ஊழலைக் கட்டுப்படுத்த லோக் அயுக்தா
குடிசையில்லா தமிழகம்
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலீட்டாளர் மாநாடு, நோக்கியா மீண்டும் கொண்டு வரப்படும்
மருத்துவப் பொது நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்!
- தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் ரோசையாவின் அறிவிப்புகள்
சென்னை, ஜூன் 16 மருத்துவப் பொது நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க தொடர்ந்து போராடுவோம் என்பது உட்பட கடந்த கால திட்டங்களையும், எதிர் கால திட்டங்களையும் தொகுத்து உரையாக நிகழ்த்தினார் தமிழக ஆளுநர் ரோசையா.
தமிழகத்தின் 15ஆவது சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் துவங்கியது. சட்டப் பேரவை கூட்டத் தொடரை துவக்கி வைத்து பேசிய ஆளுநர் ரோசையா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஆளுநர் தமது உரையில் புதிய அரசு பதவியேற்றவுடன் சிறு, குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட் டதையும், டாஸ்மாக் நேரம் குறைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். மேலும் பேசிய அவர் ஊழலை கட்டுப்படுத்த லோக் அயுக்தா அமைக்கப்படும் என்றார். விசைத்தறிகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்றார். மேலும் அவர் பேசியதாவது:
மாநில அரசுகளுக்கு கூடுதல் வரி அதிகாரம் தேவை. முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். அம்மா கால் சென்டர், இ சேவை மய்யங்கள் விரிவுபடுத்தப்படும். அண்டை மாநிலங் களுடனான நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும், பம்பா, - அச்சன்கோவில் நதிகளை தமிழகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும், சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ அனைத்து முயற்சிகளும் மேற் கொள்ளப்படும். குடிசை இல்லா தமிழகம் என்பதே தமிழக அரசின் லட்சியம். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். நோக்கியா, பாக்சான் நிறுவனங்கள் மீண்டும் கொண்டு வரப்படும்.
இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை கிடைக்க தமிழகம் சார்பில் வலியுறுத்தப்படும். அனைவருக்கும் மலிவான விலையில் எளிமையான சுகாதார திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். மருத்துவ பொது நுழைவுத் தேர்வி லிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப் போராடு வோம்.
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறக்கு தளங்கள் அமைக்கப்படும். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தப்படும் கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை உறுதி செய்யப்படும் இலவச கால்நடை, ஆடுமாடு அளிக்கும் திட்டம் நீடிக்கும். வரும் ஆண்டுகளில் 16 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு திட்டமிடப் பட்டுள்ளது. உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை தொடரும். அனைத்து தரப்பினரும் சமூக பொருளாதார வளர்ச்சி பெற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆளுநர் தமதுரையில் குறிப் பிட்டுள்ளார்.