காவிரி மேலாண்மை வாரியம், அதிகாரிகள் மேற்பார்வைக் குழு இரண்டையும் உடனடியாக அமைக்க வேண்டும்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடே இந்த உணர்வை காட்டுகிறது என வலியுறுத்தவேண்டும்: தமிழர் தலைவர் பேட்டி
கோவில்பட்டி, பிப்.18 தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் தந்தை பெரியார் 139 ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (17.2.2018) வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
காட்சியாக உள்ள ஆட்சி மாறி
தமிழகம் மீட்சி பெற வேண்டும்
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழகத்திலே ஆட்சி காட்சியாக இருக்கிறது. ஆட்சி யாக இல்லை. இது சமூக நீதி, நம்முடைய மாநில உரிமைகள் இவைகளினுடைய மீட்சியாக மாறவேண்டும். அதுதான் மிக முக்கியம். அதற்கு இன்றைய சூழல், இன்றைய ஆட்சி யாளர்கள் தெளிவாக அவர்களே சொல்லுகிறார் கள், டில்லி ஆட்டிவைக்கிறது என்று வெளிப்படையாகவே, வெட்க மில்லாமல் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்தக் காலக்கட்டத்திலே, இந்த நிலை மாறுவதற்கு ஒரே வழி ஆட்சி மாற்றம்தான்.
செய்தியாளர்: நடிகர்கள் எல்லாம் ஆட்சிக்கு வருவோம் என்கிறார்களே?
தமிழர் தலைவர்: ஆமாம். ஏனென்றால், அரசியல்வாதி கள் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்.
செய்தியாளர்: காவிரி தண்ணீரை கருநாடகத்திலிருந்து தமிழகத்துக்கு குறைத்து உத்தரவிட்டுள்ளார்களே?
தமிழர் தலைவர்: காவிரி பிரச்சினையிலே ஏற்கெனவே நடுவர் மன்றத்தீர்ப்பைவிட 14.75 டி.எம்.சி. குறைவாக இருக் கிறது என்று சொன்னாலும், அதைவிட முக்கியமான பிரச் சினை வெறும் தீர்ப்பை வைத்துக்கொண்டு நாம் தண்ணீர் திறக்க முடியாது. நடைமுறைப்படுத்த வேண்டியதற்குரிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். அதிலே வரவேற் கப்பட வேண்டிய ஓர் அம்சம் என்னவென்று சொன்னால், ஆறு வாரத்துக்குள்ளாக ஏற்கெனவே கூறிய காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம், அதேபோல அதிகாரிகள் மேற் பார்வைக் குழு இந்த இரண்டையும் உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அப்படி அமைத்தால்தான் இந்த அளவிற்காவது வரும். இல்லையானால், இது கூட இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் குறைத்தார்கள் என்பது ஒரு பக்கத்திலே சங்கடம் இருந்தாலும் கூட, அதேநேரத்தில் இதை வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்கள். இன்னொன்றும் சொல்லியிருக்கிறார்கள், எந்த நதியும் எந்த மாநிலத்துக்கும் உரிமை உடையது அல்ல என்று. இதுவரையிலே கரு நாடகம் உரிமை கொண்டாடியதற்கு மேலும் அடித்திருக் கிறார்கள். ஆகவே, இந்த 10 டிஎம்சி தண்ணீரை நிலத்தடி நீரிலிருந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் அவர் கள் சொல்லியிருக்கிறார்களே தவிர, அதனால், நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றாலும், எஞ்சியதையாவது காப்பாற்றுவதற்கு இனிமேல் அவர்கள் தயக்கம் சொல்ல முடியாது, மத்திய அரசு குறுக்கே இருக்கக் கூடாது. தமிழ்நாட்டுக்கு உதவினால், நாம் அரசியல்ரீதியாக லாபம் அடைய முடியாது, கருநாடகத்துக்கு இப்படி கண்ஜாடை காட்டினால்தான் அங்கு ஆடசிக்கு வரமுடியுமா என்று பார்க்கலாம் எனும் நப்பாசை இருக்கிறது. அந்த எண் ணத்தை மத்திய அரசு மாற்ற வேண்டும்.
மாநில அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை இந்த கால கட்டத்திலாவது கூட்டி உடனடியாக, தமிழ்நாடே இந்த உணர்வைக் காட்டுகிறது என்று மத்திய அரசுக்கு வலி யுறுத்த வேண்டும். இத்தனை எம்பிக்கள் வைத்துக்கொண்டு துயிலுரிந்த துச்சாதனை வேடிக்கை பார்த்த கதை மாதிரி, பாரதக் கதையில் சொல்லுகின்ற அந்த கற்பனை மாதிரி இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறார்களே, இது வெறுக்கத் தக்கது.
தமிழக அய்.ஏ.எஸ். அதிகாரி மீது பாஜகவினர் தாக்குதல் நடத்துவதா?
செய்தியாளர்: ஒடிசா மாநிலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் வீட்டின்மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து ....?
தமிழர் தலைவர்: இதுவரையில் தமிழ்நாட்டிலிருந்து வடக்கே சென்று படிக்கக்கூடிய நம்முடைய மாணவர்கள், மருத்துவப்படிப்பு படிக்கக்கூடியவர்கள் மற்றும் மாணவர் களின் கொலைவரையிலே மற்ற நிகழ்ச்சிகள் நடந்து இருக்கின்றன. அதைப்பற்றி மிகப்பெரிய அளவுக்கு இன் னும்கூட விசாரணைகள் முடிவடையாத நிலையிலே, தோலைக் கடித்து, துருத்தியைக் கடித்து, கடைசியிலே மனி தனையே கடித்த கதை என்று சொல்வதைப்போல இப் பொழுது அய்.ஏ.எஸ்.அதிகாரியையே அவர்கள் தாக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறார்கள் என்றால், எப்படிப்பட்ட காட்டுமிராண்டிகள் அவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, இந்தக் காட்டுமிராண்டி ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது. அதை மக்கள் உணரவேண்டும். அவர் களிடமிருந்து ஓர் அய்.ஏ.எஸ். அதிகாரி மாறுபட்டால்கூட, அவர்களைப்போய் நேரடியாகத் தாக்குவது என்பதில் எந்த அளவுக்கு மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டி ருக்கிறது? தமிழ்நாடு அரசு இதிலே உடனடியாக தன் னுடைய மறுப்பை வேகமாகத் தெரிவிக்க கடமைப்பட்டிருக் கிறது. வழக்கம்போல மவுனம் சாதிக்கக் கூடாது.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.