'மகா மகா சாணக்கியன்' என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட
பானகல் அரசரின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளான
இந்நாளில் நன்றியோடு அவரை நினைவு கூர்வோம்!
சமூக நீதிக்கான சவால்களை முறியடிப்போம்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள நன்றி கூறும் அறிக்கை
நீதிக்கட்சியின் வேர்களில் ஒருவராக ஒளியிட்ட பானகல் அரசர் என்ற ராமராய நிங்கரின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று, அவர்தம் ஆட்சியில் சாதிக்கப்பட்டவைகளை, அதனால் பலன் பெற்றவர்கள் என்ற முறையில் பார்ப்பனர் அல்லாதார்கள் - ஒடுக்கப்பட்ட மக்கள் நினைவு கூர்ந்து நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
"தாழ்த்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட - இழிவாய்க் கருதப் பட்ட மக்கள், அதாவது தீண்டத்தகாதோர் - கீழ் சாதியார் - ஈன சாதியார் - சூத்திரர் என்பனவாகிய, 'பிறவி இழிவும் - பிறவி அடிமைத்தனமும், சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி, பிரவாகமும், வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கை கொண்டு, அதில் இறங்கி வேலை செய்தவர், அவ்வேலையில் அவர்பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது. இந்தியாவில் ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற சமூகத்திற்கு விரோதி; ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி; ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரச்சார கூலிகளுக்கு விரோதி! இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும் படியான நிலையில், நெருப்பின்மேல் நின்று கொண்டு வேலை செய்வது போல், வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும் - இலக்கியமாகவும் விளங்கினார்"
அவர்தான் பானகல் அரசர்
இவ்வளவு அடைமொழிகளையும், அர்த்த மிக்க சொல்லாடல்களையும் தந்தை பெரியார் அவர்களால் பொழிந்து எழுதப்பட்டது யாருக்கு என்றால் பானகல் அரசர் என்று கூறப்படும் பனங்கண்டி இராமராய நிங்கர் அவர்களுக்குத்தான்!
தந்தை பெரியார் நெஞ்சத்தில் ஆழமாகக் குடி கொண்ட இந்தப் பெரு மகனாரின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள் (1866).
பெருஞ்செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் முன்னோர்கள் ஆந்திராவின் பானகல்லு எனும் ஊரைச் சேர்ந்தவர்கள். அதன் பின் காளஸ்திரியில் குடியேறினர். காளஸ்திரி அரசர் குடும்பத்தோடு மண உறவு கொண்டவர்கள்.
சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படித்தவர் - சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர். 1912 முதல் 1915 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு முத்திரையைப் பொறித்தவர்.
நீதிக்கட்சியில் இணைந்தார்
டாக்டர் சி. நடேசனார் அவர்களால் தொடங்கப்பட்ட திராவிடர் சங்கத்தில் இணைத்துக் கொண்டு, நீதிக் கட்சியின் வேர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர்.
1919ஆம் ஆண்டில் பார்ப்பனர் அல்லாதாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் வாதிட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் பானகல் அரசர் அங்கம் வகித்தார்.
சென்னை மாநில பிரதம அமைச்சர்
1920ஆம் ஆண்டில் சென்னை மாநில முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். வழக்குரைஞர் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். உடல் நலக்குறைவு காரணமாக சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் பதவியிலிருந்து விலகியபோது பிரதம அமைச்சராகப் பதவியேற்றார். 1923ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதம அமைச்சர் ஆனார்.
இவர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் பெற்ற உரிமைகளும், வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் அசாதாரணமானவை.
சாதனைகளின் பட்டியல்
1) 1921ஆம் ஆண்டில் முதல் வகுப்புவாரி உரிமை சட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) இயற்றப்பட்டது.
2) பஞ்சமர், பறையர் என்ற பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி திராவிடர் என்று அழைக் கப்படுவதற்கு ஆணை பிறப் பிக்கப்பட்டது.
3) தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக 'லேபர் கமிஷனர்' என்ற தனி அதிகாரிகள் நியமனம்.
4) ஆங்கிலேயர் வசமிருந்த சென்னை மாநில மருத்துவத் துறை இந்தியர் மயமாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியது. (நீதிக்கட்சி ஆங்கிலேயர்களுக்குத் துணை போனது என்று வாய்க் கூசாமல் பேசுவோர்க்கு இது காணிக்கை)
5) சென்னைப் பல்கலைக் கழக சட்டம்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது.
6) கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தலைமை ஆசிரியர்களின் அதிகாரத்தில் இருந்தது. பெரும்பாலும் அவர்கள் பார்ப்பனர்களாக இருந்ததால், பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்லூரிகளில் நுழைவு என்பது தடையாக இருந்தது. இதனை மாற்றி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு என்று தனிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.
7) மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது (இந்தக் கால மருத்துவர்களுக்கு இந்த வரலாறு தெரிய வேண்டும்).
8) பார்ப்பனர்களின் கொட்டமாக இருந்து வந்த இந்துக் கோயில்களின் சொத்துகளை காப்பாற்ற இந்து அற நிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. (மத விஷயங்களில் அரசு தலையிடுகிறது என்று சத்தியமூர்த்தி அய்யர் போன்ற தலைவர்கள் போட்ட கூச்சல் கொஞ்ச நஞ்சமல்ல! நீதிக்கட்சிக்காரர்கள் பிராமணர்களை மட்டுமல்ல; கடவுளையும் அழிக்கக் கிளம்பி விட்டனர். மதத்தை அழிக்க முனைந்து விட்டனர் என்று முரட்டுக் கூச்சல் போட்டனர்).
9) நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவும் திட்டம் - தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கு வழி செய்யப்பட்டது.
10) சென்னையில் தியாகராயர் நகர் என்ற விரிந்த பகுதியை உருவாக்கிய வரும் இவரே!
"மகா மகா சாணக்கியன்!"
"மகா மகா சாணக்கியன்" என்று பார்ப்பனர்களால் கருதப்பட்டவர் பானகல் அரசர். தனது திரண்ட செல்வத்தைப் பொது வாழ்வுக்காகக் கொட்டியவர். தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்.
பானகல் அரசர் மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய மிக நீண்ட அறிக்கை - பானகல் அரசரின் அருமையையும், சாதனையையும் என்றென்றைக்கும் பறைசாற்றும்! வேறு எந்த தலைவருக்கும் இவ்வளவுப் பெரிய அறிக்கையை தந்தை பெரியார் வெளியிட்டதில்லை.
நீதிக்கட்சி போட்ட அடித்தளம்
திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது என்று கேட்பவர்கள் அதன் சாதனைகளை அறியாதவர்களே! நீதிக்கட்சி அடிகோலிய கட்டுமானத்தின்மீதுதான் இன்றைய வளர்ச்சிகள் எல்லாம் நிமிர்ந்து நிற்கின்றன என்பது தான் உண்மை.
குறிப்பாக சமூகநீதி என்பது இன்றைக்கு இந்தியா முழுவதும் உயிரோட்டமாக - ஒடுக்கப்பட்ட மக்களின் அடிநாதமாக இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டமே அங்கீகரிக்கிறது என்றால் அதற்கான ஆசான் நீதிக்கட்சியே! நீதிக்கட்சியே!!
சமூகநீதிக்கான சவால்களை சந்திப்போம்!
பானகல் அரசரின் இந்த 150ஆம் ஆண்டு பிறந்த நாளில் அந்தப் பெருமகனாரை மிகுந்த நன்றியுணர்வுடன் நினைவு கூர்வோம். சமூகநீதிக்கு அறை கூவல்கள் புறப்பட்டு இருக்கும் இந்தக் கால கட்டத்தில் பானகல் அரசர் என்ற பெருமானின் உணர்வுகளை தந்தை பெரியார் கொடுத்துச் சென்ற போராட்டக் குணத்தோடு முன்னெடுப்போம்!
வாழ்க பானகல் அரசர் என்ற பெம்மான்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
9-7-2016
சென்னை