Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

கலைஞர் சிலை: கடந்து வந்த பாதைகள் எத்தகையது?

$
0
0

அண்ணா அறிவாலயத்தில் இன்று கலைஞர் சிலை திறப்பு - சமூகநீதி - மதச்சார்பற்ற சக்திகள் மேலும் பலப்படுவதற்கான அழைப்பே!

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்கு இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் சிலை திறக்கப்படுவது - வெறும் விழா மட்டுமல்ல - மதவாத பிற்போக்குச் சக்திகளை வீழ்த்திட - முற்போக்குச் சக்திகளை ஒருங்கிணைக்கும் அழைப்புக் கொடுக்கும் முக்கிய விழா  என்று   திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய  அறிக்கை  வருமாறு:

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர் களுக்குச் சிலை திறக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் 1968 ஆம் ஆண்டில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். (விடுதலை', 28.5.1968, 29.5.1968).அந்த அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டிருப்ப தாவது:

ஆணையிட்ட நம் தலைவர் பெரியார் அழைக்கிறார்!

"பொது மக்களுக்காக, பொதுத் தொண்டு செய்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல், பொது மக்கள் பாராட்டுதலுக்குரிய எந்தக் காரியத்தை யார் செய்தாலும் அவர்களைப் பாராட்ட, பெருமைப்படுத்த யோக்கியமான பொதுமக்கள் முயற்சிப்பது இயற்கையேயாகும். அதிலும் கலைஞர் கருணாநிதி அவர்கள் விஷயத்தில் பாராட்டத்தகுந்த பல தன்மைகள் இருக்கின்றன.

கலைஞர் அவர்கள் தனது பள்ளி மாணவப் பருவத்திலிருந்து இன்றைக்கு சுமார் 45 வயது வரை 25-30 ஆண்டுகளாக பொதுத் தொண்டு செய்து வருகிறார். தியாகிகள் அடையாளமாக சிறை செல்லும் தன்மையில் பலமுறை சிறை சென்றிருக்கிறார். இவ்வளவு மாத்திரமல்லாமல் ஒரு கட்சியையே ஆரம்பித்து, ஆரம்பித்த முக்கியஸ்தர்களில் ஒருவராய் இருந்து, அந்தக் கட்சியை நாடாளும் ஸ்தாபனமாக்கி, இன்று மகாவன்மை பொருந்திய காங்கிரசை எதிர்த்து தோல்வியடையச் செய்து வெற்றிக்கொடி கண்ட ஒரு முக்கியஸ்தருக்கு ஒரு சிலை, பயனடைந்த பொதுமக்கள் அல்லது அக்கட்சியார், அவ்வரசி யலில் பற்றுள்ளவர்கள் சிலை வைக்க முன் வந்தால் அது விவாதத்துக்குரியதா? சிலை வைப்பது அவசியமல்லவா?

இனி தமிழ் நாட்டில் நூற்றுக்கணக்கான சிலைகள் தோன்றலாம், அதுவும் பார்ப்பனர் நெஞ்சம் வெடித்துவிடும் அளவுக்குத் தோன்ற லாம். இந்த நிலையில் பார்ப்பன பொறாமைக்குப் பயந்து எனக்குச் சிலை வேண்டாம்' என்று சொன்னால், அது பார்ப்பனருடன் சேர்ந்து கொண்டு அல்லது பார்ப்பனருக்குப் பயந்து தமிழர் பெருமையைக் குலைக்க பங்கு கொள் ளுவதேயாகும்.

எனவே கலைஞருக்குச் சிலை வேண்டிய தில்லை என்றிருந்தால் எனக்கு வேண்டாம், நான் விரும்பவில்லை என்றுசொல்லி விட்டுப் பேசாமல்  இருக்கலாமே ஒழிய அதைத் தடுப்பது அறிவுடைமையாகாது; ஏனென்றால் அந்த சிலை அவரது சொந்த விஷயமல்ல, அது தமிழனைப் பாராட்டுவதும், தமிழ் மக்களிடையில் பின் சந்ததிக்கு நினைவூட்டும் அறிகுறியாகும்.

கலைஞர் அறிவில் சிறந்தவர், நிர்வாகத் தில் சிறந்தவர், பொதுத் தொண்டுக்கு தியாகம் செய்ததில் சிறந்தவர், பார்ப்பன  ஆதிக்கத்திலிருந்து ஆட்சியை தமிழர்க்கு ஆக்கித் தந்தவர்.''

- (விடுதலை', 28.5.1968, 29.5.1968)

இவ்வாறு தமிழர் இனப் பாதுகாவலர் தந்தை பெரியார் ஆணையிட்டார். அவர் ஆணைப்படி பணி முடிப்போம்.

1968 இல் மட்டுமல்ல - 1971 ஆம் ஆண்டிலும் அதனை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார் அய்யா. (விடுதலை', 4.8.1971).

மானமிகு கலைஞர் அவர்களுக்குச் சிலை திறந் தாகவேண்டும் என்பதற்கான காரணத்தை தந்தை பெரியார் அவர்களே விளக்கி அறிக்கை வெளியிட்ட பிறகு, அதற்குப் பொழிப்புரை, தெளிவுரை தேவைப் படாததுதானே!

கலைஞருக்குச் சிலை - அய்யாவின் ஆணை

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றதற்காக கலைஞர் அவர்களுக்குச் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில்தான் (14.8.1971). செயற்கரிய சாதனை செய்த கலைஞர் அவர்களுக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்ற கருத்தினை வெளியிட்டார். (விழா மேடையிலேயே வரவேற்புக் குழுவும் அமைக்கப் பட்டது).

அந்த அறிவிப்புக்கான செயலாக்கம்தான் சென்னை அண்ணா சாலையில் மானமிகு கலைஞர் அவர்களுக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் தலைமையில் தவத்திரு குன்றக்குடி அடிகளாரால் திறக்கப்பட்ட முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் சிலை. (21.9.1975).

தடைகளும் உண்டு - தகர்க்கப்பட்டது

திராவிடர் இயக்க வரலாற்றில் எதிர்ப்பு இல்லாம லேயே வெற்றிச் சிகரம் எப்படி கிடைக்கும்?

உயர்நீதிமன்றம் சென்று தடை கோரப்பட்டது. ஆனால், அதற்கு முதல் நாள் இரவே சிலை நிறுவப்பட்ட தால், வழக்கு வந்த வேகத்தில் வேரற்று வீழ்ந்துவிட்டது.

இந்த நேரத்தில், இன்னொன்றையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டவேண்டும்.

கலைஞர் அவர்களுக்குச் சிலை வைக்கவேண்டும் என்று தந்தை பெரியார் முதலில் அறிவித்த அந்தப் பாராட்டுக் கூட்டத்தில், இதனைச் சற்றும் எதிர்பாராத கலைஞர் அவர்கள் (கட்டளையிட்டது தந்தை பெரியார் அல்லவா!) ஓர் அன்பு வேண்டுகோளை வைத்தார்.

கலைஞரின் வேண்டுகோள்!

சென்னையில் தந்தை பெரியார் அவர்களுக்குத் தி.மு.க. சார்பில் சிலை வைக்கப்படும். அந்த சிலை திறக்கப்பட்டதற்குப் பிறகு என் சிலையை நிறுவலாம் என்று கனிவோடு கேட்டுக்கொண்டார். அதன்படி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகில் தந்தை பெரியாரின் அமர்ந்த நிலையில் உள்ள சிலையை தி.மு.க. திறந்தது (17.9.1974).

அதனைத் தொடர்ந்துதான் திராவிடர் கழகத் தலை வர் அன்னை மணியம்மையார் அவர்கள் மானமிகு கலைஞர் அவர்கள் சிலையை நிறுவினார் (21.9.1975).

ஆனால், அந்த சிலை எம்.ஜி.ஆர். மறைந்த நேரத்தில், வீடணர்களால் உடைக்கப்பட்டது. அப்பொழுதுகூட கலைஞர் அவர்கள் என் சிலையை உடைத்த தோழன் என் முதுகில் குத்தாமல், மார்பில்தானே குத்தினான்'' என்ற புறுநானூற்றுத் தாயின் உணர்வை வெளிப்படுத்தியதுண்டு.

மீண்டும் அதே இடத்தில் கலைஞர் சிலையை நிறுவவேண்டும் என்று திராவிடர் கழகம் முயற்சி எடுத்தும், (சிலை தயாராகவே உள்ளது) பல்வேறு காரணங்களால் அது தடைபட்டுக் கொண்டே வந்தது.

கலைஞர் மறைந்த நிலையில், கழகத்தின் அறிவிப்பு

கலைஞர் அவர்கள் மறைந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், அதே இடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் சிலை நிறுவப்படும் என்று அறிக்கை விடுத்தோம் (விடுதலை', 11.8.2018).

அதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டும் வருகின்றன.

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்பு - சொல்லும் செய்தி!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் - தந்தை பெரியாரின் சீடர் என்று சொல்லிக் கொள்வதில் பீடும், பெருமையும் கொள்ளும் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்களின் சிலையை காங்கிரசு தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் திறக்கவிருக்கும் மகத்தான பொன்னாளாகிய இந்நாளில் (16.12.2018) கலைஞர் அவர்களின் சிலை திறப்புத் தொடர்பான பசுமையான தகவல்களை - இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளவே இந்த வரலாறு தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு நாலாஞ்ஜாதி மக்களான சூத்திரர்களுக்காக பாடுபடும் அரசுதான். எங்களை யெல்லாம் ஆளாக்கி உருவாக்கிய தந்தை பெரியார் அவர்களுடைய மொழியில் கூறுகிறேன்: இவ்வரசு நாலாந்தர அரசுதான். பிராமண, வைசிய, சத்திரிய, சூத்திரன் என்ற முறையில் நாலாந்தர அரசைத்தான் நாலாந்தர மக்களின் நலனுக்காகவே நடத்துகிறோம் என இறுமாப்புடனும், பெருமையுடனும், கர்வத்துடனும் கூறிக்கொள்கிறேன்'' என்று தமிழ் நாடு சட்டமன்றத்தில் முதல்வர் கலைஞர் 28.7.1971 அன்று அறிவித்தார்.

இந்த உணர்வு மேலும் தேவைப்படும் காலம் இது.

மதவாத சக்திகள் சமூகநீதிக்கு எதிரான - மதச் சார்பின்மைக்கு எதிரான சக்திகள் - அதிகார பீடத்தில் இருக்கும் இந்தத் தருணத்தில், அதனை வீழ்த்திட அகில இந்திய அளவில் முற்போக்கு சக்திகளுக்கு, ஜனநாயக கட்சிகள், அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குத் தலைமையேற்கும் ஒருவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறப்பது மிகவும் பொருத்தமானதே!

வெறும் சிலை திறப்பு விழா மட்டுமல்ல - இந்திய மக்களுக்கு வெளிப்படுத்தும் நற்செய்தியில் (மெசேஜ்) இதுதான் உள்ளடக்கமாகும்.

சமூகநீதி - மதச்சார்பின்மை சக்திகள் மேலும் ஒன்றிணையட்டும்!

மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயக சக்திகளே ஓரணியில் திரள்வீர்! தீய மதவாத பிற்போக்குச் சக்திகளை வீழ்த்துவோம் வாரீர்! என்பதுதான் அந்த முக்கிய செய்தியாகும்! ஏனெனில், மானமிகு கலைஞர் அவர்கள் அந்தக் கொள்கை உடையவராயிற்றே!

சேலம் - ஆத்தூரில் தந்தை பெரியார் சிலையைத் திறந்து வைத்த மானமிகு கலைஞர் அவர்கள், சிலை என்றால் இன்னொரு பொருள் வில்' என்பதாகும் என்று குறிப்பிட்டாரே! அந்த வில்லாக, அதன் அம்புகளாக கலைஞரின் சிலை திறப்பு அமையும் - அமையட்டும்!

மதவாதம் மடிக!

மனிதநேயம், சமத்துவம் மலர்க!!

 

 

சென்னை                                                                                                                                                                                                                                                                                                                                            தலைவர்

16.12.2018                                                                                                                                                                                                                                                                                                                                திராவிடர் கழகம்


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles