பெரியார் மெடிக்கல் மிஷன் குமரி-மிடாலத்தில் முகாமிட்டு உதவிடும்!
பக்கத்து மாவட்டக் கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் முழு ஒத்துழைப்புத் தருக!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள தொண்டற அறிக்கை
குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம், கடலுக்குச் சென்ற மீனவர்கள் தவிப்பு குறித்துக் கவனம் கொண்டு மீட்புப் பணியில் மய்ய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்ற கோரிக்கையோடு, வெள்ளத்தால் உடல் நிலை பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களுக்கு மருத்துவ உதவி புரிய வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு பெரியார் மெடிக்கல் மிஷன் தன் சேவையை டிசம்பர் 6 ஆம் தேதி மேற்கொள்ளும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள தொண்டற அறிக்கை வருமாறு:
கன்னியாகுமரி மாவட்டம் திடீர்ப் புயலால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகி, அங்குள்ள மக்கள் ‘திடீர் அகதி’களைப் போன்று ஆகி, அவதியுறுவதை அறிந்து மிகவும் வேதனையும், துன்பமும் அடைகிறோம்.
கடலுக்குச் சென்ற நம் மீனவ சகோதரர்கள் பலர் இன்னும் வீடு திரும்பவில்லை என்பதால், அக்குடும்பங்களின் தாய் மார்களும், சகோதரர்களும் மிகவும் துடிதுடித்து, குமரியில் வெள்ளம் வடிந்தாலும், அவர்தம் கண்ணீர் இன்னும் வடியாத கண்ணீராக ஓடிக் கொண்டிருக்கும் துயர நிலை! அத்துயரில் பங்கேற்று அவர்கள் மீளுவார்கள் என்ற நம்பிக்கையுடன் அச்சகோதரர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுகிறோம்!
தேடுதல் பணி மேலும் முடுக்கிவிடப்பட வேண்டும்
மத்திய - மாநில அரசுகள், அவர்களைத் தேடும் பணியில் தங்களிடம் உள்ள இராணுவ வசதி வாய்ப்புகள் - சாதனங்களைப் பயன்படுத்தி, மீட்டெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது ஓரளவுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது என்றாலும், மேலும் தீவிரமாக ஹெலிகாப்டர்கள், விமானம் மூலம் யாராவது உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கிறார்களா? என்று தீவிரத் தேடுதல் பணியை முடுக்கிவிடவேண்டும். மீட்கும் பணிகளைச் செய்யவேண்டும்.
பெரியார் மெடிக்கல் மிஷன்
இருட்டைச் ‘‘சபித்துக்‘’ கொண்டிருப்பதைவிட, ஒரு சிறு மெழுகுவர்த்தியையாவது கொளுத்துதல் இருட்டை விரட்டும்; இதயங்களில் நம்பிக்கை ஒளியூட்டும் என்பதால், ‘‘பெரியார் மெடிக்கல் மிஷன்’’ என்ற நமது பெரியார் மருத்துவ உதவிக் குழுமம் நாளை மறுநாள் (6.12.2017) புதன் காலை முதல் மருத்துவ உதவிகள் மிகவும் தேவைப்படும் கிராமங்களை மய்யப்படுத்தி ‘மிடாலத்தில்’ மருத்துவத் துயர் துடைப்புக் குழுவினர் அதன் தலைவர் குன்னூர் டாக்டர் இரா.கவுதமன் அவர்கள் தலைமையில் செல்ல உள்ளது.
சுமார் 25 பேர் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் குழு சென்று முகாமை நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளதானது மன மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தந்துள்ளது! சிறுதுளி பெருவெள்ளப் பணிதானே!
இக்குழுவினர் இந்தக் கார்காலம் முழுவதும் இப்படிப்பட்ட தொண்டறப் பணிகளைத் தொடருவது மிகவும் அவசியம் - பாராட்டி வரவேற்கவேண்டும்.
நெல்லை, குமரி மாவட்டத்
தோழர்களுக்கு...
குமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்ட, பக்கத்து மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களும், வாய்ப்புள்ளவர்களும் அந்த மருத்துவக் குழுவினருடன் தொண்டறப் பணியில் பங்கேற்பது மிகவும் இன்றியமையாதது. இடையில் அதிக அவகாசம் இல்லை - உடனே சென்று பங்கு பெறுங்கள்.
நம் கடன் பணி செய்து தொண்டாற்றுவதே!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
4.12.2017