“தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை எக்காரணம் கொண்டும் திணிக்க அனுமதிக்கமாட்டோம்!’’
மேனாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
சென்னை, ஆக.9- சட்டமன்றத்தில் இன்று (9.8.2016) பேசிய முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய கல்வி கொள்கை திட்டம்மூலம் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுகிறது என்கிற அய்யம் ஏற்பட்டுள்ளது எனப் பேசினார்.
அதற்குப் பதிலளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்க எக்காரணம் கொண் டும் அனுமதி அளிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படட்டும். எதிர்க்கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள். இல்லையென்றால், மக்கள் மன்றத்திலே தீர்மானிக்கப்படும் என புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (8.8.2016) காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்படும்.புதிய கல்விக் கொள்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில், 1938, 1939 மற்றும் 1965 ஆம்ஆண்டுகளில்நடந்ததைப் போலவே, மீண்டும் ஒரு போராட்டம்தமிழகத்தில் உருவாகும் என மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச் சரிக்கை விடுத்தார்.
மு.க.ஸ்டாலின் கோரிக்கை
இந்நிலையில், இன்று (9.8.2016) சட்ட மன்றத் தில்கேள்வி நேரம் முடிந்தவுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பேரவைத் தலைவரைப் பார்த்து, புதிய கல்விக் கொள்கை திட்டம் குறித்து பேச முயன்றார். அதற்குப் பேரவைத் தலைவர், நீங்கள் கொடுத்த தனி கவன ஈர்ப்புத் தீர்மானம் ஆய்வில் உள்ளது. பிறகு, எடுத்துக் கொள்ளப்படும் என்று பதிலளித்தார்.
இதையடுத்து, இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரம்முடிந்தவுடன்2016 -- 2017 ஆம் ஆண்டிற்கானஉயர் கல்விமற்றும்பள்ளிக்கல்வித்துறைக்கானமானியக் கோரிக்கையை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழ கன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ப.பெஞ்சமின் ஆகியோர் தாக்கல் செய்தனர்.
தங்கம் தென்னரசு
இவ்விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்கள் பேசுகையில்,
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வெளியிட வரைவு அறிக்கை தயாரித்து மனித வள மேம்பாட்டுத் துறைக்கு அனுப்பி உள்ளது. இந்தக் குழுக்களில் கல்வியாளர் ஒருவர் மட்டுமே உள்ளார். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது. இது மாநில உரிமையைப் பறிப்பதாக உள்ளது. நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
புதிய கல்விக் கொள்கை திட்டத்தில் குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என அய்யப்பாடு எழுந்துள்ளது. நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்ற நிலையில் இவை உள்ளது. இது மாநில உரிமையை அறவே பறிக்கின்ற செயலாக அமைந்துள்ளது. இது மாண வர்களிடையேவேற்றுமையைஉண்டாக்கும்.கிராமப்புற மாணவர்கள் மற்றும் சிறுபான்மை பிரிவு மாணவர்களின் உரிமையைப் பறிக்கும் செயலாக இருக்கிறது.
அதேபோன்று, இப்புதிய கல்விக் கொள்கை திட்டத்தில், பன்னாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பது சாதாரண மாணவர்களையும், கிராமப்புற மாணவர்களையும் பாதிக்கும் செயலாக இருக்கும். தகுதி - திறமை மூலம் சமூக நீதி, இட ஒதுக்கீட்டை பாதிக்கும் செயலாக இவை அமைந்துள்ளது. எனவே, தி.மு.க. சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நேற்று கொடுத்துள்ள சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்து விவாதிக்கப்படவேண்டும்.
நெருக்கடி காலத்தில் கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தெரிவித்தார்.
இந்தப் புதிய கல்விக் கொள்கை திட்டத்தில், அய்ந்தாம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்களை, தொழிற்பயிற்சிக்கு அனுப்பும் நிலை உள்ளதால், குலக்கல்வித் திட்டத்திற்கு வழிவகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அழுத்தம் திருத்தமாக மாநில அரசு, மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி, புதிய கல்விக் கொள்கையை திணிக்கவிடாமல், பாதுகாக்க வேண்டும் என்று தங்கம் தென்னரசு பேசினார்.
அமைச்சர் கே.பி.அன்பழகன்
அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் குறுக்கிட்டு, தமிழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளை திணிக்க எக்காரணம் கொண்டும் அனுமதி அளிக்கப்படமாட்டாது என்று தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின்
அமைச்சர் பதிலையடுத்து, மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுந்து, அமைச்சர் பதில் கூறியுள்ளார். எனவே, கல்வி கொள்கை குறித்து தீர்மானம் கொண்டுவரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.