சி.பி.எஸ்.இ. கல்விக் கூடங்களில் இராமகிருஷ்ணா மடத்துடன் ஒப்பந்தம் போட்டு ஒழுக்கநெறிப் போர்வையில் இந்துத்துவாவைத் திணிக்கத் திட்டம்!
முற்போக்குவாதிகள் ஒருங்கிணைந்து முறியடிப்பதே அவசர அவசியமாகும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
சி.பி.எஸ்.இ. என்னும் மத்தியக் கல்வி நிறுவனங் களில் ஒழுக்கநெறிப் போதனை என்ற பெயரால் இந்துத்துவாவை இளம் சிறார்களிடம் திணிக்க சூழ்ச்சித் திட்டம் பின்னப்படுகிறது. முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து முறியடிப்பதே அவசர அவசியமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
மத்திய பள்ளிக் கல்வித் துறை (Central Board of Secondary education - CBSE) ஒரு புதுவகை இந்துத்துவக் கல்வி முறையை நாட்டில் நடைபெறும் சி.பி.எஸ்.இ. கல்வி முறைப் பள்ளிகளில் புகுத்திட கால்கோள் விழாவை மிக லாவகமாகச் செய்துள்ளது.
ராமகிருஷ்ணா மிஷன் என்ற நவீன இந்துத்துவ தத்துவப் பரப்பு பள்ளிகள் இதற்கு ‘‘உதவுமாம்!’’
மூன்று வகையாக நடத்திடத் திட்டம்
‘‘மதிப்புறு கல்வி’’ (Value Education) கற்பிப்பதற்கு மாணவர்களுக்கு உதவிட முன்வந்துள்ளதாம்! அதன்மூலம், ‘விழிப்புணர்வு’ பெற்ற குடிமக்களாக (Awakened Citizens) வும், அமைதி (Peace), ஒத்திசைவு (Harmony) இணைந்து செயலாற்றச் சொல்லித் தரப் போகிறார்களாம் - இந்த இராமகிருஷ்ணா மடத்தினர்.
டில்லியில் உள்ள இராமகிருஷ்ணா மிஷன் அமைப்பி னர், ‘விழிப்புணர்வுள்ள குடிமகன்’ திட்டத்தை உருவாக்கியுள் ளார்களாம்!
அதற்காக அந்த நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தம் போட் டுள்ளதாம் மத்திய பள்ளிக் கல்வித் துறை!
மூன்று வகையாக இது வகுப்புகளுக்குப் பிரித்து நடத்தப் படுமாம்!
வாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் வேலை!
இந்த மதிப்புறு கல்வித் திட்டத்தின்படி, 6 ஆம் வகுப்புமுதல் 8 ஆம் வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு அல்லது 7 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புவரையிலும் பாடம் நடத்துவார்களாம் இந்த இராமகிருஷ்ணா மிஷன் அமைப்பினர்மூலம் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றும் ஏற்பாடு இது!
மத்திய அரசு ‘மதிப்புறு கல்வி’ தர தனது பாட திட்டக் குழுவையும், ஆசிரியர்களையும் பயன்படுத்தினால் போதாதா?
இவர்களிடம் இல்லாத திறமையா - ஆற்றலா இருக்கிறது இராமகிருஷ்ணா மிஷன் காவிச் சாமியார்களிடம்? விவேகா னந்தர் என்பவர் அடிப்படையில் யார்? இந்துத்துவாவாதிதானே! இந்து தர்மம், பகவத் கீதை இவைகளை - இதிகாச புராணங் களைத்தானே சொல்லித் தருவார்கள்.
ஒழுக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்ட பவுத்த நெறியாளர் கள்மூலம் புத்தர் அறவுரைகளை, திருவள்ளுவரின் குறள் நெறியை ஏன் சொல்லிக் கொடுக்க வற்புறுத்தக் கூடாது? அதைச் சொல்லிக் கொடுக்க எத்தனையோ பகுத்தறிவாளர் அமைப்புகள் உள்ளனவே!
மற்ற மற்ற மதக்காரர்கள்
முன்வந்தால் ஏற்பார்களா?
மற்ற மற்ற மதவாதிகளும் இப்படி ஒப்பந்தம் போட முன்வருகிறோம் - நாங்கள் தயார் என்று மத்திய கல்வித் துறையைக் கேட்டால், ஒப்புக்கொள்ளுவார்களா?
‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கும்‘ வேண்டாத வீண் வேலை இது.
இந்த ஒட்டகம் முதலில் தலையை கூடாரத்திற்குள் நுழைப்பது, பிறகு படிப்படியாக கூடாரத்தையே தனதாக்கிக் கொண்டு, கூடாரத்தில் இருந்தவர்களை வெளியேற்றுவது நிச்சயம்!
இந்துத்துவா விஷ உருண்டை உஷார்!
இந்த திட்டமிட்ட இந்துத்துவா முறை - விஷ உருண்டையில் ‘‘மதிப்புறு கல்வி’’ என்ற சர்க்கரையைத் தடவிக் கொடுக்கும் முயற்சி அல்லாமல் வேறு என்ன?
நாட்டிலுள்ள இளம் சிறார்களைப் பிடித்து மூளைச்சாயம் ஏற்றுவார்கள். ஆர்.எஸ்.எஸ். தலைவரின் ‘‘Catch them Young’’ என்பதை செயல்படுத்தவே இந்த மறைமுக ஏற்பாடு. இந்த ஆபத்தினைத் தடுத்து நிறுத்திட நாட்டின் முற்போக்காளர்கள் அனைவரும் முன்வரவேண்டியது அவசர அவசியம் ஆகும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
27.12.2017