ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம்!
புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார வீழ்ச்சி குறித்து தலை வர்களும், பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டிக் கண்டித்துள்ளனர். கள்ளநோட்டு மற்றும் கருப்பு பண புழக்கத்தை கட்டுப் படுத்தப் போவதாகக் குறிப்பிட்டு, மத்திய அரசு கடந்த 2016 ஆ-ம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி, உயர்மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை (ரூ.1,000, ரூ.500) தடை செய்தது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை யும் ஏற்படுத்திய இந்த நடவடிக்கைக்கு காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்பொழுது அது குறித்து கண்டனக்கணைகள் வெளியாகியுள்ளன.
மன்மோகன் சிங் கருத்து
பணமதிப்பு நீக்க நடவடிக் கையை தொடக்கம் முதலே கண் டித்து வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இதையொட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியிருந் ததாவது:-
மோடி தலைமையிலான மத்திய அரசு கெட்ட வாய்ப்பாக, தவறான நோக்கமுடைய பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அமல்படுத்தி இன்றுடன் (நேற்று) 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த பேரழி வின் தாக்கம் இன்றும் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை வயது, பாலினம், மதம், தொழில் மற்றும் இனம் என எந்தவித பாகுபாடுமின்றி ஒவ்வொரு தனிமனிதரையும் பாதித்தது. ஒவ்வொரு சோகத்துக்கும் காலமே சிறந்த மருந்து என அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை பொறுத்தவரை, அது ஏற்படுத்திய காயங்களும், வடுக்களும் இன்னும் ஆறவில்லை.
நாட்டின் பொருளாதாரத்தின் மூலைக்கல்லாக விளங் கும் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. பொருளாதாரம் தொடர்ந்து தத் தளித்து வருவதால் இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.
எனவே மரபுகளை கடந்த, குறுகிய கால பொருளா தார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது கவன மாக இருக்க வேண்டும். ஏனெனில் அது நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிச்சந்தையில் அதிக நிலைத் தன்மையற்ற நிலையை ஏற்படுத்தி விடும். எனவே நாட்டின் பொருளாதார கொள்கைகளையில் நிலைத்தன்மை மற்றும் தெளிவை மீட்டு எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
பொருளாதாரத்தில் ஏற்படும் தீய விளைவுகள் எப்படி நீண்டகாலத்துக்கு நாட்டை பாதிக்கும்? என்பதை நினைத்து பார்க்க வேண்டிய நாள் இது. அத்துடன் பொருளாதார கொள்கைகளை வகுப்பதில் சிந்தனையும், கவனமும் நிச்சயம் தேவை என்பதை உணர வேண்டிய தருணமும் இது.
இவ்வாறு மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி
காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, பணமதிப்பு நீக்க நட வடிக்கை, பல லட்சம் பேரின் வாழ்க்கையை அழித்த தற்கொலை தாக்குதல் என்று குற்றம் சாட்டி யுள்ளார். பணமதிப்பு நீக்க நடவ டிக்கை பல லட்சம் பேரின் வாழ்க்கையையும், ஆயிரக் கணக்கான சிறு தொழில்களையும் அழித்த தற்கொலை தாக்குதலாகும். மோசமாக வகுக் கப்பட்டு தவறாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார கொள்கையாகும். நன்கு திட்டமிடப்பட்ட ஒரு குற்ற வியல் பொருளாதார ஊழல் ஆகும். இதுதொடர்பான முழு உண்மைகள் இன்னும் வெளியாகவில்லை. அது வெளியாகும்வரை இந்திய மக்கள் ஓய மாட்டார்கள். அரசு எவ்வளவுதான் மறைத்தாலும் நாடு கண்டுபிடிக்கும். தகுதியற்ற நிதியமைச்சர் உள்ளிட்டவர்கள், இந்த குற்றவியல் கொள்கைக்கு முட்டுக்கொடுக்கும் வேலை யில் இறங்கி உள்ளனர். பணமதிப்பு நீக்கத்தின் நோக்கங்கள் எதுவுமே நிறைவேறவில்லை. வெறும் பேரழிவாகவே முடிந்து விட்டதாக உலகம் முழுவதும் உள்ள பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்ட நாள், ஒரு மோசமான நாளாக இந்திய வரலாற்றில் எப்போதும் நினைவில் நிற்கும் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டா லின் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
நாட்டு மக்கள் அனைவரை யும்நடுத்தெருவுக்குதள்ளிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டு இன்று!
வங்கிகளில் முடிவே இல்லாத நீண்ட வரிசையில் மக்களை நிற்க வைத்து அலைக்கழித்ததோடு, வங்கி வாசலிலேயே அப்பாவி மக்கள் பலர் தங்கள் உயிரை இழந்த கொடுமையை இந்த நாடு மறவாது. அதுமட்டுமா, இலட்சக்கணக்கில் வேலை வாய்ப்பு பறிபோனதோடு, சிறு - குறு நிறுவனங்கள் மூடு விழா கண்டு, நாட்டின் பொருளாதாரமே பின்னோக்கி தள்ளப்பட்டது!
நாட்டின் அழிவுக்கு வழிவகுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு தனி மனிதரால் நிகழ்த்தப்பட்ட பேரிடர்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவிக்கையில், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நல்ல யோசனை அல்ல என்று அரசுக்கு நான் தெளிவு படுத்தினேன். புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 87 சதவீத நோட்டுகளை மதிப்பிழக்க செய்தபோது, அதை நன்றாக திட்டமிடாமல் செயல்படுத்தி விட்டனர் என்று கூறினார்.
பன்னாட்டு நிதியம் கீதா கோபிநாத்
சர்வதேச நிதியத்தின் (அய்.எம்.எப்.) தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள கீதா கோபிநாத் கடந்த ஆண்டு ஒரு பேட்டியில் ரகுராம் ராஜனின் கருத்தை எதிரொலித்துள்ளார். அப்போது அவர், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு நல்ல யோசனை என்று எந்தவொரு பெரும் பொருளாதார நிபுணரும் கருதுவார் என நான் நினைக்கவில்லை. இந்தியா போன்ற ஒரு நாட்டுக்கு இது ஏற்றதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென்
நோபல் பரிசு பெற்ற பொரு ளாதார நிபுணர் அமர்த் தியா சென், சரியாக வழிகாட்டாமல், ஜனநாயக நெறி முறைகளைப் பின்பற்றாமல் ஒரு தலைபட்சமாக ஏவிய ஏவுகணை இது என சாடி உள்ளார்.
ரிசர்வ் வங்கி அறிக்கை
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக் கத்தை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, மக்களிடம் பணப்புழக்கத்தை (ரொக்க பரிமாற்றம்) குறைப்பதற்காகவும் பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது. ஆனால் இந்த நோக்கம் நிறைவேறவில்லை என்பதை ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.
கடந்த 2016ஆ-ம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதே ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி நாட்டில் இருந்த பணப்புழக்கத்தின் மதிப்பு ரூ.17.90 லட்சம் கோடி ஆகும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி நிலவரப்படி இந்த மதிப்பு ரூ.19.60 லட்சம் கோடியாக இருந்தது. அந்தவகையில் 9.5 சதவீதம் உயர்வைத்தான் அடைந்து இருக்கிறது.
இதைப்போல பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏ.டி.எம். மூலம் பணம் எடுப்பது குறைந்து, டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதிலும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.2.54 லட்சம் கோடியை மக்கள் ஏ.டி.எம்.கள் மூலம் எடுத்துள்ளனர். ஆனால் கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரூ.2.75 லட்சம் கோடி ஏ.டி.எம். மூலம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் 8 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.
அதேநேரம் செல்லிடப்பேசி மூலமான பணப் பரிமாற்றம் மட்டும் அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது. கடந்த 2016ஆ-ம் ஆண்டு அக்டோபரில் ரூ.1.13 லட்சம் கோடியாக இருந்த செல்போன் பணப் பரிமாற்றம், கடந்த ஆகஸ்டு மாதத்தில் ரூ.2.06 லட்சம் கோடியாக அதிகரித்து இருக்கிறது.
மேற்கண்ட தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சித் தகவல்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார சூழலை ஆய்வு செய்யும் சி எம் அய் இ (சிவிமிணி) என்ற பொருளாதார கண்காணிப்பு நிறுவனம் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் அக்டோபர் மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 6.9 சதவிகிதமாக உயர்ந் துள்ளது. 2018 ஆம் ஆண்டு அக்டோபரில், மக்கள் தொகை யில் 42.8 சதவீதத்தினர் மட்டுமே வேலை செய்ய தயாராக இருப்பதாக சி.எம்.அய்.இ. ஆய்வில் கண்டறிந்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு உழைக்கத் தயாராக இருப்பவர்களின் விகிதமானது, குறைந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பணமதிபிழப்பு நடைபெறு வதற்கு முன்னர், தொழிலாளர் பங் களிப்பு 47 சதவீதம் முதல் 48 சதவிகிதத்தில் இருந்தது, ஆனால் அதற்குப் பிறகு, இது வீழ்ச்சியடைந்து உள்ளதாக ஆய்வின்படி குறிப்பிடுகிறது.
வருவாயை உருவாக்குவதற்கு முறையான அல்லது முறையற்ற வழியில் வேலை செய்யும் மொத்த வயதுவந்தோரின் அளவு, வேலைவாய்ப்பு விகிதத்தை பொறுத்தவரை, 39.5 சதவீதத்தினர் மட்டுமே. கடந்த 2017-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 39.7 கோடி யாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 40.7 கோடி அதிகரித்து உள்ளது. அதாவது வேலைவாய்ப்பின்மை 2.4 சதவீதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 2017-ஆம் ஆண்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை 2.16 கோடியாக இருந்தது, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2.95 கோடியாக அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 1.2 கோடி மக்கள் தொழிலாளர்களாக மாறுகின்றனர். ஆனால் அதற்கு ஏற்றவாறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை என்பதாலேயே வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கிறது.