல மனிதநேயம் பேணக் கூடியவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக இளைஞர்களை ஆக்கவேண்டும் என்பதுதான் இந்தப் பயிற்சியினுடைய நோக்கமாகும்.

இது பற்பல மண்டலங்களிலும் தொடர்ந்து இரண்டு நாள்கள் என்று நாங்கள் நடத்திக் கொண்டு வருகிறோம். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே மண்டபத்தில், இதே சுருளி பட்டியில், இந்தப் பகுதியில் ஏராளமான இளைஞர்கள், மாணவர்களுக்கு பயிற்சியைக் கொடுத்திருக்கிறோம்.

அந்த வகையில், இப்பொழுதும் இன்றும், நாளையும் இந்தப் பயிற்சி முகாம் நடைபெறும். என்னோடு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார், மஞ்சை வசந்தன் மற்றும் இயக்கப் பொறுப்பாளர்கள் வகுப்பெடுப்பார்கள்.

இதில், ஆண்கள் - பெண்கள் என்கிற பேதமில்லாமல், எல்லோருக்குமே வாய்ப்புக் கொடுக்கின்ற வகையில், 65 பேர்களில், படித்த இளைஞர்கள், மாணவர்கள் 35 பேர்; பெண்கள் 30 பேர். ஆக மொத்தம் 65 பேர் இந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

மனிதநேயத்தை சொல்லிக் கொடுக்கின்ற
ஓர் இயக்கம்

நம்முடைய இந்திய அரசியல் சட்டத்தில், அடிப்படை கடமைகள் என்ற ஒன்று உண்டு. இதுவரையில் பெரும்பாலான மக்கள் அடிப்படை உரிமைகளைப்பற்றித்தான் யோசித்துக் கொண்டிருக் கிறார்கள். அடிப்படை கடமைகளில் ஒன்று, அறிவியல் மனப்பான்மையை ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்கக்கூடிய சிந்தனையை, சீர்திருத்தத்தை, மனிதநேயத்தை ஒவ்வொரு குடிமகனும் பெறவேண்டும் என்று அரசியல் சட்டத்தில் 51-ஏ(எச்) பிரிவில் இருக்கிறது. அதை பல பேர் செய்வதில்லை. திராவிடர் கழகம்தான் ஓர் இயக்கமாக - குடிமக்களுக்கு அறிவியல் மனப்பான்மையை, மூடநம்பிக்கையற்ற, ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கக்கூடிய சிந்தனையை உருவாக்கி, சீர்திருத்த உணர்வை புகுத்தி, மனிதநேயத்தை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கின்ற ஓர் இயக்கம்.

இன்றைய இளைஞர்களுக்குத்
தேவையான ஒன்று!

ஆகவே, இந்தப் பெரியாரியல் பயிற்சி முகாம் என்பது, இந்தக் கொள்கைகளை வைத்துக் கொண் டிருக்கக்கூடிய ஒரு தெளிவான பயிற்சி முகாம். இதில் வன்முறை நிகழ்ச்சிகளோ அல்லது மற்றவர்களைத் தூண்டிவிடக் கூடியதோ, வெறியூட்டக் கூடிய நிகழ்ச்சிகளோ கிடையாது. இது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த ஒரு பயிற்சிப் பட்டறை. பெரியாரியல் கொள்கைகள் இன்றைக்கு இளைஞர்களுக்குத் தேவைப்படக்கூடியவையாகும்.

இன்றைக்கு மூடநம்பிக்கைகள் ஒரு பக்கத்தில் இருக்கின்றபொழுது, செவ்வாய் தோஷம், செவ்வாய் தோஷம் என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், நிறைய பெண்களுக்குத் திருமணமாகவில்லை. ஆனால், செவ்வாய்க் கிரகத்திலேயே குடியேறுங்கள் - அதுதான் பாதுகாப்பானது என்று இப்போதுகூட ஸ்டீபன் ஹாக்கிங் என்கிற விஞ்ஞானி சொல்லியிருக்கிறார்.

இனிமேல் வெப்பசலனம் அதிகமாக இருக்கும்; அடுத்த 25 ஆண்டுகாலத்தில், இந்த பூமியிலிருந்து, செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுவதற்கு இப்பொ ழுதே அமெரிக்காவில் மனுக்கள் போட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆக, அப்படிப்பட்ட அறிவியல் மனப்பான்மை இருக்கின்ற காலத்தில், இன்னமும் இங்கே கடவுள் பெயரால், மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், பெண்ணடிமை என்கிற சிந்தனையில், மூடநம்பிக்கையில் ஆட்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவியலைப் பாடமாக
படித்தால் மட்டும் போதாது

இளைஞர்கள் விஞ்ஞானத்தை - அறிவியலைப் பாடமாக படித்தால் மட்டும் போதாது; மாறாக, வாழ்வியலாக அந்த அறிவியலைப் பயன்படுத்தவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதுதான் இந்தப் பெரியாரியல் பயிற்சி முகாமாகும்.

செய்தியாளர்: திராவிடம் பேசிக் கொண்டிருந்த இந்த காலகட்டங்களில், தமிழ்த் தேசியம் என்கிற ஒரு புதியது உருவாகி, பெரும்பான்மையான கருத்துகள் வந்தி ருக்கிறதே, அதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தமிழ்த்தேசியம் என்று பேசுகிறவர்களுக்கே என்னவென்று புரியாத ஒன்றுக்குப் பெயர் தமிழ்த் தேசியம். தமிழர்கள் என்று சொன்னால், அதற்கு என்ன விளக்கம். மொழி பேசுகிறவர்களா? அல்லது பிறந்தவர்களா? என்றெல்லாம் கேள்வி கேட்டால், அவர்களால் பதில் சொல்ல முடியாது.

திராவிடம் என்று சொல்வதின் அடிப்படை என்ன வென்றால், நம்முடைய மக்களை சூத்திர மக்களாக, இழிஜாதி மக்களாக ஆக்கப்பட்டவர்களை - அவர்களை உயர்த்தவேண்டும் என்பதற்காக, வரலாற்று பூர்வமான மொழியால், இனத்தால் திராவிடர்கள். திராவிட நாகரிகம், மூத்த மொழி - திராவிட மொழிகள் என்பதுதான் அடிப்படையானது.

ஆகவேதான், கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், மொழி எல்லாவற்றிலும் பார்த்தால், திராவிடம்தான்.

உதாரணமாக, நம்முடைய தேசிய கீதம் என்று பாடுவதில்கூட,  திராவிட உத்சல வங்கா என்றுதான் இருக்கும்.

திராவிடம் என்பது இடம்பெறாத இடமே கிடையாது. எனவே,  திராவிடம் என்பது ஏதோ புரியாத ஒன்று இல்லை. சில பேர் தங்களுக்கு ஓர் இடம் வேண்டும் என்பதற்காக, தங்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்காக இப்படி போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த உணர்வை உருவாக்கியவர் தந்தை பெரியார் அவர்கள். திராவிடம் என்கிற உணர்வுதான் மிக முக்கியமானது. இன்னுங்கேட்டால், தென்னாட்டு மக்கள், திராவிட மொழிகள் என்று வரும்பொழுது, அவர்களுக்கென்று ஒரு தனிப் பிரிவு உண்டு.
வடக்கே இருக்கக்கூடிய கங்கைக் கலாச்சாரத்திற்கும், காவிரி கலாச்சாரத்திற்கும் வித்தியாசம் உண்டு.

எனவேதான், திராவிடம் என்பது வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்பட்டது மட்டுமல்ல, தெளிவானது, சிந்த னையானது. இது ரத்தப் பரிசோதனை வைத்து வருவதல்ல. மாறாக, மொழி என்று சொன்னால், நம்முடைய விழி வழியாக இருக்கவேண்டும். இன்னும் விரிவாக நீங்கள் திராவிடம்பற்றி தெரிந்துகொள்ளவேண்டுமானால், இங்கே பயிற்சி வகுப்பில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு விரிவாக பாடம் எடுப்போம், அதனை கவனித்தால்கூட போதும்.

நடிகர் ரஜினிகாந்திற்கு
என்ன கொள்கை? என்ன திட்டம்?

செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் பிரவேசம் என்பதுபற்றி பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது பேசிக்கொண்டு வருகிறார், அதுபற்றி...

தமிழர் தலைவர்: அரசியல் என்றால் என்னவென்று அவர் புரிந்துகொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெரியாது. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். நம்முடைய நாட்டில் மிக சுலபமானது எதுவென்றால், கட்சி தொடங்குவதுதான்.  கம்பெனி தொடங்க வேண்டும் என்றாலும்கூட ஏழு பேர் வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், கட்சி தொடங் குவதற்கு ஒரே ஒருவர் இருந்தால் போதும் நம் நாட்டில்.

ஆகவே, யாரும் எந்தக் கட்சியை வேண்டுமானாலும் தொடங்கலாம்; போகலாம். ஆனால், என்ன கொள்கை? என்ன திட்டம்? என்பதை அவர் அறிவித்துவிட்டு, தான் அரசியலுக்கு வந்தால், இந்தத் திட்டத்தை செய்யப் போகிறேன், இதுதான் கொள்கை என்று சொன்னால், அதனைப் பார்த்து, அதனை வரவேற்பதா? எதிர்ப்பதா? என்பதைப்பற்றி பிறகு முடிவு செய்யும் பகுத்தறிவுள்ள மனிதர்களாகிய திராவிடர் கழகம்.

அதானல், மற்றவர்கள்போல், வரலாம் - வந்தால் நன்றாக இருக்கும் என்பதல்ல. நாம் சொல்லி யாரும் அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை. யாரும் தடுக்கவேண்டிய அவசியமில்லை.

18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். வாக்காளர்களாக இருக்கிறவர்கள் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம்.

இரண்டு தகுதிகளைத்தான் அரசியல் சட்டத்தில் வைத்திருக்கிறார்கள்,

ஒன்று, அவர்கள் பைத்தியமாக இருக்கக்கூடாது.

இன்னொன்று, 18 வயது நிரம்பியிருக்கவேண்டும்.

அரசியலுக்கு வரலாமா? தடுக்கலாமா? வரவேற்கலாமா? என்பதல்ல.

என்ன திட்டம்? திட்டத்தை முதலில் விளக்கவிட்டு, அவர் அரசியலுக்கு வந்தார் என்றால், இந்தத் திட்டம், இப்பொழுது இருப்பதற்கு மாற்று - சரி வரவேற்கலாம் - அல்லது அந்தத் திட்டம் இப்பொழுது இருப்பதற்கு எதிர்ப்பு என்று உண்மையான கருத்தை சொல்ல முடியும்.

செய்தியாளர்: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு வந்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அவர் பிரதமரை நலம் விசாரித்து விட்டு வந்திருக்கிறார். ஏனென்றால், அவரே சொல்லியிருக்கிறார் நாங்கள் அரசியல் பேசவில்லை என்று.

தமிழ்நாட்டில் சி.பி.அய்., வருமான வரித்துறை ரெய்டு நடைபெறுகிறதே?

செய்தியாளர்: ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு, தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வீடுகள், அலுவலகம் போன்றவற்றிற்கு சி.பி.அய்., வருமான வரித்துறை ரெய்டு நடைபெறுகிறதே, இதற்கு என்ன காரணம்?

தமிழர் தலைவர்: உங்களைக் கேள்வி கேட்க வைத்ததிலிருந்து என்ன தெரிகிறது என்றால், ஒரு பொம்மலாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில். டில்லியில் கயிறைக் கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த பொம்மலாட்டத்தில் எப்பொழுது, எந்தக் கயிறை இழுக்கவேண்டும்; எந்தக் கயிறை விடவேண்டும் என்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆக

வே, இங்கே காலூன்ற முடியாதவர்கள் எல்லாம் வேறொருவர்கள் மூலமாக, மற்றவர்களை வேலாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்த வேலை ஊன்றி, அதன்மூலமாக காலை வைக்கலாம் என்று நினைக்கிறார்கள், அதனால்தான்.

தமிழகத்திற்கு தேர்தல் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா?

செய்தியாளர்: வருகிற காலகட்டங்களில் தமிழக அரசியல் எப்படி இருக்கும்; தேர்தல் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா?
தமிழர் தலைவர்: தேர்தல் வருமா? வராதா? என்பதை முடிவு செய்யக்கூடியவர்கள் டில்லியில் இருக்கிறார்கள். நாம் சொல்லவேண்டிய அவசியமில்லை. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதனை சந்திப்பதற்குத் தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்து, மொழி உரிமை, இன உரிமை, வாழும் உரிமை, இன்னுங்கேட்டால், விவசாயிகள் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை போன்றவற்றில் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். யாருக்குப் பதில் அளிக்கவேண்டும் என்பதில், அவர்கள் தயாராக இருக்கிறார்கள். தேர்தலை அரசியல்வாதிகள்  எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்களோ, இல்லையோ, தமிழக மக்கள், அதுவும் ‘நீட்’ தேர்வில் அவர்கள் பட்ட அனுபவம், வடமொழியைத் திணிக்கின்ற முறை, இந்தியைத் திணிக்கின்ற முறை, காலூன்ற முடியாதவர்கள் - நிரந்தரமாக காலூன்றவே செய்ய முடியாத அளவிற்கு தமிழக மக்கள் செய்வார்கள் என்பது நிச்சயம். அதுதான் எங்களுக்குத் தெரியும்.

ரஜினி படம் ஓடவேண்டும் அல்லவா!

செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் சிறந்த நிர்வாகி என்று சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அவரே மகிழ்ச்சி என்று பதில் சொல்லிவிட்டார். அவரோடு முடிந்துபோன விஷயம். எத்தனையோ பேரைப்பற்றி  நடிகர் ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார். இதையும் சொல்லியிருக்கிறார். அவர் படம் ஓடவேண்டும் அல்லவா! அவர் எல்லோரையும் பாராட்டித்தானே ஆகவேண்டும். அதிலொன்றும் தவறில்லை. எல்லோருக்கும் நல்லவராக இருக்கிறவர், என்ன கொள்கையோடு இருக்கிறார் என்பதுதான் முக்கியம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles