Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

ஓசூரில் டிச.30 இல் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் போராட்டம் அறிவிப்பு 2019 மார்ச் 30, 31 இல் தஞ்சையில் தி.க. மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்

$
0
0

* கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - தந்தை பெரியார் உதவியாளர் தி.மகாலிங்கம் ஆகியோருக்கு இரங்கல்

* தூர்தர்ஷன் - வானொலியில் மாநில செய்திகள் புறக்கணிப்புக்குக் கண்டனம்

* சென்னை அய்.அய்.டி.யில் சைவ - அசைவ உணவுகள் பெயரால் பேதமா?

திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்

திராவிடர் கழக செயற்குழுவில்  புதிய பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீ.குமரேசன் அவர்களுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர். (18.12.2018, சென்னை பெரியார் திடல்).

சென்னை, டிச.18 தஞ்சாவூரில் 2019 மார்ச் 30, 31  ஆகிய இரு நாள்களிலும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள் நடைபெறும் என்றும், டிசம்பர் 30 இல் ஓசூரில் நடைபெறவிருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் போராட்ட அறிவிப்பு உள்ளிட்ட 12 தீர்மானங்கள் இன்று (18.12.2018) சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் 1:

இரங்கல் தீர்மானம்

கஜா புயலால் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது. ஓர் இயக்கத்தில் பெண்ணொருவர் பொருளாளர் என்ற பெருமைக்குரியவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற அறக்கட்டளையின் உறுப்பினரும், விருப்ப ஓய்வு கொடுத்து அரசு பணியிலிருந்து விலகி திராவிடர் கழகப் பணிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட வரும், நீலகிரி மாவட்டத்தில் ஆற்றிய சிறப்பான மருத்துவப் பணியின் காரணமாக மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றவருமான டாக்டர் மானமிகு சு. பிறைநுதல்செல்வி (வயது 72) அவர்களின் எதிர்பாரா மறைவிற்கு (4.12.2018) திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தனது ஆழ்ந்த துயரத்தினை வெளிப்படுத்துவதுடன், அவர்தம் அளப்பரிய தொண்டுக்கு வீர வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள் கிறது. அவர்களின் ஈடு செய்ய இயலாத இழப்பினால் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் அவரது வாழ்விணையர் டாக்டர் கவுதமன் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும், சுற்றத்தாருக்கும், கழகத்தினருக்கும் கழகத் தலைமைச் செயற்குழு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தந்தை பெரியாரின் தனிச் செயலாளராக இருந்து பெரும் பணி ஆற்றியவரும்,  அரசுப் பணியிலிருந்து விலகி தந்தை பெரியாருக்கு உதவுவதே முக்கியம் என்று முடிவெடுத்து, தன்னை அதற்கு ஒப்படைத்துக் கொண்டவரும், திராவிடர் கழக அறக்கட்டளை உறுப்பினரும், திருச்சி பெரியார் தொடக்கப்பள்ளியின் தாளாளரான  தி. மகாலிங்கம் (வயது 89) அவர்கள் மறைவிற்கு தலைமைச் செயற்குழு தனது ஆழ்ந்த துயரத்தினை தெரிவிப்பதுடன், அவரின் அரும் பணிக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்து, குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும், கழகத்தினருக்கும் இரங்கலையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

தூர்தர்ஷன் - வானொலியில் மாநில உரிமைகள் பறிப்பு - இந்தித் திணிப்புக்குக் கண்டனம்

தூர்தர்ஷன் - பொதிகை மற்றும் வானொலிகளில் மாநிலச் செய்திகளில்கூட மாநிலச் செய்திகளுக்கு உரிய இடம் கொடுக்காமல், முற்றிலும் மோடி புராணம் பாடுவதும், மத சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு முன்னுரிமை, இந்து மொழித் திணிப்பு  என்னும் வகையில் செயல்படுவது சட்ட விரோத மும், நியாய விரோதமும், மாநில உரிமை விரோதமும் கொண்டதாகும் என்பதைத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு சுட்டிக் காட்டி, தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இவற்றில் மாற்றம் வரவில்லையானால் உரிய போராட்டத்தினை திராவிடர் கழகம் மேற்கொள்ளும் என்றும் இந்த  நிறுவனங்களின் தலைமை நிர்வாகத்திற்கும், மத்திய அரசுக்கும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் எண் 3:

கஜா புயலும் மத்திய அரசின் பாரா முகமும்

அண்மையில் வீசிய கஜா புயலால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கடும் பாதிப்பு  ஏற்பட்டு மக்களின் அடிப் படை வாழ்வாதாரத்தின் வேரினையே பறித்து வீசி எறிந்த நிலையில் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் அங்குள்ள மக்கள் பெரும் துயரத்தினை சந்திக்கும் கொடூரம் நடந்திருக் கிறது.

இந்த நிலையில் போர்க்கால நடவடிக்கைபோல் செயல் பட வேண்டிய மத்திய அரசு, வெறும் சம்பிரதாய முறையில், பார்வையாளர்களை அனுப்புவதும், மாநில அரசு கோரும்  குறைந்தபட்சத் தொகையைகூடக் கணக்கில் கொள்ளாமல் யாசகம் கொடுப்பது போல குறைந்த தொகையைக் கொடுப் பதாக அறிவிப்பதும் - அறிவித்த தொகையைக் கூட உடனடி யாக அளிக்க மனமில்லாமல் சாக்குப் போக்குகளைக் கூறுவதும், தமிழ்நாட்டு மக்களை மத்திய பிஜேபி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு வஞ்சிக்கிறது  என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்தமான உணர்வு என்பதை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது - மத்திய பிஜேபி அரசின் இந்தப் போக்கிற்கு திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இப்பிரச்சினையில் மேலும் காலந் தாழ்த்தாமல், தமிழ் நாட்டில் கஜா புயலால் ஏற்பட்ட பேரிழப்பைப் பேரிடாக அறிவித்து அதன் அடிப்படையில் நிதியை  உடனடியாக வழங்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசும், மத்திய அரசிற்குப் போதுமான வகையில் அழுத்தம் கொடுக்காமல், மயிலிறகால் வருடுவது போன்ற அணுகுமுறையின் காரணமாக மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதை தலைமைச் செயற்குழு சுட்டிக் காட்டி, நாடாளுமன்றம் நடக்கும் இந்தக் காலகட்டத்தில் போர்க்குரல் எழுப்பி, உரிய நிவாரணத் தொகையைப் பெறுவதில் போதிய முயற்சியினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசை தலைமைச் செயற்குழு வற்புறுத்து கிறது.

தீர்மானம் எண் 4:

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை - சட்டப்படியும், நீதிமன்ற தீர்ப்புப்படியும் தவறே!

உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் தீர்ப்புகளுக்கு எதிராக கருநாடகத்தில் காவிரியில் மேகத்தாதுவில் கருநாடக மாநில அரசு அணை கட்டுவதற்கு முதற்கட்டமாக அதற்கான திட்ட வரைவினைத் தயாரிக்க மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் அனுமதியளித்ததும், உச்சநீதிமன்றமும்  ஏதோ ஒரு வகையில் அதற்கு உகந்த முறையில் தீர்ப்பு அளித்ததும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் மட்டுமல்ல; காவிரி நீர்ப்பாசனத்தை நம்பி வாழும் பல மாநிலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிஜேபி அரசு அரசியல் நோக்கத்தோடு இதில் காயை நகர்த்துவதாகவும் இந்த மாநிலங்கள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் இந்த உயிர்ப் பிரச்சினையில் பொருத்த மான தகுதி வாய்ந்த வழக்குரைஞர்களை ஏற்பாடு செய்து, உச்சநீதிமன்றத்தில் வழக்காடி, தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை வாழ்வாதரா உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.

சட்ட விரோதமாக மேகத்தாதுவில் அணை கட்டப்படு மானால், வரலாறு காணாத வகையில் கட்சிகளுக்கு அப்பாற் பட்டு பூகம்பம் போல தமிழ்நாட்டில் போராட்டம் வெடித்துக் கிளம்பும் என்று சம்பந்தப்பட்ட அனைவருக்கும் திராவிடர் கழகத் தலைமைச் செயற் குழு எச்சரிக்கிறது.

தீர்மானம் எண் 5:

அய்ந்து மாநில சட்டப் பேரவை முடிவுகளும் - எதிர்கால நடவடிக்கைகளும்

நடந்து முடிந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் பிஜேபிக்கு அதன் சட்ட விரோத,  சமூக நீதி விரோத, மதவாத அரசியலுக்கும், செயல்பாட்டுக்கும் தக்கதோர் தண்டனை' கொடுத்தமைக்கு இச்செயற்குழு தனது பாராட்டுதலையும், மகிழ்ச்சியையும் வாக்காளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது.

2019 இல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை இப்பொழுது இணைந்துள்ள 21 கட்சிகளும் அல்லாமல்,  இந்த  அணியில் சேராமல் வெளியிலிருக்கும், மதச் சார்பின்மை மற்றும் சமூகநீதி கொள்கைகளை உடைய கட்சிகளையும் இணைத்து வாக்குகளைச் சிதறவிடாமல், அய்க்கிய முற்போக் குக் கூட்டணியை மேலும் வலுப்படுத்தி, பிஜேபியையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் கடுந் தோல்விக்கு ஆளாக்க வேண்டியது ஜனநாயகச் சக்திகளின் கடமை என்பதை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு நினைவூட்டி வலியுறுத்துகிறது. இதில் சிறு தவறும் ஏற்படாதவாறு தொலைநோக்கோடு வியூகங்களை வகுக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு  கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 6:

2019 செப்டம்பரில் அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு மாநாடு

பெரியார் பன்னாட்டு அமைப்பு (Periyar International) பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமும் இணைந்து ஜெர்மன் -கொலோன் பல்கலைக் கழகத்தில் சிறப்பாக நடத்திய (2017 ஜூலை 27, 28, 29) பெரியார் பன்னாட்டு மாநாட்டினைத் தொடர்ந்து, 2019 செப்டம்பர் 21, 22 நாள்களில் அமெரிக்காவில்  வாசிங்டனில் அத்தகைய மாநாட்டினைச் சிறப்பாக நடத்திட அனைத்து முயற்சிகளையும் சிறப்பாக மேற்கொண்டு வரும் அமைப்பின் பொறுப்பாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு பாராட்டுத் தெரி விப்பதுடன், பெரியார் உலகமயமாகிறார் என்னும் பரிணாமத் திசையில் இம்மாநாடு அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கருதுகிறது; பெரியாரியலாளர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் மாநாட்டின் வெற்றிக்கு ஆதரவு தருமாறும் இத்தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 7:

2019 மார்ச்சு 30,31 நாள்களில் தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு,  சமூகநீதி மாநாடு

திராவிடர் கழக மாநில மாநாடு வரும் பிப்ரவரி 2,3 நாள்களில் தஞ்சையில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது. கஜா புயல் காரணமாக மாநாடு நடக்கயிருந்த தஞ்சை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்கள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கவனத்தில் கொண்டு, மாநாட்டினை 2019 மார்ச் 30,31 நாள்களில் முறையே திராவிடர் கழக மாநாடு, சமூகநீதி மாநாடுகளை எழுச்சியுடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 8:

ஏடுகளுக்கான சந்தா சேர்ப்பு இயக்கம் தொடர்வது

விடுதலை', 'உண்மை' பெரியார் பிஞ்சு', தி மாடர்ன் ரேசனலிஸ்ட்' உள்ளிட்ட இயக்க ஏடுகளுக்குச் சந்தா சேர்க்கும் பணியில் தேனீக்கள் போல உழைத்து சாதனை படைத்த இயக்கப் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும், திரா விடர்  கழகத் தலைமைச் செயற்குழு தனதுபாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், ஏடுகளுக்குச் சந்தா சேர்ப்பு என்பதை குறிப்பிட்ட காலத்திற்கான செயல்பாடு என்று கொள்ளாமல், தொடர்ந்து ஓர் இயக்கமாகவே நடத்த வேண்டும் என்று  தோழர்களை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண் 9: (அ)

தமிழில் பெயர்கள் மாற்றம்

உத்தரப்பிரதேசம் மற்றும் பிஜேபி ஆட்சியில் இருக்கும்  மாநிலங்களில் ஊர் பெயர்களை - தெருப் பெயர்களை யெல்லாம் மதவாதக் கண்ணோட்டத்திலும், சமஸ்கிருதமய மாக்கும் பார்ப்பனீயப் பார்வையிலும் மாற்றப்பட்டு வரு வதைத் தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு தலைமைச் செயற் குழு கொண்டு வருகிறது. தமிழ்ப் பண்பாட்டு படையெடுப்பு முறியடிக்கப்படுவது அவசியம் என்பதை செயற்குழு வலியுறுத்துகிறது.

தமிழ்ப் பெயர்களாக இருந்த ஊர்ப் பெயர்கள் திட்டமிட்ட வகையில் சமஸ்கிருதமயமாக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவ்வூர்ப் பெயர்களை தமிழுக்குக் கொண்டுவர ஆவன செய்யுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத் துகிறது.

பெயர்களை மாற்றும்பொழுது ஜாதி, மதம் பெயரில் உள்ள பெயர்களையும் மாற்றுமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9(ஆ):

பிள்ளைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்டுக!

பெயர் சூட்டும் பொழுது தமிழர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்டுமாறு தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழர் குடும்பப் பிள்ளைகளின் பெயர்களை சமஸ்கிருதமயமாக்கும் போக்கு கடந்த காலத்தில் பெருகி வருவதைத் தடுப்பது - தமிழினப் பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் மிகவும் இன்றியமையாதது என்பதையும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 10: (அ)

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு

சமீப காலமாக ஜாதி உணர்வினைத் தூண்டும் வகைகளில் சில கட்சிகளும், அமைப்புகளும் அரசியல் ஆதாயக் கணக் கில் செயல்பட்டு வருவதால் ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெற்று வருகின்றன. ஒன்றிரண்டு இடங்களில் சுடு காட்டிலும் - சுடுகாட்டுக்குச் செல்லும் பாதைகளிலும் ஜாதிப் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. சில இடங்களில் தேநீர்க் கடைகளில் இரட்டை தம்ளர் முறையும் அமலில் உள்ளது. இந்த நிலையில் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தைச் சரியான வகையில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும், காவல்துறையில் தனிப் பிரிவையே உண்டாக்கி இவற்றைக் கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.

மலத்தைக் கையால் அள்ளும் அவல நிலைக்கும், பாதாள சாக்கடைகளில் மூழ்கிச் சுத்தம் செய்யும் கொடுமைக்கும் முடிவு கட்ட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

வரும் டிசம்பர் 30ஆம் தேதி ஓசூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டை எழுச்சியுடன் நடத்துவதுடன், தேவைப்பட்டால் ஜாதி ஒழிப்புக்கான மக்கள் மத்தியில் சிந்தனையூட்டும் போராட்டத்தினை கழகத் தலை வர் அம்மாநாட்டில், அறிவிக்க வேண்டுமென இச்செயற் குழு தலைவரைக் கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு தழுவிய அளவில் கிராமப் பிரச்சாரங்களையும் அடைமழை போல மேற்கொண்டு, இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 10: (ஆ)

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - பயிற்சி பெற்றவர்களை உடனடியாக நியமனம் செய்க!

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் போராட்டம் ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் மிகவும் திருப்பம் வாய்ந்த ஒரு மைல் கல்லாகும். தந்தை பெரியார் அவர்களின் இறுதிக் கட்டளையை நிறைவேற்றும் வகையில் மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருமுறை சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, இப்பொழுது உச்சநீதிமன்றத்திலும் அதனை அங்கீகரித்துத் தீர்ப்பும் வழங்கப்பட்டு விட்டது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் அமைந்த ஆட்சி, இந்தப் பிரச்சினையில் முந்திக் கொண்டு அறுபதுக்கும் மேற்பட்ட கோயில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச் சகராக நியமனம் செய்துள்ளது. தமிழ்நாட்டிலும் மதுரையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கோயில் அர்ச்சகராக தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக - ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சி பெற்றுள்ள 200க்கும் மேற்பட்ட பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்களை அர்ச்சகர்களாக காலியுள்ள இடங்களில் நியமனம் செய்யுமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 11:

சென்னை அய்.அய்.டி.யில் சைவ - அசைவ பேதம் கண்டனத்திற்குரியதே!

சென்னை அய்.அய்.டி.யில் தொடக்க முதல் ஒரு பெரிய அக்ரகாரம் போல அதன் நடவடிக்கைகள் அமைந்து வரு கின்றன. பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆங்கே ஆதிக்க நிலையில் உள்ளனர்.

இப்பொழுது சைவ உணவு, அசைவ உணவு என்ற பெயரால் உண்ணும் இடம், கை கழுவும் இடம் வரை தனித் தனியான ஏற்பாடு என்ற நிலை மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனத்தில் தாண்டவமாடுவது எந்த  வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல; இது சட்ட விரோத மனித உரிமை விரோதமானது என்று இச்செயற்குழு சுட்டிக்காட்டுவதுடன்,  இந்த நிலை உடனே கைவிடப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிடின் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சி மாணவர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்த ஏதுவாகும் என்று இச்செயற்குழு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குத் தெரி வித்துக் கொள்கிறது. மேலும் இதன்மீது விசாரணை நடத்தப் பட்டு தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 12:

குழந்தைகள் திருமணத்தைத் தடுத்து நிறுத்திட விழிப்புணர்வுப் பணிகள்

2011 ஆம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 18 லட்சம் குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளதாகவும், இதில் முத லிடத்தில் உத்தரப்பிரதேசம், அதற்கடுத்து பிகார், ராஜஸ்தான் மாநிலங்களும், நான்காம் இடத்தில் தமிழ்நாடு உள்ளதாகவும், அதிலும் சென்னைதான் மாநிலத்தின் முதலிடத்தில் இருப்ப தாகவும் மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணை யத்தின் தலைவர் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியான எம்.பி.நிர்மலா அவர்கள் சென்னையில் நேற்று நடைபெற்ற அது தொடர்பான கருத்தரங்கில் தெரிவித்துள்ள செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.

மத்திய - மாநில அரசுகளில் குழந்தைகள் நலன் பேணு தலுக்கான துறைகள் இருந்தும், சட்ட விரோதமாக இப்படி நடந்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாடு அரசு இதில் தீவிர கவனமும், கண்காணிப்பும் செலுத்தி இதனைத் தடுப்பதை முக்கியமாகக் கருதவேண்டும்.

இதுகுறித்து திராவிடர் கழகம், கழக மகளிரணி, மகளிர் பாசறை அமைப்புகள் முக்கிய கவனம் செலுத்தி விழிப் புணர்வுப் பிரச்சாரம் செய்வது என்றும், தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தோடு தொடர்புகொண்டு, உரிய வகையில் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவது என்றும் இத்தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles