Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

கலைஞரின் அனுபவத்தைப் பயன்படுத்திக் கொள்வது ஆளும் கட்சிக்கே நல்லது!

$
0
0

கலைஞரின் மூப்பினைக் கருதி சட்டமன்றத்தில் வசதி செய்து கொடுப்பதே முறையானது

சட்டமன்றத்தில் ஆரோக்கியமான விவாதம் அவசியமானது

தமிழர் தலைவர் விடுத்துள்ள பொது நிலை அறிக்கை

நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் சிலை! மத்திய, மாநில அரசுகள் அளித்த ஒப்புதல் என்னவாயிற்று?  தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

சட்டமன்ற வரலாற்றில் அரை நூற்றாண்டு காலம் பயணித்த கலைஞர் அவர்களின் அனுபவத்தை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அவரின் மூப்பைக்கருதி சட்டமன்றத்தில் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமான எதிர்க்கட்சி இருப்பது ஆரோக்கியமான ஒன்றாகும். எதிர்க்கட்சியினருக்கு அதிக வாய்ப் பினைக் கொடுத்து, அவர்கள் எடுத்து வைக்கும் குற்றச்சாற்றுகளை கவனமுடன் கருத்தில் கொண்டு ஆட்சியை நெறிப்படுத்திக் கொள் ளவும் நல்லதோர் வாய்ப்பாகும். நல்லாட்சிக்கான இலக்கணமும் அதுவேதான்!

எதிர்க்கட்சித் தலைவர்
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தொடக்கம்


எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் நீண்ட காலமாக சட்டமன்ற உறுப்பினராகவும், துணை முதல் அமைச்சராகவும் இருந்த அனுபவம் பெற்றவர் - மனப்பக்குவம் நிறைந்தவர். "எதிர்க்கட்சியாக செயல்படுவோம் எதிரிக்கட்சியாக செயல்படமாட்டோம்" என்று தொடக்கத்திலேயே கருத்துத் தெரிவித்திருப்பதை முதல் அமைச்சரும், ஆளும்கட்சி தரப்பினரும் வரவேற்று, பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனமாகும்.

ஆளும் கட்சி என்பது கண்ணாடி வீடு

ஆளும் கட்சி என்பது கண்ணாடி வீட்டில் இருப்பது போன்றது என்பதை மறந்து விட்டு ஆளும் கட்சியினரே, எதிர்க் கட்சிகளையும், எதிர்க் கட்சியில் உள்ள மூத்த தலைவர்களையும் தேவையில்லாமல் சீண்டுவது சரியானது தானா? முதல் அமைச்சருக்குத்தான் அவப் பெயர் மிஞ்சும் அதனால்.

அரை நூற்றாண்டு காலத்திற்கும்
மேலான சட்டப்பேரவை அனுபவம்


குறிப்பாக கலைஞர் அவர்கள் சட்டப்பேரவை - வரலாற்றிலேயே புதிய மைல் கல்லைச் செதுக்கிய, வேறு எவரும் பெறாத நீண்ட அனுபவக்காரர், அவரைப்பற்றிக் குறிப்பிடும்பொழுது அவரது வயதுக்கும், அனுபவத்துக்கும் உரிய மரியாதையைக் கொடுத்துப் பேசுவதுதான், அண்ணாவை கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டி ருக்கும் கட்சிக்கு கண்ணியமாக இருக்க முடியும்? அன்றைய முதல்வர் எம்ஜி.ஆர் கூட கலைஞருக்கு உரிய மரியாதையைத் தரத் தவறாதவர்.

நடந்து கொண்டிருக்கும் சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்க்கும்பொழுது - கலைஞர் அவர்களின் சட்டமன்ற அனுபவத்தின் வயதை எட்டாதவர்கள் எல்லாம் வாய்க்கு வந்தவாறு பேசுவது சரி யானதுதானா? முதல் அமைச்சர், அவை முன்னவர்  அத்தகைய வர்களை நெறிப்படுத்த வேண்டாமா?

சட்டமன்றத்தில் கலைஞருக்குரிய
வசதியான இடம் அவசியமே!


கலைஞர் அவர்களின் மூப்பையும், உடல் நலனையும் கருத்தில் கொண்டு மனிதாபிமானத்தோடு உரிய வகையில் சட்டப் பேரவையில் இடம் ஏற்பாடு செய்வதில் என்ன சங்கடம், தயக்கம்? அப்படி செய்து கொடுப்பதன் மூலம் முதல் அமைச்சரின் பெருந்தன்மைதானே உயரும், அவ்வாறு செய்ய முன்வரவில்லையென்றால் நேர் எதிரான விமர்சனம்தானே எழும்?

கலைஞர் அவர்களின் அனுபவம் சட்டமன்றத்திற்கு கிடைப்பது என்பது கலைஞர் அவர்களுக்கு புதிதாக வரப்போகிற பெருமையல்ல; மாறாக ஆளும் தரப்புக்கு கிடைக்கக்கூடிய நல்வாய்ப்பும், பயனும் ஆகும்.

பெருந்தன்மையாக நடந்து கொள்வது பலவீனமல்ல - மாறாக நடந்து கொள்வதுதான் பலவீனமாகும்.
முதல் அமைச்சர் சிந்திக்கட்டும்!

நான்கு முறை முதல் அமைச்சராக இருப்பவருக்கு மிகப்பெரிய கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருப்பவருக்கு இது தெரிந்திருக்கும் என்றே நம்பி, சிந்தித்துச் செயல்படக் கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை
23.6.2016



Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles