‘தி எகனாமிக்ஸ் டைம்ஸ்’ ஏடு படப்பிடிப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
மகாராட்டிர மாநில அமைச்சரவையிலிருந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஏக்நாத் காட்சே வெளியேற்றப்பட்ட நிலையில், அங்கு பார்ப்பனர்- பார்ப்பன ரல்லாதார் போராட்டம் வெடித்துக் கிளம்பியுள்ளதைச் சுட்டிக் காட்டி, சமூகநீதிக் கொடியை யாரும் கீழே இறக்கிவிட முடியாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க.விலும், பார்ப்பனர் - பார்ப் பனரல்லாதார் - பிற்படுத்தப்பட்டோருக்குரிய பங்கு மறுக்கப்பட லாமா? பா.ஜ.க. என்றால் பார்ப்பன ஜனதா கட்சியா? என்பது போன்ற குமுறல்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன!
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே முழங்கிய சமூகப் புரட்சியாளர் ஜோதிபாபூலேவின் கட்சி என்ற அமைப்பு அங்கே மறைந்திருக்கலாம்; ஆனால், அவர் விதைத்த சமூகநீதிக் கோரிக்கை முளைத்து - களைய முடியாத ஆலமரமாய், கட்சி களைத் தாண்டி பரவி ‘ஆட்சி’ புரியத் தொடங்கிவிட்டது!
மிக நீண்டகாலத்திற்குப் பின் மகாராஷ்டிர முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் என்ற பார்ப்பனர் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணியில், பா.ஜ.க.வினால் நியமிக்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டு வருகிறார்!
மகாராட்டிர அமைச்சரவையிலிருந்து பிற்படுத்தப்பட்ட அமைச்சர் வெளியேற்றம்
மத்தியில் பிரதமர் மோடி தனது தலைமையில் உள்ள அமைச்சரவையில் மாற்றங்கள் செய்துள்ளார். இதற்கு முன்னதாக ஏக்நாத் கட்சே என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் மகாராஷ்டிர அமைச்சரவையிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.
அதன் பார தூர விளைவுகள், மகாராஷ்டிர பா.ஜ.க.வில் எதி ரொலிக்கத் தொடங்கியுள்ளன. காரணம், மத்திய அமைச்சரவை யில் மிக முக்கியமான துறைகளின் அமைச்சர்களாக மகாராஷ் டிரத்திலிருந்தும் (அருகில் உள்ள கோவாவிலிருந்தும்) பொறுப்பு வகிக்கின்றனர். மோடி அரசில் உள்ள நிதின் கட்கரி, சுரேஷ் பிரபு, மனோகர் பாரிக்கர் (கோவா), பிரகாஷ் ஜவடேக்கர் ஆகியோர் அனைவரும் மராத்தியப் பார்ப்பனர்கள் ஆவார்கள்.
ஒத்தடம் கொடுக்கிறார்
பிரதமர் மோடி
கோபினாத் முண்டே என்ற பிரபலமான சமூகநீதியை வற்புறுத்திய, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவரை அடுத்து, பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் செல்வாக்கு உள்ளவரான ஏக்நாத் கட்சே மராத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப்பட் டுள்ளது குறித்து பார்ப்பன முதலமைச்சரான பட்னாவிஸ் அவர்களே, மோடியிடமும், கட்சித் தலைவர் அமித்ஷாவிடமும் பேசியிருக்கிறார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மராத்திய அமைச்சரவையில், பிற்படுத்தப்பட்டோரான - ராஷ்டிரிய சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாதேவ் ஜன்கர், பா.ஜ.க.வின் பாண்டுரங் ஃபண்கர் ஆகியோர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவையில், பிரதமர் மோடி, சுபாஷ் ராம ராவ் பாம்ரேவை இராணுவ துணை அமைச்சராக (இவர் மகாராஷ்டிரப் பார்ப்பனர் அல்லாதார்) நியமித்து, வெடித்துக் கிளம்பியுள்ள பார்ப்பனரல்லாதார் குமுறலுக்கு ‘ஒத்தடம்‘ கொடுத்துள்ளார்!
இச்செய்தி இன்றைய ‘எகனாமிக்ஸ் டைம்ஸ்’ ஆங்கில நாளேட்டில் இன்று (12.7.2016) வெளிவந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வரான காட்சேயின் வெளியேற்றம் மகாராட்டிர அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
மத்தியிலும் சரி, மகாராஷ்டிர பார்ப்பன முதலமைச்சரின் அரசிலும் சரி, சமூகநீதிக் கொடி கீழே இறக்கப்பட முடியாமல் உயரத்தில் பறந்துகொண்டே உள்ளது!
மண்டல் காற்று
‘‘‘மண்டல் காற்று’ இனி எதிர்காலத்தில் நாடு முழுவதும் வீசுவதை யாரும் தடுக்கவே முடியாது என்றார்’’ - கமண்டல்களின் போராட்டத்தின்போது, மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள்!
ஜோதிபாபூலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர்தம் அமைப்புகள் அங்கே இல்லாததுபோல் தோன்றினாலும், அவர்களது தத்துவங்கள் எப்படி ஆட்சி புரிகின்றன - அது பா.ஜ.க.வின் பார்ப்பனர் ஆட்சியாக இருந்தபோதிலும்கூட!
சமூகநீதிக் கொடி
ஒருபோதும் இறங்கவே இறங்காது!
எனவே, சமூகநீதிக் கொடி ஒருபோதும் கீழே இறங்காது; மாறாக மேலே மேலே உயர்ந்து பறக்கவே செய்யும்!
எனவே, ஆர்.எஸ்.எஸ்.கூட இட ஒதுக்கீட்டை ஆதரித்து முழு ‘பல்டி’ அடிக்கவேண்டிய அவசியம் - பீகார் தேர்தலில் தொடங்கி, இன்றும், நாளையும் தொடருகிறது, தொடரும்!
தமிழ்நாட்டு பா.ஜ.க.விலும், ‘‘தமிழிசைகளும், பொன்.இராதா கிருஷ்ணர்களும்‘’ பொறுப்பில் போடப்பட்டிருப் பதற்கேகூடக் காரணம், பெரியாரின் சமூகநீதிக் காற்று அல்லாமல் வேறு என்ன?
புரிந்துகொள்ளுங்கள், தோழர்களே!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
12.7.2016