** திராவிடர் கழகத்துக்குப் புதிய தலைமை செயற்குழு
** அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயலாக்கம்
** சமூகநீதிக்கு எதிரான நீட் தேர்வு ஒழிப்பு - இவற்றை முன்னெடுத்து செயல்படுவது
** போக்குவரத்துத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருக!
திராவிட இயக்கத்துக்கு மாற்று என்ற பெயரில் பவனி வரும் ஆன்மிக முகமூடிகளையும்
அதன் பின்னணி மதவாத சக்திகளையும் முறியடிப்போம்!
திராவிடர் கழக தலைமை செயற்குழுவில் காலங் கருதிய தீர்மானங்கள்
திருச்சி, ஜன.8 ஜாதி - தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி காப்பு, மதவாத ஆன்மிக சக்திகள் முறியடிப்பு, திராவிடர் கழகத்துக்குப் புதிய தலைமைச் செயற்குழு, போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைமை செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம் திருச்சி பெரியார் மாளிகையில் நேற்று (7.1.2018) ஞாயிறு பிற்பகல் 3.45 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு
கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் கடவுள் மறுப்புக் கூறினார்.
கழகத் தலைவர் கழக செயல்பாடுகள் குறித்தும், 2018இல் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் பற்றியும், கழக அமைப்பு முறையில் சில மாற்றங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, பொதுச் செயலாளர்கள் வீ. அன்புராஜ், இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா. குணசேகரன், வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், மாநில மகளிரணி செயலாளர் தஞ்சை கலைச்செல்வி, அமைப்புச் செயலாளர் ஊமை செயராமன், மதுரை வே. செல்வம் ஆகியோர் தம் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. இரங்கல் தீர்மானம்
பெரியார் பேருரையாளர் புலவர் டாக்டர் மா. நன்னன் (வயது 94, மறைவு 7.11.2017), செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் அ.கோ. கோபால்சாமி (வயது 91, மறைவு 2.11.2017), சிதம்பரம் நகர திராவிடர் கழக மேனாள் தலைவர் புலவர் இராசாங்கம் (வயது 93, மறைவு 28.11.2017), திருத்தணியையடுத்த அத்திமாஞ்சேரிப்பேட்டை ஆசிரியர் பி.எஸ். சக்கரபாணி (வயது 100, மறைவு, 31.12.2017) ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒக்கி புயல் என்னும் இயற்கைச் சீற்றத்தின் காரணமாக நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் மரணம் அடைந்துள்ளனர்; குறிப்பாக தென் மாவட்டங்களில் கோரப் புயல் காரணமாகவும், வெள்ளம் காரணமாகவும் மனித உயிர் இழப்புகளும், தேசங்களும் ஏற்பட்டு அவதியுறுகின்றனர். உயிரிழப்புக்கும், பொருளிழப்புக்கும் ஆளான அனைவருக்கும் இச்செயற்குழு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. (அனைவரும் எழுந்து நின்று இரு மணித்துளிகள் அமைதி காத்தனர்).
தீர்மானம் 2
திராவிடர் கழகத்துக்குப்
புதிய தலைமைச் செயற்குழு
திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக இதுவரை இருந்து பணியாற்றிய தோழர்களுக்கு இச்செயற்குழு தனது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனி தலைமைச் செயற்குழு கீழ்க்கண்டவர்களை உறுப்பினராகக் கொண்டு செயல்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது. உறுப்பினர்கள் வருமாறு:
கி. வீரமணி, கலி. பூங்குன்றன், டாக்டர் பிறைநுதல்செல்வி, சு. அறிவுக்கரசு, வீ. அன்புராஜ், துரை. சந்திரசேகரன், இரா. ஜெயக்குமார், இரா. குணசேகரன், பிரின்சு என்னாரெசு பெரியார், பொறியாளர் ச. இன்பக்கனி, மதுரை வே. செல்வம் ஆகியோர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தேவைப்படும் போது தலைமைச் செயற்குழு கூட்டத்திற்குச் சிறப்பு அழைப்பாளர்களாகச் சம்பந்தப்பட்ட தோழர்களை அழைப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3
உலக நாத்திகர் மாநாடு: பாராட்டும் நன்றியும்
உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் ஜனவரி (2018) 5,6,7 ஆகிய நாட்களில் வெகு சிறப்பாகவும், நேர்த்தியாக வும், திட்டமிட்ட வகையிலும் நடைபெற்றமைக்கு இச்செயற்குழு தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறது. இம்மூன்று நாள் மாநாடு வெற்றிகரமாக நடைந்தேற முழு ஒத்துழைப்புக் கொடுத்த திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கும், தோழர் களுக்கும், பணியாளர்களுக்கும் இச்செயற்குழு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த அனைவருக்கும், ஆய்வுக் கட்டுரைகள், கருத்துரைகள் வழங்கிய பெரு மக்களுக்கும் இச்செயற்குழு மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. நடந்து முடிந்த உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்புக் குறித்தும் தெரிவிக்கப் பட்ட கருத்துகள், பிரகடனத்தைப் பற்றியும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லுவது - பரப்புவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4
தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்
வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருக!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் களின் 13ஆம் ஒப்பந்தம் தொடர்பாக அரசுக்கும், போக்கு வரத்துத் தொழிலாளர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் மிகப் பெரிய அளவில் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2016 ஆகஸ்டு 31ஆம் தேதியோடு ஒப்பந்தத்துக்கான கெடு முடிந்த நிலையில் மேலும் 16 மாதங்கள் கழிந்து விட்ட பிறகும் மாநில அரசு இப்பிரச்சினையில் முரண்டு பிடிப்பது விருப்பத்தக்கதல்ல.
ஓர் அரசு தன் கீழ்ப் பணியாற்றும் தொழிலாளர்கள் பிரச்சினையை நீதிமன்றம் மூலம் தீர்க்க முயலுவது விரும்பத்தக்கதல்ல; சம்பள உயர்வில் 0.13 சதவீதம் என்கிற அளவுக்குத் தான் அரசுக்கும், தொழிலாளர்களுக்குமிடையே உள்ள முரண்பாடு என்பதால் இதில் தீர்வு காண்பது என்பது முடியாத - கடுமையான ஒன்றும் அல்ல.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் சம்பளம் பிடித்தம் என்ற வகையில் அவர்களுக்குரிய 7000 கோடி ரூபாயை வேறு செலவினங்களுக்கு அரசு பயன்படுத்துவது எந்த வகையில் சரியானது என்பதும் முக்கியமானதாகும்.
தமிழ்நாடு அரசு இதில் தன்முனைப்புக்காட்டாமல் நடைபெறும் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளோடு மனந் திறந்து பேசி தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை செயல்படுத்துமாறு திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயலாக்கம் - 'நீட்' தேர்வு ஒழிப்பு
ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு என்பதில் மிக முக்கிய கூறான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை செயல்படுத்தும் வகையிலும், சமூக நீதியில் 'நீட்' தேர்வு மூலம் ஒடுக்கப்பட்ட மக்களைத் தலையெடுக்காமல் தடுக்கும் சூழ்ச்சித் திட்டத்தை முறியடிக்கும் வகையிலும் மக்களின் மத்தியில் விழிப்புணர்வையும், அவர்களை ஒன்று திரட்டிப் போராடும் வகையிலும் வீதி, நீதி மன்றங் களிலும் ஒத்த கருத்துள்ளவர்களை ஒன்றிணைத்து 2018ஆம் ஆண்டில் செயல்படுவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6
2ஜி அலைக்கற்றை வழக்கில் விடுதலையானவர்களுக்குப் பாராட்டு
திராவிடர் இயக்கத்தைச் சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் செல்வாக்கைச் சிதைக்கும் வகையிலும் 2ஜி அலைக்கற்றை ஊழல் என்று கூறி மேற்கொள்ளப்பட்ட அழி-பழி வழக்கில் குற்றமற்றவர்கள் என்று பிரகாசமாக வெளிவந்த திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ. இராசா, திமுக மாநில மகளிரணி செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி. உட்பட விடுதலை செய்யப்பட்ட அனைவருக்கும் இச்செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 7
திராவிடர் இயக்கத்தை வீழ்த்திட
ஆன்மிக முகமூடி - எச்சரிக்கை!
ஆன்மிகம் என்ற போர்வையில் திராவிடக் கொள்கைக்கு மாற்று என்பதுபோல் தந்திரமாக மேற்கொள்ளப்படும் முயற்சியை முளையிலேயே தடுத்து நிறுத்த தேவையான பிரச்சாரங்களை மேற்கொள்வது என்றும், ஒரு நூற்றாண்டு காணும் திராவிட இயக்க சித்தாந்தத்தால் இந்தியத் துணைக் கண்டத்திலேயே சமூக நீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஜாதி, தீண்டாமை மறுப்பு, ஒழிப்பு இவற்றில் தமிழ்நாடு தனித் தன்மையுடன் திகழ்கிறது - இதனை ஒழித்து மாற்று அரசியல் என்று போர்வையில் ஆன்மிகத்தை முன்னிறுத்த துடிக்கும் சக்திகளிடத்திலும், இதற்குப் பின்புலமாக இருக்கும் இந்துத்துவா, மதவாத ஆதிக்க சக்திகளிடத்திலும் எச்சரிக்கையாக இருந்து முறியடிக்க ஒத்துழைக்க வேண்டுமாய்த் தமிழினப் பெரு மக்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பங்கேற்றவர்
ஆசிரியர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர்), சு. பிறைநுதல்செல்வி (பொருளாளர்), வீ. அன்புராஜ் (பொதுச் செயலாளர்), துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), இரா. செயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வீ. குமரேசன் (வெளியுறவுச் செயலாளர்), பழனி. புள்ளையண்ணன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), க. பார்வதி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), சாமி. திராவிடமணி (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தே. எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), கோ. தங்கராசு (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), ஊமை ஜெயராமன் (அமைப்புச் செயலாளர்), ஈரோடு த. சண்முகம் (அமைப்புச் செயலாளர்), வே. செல்வம் (அமைப்புச் செயலாளர்), ச. பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவரணி செயலாளர்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்).
சிறப்பு அழைப்பாளர்கள்: தெற்குநத்தம் ச. சித்தார்த்தன், வா. நேரு, தகடூர். தமிழ்ச்செல்வி, மா. அழகிரிசாமி, சி. இரமேசு, ச. குருசாமி.