தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தட்டும்!
இருளர் மக்களுக்கு ஜாதிச்
சான்றிதழ் வழங்குவதில் இடர்ப்பாடு ஏன்?
கல்லூரிக்குச் செல்ல முடியாமல் சூளையில் கொத்தடிமைகள்
விழுப்புரம், ஜூன் 19 விழுப்புரம், வானூர், செஞ்சி, விக்கிரவாண்டி வட்டாரங்களில் இருளர் மக்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டு வதாலும், கால தாமதம் செய்வதாலும் +2 படித்த மாணவர்கள் கல்லூரிகளுக்குச் செல்ல முடியாமல் செங்கல் சூளைகளில் கொத்தடிமையாக வேலை செய்யும் கொடுமை நடந்து வருகிறது.
விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், செஞ்சி ஆகிய வட்டங்களில் மொத்தம் 33 மாணவர்கள் மார்ச் 2017இல் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதினர்.இவர்கள் அனைவருக்கும் பழங்குடி இருளர் என் பதற்கான ஜாதிச் சான்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஜாதிச் சான்று கேட்டு விண்ணப்பித்து ஆண்டுக் கணக்கில் அலைந்தும் கிடைத்தபாடில்லை. இந் நிலையில் சில நாள்களுக்கு முன்பு வெளியான 12- ஆம் வகுப்புத் தேர்வு முடிவில் 4 பேரைத் தவிர 29 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களில் ஒருவருக்கு மட்டுமே ஜாதிச் சான்று கிடைத்துள்ளது. மீதமுள்ள 28 பேருக்கும் ஜாதிச் சான்று இல்லை.இதனால் இவர்கள் மேற்படிப்பு படிக்க கலைக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி, நர்சிங், பொறியியல் போன்ற எவை ஒன்றுக்கும் விண்ணப்பம்கூட அனுப்ப முடியாத அவல நிலையில் உள்ளனர்.
ஜாதிச் சான்று இருந்தால் பெரும் பாலான விண்ணப்பங்களை இலவசமாகப் பெறலாம்.சேர்க்கையின் போது முன் னுரிமை, கட்டணத்தில் சலுகை உள்ளது. ஜாதிச் சான்று இல்லாததால் எந்தவொரு படிப்பிற்கும் விண்ணப்பம்கூட அனுப்ப முடியாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
15 அல்லது 20 நாள்களுக்குள் ஜாதிச் சான்று கிடைத்தால். ஏதேனும் மேற்படிப்பு படிக்க வாய்ப்புள்ளது.இல்லையெனில் தங்கள் பெற்றோர்களுடன் செங்கற் சூளையிலே வெந்து மடிய நேரிடுமோ என்றும் கவலைப்படுகின்றனர்.
பழங்குடி இருளர்கள்
சில குறிப்புகள்!
விழுப்புரம் மாவட்டதில் மொத்தம் 1505 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மொத்தம் 34,63,284 பேர் வசிக்கின்றனர். இதில் 10,15,716 பேர் தாழ்த்தப்பட்ட சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும். பழங்குடியினர் 74,859 பேர் ஆகும். மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 2.16% பழங் குடியினர் ஆகும். இதில் பெரும்பான்மையினர் இருளர்கள் ஆவர். இவர்கள் பெரும் பாலும் சமவெளிகளில் சிதறி வாழ்கின் றனர். மிகப் பெரும்பான்மையினர் நில மற்றவர்கள். செங்கல் சூளை,கரும்பு வெட்டுதல் மற்றும் அரிசி ஆலைகளில் கொத்தடிமைகளாக வேலை செய்து வரு கின்றனர். இவர்களில் 43% பேருக்கு மனைப்பட்டா கிடையாது. 26% குடும்ப அட்டை இல்லாமல் உள்ளனர்.
இந்நிலையில் குடும்பத்தின் வறுமை காரணமாக இருளர்கள் குடும்பத்தோடு இணை இணையராக கொத்தடிமையாகச் செல்கின்றனர். முன்பணம், கடன், வேலை என்கிற முக்கோணச் சங்கியிலில் கட்டப் பட்டு மீளமுடியாமல் உள்ளனர்.
தேசிய அளவில் பழங்குடி மக்களில்41% பேர் தங்களின் பாரம்பரிய வாழ்விடத்திலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளதாகவும், 64% மக்கள் நிலையான வேலையின்மை காரணமாக வறுமையின் பிடியில் சிக்கி யுள்ளனர் என்றும், கொத்தடிமையாக உள்ளவர்களில் 96% தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கை யொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜாதிச் சான்று பிரச்சினை
பழங்குடியினர் என ஏமாற்றி பிறர் ஜாதிச் சான்று வாங்குவதைத் தடுப்பதற்காக, முழுமையாக விசாரித்து பழங்குடியின ருக்கு வருவாய் கோட்டாட்சியர்தான் ஜாதிச் சான்று வழங்கவேண்டும் என தமிழக அரசு 1989இல் உத்திரவிட்டது. மேலும் ஜாதிச் சான்று வழங்குதில் தாமதம் கூடாது என்பதற்காக விண்ணப்பித்த 7 முதல் 15 நாள்களுக்குள் ஜாதிச் சான்று வழங்கவேண்டும் என 1999 இல் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒரு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மேலும் இதே ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான மாணவர்களுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மூலமாக வருவாய்த் துறைக்கு விண்ணப்பித்து சாதிச் சான்றும் வழங்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது.
இதணைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பிலேயே மாணவர் களுக்கு ஜாதிச் சான்று,இருப்பிடச் சான்று, வருமானச் சான்று ஆகியவைகளை வழங் குவதற்கு அரசானை வெளியிடப்பட்டுள் ளது.இதன் தொடர்ச்சியாக 2012 ஆம் ஆண்டு 6 வகுப்பிலேயே அந்த ஆண்டின் சனவரி 31 ஆம் தேதிக்குள் அனைத்து சான்றுகளும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என அரசு ஆணை 184 அய் 05.06.12 அன்று வருவாய்த் துறை வெளியிட்டது.
இந்த அரசு ஆணைகளின் பலன்கள் பழங்குடியின மாணவர்களுக்கு முழுமை யாக கிடைப்பதில்லை. சில பள்ளிகளில் இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றுகள் மட்டுமே பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால் ஜாதிச் சான்று இதுவரை எந்தவொரு பள்ளியிலும் வழங்கப்படவில்லை. தற்போதும் பெரும் பாலான பழங்குடி இருளர் இன மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழேதான் வாழ் கின்றனர். இருப்பினும் பெற்றோர்கள் பெரும் முயற்சியில் முதல் தலைமுறையாக தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் பள்ளிக்கு அனுப்புகின்றனர். வேலைக்காக செங்கற்சூளைகளை நோக்கி இடம் பெயர்ந்து செல்பவர்கள் கூட முதியோர் மற்றும் உறவினர்கள் பொறுப்பில் தங்கள் பிள்ளைகளை சொந்த ஊரில் விட்டுச் சென்று,படிக்க வைக்கின்றனர்.
ஆனால், இவர்களுக்கு ஜாதிச் சான்று உரிய நேரத்தில் வழங்கப்படாததால் மாணவர்கள் உரிய நேரத்தில் தங்களின் கல்லூரிக் கல்வியைத் தொடரமுடியாத நிலையில் உள்ளனர். பிற மாணவர்களுக்கு பள்ளியில் 6 ஆம் வகுப்பிலேயே சாதிச் சான்று வழங்கப்படுகின்றது. ஆனால் 10 மற்றும் 12 வகுப்புகளில் தேர்ச்சி பெற்றும் பழங்குடி இருளர் மாணவர்களுக்கு ஜாதிச் சான்று இதுவரை வழங்கப்படவில்லை.