புதுடில்லி, பிப்.16 இந்தியாவை உலுக்கியுள்ள மிகப்பெரிய மோசடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்துள்ளது. இந்த மோசடியைச் செய்தவர் நீரவ் மோடி என்ற வைர வியாபாரி. நீரவ் மோடி மற்றும் நரேந்திர மோடியுடனான தொடர்புகள் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தொடர்புடைய நீரவ் மோடி டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பங்கேற்றது குறித்து மத்திய அரசு விளக்கம் தரவேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாளுக்கு முன் ஓட்டம்!
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி குறித்த விசாரணை துவங்கும் முன்பே நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். அதுவும் இவரது பெயரில் வழக்குப் பதிவு செய்யும் ஒரு நாளுக்கு முன்பாகவே நீரவ் மோடி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். தப்பிச்சென்ற அவர் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் மோடியைச் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் இணைந்து படம் எடுத்துக்கொண்டனர்.
முடங்கிய தொழில்
முனைப்பு கண்டது யாரால்?
வைர வியாபாரி நீரவ் மோடி ரூ 11, 400 கோடி மோசடி செய்தது குறித்து தெரியவந்ததும் சிபிஅய்யிடம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் சுனில் மேத்தா புகார் அளித்துள்ளார். 2011-ஆம் ஆண்டு அளித்த இந்த புகார் குறித்து சிபிஅய் விசாரணை நடத்திவந்தது. அப்போது அவரது தொழில் முடக்கப்பட்டது. இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிறகு மீண்டும் அவர் தனது வணிகத்தை முழு வீச்சுடன் துவங்கினார். இந்த காலகட்டத்தில் போலியான வங்கி அங்கீகாரப் பத்திரங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு வந்தார். இதுகுறித்து கடந்த 10 நாள்களுக்கு முன்னர் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நீரவ் மோடியின் மும்பை வீடு மற்றும் குஜராத் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் சுனில் மேத்தா கூறுகையில், நீரவ் மோடி ரூ.11,400 கோடி மோசடி குறித்து எனக்கு தெரியவந்ததுமே சிபிஅய்யிடம் புகார் அளித்துவிட்டேன். ஆக்ஸிஸ் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளிலும் நீரவ் மோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டார்.
இந்த மோசடிக்கு முழுக்க முழுக்க மோடி பொறுப்பேற்கவேண்டும்
சிபிஅய் முடக்கி வைத்த நீரவ் மோடியின் வணிகத்தை 2014-ஆம் ஆண்டு அதாவது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அவர் எப்படி மீண்டும் துவங்கினார்? இதற்கு யார் அனுமதி கொடுத்தார்? மேலும் இவரது முறைகேடுகள் குறித்து 2017 ஜூலை 26 இல் மோடிக்கு நேரடியாக தகவல் தரப்பட்டுள்ளது. ‘தி எகனாமிக்ஸ்' என்ற ஏடு வெளியிட்ட செய்தியில், ‘‘மத்திய அமைச்சரவை நீரவ் மோடியின் மீதான புகார்கள் குறித்து மவுனம் சாதிக்கிறது'' என்று எழுதியிருந்தது.
விமானத்தில் 20 பெட்டிகளும் பறந்தன!
மோசடி புகார் பதிவு செய்யப்பட்டதும் அவர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியிருக்கிறார். டிசம்பர் 31 ஆம் தேதி அவர் மீதான விசாரணை குறித்து சிபிஅய் முடிவெடுத்துள்ளது. ஜனவரி 2 ஆம் தேதி அவரது அலுவலகம் சோதனைக்கு உட்படவிருந்த போது ஜனவரி ஒன்றாம் தேதி அதிகாலை பெங்களூருவில் இருந்து துபாய் வழியாக சுவிட்சர்லாந்து தப்பியுள்ளார். அவருடன் சிறப்புப் பயணிகளுக்குள்ள சலுகையோடு இருபதுக்கும் மேற்பட்ட பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டன.
எப்படி விஜய்மல்லையா விவகாரத்தில் நடைபெற்றதோ அதே போன்று நீரவ்மோடி விவகாரத்திலும் நடைபெற்றுள்ளது. இருவருக்குமே மத்திய அரசின் மிக முக்கிய பதவியில் உள்ளவர் உதவியிருக்கிறார்.
மோசடி செய்து தப்பிய ஒருவர் ஜனவரி 26- ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு மோசடி தெரிந்திருந்தும்...
வெளிநாடுகளில் மோடியைச் சந்திக்கும் முன்பு அவர் குறித்த அனைத்துத் தகவல்களையும் மத்திய அரசு கைவசம் வைத்திருக்கும். இந்த நிலையில் நீரவ் மோடி மோசடிக்காரர் என்று பிரதமர் மோடிக்கு நன்கு தெரிந்திருந்தும் அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். உள்துறை அமைச்சகத்திற்கு டிசம்பர் மாதம் சிபிஅய் ‘லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பச் சொல்லி அவசர கடிதம் ஒன்றை எழுதியிருந்தது, ஆனால் உள்துறை அமைச்சகம் அந்தக் கடித்ததிற்கு பதிலும் அனுப்பவில்லை, நீரவ் மோடி மீது ‘லுக் அவுட்' நோட்டீஸ் விடவும்வில்லை. அப்படி என்றால் நீரவ் மோடிக்கு ஆதரவாக உள்துறை அமைச்சகமும் இருந்துள்ளது என்பதுதானே உண்மை!