புதுடில்லி, டிச.21 2ஜி வழக்கில் கனிமொழி, இராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை என்று சி.பி.அய். சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று (21.12.2017) தீர்ப்பளித்தார்.
அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி யின்போது (2004-2009 மற்றும் 2009-2014) 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவில் ஊழல் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஅய் விசாரணை நடத்தியது. இதையடுத்து, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் மீதும், 3 தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஅய் வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கப்பிரிவும் தனியாக விசாரணை நடத்தியது.
டில்லியில் உள்ள சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கின் இறுதிக்கட்ட வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தன. அதன்பின்னர் குற்றம்சாட்டப்பட்டவர்கள், சி.பி.அய். மற்றும் அமலாக்கப் பிரிவு தரப்பு ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி ஷைனி உத்தரவிட்டார். எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்த பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
தீர்ப்பு எழுதும் பணி தாமதமானதால் தீர்ப்பு தேதியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மூன்று முறை தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்ட பின்னர், டிசம்பர் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அதன்படி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (21.12.2017) தீர்ப்பு வழங்கும் நடைமுறைகள் தொடங்கின. காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிப்பார் என்று கூறப்பட்டது. குற்றம்சாட்டபட்ட கனிமொழி. ஆ.ராசா உள்ளிட்டோர் நீதிமன்றத் திற்கு வந்தனர். துரைமுருகன், திருச்சி சிவா, ராஜாத்தியம்மாள், சுப்பிரமணிய சுவாமி மற்றும் வழக்கில் தொடர்புடைய நபர்களும் வந்தனர்.
இந்நிலையில், நாடே எதிர்பார்த்த 2ஜி வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஓ.பி.ஷைனி காலை 10.50 மணிக்கு வாசித்தார். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சி.பி.அய். தவறிவிட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இந்த தீர்ப்பைக் கேட்டதும் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்தனர். தீர்ப்பு வெளியாவதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்தபாதுகாப்புபோடப்பட்டிருந்தது. தமிழகத்தில் இருந்து வந்திருந்த தி.மு.க. தொண்டர்கள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
===============
அன்றே சொன்னார் தமிழர் தலைவர்
சமூகத்தின் உயர்மட்டத்திலிருந்து, அடித் தட்டு மக்கள் வரை செல்பேசி சேவையை அனுபவிப்பது ஒரு சமூகப் புரட்சி அல்லவா?
தொலைத்தொடர்புத் துறையின் தொழிற் சங்கத் தலைவர்களும், அதிகாரிகள், சங்கத் தலைவர்களும் வைத்த வேண்டுகோளை ஏற்று பி.எஸ்.என்.எல். பொதுத் துறையில் 74 சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை நிறுத்தி வைத்து, ஊழியர் நலத்துறையாக பொது மக்கள் நலத்துறையை பி.எஸ்.என்.எல். துறையை நிலை நிறுத்தியது ஒரு புரட்சி அல்லவா!
தந்தை பெரியார் அஞ்சல் உறை மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டதும், அமைச்சர் ஆ.இராசா அவர்களின் கால கட்டத்தில்தான். ஆ.இராசாவை - புரட்சியாளர் என்று கலைஞர் அவர்கள் பொருத்தமாகத்தான் பாராட்டியிருக்கிறார் என்று தமிழர் தலைவர் அய்யா கி. வீரமணி கூறியுள்ளார்.
(திராவிடர் கழகத் தலைவரின் பேட்டி 26.11.2010)
==============
அவாளின் ஆசையில் மண்!
2ஜி வழக்கில் தீர்ப்புக் கூறுவதற்கு சற்று நேரத்துக்குமுன்பு கூட சு.சாமி தண்டனை உறுதி! உறுதி!! என்று வாயெல்லாம் பல்லாக சிரித்தார் (தொலைக்காட்சிப் பேட்டியில்). இன்றைய ‘தினமலர்' ஏட்டின் தலைப்பு என்ன தெரியுமா? ‘‘ஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே... ரூ.1,76,000,00,00,000 நெஞ்சில் புதைந்த 2ஜி ஊழல்...'' என்று எட்டுப் பத்தித் தலைப்புப் போட்டு நிர்வாண ஆட்டம் போட்டுள்ளது.
இறுதியில் சிரிப்பவன் யார் என்பதுதான் முக்கியம்!