Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் உதவியோடு உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கின் பின்னணி என்ன?

$
0
0

தமிழர்கள் 16 பேர் படுகொலை செய்யப்பட்ட இடம்!

தமிழர்களின் நினைவுச் சின்னங்களை அழித்து உருவாக்கப்பட்டுள்ள சதி!

தமிழர் தலைவர் ஆசிரியர் அம்பலப்படுத்தும் அறிக்கை

திராவிட இயக்கத்தின் சாதனையைப் பாரீர்!

16 தமிழர்களை சிங்களக் காவல்துறையினர் கொன்று குவித்த இடத்தில், தமிழர்களின் நினைவுச் சின்னங்களை அழித்து விட்டு, இந்திய அரசின் துணையோடு யாழ்ப்பாணத்தில் விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

யாழ்ப்பாணத்தில் முன்னாள் யாழ்ப்பாண மேயர் ஆல்பர்ட் தம்பிராஜா துரையப்பாவின் நினைவாக  புனரமைக்கப்பட்ட   விளையாட்டு மைதானத்தை தலை நகர் டில்லியில் இருந்து மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் போன்றோர் கலந்துகொண்டு காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தனர்.    

2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த மைதானத்தை சீர்படுத்த இந்தியா 7 கோடி ரூபாயைக் கொடுத்தது. சுமார் 7 மாதத்திற்குள் அவசர அவசரமாக இந்த மைதானம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தின் திறப்பு விழாவின் போது டில்லியில் இருந்து மோடி கூறியதாவது, 'நாங்கள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் டில்லியில் இருந்தாலும், இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் துடிப்பை உணர முடிகிறது. இந்த மைதானம் வெறும் சிமென்ட் மற்றும் செங்கற்களால் ஆனதல்ல. ஆக்கபூர்வமான மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடையாளம்,'' என்றார்.

அந்த நிகழ்வில், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரமுகர்கள் யாழ்ப்பாணத்தில் பங்கேற்றார்கள். அப்போது, பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னணி என்ன?

இந்திய பிரதமர் மோடி அவர்களால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட இந்த விளையாட்டு அரங்கத்தின் பின்னணி என்ன?

1974 சனவரி 3 முதல்  9 வரை அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டை நடத்த விடக் கூடாது என்று சிங்கள அரசு பல வகைகளிலும் முட்டுக்கட்டை போட்டது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களும், பார்வையாளர்களும் காட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே அனுமதி மறுத்துத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஒரு பண்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாதவாறு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அந்த அறிஞர் பெரு மக்கள் கண்டனம் தெரிவித்தது - அந்தக் கால கட்டத்தில் உலகளாவிய சேதியானது.

சிங்களக் காவல்துறையினரின்
வன்முறை - 16 பேர் படுகொலை!

எல்லா தடைகளையும் மீறி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் கூடினர். 9ஆம் தேதி மாநாடு முடிவுற்று 10ஆம் தேதி வழியனுப்பு விழா சிறப்பாக நடந்து கொண்டிருந்தபோது இலங்கை அரசின் காவல்துறை உள்ளே புகுந்து பெரும் கலகம் விளைவித்தனர். எவ்வித காரணமுமின்றி தடியடிப் பிரயோகம் நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். மின்கம்பிகள் அறுந்து வீழ்ந்தன. நூற்றுக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 16 பேர் பரிதாபமான முறையில் கொல்லப்பட்டனர்.

மரணமடைந்தவர்களுக்கு நினைவுத் தூண் அந்த யாழ் துரையப்பா மைதானத்தில் எழுப்பப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட அதே இடத்தில் தான்

அந்த இடத்தில்தான் இப்பொழுது இந்திய அரசின் உதவி யோடு விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த தமிழர்களுக்கான நினைவுச் சின்னங்கள் உடைத்தெறியப்பட்டு விட்டன. இந்த இடத்தில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் 25க்கும் குறைவில்லாத மனித உடலின் எச்சங்கள், உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த எலும்புக் கூடுகள் அனைத்தும் இலங்கைக்குச் சென்ற அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களின் உடல்கள் என்று பின்னாளில் சர்வதேச மனித உரிமைக் குழுவினர் நடத்திய நேரடி விசாரணையில் தெரிய வந்தது.  ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட ஓரிடத்தில்தான் - நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்திய அரசின் உதவியால் விளையாட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கவனத்திற்குரியதாகும்.

ஈழத் தமிழர் தலைவர்கள் பங்கேற்றது எப்படி?

இந்த நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் மைதிரிபால சிறீசேனா பங்கு கொண்டதைப் புரிந்து கொள்ள முடிகிறது. வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்கூட அரசு நிலை என்ற நிர்ப்பந்தத்தில் கலந்து கொண்டு இருக்கலாம்; ஈழத் தமிழர் தலைவர்கள் பங்கு கொண்டு இருப்பது தான் ஆச்சரியமானது.

'சும்மா ஆடுமா சோழியன் குடுமி' என்பதுபோல இந்திய அரசின் துணையோடு தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட ஓரிடத்தில் அவர்களின் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு அரசு சார்பாக விளையாட்டு அரங்கம் என்ற சின்னம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதன் பொருள் என்ன? ஓரிடத்தில் அழிப்பு - அதன்மீது ஆதிக்க இனத்தின் சிம்மாசனம் என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்ளட்டும்.

ஒன்றை அழித்து இன்னொன்றை நிலை நிறுத்துவது

அழிக்கப்பட்டவர்களின் நினைவுச் சின்னத்தை அழித்து, அழிவுக்குக் காரணமானவரின் நினைவுச் சின்னம் தான் இந்தவிளையாட்டு அரங்கம் என்பது எத்தகைய கொடுமை!

இதுபோலவே சிங்கள ராணுவக் குடியேற்றங்கள். வடக்கு மாகாணத்தில், பெரிதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேற்றி, தமிழர்களின் காணிகளைப் பறிக்கும் கொடுமையையும், தமிழர்களை அச்சுறுத்தல் செய்கின்ற போக்கையும் சுட்டிக் காட்டுகிறோம்.

ஈழத் தமிழர்களுக்கு உருப்படியான உதவிகளைச் செய்ய முன் வராவிட்டாலும்,  சிறுபான்மை மக்களை அழிக்க அதன்மீது பெரும்பான்மை ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் ஆட்சியை மேற்கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர், அதே கண்ணோட்டத்தில் செயல்படும் இலங்கை அரசுக்குத் துணை போயுள்ளார் என்பதை மறந்து விடக் கூடாது - கூடவே கூடாது.


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles