Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை!''

$
0
0

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்!

அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வந்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கி தீர்ப்புக் கூறியுள்ளதை வரவேற்றும், இதனைக் கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு ஏற்று செயல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தியும்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை  வருமாறு:

உச்சநீதிமன்றத்தில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் தலைமையில் கூடிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்டப் பிரிவு ஆய்வு அமர்வு (Constitution Bench) நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க - மிகுந்த - குறிப்பிட்டு போற்றத்தகுந்த (Landmark Judgement) தீர்ப்பு ஒன்றை தந்துள்ளது.

நம்பூதிரிகளின் எதிர்ப்பு!

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்குள் வழிபடுவதற்காக, 10 முதல் 50 வயது பெண்களுக்கு உரிமை இல்லை; அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று கூறியதோடு, தேவசம் போர்டும், கோவில் நிர்வாகக் குழுவினரும், அர்ச்சகர் கூட்டமான நம்பூதிரிகளும் வாதாடினார்கள்!

கேரள அரசு என்ன செய்யவேண்டும்?

இவ்வழக்கில் தற்போதுள்ள மாண்புமிகு பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முற்போக்கு அரசு - ஆதிதிராவிடர்களை அர்ச்சகர்களாக்கி வரலாறு படைத்த அமைதிப் புரட்சியைப் போலவே, கேரள அரசின் கருத்து, 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்களுக்கு அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபடுவதைத் தடுப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல; இத்தகைய பாலின வேறுபாடுகள் சட்ட விரோதம்; நியாய விரோதம் என்ற நிலையை துணிச்சலுடன்  உச்சநீதிமன்றத்தில் எடுத்து (முந்தைய உம்மன்சாண்டி தலைமையிலான அரசு வைதீகர்களின் நிலைப்பாடான  அவ்வயது பெண்களுக்கு உள்ளே சென்று வழிபாடு செய்வதை ஆதரிக்காமல், பழைய சம்பிரதாயங்களை உடைக்கக் கூடாது என்ற பிற்போக்குத்தன நிலைப்பாட்டை எடுத்து இதே வழக்கு விசாரணையில் ஒரு கட்டத்தில் கூறியது) கூறியது மிகவும் பாராட்டி வரவேற்கத்தகுந்தது; நீதிபதிகள் நியாயமான - அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றி பின்பற்றிடும் வகையில் தங்களது தீர்ப்பை அளிப்பதற்கு அது உதவி புரிந்துள்ளது!

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சாரம்!

அரசியல் சட்ட அமர்வின் தீர்ப்பின் சாரம்:

1. வழிபடுதலில் பாலின வேற்றுமையான அணுகுமுறை அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது; எனவே, அய்யப்பன் கோவிலுக்குள் சென்று 10 வயது முதல் 50 வயது பெண்களின் உரிமையை - வழிபடும் உரிமையை மறுப்பது எவ்வகையிலும் நியாயம் அல்ல!

ஆண்கள் சென்று அந்தக் கடவுளை வழிபட உரிமை உண்டு என்றால், அது பெண்களுக்கும் பொருந்தத்தான் வேண்டும்; இதில் வேற்றுமை காட்ட முடியாது!

தனியார் கோவில் என்றாலும் வழிபாட்டில் பொதுதான்

2. தனியாருக்குச் சொந்தமான நிர்வாகத்திற்குட்பட்ட கோவில் (Private Temple) என்பது ஏற்கத்தக்கது அல்ல. ஒரு கோவில் என்றால், அது எல்லோருக்கும் வழிபட உரிமையுடைய பொது இடம்தான்!

3. இதில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்கர் அவர்கள், பெண்களை மாதவிடாய் காரணம் காட்டி, வேற்றுமைப்படுத்துவது மிகவும் அநாகரிகமானது. நவீன அறிவியல் யுகத்தில் ஏற்கத்தக்கதல்ல. அரசியல் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை கள், மகளிருக்கான உடல்நலம் பேணுதல் ஆகியவை களுக்கு முரணானது என்ற கருத்தை, 5 நீதிபதிகள் அமர்வு ஏற்றுக்கொண்டது.

இப்படி 10 வயது முதல் 50 வயதுவரை மாத விடாய் நிற்காத காலம் என்று பிரிவினை செய்து கூறுவது அரசியல்  சட்ட விரோதமும்கூட!

பெண்களும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள்தானே!

இது நீண்டகால வழக்கம் (Custom) என்றாலும்கூட இதைப் புறந்தள்ளிட வேண்டியது இப்போது தேவை - நியாயமானது என்ற விவாதத்தையும் முழு அமர்வு ஏற்றது.

ஒரு நீதிபதி கேட்டார் (சந்தரசூட்) எல்லா பெண்களும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்றால், இவர்களை மாத்திரம் வேற்றுமைப்படுத்துவது எவ்வகையில் நியாயம்?''

இது பெண்களின் தனி உடல் ரகசியத்தை அம்பலப் படுத்தும் அநீதியையும் இழைக்கிறது என்று மூத்த வழக்குரைஞர் ஒருவர் கூறி,  நீதிபதிகளுக்கு உதவிடவும் செய்தார்.

தொடரட்டும் சட்ட அறப்போர்! இத்தீர்ப்புக்குப் பின் மாற்றப்பட வேண்டியது பலவும் உண்டு.

1. பெண்களை அர்ச்சகர்களாக்கிட எவ்வித தடையும் கூற முடியாது- இதே தத்துவ அடிப்படையில்.

2. தனியார் கோவில்  (Private Temple) என்று கூறி சிதம்பரம் கோவில் தீட்சதர்கள் கொள்ளை போன்றவை களும் தொடரக்கூடாது.

அடுத்து தொடரட்டும் சட்ட அறப்போர் தொடங்கட்டும்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

19.7.2018


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles