திருச்சி, ஜூலை 7 மத்திய அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் கொள்கையில் மாற்றம் உண்டா என்பதுதான் முக்கியம் என்று செய்தியாளர்களிடம் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
திருச்சியில் நேற்று (6.7.2016) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை செய்தியாளர்கள் சந்தித்தபோது அளித்த பேட்டி வருமாறு:
செய்தியாளர் கேள்வி: அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது குறித்து...?
தமிழர் தலைவர்: அமைச்சரவை மாற்றப்பட்டால், கொள்கை மாறிவிடவேண்டும் என்று அவசியமில்லை. லேபிள்தான் மாற்றம், உள்ளே உள்ள சரக்கில் மாற்றமில்லை. இதில் அவர்களை வழிநடத்துவது ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கைதான். எனவே, பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கு தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கிற எதிர்ப்பு போன்றே, வடபுலத்திலே இந்தியா முழுக்க இந்த கொள்கைக்கு எதிர்ப்பு வந்திருக்கிறது, பல துறைகளிலே.
புதிய பாடத்திட்டம் என்ற பெயராலே புதிய கல்விக் கொள்கை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. அது ஏறத்தாழ பழைய குலதர்மக் கல்வித் திட்டமே! எப்படி ஆச்சாரியாரால் உருவாக்கப்பட்டதோ, அதையே இன்னும் கொஞ்சம் மாற்றி, வெளியிலே தெரியாமல், விஷ உருண்டைக்கு சர்க்கரைப்பூச்சு மாதிரி கொண்டு வந்திருக்கிறார்கள். அதனுடைய ஒரு பகுதியாக சமஸ்கிருதத்தைத் திணிக்கக்கூடிய அளவுக்கு வெளிப்படையாக வந்திருக்கிறது. சமஸ்கிருதத் திணிப்பு என்பது ஆர்.எஸ்.எஸ்-சினுடைய திட்டங்களிலே ஒன்று.
பல மொழிகள் உள்ள நாட்டில் சமஸ்கிருதம் தான் ஒரே பொது மொழி என்பது அவர்களின் கொள்கை. அது போலவே பல மதங்கள் உள்ள நாட்டில் ஒரே மதம் இந்து மதம் என்பது அவர்களின் கொள்கை.
ஆகவே, இது கொள்கையாக இருக்கின்ற போது, நபர்கள் மாற்றப்பட்டால், மாறிவிடும் என்று சொல்லமுடியாது.
எனவே, எந்த நேரத்திலும் எச்சரிக்கையோடு இந்த பண்பாட்டுப் படையெடுப்பைத் தடுக்க வேண்டிய முயற்சியில் நாம் திட்டவட்டமாக இருக்கின்றோம்.
- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெரிவித்தார்.