Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

பட்ஜெட்டில் புதுமை என்பது இந்தியில் படித்ததுதான்! தமிழர் தலைவர் ஆசிரியரின் கருத்து

$
0
0

 

காவிரி நீர்ப் பிரச்சினை:  தமிழ்நாட்டுக்குரியதைப் பெற்றிட அனைத்துக் கட்சிகள் - அமைப்புக் கூட்டத்தை முதல்வர் உடனே கூட்டுக!

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பட்ஜெட் குறித்து திராவிடர்  கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்துள்ள கருத்து  வருமாறு:

இந்த ஆண்டு பா.ஜ.க. கூட்டணியின் பட்ஜெட் என்பது பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பதவியேற்று 5 ஆவது முறையாக நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட். இது இவ்வாட்சியின் கடைசி பட்ஜெட் ஆகும்.

அடுத்த தேர்தல் ஆண்டினை மனதிற்கொண்டே ‘பாலுக்கும் காவல் - பூனைக்கும் தோழன்’ என்ற போக்கில், பெருத்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மிக்க மகிழ்ச்சி தரக்கூடியதும், நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏமாற்றம் அளிக்கக் கூடியதுமான பட்ஜெட் ஆகும்!

ஒரே புதுமை - இந்தியில் பட்ஜெட்!

‘ஒரே புதுமை’ - பட்ஜெட்டில் இந்தித் திணிப்பு - இவ்வளவு ஆண்டுகாலம் இல்லாத ‘ஒரே புதுமை’ இதுதான். நாளும் இந்து நாடு - இந்தி நாடு என்று பிரகடனப்படுத்துவதுபோல் இருந்து வருகிறது.

இடையிடையே ஆங்கிலத்தில் நிதியமைச்சர் பேசி 110 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார்; உடனுக்குடன் கேட்டு, பலரும் விவாதிக்கும் வாய்ப்பு, உரிமை இந்தி பேசாத மாநில மக்களுக்குப் பறிக்கப்பட்டுள்ளது!

தனி  நபர் வருமான வரிவிலக்குபற்றி எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது மட்டுமல்ல, நிதியமைச்சர் முதல் பட்ஜெட் உரையில் நம்பிக்கை ஊட்டியதை நடைமுறையில் காட்டவே இல்லை.

இரண்டரை லட்சம் ரூபாய் வருமான வரிவிலக்குதானே எல்லா ஆண்டுகளிலும் தொடருகிறது. இது எதிர்பார்த்த வர்களுக்குப் பெருத்த ஏமாற்றம்தான மிஞ்சியது!

கார்ப்பரேட்டுகளுக்கு வரி குறைப்பு

அதேநேரத்தில் கார்ப்பரேட் வரி குறைப்புமூலம் பெரும் முதலாளிகள், தொழிலதிபர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தரும் பட்ஜெட் இது!

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று ஆளுங்கட்சி, பிரதமர், நிதியமைச்சர் கூற்று, நீர்மேல் எழுத்தாகியே நிற்கிறது!

விவசாயக் கடன்கள் தள்ளுபடி இல்லை; விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட திட்டவட்டமான ஆக்கபூர்வ திட்டங்கள்  ஏதும் அறிவிக்கப்படவில்லை.

வேலை வாய்ப்பு என்னாயிற்று?

பட்ஜெட் மதிப்பீடு 22.18 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 24.42 லட்சம் கோடி ரூபாயாகப் பெருகியுள்ளது. வேலை வாய்ப்புகள் பெருகிட ஏதும் திட்டவட்டமான அறிவிப்பு இல்லை. ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவோம் என்று மோடி பதவிக்கு வருமுன் கூறிய வாக்குறுதி காற்றில் பறந்து கலந்துவிட்டது.

ஏற்கெனவே இருந்த 3 சதவிகித கல்வி சுகாதார ‘‘செஸ்’’ வரி ஒரு விழுக்காடு கூடி, 4 சதவிகிதமாகி விட்டது!

மூன்று ஆண்டுகளுக்கு இபிஎஃப் தொகையை நாங்கள் கட்டுவோம் என்பது ஒரு ஆறுதல் அரசு ஊழியர்களுக்கு (12 சதவிகிதம்).

மத்திய அமைச்சர் கிண்டிய ‘‘அல்வா!’’

நிதிப் பற்றாக்குறை இப்போது 3.3 சதவிகிதமாக ஆகியதன்மூலம், இதன் சுமையை இன்றைய தலைமுறை மட்டுமல்ல, இனிவரக்கூடிய தலைமுறையினரும் சுமந்தாகவேண்டும்!

மத்திய நிதியமைச்சர் கிண்டிய அல்வாவை, மாநிலங்களுக்கு சிறப்பாகவே வழங்கிவிட்டார்!

விவசாயிகள் பட்டினியும், தற்கொலையும் எப்படி முடிவுக்கு வரும்?

பட்ஜெட் இந்தி ஆதிக்கம்தான் ‘ஒரே புதுமை!'

விரிவாகப் பிறகு எழுதுவோம்!

 

கி.வீரமணி,
தலைவர்   
திராவிடர் கழகம்.

 

சென்னை

2.2.2018


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles