மோடி அரசின் மூர்க்கத் தாக்குதல் மசோதா!
வங்கியில் டெபாசிட் செய்தோருக்குத் தண்டனையா?
பண முதலைகள் வாங்கிய வங்கிக் கடனுக்கு டெபாசிட் செய்தோர் பணத்தை பணயம் வைப்பதா?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
வாராக்கடனை சரிகட்ட அதற்குச் சம்பந்தமே யில்லாத வெகுமக்கள் வங்கியில் வைத்துள்ள வைப்பு நிதியின் தலையில் கைவைப்பதா? இது ஒழுக்கக் குறைவு அல்லவா என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் நாட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் ஆற்றிவரும் பணி குறிப்பிடத்தக்கதாகும். வங்கிச் சேவை என்பது சமூகத்தில் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே என்ற நிலையிலிருந்தது, பொது மக்களுக்கும், குறிப்பாக கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும் வங்கிச் சேவைகள் கிடைத்திடும் வகையில் 1969இல் வங்கிகள் அந்நாளைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் நாட்டுடமை ஆக்கப்பட்டன. இது ஒரு மாபெரும் பொருளாதாரச் சீர்திருத்தமாக, திருப்புமுனையாக இருந்தது. பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்திடும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதாக பின்னர் அறிவிக்கப் பட்ட பிரதமர் நரசிம்மராவ் அவர்களது சீர்திருத்த நடவடிக்கைகள் 1991-லிருந்து பின்நோக்கிச் செல்லும் வகையில் புதிய (?) பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதித்துறை சீர்திருத்தம் என்பதன் பெயரால் படிப்படியாக தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகின்றன. இப்படித் திணிக்கப்பட்ட மக்கள் விரோத சீர்திருத்தத்தின் மூலமாக, நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், முழு வதும் ‘‘அரசுடைமையாக்கப்பட்ட தேசிய வங்கிகள்’’ (Wholly owned by Government of India) எனும் நிலையிலிருந்து வங்கிகளின் பங்கு மூலதனத்தில் தனியாரும் பங்கேற்றிடும் வகையில் ‘‘பொதுத்துறை வங்கிகளாக’’ (Public Sector Banks) மாற்றம் பெற்றன. தொடக்க காலத்தில் மக்களுக்கு நலன் பயக் கும் நிதி வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, பின்னர் அவைகளின் முக்கியத்துவம் படிப்படியாக குறைக்கப்பட்டன. பொதுத்துறை வங்கிகளில் சரிபாதிக் கும் மேலாக அரசின் பங்குரிமை உள்ளது என்பதற்கு அடையாளமாக அரசின் வசம் 51 விழுக்காடு எனும் அடையாளத்தை மட்டும் வைத்துக்கொண்டு மீதி உள்ள 49 விழுக்காடு பங்குரிமைகளை தனியா ருக்கு தாரை வார்த்து நிதித்துறையினை சீர்குலைக்கும் படிப்படியான நடவடிக்கைகள் இன்று விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குதிரை குப்புறத் தள்ளியதோடு
குழியும் பறிப்பதா?
இந்திய நாட்டு வங்கிகளை உலக வங்கிகளின் தரத் திற்கு கொண்டு செல்வதாகக் கூறி நடைமுறைப்படுத்தப் படும் வங்கிச் சீர்திருத்த நடவடிக்கைகளால் இந்திய வங்கிகளை இந்நாட்டு வெகு மக்களிடமிருந்து முழு வதும் அன்னியப்படுத்திவிடும் முயற்சிகள் தொடர்ந்து அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
குதிரை குப்புறத் தள்ளியது மட்டுமல்லாமல் குழியும் பறித்ததுபோல, சீர்குலைக்கப்பட்ட வங்கிகளை மேலும் சீர்திருத்தப் போவதாகச் சொல்லும் இன்றைய மத்திய பா.ஜ.க. அரசால் நிதிச் சிக்கல் தீர்வு மற்றும் டெபாசிட் காப்பீட்டு மசோதா 2017 (Financial Resolution and Deposit Insurance Bill, 2017) என்ற ஒரு ஆபத்தான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
வங்கிகளில் வாராக்கடன் அளவு தொடர்ந்து அதி கரித்து வருகிறது. இதனால் வங்கிகள் ஈட்டும் லாபமும் படிப்படியாக குறைந்து இன்று வங்கிகள் பாதிப்படைந்த பரிதாப நிலையில் உள்ளன. இந்த வாராக்கடனை சரி செய்வதற்கு வங்கிகளில் வாடிக்கையாளர்களின் (வங்கிக் கடனுக்கு சம்பந்தம் இல்லாத வாடிக்கையாளர்கள்) சிறு சேமிப்பு, குறுகிய, நீண்ட கால வைப்புத் தொகையினை எடுப்பதில் சில கட்டுப்பாடுகளை, வரையறைகளை கொண்டுவர சட்டம் இயற்றப்படவுள்ளது. ‘‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத் ததாகக் கூறப்படும்‘’ வைதீகப் பழமொழியைப் போல கடன் வாங்கியவர் கடனை, திருப்பிக் கட்டாததற்கு வங்கியில் டெபாசிட் செய்யப்படும் வாடிக்கையாளர் பணத்தில் வரையறை செய்திட முயலுவது முற்றிலும் தவறான, நியாயமற்ற நடவடிக்கையாகும். இது வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் வாடிக்கையாள ரான வெகு மக்களின் பணத்தை சீர்திருத்தம் என் பதன் பெயரால் நடத்தப்படும் ‘‘கொள்ளையடிக்கும்‘’ (Looting Public Money) செயலாகும்.
பொதுத்துறை வங்கிகளில் லாபம் கருதி - டெபாசிட் தொகை மூலம் கிடைக்கும் வட்டி அளவினை முக்கிய மாக எதிர்ப்பார்த்து பொதுமக்கள் வங்கியில் டெபாசிட் செய்வதில்லை. பாதுகாப்பு (Safety) என்பதையே முதன்மையாக எதிர்பார்த்து டெபாசிட் செய்கிறார்கள். அந்த பாதுகாப்பிற்கே பங்கம் ஏற்படுத்திடும் வகையில் சட்டம் இயற்றப்பட உள்ளது. 2018 இல் மோடி அரசு, சென்ற ஆண்டின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரி ஆகியவைகளின் அடிமேல் பலத்த அடியாக இது விழ இருக்கிறது.
வங்கியில் உள்ள மொத்த வாராக்கடன் நிலுவையின் கணிசமான பகுதியானது, பெரும் கடன்களை பண முதலைகள், 25 விழுக்காடுகளைப் பெற்றுள்ள பெரும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் கட்ட வேண்டியவையே.
இந்தக் கடனை கட்டாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, கடனுக்கு ஈடாக அவர்கள் அட மானம் வைத்த சொத்துக்களை கைப்பற்றி ஏலம் விட்டு வசூல் செய்வதை விடுத்து, வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் பணத்தில் - தலையில் கை வைப்பது சரியான பகல் கொள்ளை ஆகும். அந்தக் கொள்ளையடிப் பிற்கு அரசே சட்டத்தினை கொண்டு வருவது சரியான மக்கள் விரோதச் செயலாகும். யாரைத் திருப்திப்படுத்த சட்டத்தினை மத்திய அரசு கொண்டு வர உள்ளது? மல் லையா, அம்பானி, அதானி போன்று வங்கிகளில் கடன் வாங்கியுள்ள பெரும் முதலாளிகளைப் பாதுகாக்கவா?
குளிர்காலக் கூட்டத் தொடரில்
வருகிறது ஆபத்து!
வங்கியில் தங்களது பணத்தை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்திடக் கூடிய நிதிச் சிக்கல் தீர்வு மற்றும் டெபாசிட் காப்பீட்டு மசோதா 2017 சென்ற ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள் ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் ஆளும் கட்சியான பா.ஜ.கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் பெரிய மாற்றங்கள் ஏதுமின்றி மசோதாவானது வர இருக்கின்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மறுபடியும் தாக்கல் செய்யப்படவுள்ளது இந்த தந்திரமேயாகும்!
இந்த மசோதா அப்படியே நிறைவேறினால் வங்கி யில் பணத்தை டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர் களுக்கு இதுவரை இல்லாத மாபெரும் பாதிப்பு ஏற்படும். ஒவ்வொரு டெபாசிட் தொகையிலும் ஒரு குறிப்பிட்ட பகுதி அந்த வாடிக்கையாளர் பெற்றுக் கொள்ள முடி யாதவாறு வங்கி மூலதனமாக ஒதுக்கிட வழிமுறையினை ஏற்படுத்தும். இந்த மூலதன ஒதுக்கீடு என்பது வங்கியில் கடன் வாங்கிவிட்டு கடன் நிலுவையினை கட்டாத சூழல் ஏற்பட்டு வங்கிக்கு நிதிச் சிக்கல் ஏற்படும் பொழுது அதனை சரி செய்வதற்கு பயன்படுத்தப்படுமாம்! அடுத்தவர் வாங்கிய கடனுக்கு டெபாசிட் தொகையில் ஒரு பகுதியை சரி செய்திட ஒதுக்கீடு செய்வது எந்த வகையில் நியாயமான செயல் ஆகும்? இதனால் வங்கி யில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் வாடிக்கையாளருக் குத் தேவைப்படும் பொழுது முழுமையாக எடுக்க முடியாமல் போய்விடும்.
மேலும், தங்களது பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வது பாதுகாப்பு எனக் கருதும் வாடிக்கையாளருக்கு அந்த டெபாசிட்டுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். டெபாசிட்தாரர்களுக்கு முற்றி லும் தொடர்பில்லாத, கடன் பெற்றவர் திருப்பிச் செலுத்தாவிட்டால் அதற்கு ஈடு செய்திடும் வகையில் டெபாசிட் தொகை பிடித்தம் செய்யப்படும். இப்படி டெபாசிட்டில் பிடித்தம் செய்யப்படும் தொகை வாராக்கடனுக்கு சரி செய்யப்படும் சூழல் உருவாகாது என இன்று மத்திய நிதியமைச்சர் உறுதியளித்தாலும் சட்டப்படி சரிசெய்வதற்கு இந்த மசோதா நிறைவேற்றம் அங்கீகாரம் அளிப்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
டெபாசிட்தாரர்களுக்கு என்ன சம்பந்தம்?
மேலும், இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள சரத்துகள் கிராமப்புற மக்களிடம் தொடக்க காலத்தில் வங்கி வாடிக்கையினை பழக்கப்படுத்தி இன்றும் அவர் களது கடன் தேவையினை பெரும்பாலும் நிறைவேற்றி வரும் தொடக்க மற்றும் கூட்டுறவு வங்கிகளை பெரிதும் முடக்கி விடும். 94 விழுக்காடு பாதிப்பு ஏற் படும். இந்நாட்டு மக்கள் செலவு செய்திடுவதை விட சேமிக்கும் பழக்கம் அதிகமாக உள்ளவர்கள். பொது மக்கள் அப்படி சேமித்து வங்கியில் போடும் பணத்தை, டெபாசிட் தாரருக்கு தொடர்பே இல்லாத வாராக் கட னுக்கு நேர்செய்திட ஒதுக்கி வைப்பது நிதி ஒழுங்கீன மாகும். நாட்டின் நிதி பயன்பாட்டை நெறிப்படுத்த வேண்டிய மத்திய அரசே நிதி ஒழுங்கீனத்திற்கு வழி ஏற்படுத்தலாமா? அதற்காக ஒரு சட்டம் இயற்றிட முன்வருவதா?
ஜி-20 நாடுகள் கூட்டமைப்பில் நம் நாடு உறுப்பினராக இருப்பதால் நிதிச் சிக்கல் தீர்வு நிறுவனம் (Financial Resolution Board) அமைக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதாகச் சொல்லப்படுகிறது. அமெரிக்க நாட்டில் 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது; ஏற்பட்டால் அதிலிருந்து மீளவே நிதிச் சிக்கல் தீர்வு நிறுவனம் அமைப்பதற்காக கூட்டமைப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன.
அமெரிக்க நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக் கடியினால் நம் நாட்டு பொருளாதாரம், வங்கித்துறை பாதிக்கப்படவில்லை. பாதிப்பு ஏற்படாத நிலையில், பாதிப்பினை எதிர்பார்த்து நிதிச்சிக்கல் தீர்வு நிறு வனத்தை ஏற்படுத்த முயலுவது சரியாகுமா? வங்கிகள் திவாலாகும் நிலை இந்த நாட்டில் கடந்த 24 ஆண்டுகளாக ஏற்படவில்லை. நெருக்கடிக்கு உள்ளாகும் வங்கியும் இதர பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டு டெபாசிட் போட்டவர்களுக்கு முழுத் தொகையும், இழப்பு எதுவும் இல்லாமல் வழங்கப்பட்டது. இல்லாத நெருக்கடியினை எதிர்பார்த்து ‘Bail in Bill’ என்று சொல்லப்படும் மீட்புக் கான மசோதாவின் தேவை என்ன? முன்பு இருந்த நிலையைவிட டெபாசிட் தாரர்களை அச்சுறுத்தி, பாதிப் பிற்கு உள்ளாக்கும் தேவையில்லாத சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரலாமா?
தவறு செய்த அதிகாரிகள், வங்கிகள், கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாத பெரும் பணத் திமிங்கலங்கள், முதலைகளை ‘ரகசிய காப்பு உரிமை’ என்ற சட்டத் திரையை வைத்துக் காப்பாற்றி, வைப்புத் தொகை போட்டவர் வயிற்றில் அடிப்பதா வளர்ச்சி? மக்கள் கிளர்ந்து எழுந்து இதைத் தடுத்தாகவேண்டும்.
மக்கள் விரோத மசோதாவைக் கைவிடுக!
மத்திய அரசானது இந்த மக்கள் விரோத மசோ தாவை கைவிட வேண்டும். மசோதாவில் மாற்றங்கள் கொண்டு வருவதை விடுத்து வங்கிகளின் நிதி ஆரோக்கியத்தை முடக்கிவரும் வாராக் கடன்களை வசூலிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்திடுவதில் முயலவேண்டும். அந்த நடவடிக்கைக்காக சீர்திருத்தச் சட்டங்களை கொண்டுவந்து வெகு மக்களுக்கும், வங்கி தாரர்களுக்கும் முழுமையாக பயன்படும் வகையில் வங்கிகளிள் செயல்பாட்டை மாற்றி அமைத்திட முன்வரவேண்டும். பிற நாட்டு வங்கி அமைப்புகளை அந்த செயல்பாட்டு மாதிரிகளைக் கொண்டுவருவதை விடுத்து இந்த மண்ணுக்கும், மனிதர்களுக்கும் உகந்த வங்கிச் செயல்பாடுகளை வளமைப்படுத்தவேண்டும். வழக்கப்படுத்த வேண்டும்.
NRE, NRI போன்ற வெளிநாட்டிலிருப்போர் கணக்கு கள் மத்தியிலும் இது குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களும் பணத்தைத் திரும்ப எடுக்கும் விளைவும்கூட தவிர்க்க முடியாதவை என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் இதனைக் கட்டுப் பாடாக எதிர்த்து மக்கள் நலனைக் காப்பாற்றிட வேண்டும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
13.12.2017