குஜராத் பழைய இனப்படுகொலை - எரிப்பு நிகழ்வுகள்கூட வருங்காலத்தில் நீதிக்கு முன்னால்
நிறுத்தப்படுவது காலத்தின் கட்டாயம்!
இன்று பா.ஜ.க.வினர் காங்கிரசுகாரரின் தண்ட னைக்கு மகிழ்வதைப்போல, குஜராத் பழைய இனப் படுகொலை - எரிப்பு நிகழ்வுகள்கூட வருங்காலத் தில் நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுவது காலத்தின் கட்டாயம் அல்லவா? இறுதிச் சிரிப்பே எப்போதும் வெற்றிச் சிரிப்பாகும்; எவராயினும் தவறு செய்தவர்கள் தப்பித்தால் நாட்டின் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு அடையும்; ஜனநாயகம் வெற்றி பெறாது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
கறை படிந்த கறுப்பு அத்தியாயங்கள்
குஜராத்தில் மோடி முதல்வராகவும், அமித்ஷா அமைச்சராகவும் இருந்தபோது சிறுபான்மையினரான இசுலாமியர்களுக்கு எதிராக திட்டமிட்ட வன்கொடுமை - pogram பற்றிய ஏராளமான புத்தகங்கள் வந்துள்ளன. பல விரிவான தகவல்கள் அவற்றில், அங்கு நடைபெற்ற இனப்படுகொலைபற்றிய, கோத்ரா எக்ஸ்பிரஸ் எரிப்பு என்ற திட்டமிட்ட பழி போட்ட நடவடிக்கைகள் எல்லாம் நமது நாட்டு அரசியல் வரலாற்றில் கறை படிந்த கறுப்பு அத்தியாயங்கள் ஆகும்.
அதில் ஒரு நிகழ்வுதான் சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கும் ஆகும்.
இதில் குற்றம் சுமத்தப்பட்ட அமித்ஷாவும், காவல் துறை பெரிய அதிகாரி டி.ஜி.வன்சாராவும் 2014 இல் விடுவிக்கப்பட்டனர். அவ்வழக்கில் அமித்ஷா குற்ற மற்றவர் என்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். பிணை வழங்கியவருக்கு உரிய அரசியல் பரிசும் - அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் தரவும் பட்டது!
இப்போது சி.பி.அய் இவ்வழக்கை நடத்திய நிலையில், 22 காவலர்களும் குற்றமற்றவர்கள் என்று முடிவுக்கு வந்து நீதிபதி சர்மா தீர்ப்பளித்திருக்கிறார்!
‘‘உயிரிழந்த மூன்று பேர்களின் குடும்பங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன்; எனினும் சட்ட ஆதாரங்கள் நடைமுறைகளின்படிதான் நீதிமன்றங்கள் செயல்படுகின் றன'' என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்!
92 பேர் பிறழ் சாட்சிகளாக...
இந்த சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் 210 பேர் சாட்சிகள்; இவர்களில் 92 பேர் பிறழ் சாட்சிகளாக (Hostile Witnesses) மாறியதன் விளைவே இத்தகைய அதிர்ச்சி தரும் தீர்ப்பும், அதனையொட்டிய 22 பேரும் குற்றமற்றவர்கள் என்ற அறிவிப்பும் ஆகும்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் கூலிப்படைகளால் கொல்லப்பட்ட சங்கரராமன் படு கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, கைதாகி, ஜெயிலுக்கும் பிறகு பெயிலுக்கும் (பிணை) அலைந்து வழக்கு நடந்த மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி, அவரது இளைய மடாதிபதி விஜயேந்திர சரசுவதி - தற்போது அவரே ‘முற்றிய' முதல் சங்கராச்சாரி - இருவரும் அவ்வழக்கிலிருந்து புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொலைக் குற்றத்திலிருந்து விடுதலையாயினர் - 87 பிறழ் சாட்சிகளின் ‘பல்டி'யின் காரணமாக!
அதேபோன்ற நிலைதான் இந்த சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கிலும்!
டி.ஜி.வன்சாராவின் டுவிட்டர் பதிவு!
இதற்குமுன் டி.ஜி.வன்சாரா என்ற குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட குஜராத் காவல்துறை அதிகாரி பதிவிட்ட டுவிட்டரில், ‘‘மோடியைக் காப்பாற்ற இதுபோன்ற ‘என்கவுண்ட்டர்கள்' முன்கூட்டியே நடத்தப்படுவது தேவைப்பட்டது'' என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
காஞ்சி சங்கராச்சாரியார் குற்றவாளியாக இருந்த சங்கரராமன் கொலை வழக்கில், கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மனைவி, மகனும் பிறழ் சாட்சியங்களாக மாறினர் அல்லது மாற்றப்பட்டனர் என்பது மறக்கப்படாத உண்மைகள் ஆகும்.
அதுபோலவே, இந்த குஜராத் சொராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கிலும், மனைவி கவுசர், துளசிராம் பிரஜாபதி என்பவரும், பேருந்து ஓட்டுநரும், ஒரு பயணியும் ஆகிய நால்வரும் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று நீதிமன்றத்தில் அடித்த பல்டியில் கூறியுள்ளனர். ‘‘சத்தியமேவ ஜெயதே!''
காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கு மேல்முறையீட்டினை தமிழக அரசோ - புதுவை அரசோ செய்யவே இல்லை. அதற்கு அன்றைய குடியரசுத் தலைவர் வரை காஞ்சி மடத்திற்குச் செல்வாக்கு இருந்ததுதான் காரணம் என்று பரவலாகப் பேசப்பட்டது.
இதன் கதியும் அப்படித்தானோ தெரியவில்லை.
இந்திரா காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அப்பாவி சீக்கியர்களைக் கொன்ற - கலவரம் விளைவித்த காங்கிரசுகாரரான சஜ்ஜன்குமார் குற்றவாளியாகி, தண்டனை தரப்பட்டதை பா.ஜ.க.வினர் கொண்டாடி, அதனை காங்கிரசுக்கு எதிரான பிரச்சார ஆயுதமாக்கி மகிழ்கின்றனர்!
நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுவது
காலத்தின் கட்டாயம்
உண்மைக் குற்றவாளிகள் எந்தக் கட்சியினராயினும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்பது நமது உறுதியான கருத்து.
ஆனால், இன்று பா.ஜ.க.வினர் காங்கிரசுக்காரரின் தண்டனைக்கு மகிழ்வதைப்போல, குஜராத் பழைய இனப்படுகொலை - எரிப்பு நிகழ்வுகள்கூட வருங் காலத்தில் நீதிக்கு முன்னால் நிறுத்தப்படுவது காலத்தின் கட்டாயம் அல்லவா?
இறுதிச் சிரிப்பே எப்போதும் வெற்றிச் சிரிப்பாகும்.
எவராயினும் தவறு செய்தவர்கள் தப்பித்தால் நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடையும் - ஜனநாயகம் வெற்றி பெறாது!
கி. வீரமணி
திராவிடர் கழகம் தலைவர்.
சென்னை
28.12.2018