தமிழர் தலைவர் பிறந்த நாளில் விடுதலை' சந்தாக்களை அளித்திட ஒவ்வொரு தமிழன் வீட்டுக் கதவையும் தட்டுவோம்!
தமிழன் வீடு - கருஞ்சட்டைக்காரர்களுக்கு அதிக உரிமை உள்ள வீடே!
தலைமைக் கழகத்தின் ஒரு முக்கிய வேண்டுகோள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாளான டிசம்பர் 2 இல் விடுதலை' சந்தாக்களை அளிப்பது குறித்து திராவிடர் கழகத் தலைமையகத்தின் முக்கிய அறிக்கை வருமாறு:
கழகத் தோழர்களே!
தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்னையில் திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் ஆற்றிய அரிய உரையைப் படித் திருப்பீர்கள் (4.11.2018).
பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த முத்திரை உரை அது!
தந்தை பெரியாருக்குப் பின்....
தந்தை பெரியாருக்குப் பின் கழகம் ஆற்றி வரும் தொண்டு - அதன் விளைவுகள் இயக்க அளவில் மிகப்பெரிய வளர்ச்சி - வீச்சு - கட்டுக்கோப்பான அணுகுமுறைகள் - பிரச்சார தடத்தில் பொறித்த கல்வெட்டுகள் - இயக்க வெளியீடுகள்; சிறப்பாக - 4 பக்கங்களாக இருந்த விடுதலை' பல வண்ணத்தில் 8 பக்கம் - இரு இடங்களில் பதிப்பு - நூல்கள் வெளியீட்டில் சாதனை. இத்தியாதி... இத்தியாதி...!
2019-2020 இல் நம் ஓயாப் பணிகள்!
அடுத்து நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்; 2019-2020 ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டங்கள் - பிப்ரவரியில் தஞ்சையில் இரு நாள் மாநாடுகள் (கழகத்தின் பவள விழா ஆண்டை யொட்டி) சமூகநீதி என்னும் சம்பூகனின் கழுத்தை வெட்டும் கிரீமிலேயர்'' என்னும் கொடுவாளை எதிர்த்து டில்லியில் முக்கிய கருத்தரங்கம் (பிப்ரவரியில்) - மார்ச்சில் அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டுத் தொடக்கம்.
தந்தை பெரியார் 141 ஆம் பிறந்த நாள் ஆண்டில் 2019 - செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா - சிகாகோவில் பெரியார் பன்னாட்டு மாநாடு. (2017 இல் ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் மாநாடு நடைபெற்றது).
அடேயப்பா! அடுக்கடுக்காக ஆசிரியர் அவர்கள் இளைஞர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் திடீரென்று இடையில் வந்து ஆற் றொழுக்காக கருத்துகளையும், திட்டங்களையும் அள்ளித் தந்து விடை பெற்றுச் சென்றார்.
தலைவர் சொன்ன - அறிவித்த முக்கியமான ஒன்று....
முக்கியமான அறிவிப்பு ஒன்று! எனக்குப் பிறந்த நாள் என்ற பெயரில் எந்த நிகழ்ச்சியும் வேண்டவே வேண்டாம். அதற்குப் பதிலாக அந்நாளில் (டிசம்பர் 2 இல் - இவ்வாண்டு 86 ஆம் ஆண்டு பிறந்த நாள்) விடுதலை' சந்தாக்களை வாரி வழங்குங்கள் - இதில் உங்களிடையே போட்டிகள்-ஆரோக்கியமாக நடக்கட்டும்- விடுதலை' வளர்ந்தால்தான் நாட்டுக்கே விடுதலை'' என்று ஓர் அன்பு வேண்டுகோளை கழகத் தோழர்களிடம் முன் வைத்துள்ளார். (சென்னை உரையைக் கத்தரித்து வைத்துக்கொள்ள வேண் டும் - முடிந்தால், கண்ணாடி சட்டம் போட்டு வைத்துக் கொள்ளலாம்.)
தமக்கென்று கேட்காத தலைவர் கேட்கிறார்!
எதையும் தமக்கென்று கேட்காத உன்னதத் தலைவர் - விடுதலை'யைத் தன் உயிராக, உதிர மாக வரித்துக்கொண்ட தலைவர் 56 ஆண்டுகால அதன் ஆசிரியர் (உலகக் கின்னஸ் சாதனை இது) உரிமையோடு கேட்கிறார் விடுதலை' சந்தாக் களைத் தாரீர் என்று. அதுதான் என் ஆயுள் நீட்சிக்கான அருமருந்து என்று சொன்ன பிறகும்கூட, நாம் வாளாயிருக்க முடியுமா?
வேறு பணிதான் நமக்குண்டோ?
இப்பணி முடிப்பதல்லாமல் வேறு பணி ஒன்று தான் நமக்கு உண்டா? 50 ஆண்டு விடுதலை' ஆசிரியர் என்ற காலக் கல்வெட்டுக் கணக்கில் 50 ஆயிரம் சந்தாக்களைத் திரட்டி அளித்த அரிமாக்கள், கருஞ்சட்டைச் சேனையன்றோ!
இடையில் ஒரு மாதம் இல்லை என்றாலும், இன்றே கணக்கைத் தொடங்கினால் நம்மால் சாதித்துக் காட்ட முடியும்.
உரிமையுடன் தமிழன் வீட்டைத் தட்டுவோம்!
உரிமையோடு ஒவ்வொரு தமிழன் வீட்டுக் கதவையும் தட்டிக் கேளுங்கள் - கேட்போம்! விடுதலை'தானே நமக்கு மான வாழ்வுக் கான பிரச்சாரப் பீரங்கி - அதன் உழைப்பால் கிடைத்ததுதானே சமூகநீதி - அதன் விளைச்சல் தானே நம் மக்களின் படிப்பும் - உத்தியோக நாற்காலிகளும்! நம் பெண்களின் உரிமைக்காக விடுதலை'யின் உழைப்புதான் கொஞ்சமா நஞ்சமா?
அரசியலுக்குள் நுழையாவிட்டாலும் எந்த மாதிரியான அரசியல் நாட்டுக்குத் தேவை என்ற உரைப்பாயிரம் அளித்தது விடுதலை' அல்லவா!
ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்ற உணர்வை ஊட்டி வந்தது - வருவதும் - வற்றாக் கருத்து நீரூற்றான - விவேகமும், வீரமும் இரு கண்களாக ஒளிரும் விடுதலை' என்னும் போர்வாள் அல்லவா! - ஆசான் அல்லவா!
தமிழர் வீடு - கருப்புச் சட்டைக்காரனுக்கு அதிக உரிமை உள்ள வீடு!
சகாப்தத் தலைவரான தந்தை பெரியார் நமக்கு அளித்த மாபெரும் கேடயமும், வாளும் அல்லவா விடுதலை!' இதன் அருமையை வீட்டுக்கு வீடு எடுத்துச் செ()ல்லுவோம் - அனைத்துத் தரப்பினரும் விடுதலை'யால் தாக்கம் பெற்றவர்கள்தான். தப்பாமல் கேட்டால் தட்டாமல் சந்தாவை தரத்தான் செய்வார்கள்.
தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் விடுதலை' என்று நமது தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொல்லவில்லையா? தமிழரின் ஒவ்வொரு வீடும் மற்ற எவரையும்விட கருப்புச் சட்டைக்காரனுக்குத்தான் அதிக உரிமை - சொந்தமும்கூட!
அரசியல்வாதிகளை அணுகுங்கள் - வணிகர் களைக் கேளுங்கள் - அரசுப் பணியாளர்களின் வீட்டுக் கதவைத் தட்டுங்கள் - கலைஞர்களைக் கேளுங்கள் - அனைத்துத் துறையினரிடமும் விதிவிலக்கின்றி விடுதலை'யின் வீர தீரத்தைப் பற்றிப் பறை சாற்றுங்கள்!
சந்தா அளிக்காவிட்டாலும் பரவாயில்லை - விடுதலை' என்ற ஏட்டைப்பற்றி கொஞ்ச மாவது தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் அல்லவா!
அமைப்புச் செயலாளர்களின் பணி முக்கிய பங்கு
கழக அமைப்புச் செயலாளர்கள், மண்டலத் தலைவர்கள், மண்டல செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் ஆகியோரின் ஒருங்கிணைப்பு இதில் மிகவும் முக்கியம். உடனடியாக இந்தப் பொறுப்பாளர்களின் சந்திப்பு நடக்கவேண்டும். சம்பந்தப்பட்ட அவரவர்களின் மாவட்டங்களில் பம்பரம்போல சுற்றிச் சுழன்று விடுதலை' சந்தா திரட்டும் பணியில் புது முறுக்கும், வேகமும், திருப்பமும் நடக்கட்டும்! நடக்கட்டும்!!
அமைப்புச் செயலாளர்கள் ஒவ்வொரு நாளும் திரட்டிய சந்தாக்கள்பற்றிய தொடர்புகள் இருக்கட்டும்.
மாநிலப் பொறுப்பாளர்கள் - தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அவரவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட மாவட்டங்களோடு தொடர்பு கொண்டு இந்தப் பணியில் விஞ்ஞான கண் ணோட்டத்துடனான சங்கிலி இணைப்புடன் போர்க் காலப் பணியாக நடத்திட உந்து சக்தியாக இருப்பது நல்லது!
தலைவர் ஒருமுறைதான் சொல்லவேண்டும்
இப்பணியில் இதற்குமேல் நமது தலைவர் ஆசிரியர் எதையும் சொல்லவேண்டும் என்று நாம் எதிர்ப்பார்க்கக்கூடாது. ஒரு நல்ல இயக்கம்; கட்டுக்கோப்பான ஓர் இயக்கத்தின் இலக்கணம் என்பது - தலைவர் தொடங்கிய அந்தப் புள்ளியினை மய்யமாகக் கொண்டு சுற்றிச்சுழன்று துல்லியமாகப் பணிகளை முடித்துக் காட்டுவதுதான் - கொடுப்பதுதான்!
நம்மால் முடியாததும் உண்டோ!
நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்
என்பது சொற்களின் கோர்வையல்ல - செய லாக்கத்தின் மூலமும், உரையுமாகும் என்பதைச் செயலில் காட்டுவோம்! காட்டுவோம்!
கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை
5.11.2018