மதங்கள் மக்களைப் பிரிக்கின்றன; நாத்திகம் - பகுத்தறிவுதான் இணைக்கின்றன!
உலக நாத்திகர் மாநாடு 'ஆன்மிகம் - கடவுள் - மதம்' என்பவை புரட்டுகள் என்பதை அறிவிப்பதாகும்!
தமிழர் தலைவர் பேட்டி
திருச்சி,ஜன.6மதங்கள் மக்களைப் பிரிக்கின்றன; நாத்திகம், பகுத்தறிவுதான் மக்களை இணைக்கின்றன; உலக நாத்திகர் மாநாடு 'ஆன்மிகம் - கடவுள் - மதம்' என்பவை புரட்டுகள் என்பதை அறிவிப்பதாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திருச்சியில் நேற்று (5.1.2018) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
500 பேர்களுக்குமேல்...
உலக நாத்திகர் மாநாட்டினை திராவிடர் கழகமும், ஆந்திராவில் இருக்கக்கூடிய கோரா நாத்திகர் மய்யமும் சேர்ந்து ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவ துடன், சர்வதேச ரீதியாக உலகத்தின் பல பகுதிகளில் அப்படி நடைபெறும்பொழுது உலக பகுத்தறிவாளர் அமைப்பாக இருக்கக்கூடிய - International Ethical Humanist Association. அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள், அய்ரோப்பிய பொறுப் பாளர்கள், அதேபோல, இங்கிலாந்தில் இருக்கக் கூடியவர்கள், இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கக் கூடியவர்கள் - அத்துணைப் பேரும் 500 பிரதிநிதிகளுக்குமேல் வந்திருக் கிறார்கள். மூன்று நாள்களுக்கு கருத்தரங்கம் நடக்கவிருக்கிறது.
மதங்கள் மக்களை பிரிக்கின்றன
நாத்திகம் இணைக்கிறது
மதங்கள் மக்களைப் பிரித்திருக்கின்றன; கடவுள்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய சச்சரவுகளையும், கலவரங் களையும், இடிபாடுகளையும், இடிப்புகளையும் உருவாக் குகின்றன.
இணைப்புகளை உருவாக்குபவை நாத்திகம்தான் - பகுத்தறிவுதான் என்பதற்காக Atheism is the best hope of humanity -
- மனித குலத்தினுடைய முழு நம்பிக்கை என்பது இருக்கிறதே, நாத்திகத்தின் மூலம் தான் பரவ முடியும். நாத்திகம் ஒரு நன்னெறி. நாத்திகம் என்பது வெறும் கடவுள் மறுப்பு மட்டுமல்ல; ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்டு, அறிவியல் சிந்தனையை உருவாக்குவதுதான் நாத்திகம் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் மூன்று நாள்கள் - உலகத்தின் பல பகுதிகளில் இருக்கக்கூடியவர்களும், இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கக் கூடியவர்களும் வந்துள்ளனர்.
அந்த வகையில், அய்.எச்.இ.யூ. அமைப்பைச் சார்ந்த அம்மையார் வந்திருக்கிறார். நம்முடைய மேனாள் மத்திய அமைச்சரும், மிகப்பெரிய நெருப்பாற்றில் நீந்தி வெளியே வந்தவருமான அருமை சகோதரர் இராசா அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
தொடக்கவிழா நடைபெறவிருக்கிறது. மூன்று நாள்கள் இந்த மாநாடு நடைபெறவிருக்கின்றன. இரண்டாவது நாள் முற்பகுதி நிகழ்வுகள் தஞ்சையிலுள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலும், மாலையில் பொது மக்களுக்கான பகுதி திருச்சி புத்தூரில் பெரியார் மாளிகையிலும், அதற்கடுத்த நாள் இதே இடத்தில் தமிழர் திருநாள் திராவிடர் திருநாளாகிய பொங்கல் விழாவையும், தமிழ்ப் புத்தாண்டையும் வெளி நாட்டுப் பிரதிநிதிகளை வைத்துக் கொண்டாடக் கூடிய அளவிற்கு, இந்த மாநாடு முடிவடையவிருக்கிறது.
எனவே, மூன்று நாள்கள் - நிறைய கருத்தரங்கங்கள் - ஆய்வுக் கட்டுரைகளும் நிறைய படிக்கப்பட இருக்கின்றன.
மிகப்பெரிய அளவில், மதவாதம் தலைதூக்கக் கூடிய காலகட்டத்தில், நாத்திகர் மாநாட்டில் சிறந்த அளவிற்கு, பகுத்தறிவு கருத்துகளை, மனிதநேய கருத்துகளை, ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு ஆகிய தத்துவங்களையெல்லாம் உலகளாவிய அளவிற்கு, பெரியா ருடைய கருத்துகள், பெரியார் உலகமயமாகியிருக்கிறார் என்பதைக் காட்டக்கூடிய வண்ணம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கலாம்.
நாத்திகர் மாநாடு
அரசியல் உணர்வுகளுக்காக அல்ல!
செய்தியாளர்: ஆன்மிக அரசியல் என்று பரவலாகப் பேசப்படுகின்ற இந்தச் சூழலில், இந்த நாத்திகர் மாநாடு எத்தகைய தாக்கத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும்?
தமிழர் தலைவர்: ஆத்மா என்பதே பித்தலாட்டம். அதனுடைய தமிழ்ச்சொல் விளக்கம் ஆன்மா. எனவே, இல்லாத ஒன்றை நம்புவது என்பது, எவ்வளவு பெரிய புரட்டு என்பது தானாகவே தெரியும். இந்த நாத்திகர் மாநாடு அரசியல் உணர்வுகளுக்காக நடைபெறவில்லை. ஆனால், இதனுடைய தாக்கம் பல பேருக்குப் புரிய வைக்கக் கூடிய உணர்வை உருவாக்கும்.
ஏனென்றால், ஆத்மா என்பது ஒரு கூடு விட்டு கூடு பாயும் என்று சொல்வதைப்போல, பலர் கூடு பாய்ந்து கொண் டிருக்கிறார்கள்; அவர்களை அடையாளம் காட்டும்.
எனவேதான், தத்துவ ரீதியான ஒரு மாறுபட்ட கருத்துதான் கடவுளை மற; மனிதனை நினை என்பது. ஜாதியை ஒழி - தீண்டாமையை அழி - மூடநம்பிக்கைக்கு இடம் கொடுக்காதே என்ற கருத்துகளை வலியுறுத்தக்கூடிய மாநாடுதான் இந்த உலக நாத்திகர் மாநாடு.
எனவே, இது அரசியல் பார்வையோடு செய்யப்படுவதல்ல; தத்துவ ரீதியாகவே, ஆன்மா, கடவுள், மதம் போன்றவை போலித்தனங்கள், புரட்டு என்பதை காட்டுவதற்கான, அறிவிப்பதற்கான மாநாடாகும் இம்மாநாடு.
- இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
இந்நாள்... இந்நாள்...
1935 - 'பகுத்தறிவு' ஏட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அறிமுகம்.
1940 - மும்பையில் தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் சந்திப்பு
1974 - அன்னை மணியம்மையார் திராவிடர் கழகத் தலைவராகத் தேர்வு