திருச்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்
திருச்சி, டிச.4 சட்டப்படி, நீதிமன்றத் தீர்ப்புப்படி தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரைத் தடுத்தால், பி.ஜே.பி. ஆட்சியை, மோடி பிரதமர் ஆகும் வாய்ப்பை நாங்கள் தடுப்போம் - தமிழ்நாட்டை வஞ்சித்து, பிரிவினை கேட்கும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூபாய் 5,912 கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் அம்மாநில அரசு திட்டமிட்டு, அதற்கான ஆரம்ப கட்ட ஆய்வினை நடத்திட மத்திய அரசின் நீர்வளத்துறை அனுமதியளித்துள்ளது. மேகதாதுவின் அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட ஆய்வுக்கு அனுமதியளித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று (4.12.2018) நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
கலைஞர் மறையவில்லை, இதோ ரத்தத்தில் உறைந்திருக்கிறார்
மிகுந்த எழுச்சியோடு திருச்சியில் பொங்கும் கடல் இல்லை என்கிற குறைபாட்டை நிவர்த்தித்துக் கொண்டிருக்கக் கூடிய மக்கள் கடல் இங்கே திரண்டிருக்கக்கூடிய ஒரு அற்புதமான பார் சிறுத்ததோ படை பெருத்ததோ என்ற அளவில், மூன்றே நாள்களில் ஒரு தலைவர் அழைப்பு விடுத்தால் தமிழகம் திரளும் என்ற உண்மையை நிரூபித்துக்கொண்டு- தண்டவாளத்தை தலையை வைத்த எங்கள் தலைவர், தந்தை பெரியாரின் குருகுலத்து மாணவர், பேரறிஞர் அண்ணாவின் உற்ற தொண்டர், தோழர் இவர்கள் இருவரையும் இணைத்த நம்முடைய மாபெரும் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே என்கிற குறைபாட்டை அறவே நீக்கி, கலைஞர் மறையவில்லை, இதோ ரத்தத்தில் உறைந்திருக்கிறார் என்று காட்டக் கூடிய ஆற்றல் படைத்த எங்கள் தளபதி, இன்றைய தளபதி இன்றைய எதிர்க்கட்சித் தலைவர், நாளைய உறுதியான முதலமைச்சர்.
சரியான நேரத்தில், சரியான போராட்டம்!
இளைஞராக இருந்து வயது ஏற ஏற முதுமையல்ல, முதிர்ச்சி பெற்ற இளைஞராக மாறிக் கொண்டிருக்கின்ற தலை வர், சரியான நேரத்தில், சரியான அழைப்பு விடுத்து, சரியான வர்களை அழைத்து, இணைத்து சரியான போராட்டத்தை அறிவித்திருக்கக்கூடிய, முழக்கங்களை எழுப்பியிருக்கக் கூடிய இந்த அற்புதமான நிகழ்ச்சி.
ஏராளமானவர்கள் சொல்லிவிட்டார்கள். நேரம் மிகக் குறுகியது; காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது என்று கவிஞர்கள் சொன்னார்கள். பொன்னைக்கூட வாங்கிவிடலாம், காலத்தை வாங்க முடியாது.
ஆனால், இன்றைக்கு நீங்கள் திரண்டிருப்பது இருக்கிறதே, இது வெறும் ஆர்ப்பாட்டம் அல்ல; போர்ப்பாட்டம்! போர்ப்பாட்டம்!! போர்ப்பாட்டம்!!!
ஒரு விசித்திரமான அமைப்பு; ஆளுகின்றவர்கள் இந்த அரசியல் சட்டத்தை உடைக்கிறார்கள், மிதிக்கிறார்கள். நாங்கள் ஒரு காலத்தில் எரித்தோம், ஒரே ஒரு தடவை. ஆனால், அன்றாடம் இவர்கள் மிதிக்கிறார்கள், அன்றாடம் இவர்கள் எரித்துக் கொண்டிருக்கிறார்கள், செயல்பாட்டின் மூலமாக, இது நியாயம்தானா என்று கேட்கின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம்.
நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், கருநாடகம் அல்லது தமிழகம் புதிய அணை ஏதும் கட்டக்கூடாது என்பது உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு.
ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்பினையே மதிக்க பிரதமர் மோடி தயாராக இல்லை; பா.ஜ.க. தயாராக இல்லை;
தமிழகத்தில் இருக்கின்ற காட்சி - ஆட்சியல்ல!
அதை எதிர்த்துக் கேட்க, முதுகெலும்போடு செயல்பட தமிழகத்தில் இருக்கின்ற காட்சி - ஆட்சியல்ல; இந்த பொம்மலாட்ட அரசு, டில்லி இழுக்க இழுக்க ஆடிக்கொண்டி ருக்கிறதே - அந்த பொம்மலாட்ட அரசு தீர்மானம் போடுவதோடு நிறுத்திவிடுகிறார்களே தவிர, கேட்டது கிடைக்கவில்லையே என்று, என்ன பதில் சொல்கின்றீர்கள் என்று ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதற்குக்கூட லாயக்கற்றவர்களாக இருக்கிறார்கள்.
டெல்டா மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கஜா புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு மத்திய அரசிடம் 15,000 கோடி ரூபாய் கேட்கிறது. ஆனால், வெறும் 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்குகிறது; அதுவும் இரண்டு தவணையாக என்றால், யானைப் பசிக்கு சோளப்பொறி என்பார்களே, அதுபோல, பிச்சை போடுவதுபோல, மத்திய அரசு போடுகிறது.
நீங்கள் என்ன எங்களுக்குப் பிச்சை போடுவது; நாங்கள் கொடுக்கின்ற வரிப் பணம் அல்லவா!
நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் தளபதி அவர்கள், எதிர்க்கட்சியினுடைய கடமையை செய்தார்.
25 ஆயிரம் ரூபாய் கோடி கொடுத்தால்கூட, நிவாரண நிதிக்குப் போதாது என்று சொன்னார்கள்.
மோடியின் மனதின் குரல், மங்கி பாத்' அதில்கூட கஜா புயல் பற்றி ஒரு வார்த்தையைக்கூட சொல்லாத மோடி அவர்களே, உங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
இங்கே அதைத்தான் அழகாக முழக்கமிட்டார்கள். இந்த அரங்கமே முழக்கமிட்டது.
அதிலே மிக முக்கியமான அர்த்தமுள்ள ஒரு கேள்வி, விடை கிடைக்கவேண்டிய கேள்வி -
நரேந்திர மோடியே! நரேந்திர மோடியே!
நீங்கள் இந்தியாவிற்குப் பிரதமரா?
இல்லை கருநாடகத்திற்கு முதல்வரா?
என்று கேட்டார்கள்.
கருநாடகத்திலும் முதல்வராக வர முடியாது!
அதனால்தான் இப்படி ஒரு தூண்டிலை, கருநாடகத்தவர் களுக்குக் காட்டினால், மீண்டும் அவர்களுடைய காவி ஆட்சி வரும் என்று கணக்குப் போட்டு செய்கிறார்கள்.
தடுப்போம் தடுப்போம்
மேகதாதுவை தடுப்போம்
காப்போம் காப்போம்
அரசியல் சட்டத்தைக் காப்போம்
உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காப்போம்
நீதியைக் காப்போம்
உரிமையைக் காப்போம்
என்று ஒலி முழக்கம் எழுப்பினார்கள்.
தளபதி குரல் கொடுத்தார், நாம் அத்துணை பேரும் இணைந்து குரல் கொடுத்தோம். இந்தக் கூட்டமே குரல் கொடுத்தது, டில்லியின் செவிட்டுக் காதில் அறைவதுபோல, குரல் கொடுத்தோம்.
தமிழ்நாட்டை தமிழ் மக்களை அழிக்கவேண்டும், புறக்கணிக்கவேண்டும்!
காவிரியைத் தடுத்தால், மேகதாதுவின் அணையின்மூலமாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை நீங்கள் தூக்கி எறிந்து, காவிரி நதிநீர் ஆணையத்தின் தீர்ப்பைப்பற்றி கவலைப்படா மல், நீங்களே ஒரு முடிவெடுத்து, தமிழ்நாட்டை வஞ்சிக்கவேண் டும்; தமிழ்நாட்டில், நம்மால் காலூன்ற முடியாது; நாம் கட்சிகளோடு போட்டி போட முடியாது - வெறும் நோட்டா வோடுதான் போட்டி போட முடியும் என்பதினால், எப்படியா வது தமிழ்நாட்டை தமிழ் மக்களை அழிக்கவேண்டும், புறக்கணிக்கவேண்டும் என்கிற காரணத்தினால், இங்கே சொன்னார்கள்,
காவிரியைத் தடுத்தால்,
நாங்கள் மோடியை வரவிடாமல் தடுப்போம் என்று சொன்னார்கள்.
மீண்டும் மோடியை பிரதமராக வரவிடாமல் தடுப்போம்!
நண்பர்களே, வர விடாமல் தடுப்போம் என்று சொன்னால், விமானத்தில் வந்து, அய்.அய்.டி. சுவரை இடித்து, அதற்குள் பாய்ந்து உள்ளே போன பழைய கதைகூட அல்ல; இனிமேல் நீங்கள் விமானத்தில்கூட தமிழ்நாட்டிற்கு வர முடியாது; காரணம், வரவிடாமல் தடுப்போம் என்றால், அதற்குக் குறுகிய பொருள் அல்ல; விரிந்த பொருள். மீண்டும் நீங்கள் பிரதமராக வரவிடாமல் தடுப்போம்.
தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எங்களுக்குத் தலைவர். காரணம் கலைஞரால் அடையாளப்படுத்தப்பட்டு, கலைஞர் பணியை செய்வதற்கு மக்களால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறார். அவருடைய தலைமையில் திரண்டிருக்கின்ற இந்த நேரத்தில், நீங்கள் பிரதமராகவும் வர முடியாது. வடநாட்டிலும் ஆடிக்கொண்டிருக்கிறது. தெலங்கானாவில்கூட நீங்கள் வர முடியாது; எங்கும் வர முடியாது; ஒவ்வொரு பிரச்சினைக்கும் போராட்டம்; நீட்டுக்குப் போராட்டம்; இரண்டு ஆண்டு காலமாக ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கொண்டிருக்கிறது தமிழக அரசின் மசோதா.
தனித்தனிக் களங்களை விட்டுவிட்டு, ஒரே களத்தில் போராடுவோம்
அதுபோலவே, மற்ற மற்ற உரிமைகள்; எத்தனைப் போராட்டங்கள். தனித்தனி களங்கள் தேவையில்லை நண்பர் களே, தனித்தனிக் களங்களை விட்டுவிட்டு, ஒரே களத்தில் போராடுவோம்; ஒரே போர்தான்; ஒரே முடிவுதான்; ஒரே அம்சத் திட்டம்தான். மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் ஆட்சி கோட்டையில் மலருவதற்கு, அத்துணைப் பேரும் இந்த அணியில் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இங்கே வராதவர் களும் நம்முடைய அணியில் இருக்கிறார்கள், ஆக அத்து ணைப் பேரும் ஒன்றாக நின்று போராடுவோம்.
உதய சூரியன் எங்கே இருக்கிறது என்று பார்த்து அதில் முத்திரை இடுங்கள்!
பழைய காலத்தில் சொல்வார்கள், 202 வியாதிகளுக்கும் ஒரே மூலிகை என்பார்கள். அந்த ஒரே மூலிகை இதுதான்.- ஒரே மூலிகை உதயசூரியன்தான். உதய சூரியன் எங்கே இருக்கிறது என்று பார்த்து அதில் முத்திரை இடுவது.
அதேபோன்று, உதயசூரியன் யார் யாரை அடையாளம் காட்டுகிறதோ, கூட்டணியில் அங்கே முத்திரையிடுவதுதான். தீர்ந்துவிட்டது பிரச்சினை; மோடிகள் வர முடியாது.
இல்லையானால், மீண்டும் மீண்டும் இப்படி போராட்டத் தினைத்தான் நடத்திக் கொண்டிருக்கவேண்டும்.
அண்ணா சொன்னார்
இளைஞர்களே, அப்போது பிறக்காத இளைஞர்களே, எங்களின் துடிப்பு மிகுந்த தோழர்களே, நீங்கள் புரிந்துகொள் ளுங்கள். தந்தை பெரியாரின் தலைமகன் அறிஞர் அண்ணா சொன் னார்; நாங்கள் பிரிவினையை இப்போது கைவிடுகிறோம்; ஆனால், பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன'' என்று அண்ணா அவர்கள் சொன்னார்.
அதை நாங்கள் மறந்தாலும், டில்லி நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது; டில்லி குத்திக்கொண்டே இருக்கிறது. இப்போது சொல்கிறோம், ஒன்றே ஒன்று
எச்சரிக்கையோடு, அடிப்படையோடு கவனத்தோடு சொல்கிறேன், இங்கே இருக்கிற தலைவர்கள் பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கும், இப்போது நான் சொல்கின்ற கருத்துக்கும் உடன்பாடு இருக்காது.
தமிழ்நாடு தனி நாடாகும்
இந்த நாடு, தமிழ்நாடு தனி நாடாகும். நாங்கள் தனி நாடு கேட்கவில்லை; நாங்கள் பிரிவினை கேட்கவில்லை. நீங்கள் எங்களைப் பிரிந்து போங்கள் என்று பிரித்து விடுகிறீர்கள்; எங்களை தனித்து விடுகிறீர்கள். எனவே, நீங்கள் அங்கே போய்விட்டால், நீங்கள் இனிமேல் அதைத்தான் விரும்புகிறீர் கள் என்று பொருள்.
எனவே, மேகதாதுவிற்கு நீங்கள் அனுமதி கொடுங்கள்; நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவோம் என்று சொல்லுங்கள்; எங்களுக்கு நிதி கொடுக்காமல், எங்கள் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் சாகட்டும்; பண மதிப் பிழப்பு என்று சொல்லி பொருளாதாரத்தை குவித்துக் கொள்ளுங்கள்.
நாங்கள் சிறைச்சாலைக்குச் சென்றால், அதைவிட எங்களுக்குப் பெரிய வாய்ப்பு கிடையாது
ஆனால், அதனுடைய விளைவு எங்கே போய் நிற்கும் என்றால், நிச்சயமாக சொல்கிறோம் தமிழ்நாடு தனி நாடாவதைத் தவிர வேறு வழி கிடையாது என்ற நிலைக்குத்தான் தள்ளப்படும். இது திராவிடர் கழகத்தினுடைய கருத்து. மற்ற தோழர்களுடைய கருத்து என்று யாரும் சொல்லக்கூடாது. இதற்காக நாங்கள் சிறைச்சாலைக்குச் சென்றால், அதைவிட எங்களுக்குப் பெரிய வாய்ப்பு வேறு கிடையாது. பிரச்சினையை சீக்கிரம் தீர்க்கும்.
எனவே, நடவடிக்கையை விரைவாக எடுங்கள். எந்த நடவடிக்கை என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
நீங்கள் தடுக்கப் போகிறீர்களா அல்லது இதை விரும்பு கிறீர்களா?
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
திருச்சியில் போராட்டம்
கருநாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூபாய் 5,912 கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான பணியில் அம்மாநில அரசு திட்ட மிட்டு, அதற்கான ஆரம்பகட்ட ஆய்வினை நடத்திட மத்திய அரசின் நீர்வளத்துறை அனுமதியளித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட ஆய்வுக்கு அனுமதியளித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து, திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிடர் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்,மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக் கட்சி, மனிதநேயமக்கள் கட்சி உள்ளிட்ட தோழமைக்கட்சிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப் பாட்டம் இன்று (4.12.2018) காலை திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.
திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, காங்கிரசு கட்சித் தலைவர் சு.திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய முசுலீம் லீக் கட்சி தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி னார்கள். ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை மேனாள் அமைச்சர் கே.என்.நேரு சிறப்பாக செய்திருந்தார்.
அனைத்துக்கட்சிகளின் பொறுப்பாளர்கள் கட்சிக்கொடி களுடன் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.