Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மக்களவைத் தேர்தலை மனதிற்கொண்டு, "உயர்ஜாதியினருக்காக'' இட ஒதுக்கீடுக்கு சட்டத் திருத்தம் கொண்டு வருவதா?

$
0
0
* பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டில் உயர்ஜாதியினருக்குப்   பொருளாதார அடிப்படை என்பது  உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வால் தவறு என்று தீர்ப்பளிக்கப்பட்டது

* மண்டல் வழக்கில் இட ஒதுக்கீடு வேறு; வறுமை ஒழிக்கும் திட்டம் வேறு என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் கூறி விட்டது!

பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு என்று பி.வி.நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட சட்டம் செல்லாது என்று ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அதே அடிப்படையில் இப்பொழுது மத்திய பி.ஜே.பி. அரசு அவசர அவசரமாக சட்டம் ஒன்று நிறைவேற்றப்படுவதன் நோக்கத்தை விளக்கியும், நீதிமன்றம் இந்தச் சட்டம் செல்லாது என்று தள்ளுபடி செய்யும் என்பதற்கான காரணங்களைக் கூறியும் திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு:

1. மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வின் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி, நடை பெற்ற மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் சரி, இடைத் தேர்தல்களிலும் சரி பெரிய தோல்வியைச் சந்தித்தது. கடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் ஒரு மாநிலத்தில்கூட - வடகிழக்கு உள்பட ஆட்சியைப் பிடிக்கவில்லை.

மூழ்கும் கப்பல் பி.ஜே.பி.

2. மேலும் ஏற்கெனவே என்.டி.ஏ. என்ற பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்த பல கட்சிகள், மூழ்கும் படகிலிருந்து குதித்து வெளியேறிக் கொண்டிருக்கின்றன. அசாம் கணபரிஷத் - மகாராஷ்டிரா சிவசேனாவும் இப்பட்டியலில் சேர்ந்தால் அதிசயமில்லை.

இதனைச் சமாளிக்க, சரிகட்ட, இட ஒதுக்கீட்டை உயர்ஜாதிக்காரர்களுக்கு ஒரு பகுதி தாரை வார்க்க'' முடிவு செய்து, அதன்மூலம் பார்ப்பனர்கள் 12 சதவிகிதம் அதிகம் உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் சில வடமாநிலங்கள், ஜாட், ராஜபுத்திரர்கள் கூடுதலாக உள்ள சில மாநிலங்களில் அங்குள்ள எதிர்ப்பைச் சமாளிக்க - வாக்குகளை வாங்க ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே தகர்க்கும் சூழ்ச்சி!

அதுதான் இன்று நாடாளுமன்றத்தில்  இரு அவை களில் தாக்கல் செய்து விரிவான விவாதத்திற்கே வாய்ப்புத் தராமல் அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதைபோல் செயலாற்றத் தொடங்கியுள்ளது!

இன்னும் பொதுத்தேர்தலுக்கு 100 நாள்களே உள்ளன; (அநேகமாக தேர்தல்பற்றி மார்ச் மாதத்திலேயே அறி விப்பு வரக்கூடும்).

கல்வி, வேலை வாய்ப்புகளில் 10 சதவிகிதத்தை ஏழைகளாக உள்ள உயர்ஜாதியினருக்கு ஒதுக்கிடும் புதிய அரசியல் சட்ட திருத்த மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு இன்று (8.1.2019) மக்களவை, நாளை (9.1.2019) மாநிலங்களவையில் நிறை வேற்றிவிட காலில் வெந்நீர் ஊற்றிக் கொண்டு வேக வேகமாகக் கிளம்பியுள்ளது!

இது அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் அடங்கிய அடிக்கட்டுமான அம்சங்களுக்கே முற்றிலும் முரணானது; சட்டப்படி நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்போது இது சட்டப்படி செல்லாததாகவே ஆகிவிடுவது உறுதி.

உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஒன்று

இந்திரா - சகானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய (மண்டல் கமிசன் இட ஒதுக்கீடுபற்றிய வழக்கு) தீர்ப்பில் 13(1), 14, 15, 15(4) ஆகிய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி (16.11.1992) மிகவும் தெளிவாகவே பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆணை அறவே செல்லாது என்று திட்டவட்டமாகவே தீர்ப்பளித்துவிட்டது (3 ஆம் பக்கத்தில் அதனைக் காண்க).

15(4) என்று முதலாவது அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொணர்ந்தபோது பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் பி.ஆர்.அம்பேத்கர் எல்லாம் பல உறுப்பினர்களுடன் விவாதித்தபோதும், அதற்கு முன்பே அரசியல் சட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்பற்றிய விரிவான 340 அய் எழுதும்போதே - எந்தெந்த வரையறைச் சொற்கள் (விவாதிக்கப்பட்டு பின் போடப்பட்டதோ) அதே சொற்களைத்தான் ‘‘Socially and Educationally''  என்று போடப்பட்டதை அப்படியே 15(4) என்ற புதுப்பிரிவை பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கான சட்டத் திருத்தத்திலும் கையாளப்பட்டது.

முதல் திருத்தத்தின்போதே பொருளாதார அளவுகோல் நிராகரிக்கப்பட்ட ஒன்று

அப்போது சில உறுப்பினர்கள் ‘Economically' என்றும் இணைத்து, அந்த அளவுகோலையும் இணைக்க வேண்டும் என்று வாதாடியபோது, பிரதமர் நேரு பொருளாதார அளவுகோல் என்பது அவ்வப் போது ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது; அது திட்டவட்ட மான அளவுகோல் அல்ல. அது குழப்பத்திற்கு ஆளாகும் என்று அரசியல் நிர்ணய சபை, முதலாவது அரசியல் திருத்தத்தின்போது நடைபெற்ற விவாதங்களில் தெளி வாக்கப்பட்ட பிறகுதான், பொருளாதார அளவுகோல் கைவிடப்பட்டது. (நாடாளுமன்றத்தில் பொருளாதார அளவுகோலுக்கு ஆதரவாக 5 வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் பதிவாயின). 340 பிரிவிலிருந்த Socially and educationally சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்' என்ற சொற்றொடர்களே போடப்பட்டது என்பது வரலாறு.

மேலும், நரசிம்மராவ் பிரதமரானபோது தனியே 10 விழுக்காடு பொருளாதார அடிப்படையில் ஒதுக்கியதும், அதனால்தான் 9 நீதிபதிகள் அமர்வால் செல்லாதது என்று தீர்ப்பளிக்கப்பட்டது!

இட ஒதுக்கீடு வறுமை ஒழிக்கும் திட்டமல்ல!

ஜஸ்டீஸ் ஓ.சின்னப்ப ரெட்டி என்ற உச்சநீதிமன்ற நீதிபதி மிக அழகான விளக்கத்தை ஒரு வழக்கில் கூறினார். ‘Reservation is not a poverty alleviation scheme' இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் இதுவரை காலங்காலமாக கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தைக் கைதூக்கி விடுவது; கடந்த கால அநீதிக்குப் பரிகாரம் தேடுவதற்கான வழிவகையே தவிர, வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; அதற்குப் பல வழிகள் தனியே காணவேண்டுமே தவிர, இதனை அதற்குப் பயன்படுத்துவது அரசியல் சட்ட விரோதம் என்றும் தெளிவுபடுத்தினார்.

உச்சநீதிமன்றம் மட்டுமல்ல - குஜராத் உயர்நீதிமன்றமும்...

இந்திரா - சகானி வழக்கு மட்டுமல்ல, ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் இதே போன்று உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு தருவதில் அவசரச் சட்டம் (Ordinance) (1.5.2016) கொண்டு வரப்பட்டதை எதிர்த்து "தயாராம் வர்மா க்ஷி குஜராத் மாநில அரசு'' என்ற வழக்கின் 104 ஆவது பக்கத் தீர்ப்பில் அதனை செல்லுபடியற்றது (Quashed) (4.8.2016) என்று அடிபட்டு விட்டது.

இதெல்லாம் தெரிந்தே, ஓட்டு வாங்க மோடி வித்தை யாக இந்த இரண்டு நாள்களில் இது கொண்டுவரப்படுகிறது. மற்றொரு சூழ்ச்சியும் அதில் உள்ளது.

இந்த அரசியல் சட்டத் திருத்தம் 368 ஆவது பிரிவின்படி, சட்டமாக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்ற இரு அவைகளில் 50 சதவிகிதத்தினர் வாக்களிக்கவேண்டும். அது சபையின் மொத்த உறுப்பி னர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) சபையில் அமர்ந்து வாக்களிப்பவர்களாகவும் இருக்கவேண்டும்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததன் பின்னணி என்ன?

அவைகளில் பல தென் மாநில எதிர்க்கட்சி உறுப்பி னர்களை அவைக்கு வர முடியாதபடி தகுதி நீக்கம் செய்ததால், சபையின் மொத்த உறுப்பினர்கள் எண் ணிக்கை 50 விழுக்காடு, அமர்ந்து வாக்களித்த மூன்றில் இரண்டு பங்கு 2/3 majority  of  voting கணக்குக்கும்கூட இது சரியாக வரக்கூடும் என்று முன்கூட்டியே திட்ட மிட்டே, முன்பு எப்போதும் இல்லாத, இப்போது இத்தனை சபை உறுப்பினர்களை - நாடாளுமன்றத்தில் வாக்களிக்க வாய்ப்பு இல்லாது செய்த சூழ்ச்சித் திட்டமும் உள்ளடக்கமோ என்ற அய்யமும்கூட ஏற்படுகிறது.

நீதிமன்றத்தில் அடிபட்டுப் போகும்!

எப்படியோ நிறைவேற்றப்பட்டாலும் - இது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும்போது நிச்சயம் அடிபட்டுப் போகும் என்பது உறுதி.

மண்டல் குழு நடைமுறைக்கு வந்து 23 ஆண்டு களுக்குப் பிறகும்கூட மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 12 விழுக்காட்டுக்கும்கீழ்தான் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) பெறப்பட்ட தகவல் கூறுகிறது (1.1.2015). இந்த அநீதிக்குப் பரிகாரம் தேடாமல், உயர்ஜாதியினர்பற்றிக் கவலைப்படுவது பா.ஜ.க.வின் உயர்ஜாதி பார்ப்பன மனப்பான்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

இனனொரு கேள்வி -

ஏழைகளுக்கும் 10 சதவிகித இட ஒதுக்கீடு தராமல் அதென்ன உயர்ஜாதி ஏழைகளுக்கு மட்டும் என்ற பேதம்?

உயர்ஜாதிக்கார கட்சி பா.ஜ.க., - ஆர்.எஸ்.எஸ். என்பதைப் புரிந்துகொள்ளுவதற்கு இது உதவும்!

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

8.1.2019


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles