மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து
தமிழக சட்டப்பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றப்படட்டும்!
எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள்
இல்லை என்றால் மக்கள் மன்றத்திலே தீர்மானிக்கப்படும்!
புதிய கல்விக் கொள்கை கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் பிரகடனம்
சென்னை, ஆக.8 மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிரானது. பழைய குலக்கல்வித் திட்டத்தின் புதிய வடிவம் - இதனை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றவேண்டும் - அனைத்துக் கட்சியினரும் ஆதரிப்பார்கள். இல்லையெனில், மக்கள் மன்றத்தில் தீர்மானிக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டதாவது:
தமிழர் தலைவர்: புதிதாக துவக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையினுடைய தேசியக் கல்விக்கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடு என்ற ஆவணத்திலே குறிப்பிடப்பட்டு இருப்பதுபோல இதில் யாரையும் கலந்து உருவாக்கவில்லை. தெளிவாகவே அதைத் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துச் சொன்னார். அய்ந்துபேர் கொண்ட குழுவிலே ஒரே ஒரு கல்வியாளர், அதுவும் ஆர்.எஸ்.எஸ். கல்வியாளர் எனவே, இது ஓர் ஆர்.எஸ்.எஸ்-. கல்வித் திட்டமே!
ஆர்.எஸ்.எஸ்சினுடைய கல்வித் திட்டம் பன்மதங்கள், பல மொழிகள், பல பண்பாடுகள் இருக்கிற இந்த நாட்டில் என் மதம் மட்டுமே ஆளவேண்டும், என் மொழி சமஸ்கிருதம் மட்டுமே பொதுமொழியாக இருக்க வேண்டும், என் கலாச்சாரம் பார்ப்பனீய, சமஸ்கிருத கலாச்சாரமே இருக்க வேண்டும் என்று சொல்வற்கு அடையாளமாகத்தான் இங்கேயே அதிலே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்திய அரசியல் சட்டத்திலே எட்டாவது அட்ட வணையிலே 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த 22 மொழிகளிலே மக்கள் மத்தியிலே பேசப் படாமல் இருக்கக்கூடிய ஒரே செத்த மொழி சமஸ் கிருதம்தான். ஆனால் அந்த சமஸ்கிருதத்தையே முன்னிலைப்படுத்தக்கூடிய அளவிற்கு இந்த கல்வித் திட்டத்தில் இருக்கிறதென்பதற்கு இரண்டு அடையாளங்கள் இருக்கின்றன.
இந்திய பண்பாடு உள்ளூர் மரபாம்!
அதாவது தெளிவாக கல்வியும், மொழியும் பண்பாடும் (Language, Culture and Education) என்று இருப்பதிலே அவர்கள் சொல்லுகிறார்கள். இந்திய பண்பாடு, உள்ளூர் மரபு வழி அறிவு ஆகியவற்றில் பள்ளிக்கல்வியில் போதிய இடமளிக்கப்படும் என்று சொல்லிவிட்டு அடுத்தபடியாக சொல்கிறார்கள்.
இந்திய மொழியின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் சமஸ்கிருதத்தின் சிறப்பான முதன்மையினைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்தன்மை வாய்ந்த பங்களிப்பினைக்கருதியும் பள்ளிக் கூடங்களில் அதனைக் கற்பிப்பதற்கு வசதி செய்யப்படும்.
பொருளாதாரப் புதுக்கரடி
இதுதான் இந்தக் கல்விக்கொள்கையினுடைய மிக முக்கியமான நோக்கம். பள்ளிக்கூடத்திலிருந்து பல்கலைக்கழகம் வரையில், பல்கலைக்கழக நிலையில் அம்மொழியை கற்பிப்பதற்கு மிகவும் தாராளமான வசதிகள் செய்யப்படும். ஆகவே, மற்ற 21 மொழிகளுக்கு செம்மொழி தமிழ் உள்பட வாய்ப்புகள் கிடையாது. அவற்றுக்கு பணம் ஒதுக்கமாட்டார்கள் என்பதை தெளிவாகவே அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் - இது ஒன்று. இரண்டாவதாக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று ஒரு புதுக்கரடியை விட்டிருக்கிறார்கள். இதுவரையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவு என்று எங்கும் கிடையாது. அதைவிட சமூகநீதிக்கு இதிலே இடமில்லை. சிறுபான்மையினர் நடத்தக்கூடிய பள்ளிக்கூடங்களை எல்லாம் குறிவைத்து, அவர்களுக்கும் பொருளாதார பின்தங்கிய அடிப்படையிலே இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இரண்டு வகையான பிரிவு எஸ்.எஸ்.எல்.சி.யிலே ஆங்கிலம், கணிதம் அறிவியல் இதிலே அதிக மதிப்பெண் பெற்றால் ‘ஏ’ பிரிவு சரியாக படிக்காவிட்டால் அவர்கள் ÔபிÕ பிரிவுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வியிலே ஒரு நவீன வருணாசிரம தர்மத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஊர்ப்புறத்தில் இருக்கக்கூடிய மாணவர்களுடைய திறமைகள் மிகுந்த கவனத்துக்குரியன. ஆகவே, பள்ளிக்கூட நேரத்துக்குப்பின்னாலே தொழில் அடிப்படையில் படிப்புகள் தேசிய தொழில் வளர்ச்சி மேம்பாட்டு வாரியத்தின் உதவியோடு, ஊர்ப்புற கிராமப் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் என்றால் என்ன அர்த்தம்? அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும் என்று அர்த்தம். ஆகவே, இந்த வாய்ப்புகள், இந்தக் கல்வித் திட்டத்தை எதிர்த்து ஒரு பெரிய போராட்டம் இன்றைக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
செய்தியாளர்: சட்டமன்றத்திலே இது தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டும், ஒரு வார காலமாகியும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அரசுக்கு நீங்கள் விடுக்கின்ற கோரிக்கை என்ன?
தமிழர் தலைவர்: தமிழக சட்டமன்றத்திலே கல்வி மான்யம் வருகிறது. ஏனென்றால், மாநில உரிமை பறிபோகிறது இதிலே. அண்ணாவுடைய இருமொழிக் கொள்கைத் திட்டத்தையும், இவர்கள் கேலி செய்யக்கூடிய மாதிரி, மறைமுகமான மும்மொழித் திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.
எனவே, இந்த அரசுக்கும் ஆதரவாகவே இந்தப் போராட்டம். எனவே, அரசு செய்ய வேண்டிய பணி இது. எனவே, ஒட்டு மொத்தமாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், எல்லோரும் சேர்ந்து ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தால், அது ஏக மனதாக நிறைவேற்றப்படும்.
எதிர்க்கட்சித் தலைவருடைய அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுவரலாம். இல்லையென்றால், அவர்களே (ஆளுங்கட்சியினரே) தீர்மானத்தைக் கொண்டு வரட்டும். எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும்.
இந்த இரண்டையும் ஏற்கமாட்டோம் என்றால், அதை அத்தனைக் கட்சிகளும் சேர்ந்து தமிழகத்தில் தமிழ்நாடு முழுக்க மக்கள் மன்றத்தில் நிறைவேற்றிக் காட்டுவோம். இந்தப் போராட்டம் ஒரு துவக்கம். முடிவல்ல.
- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தி யாளர்களிடம் கூறி£னர்.
மத்திய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
சென்னை - வள்ளுவர்கோட்டம் அருகில், தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் மத்திய அரசின் புதிய குலக் கல்விக் கொள்கையை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் (8.8.2016)