Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

திராவிட இயக்கத்தின் நான்காவது அத்தியாயத்தை திராவிடத் தளபதிதான் எழுதுகிறார்; அது பொன்னேடு அத்தியாயமாக இருக்கும்!

$
0
0

தளபதி ஸ்டாலின் அவர்கள் சிறந்த கொள்கையாளர் - உயர்ந்த லட்சிய வீரர் - ஒப்பற்ற போர் வீரர் - இணையற்ற தளபதி என்பதையெல்லாம்விட சிறந்த மாமனிதர்!

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, மார்ச் 2  திராவிட இயக்கத்தின் நான்காவது அத்தியாயத்தை திராவிடத் தளபதிதான் எழுதுகிறார்; அது பொன்னேடு அத்தியாயமாக இருக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் .

'நீதியரசர்களின் பார்வையில் திராவிடத் தளபதியின் பன்முக ஆளுமை'

1.3.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நீதியரசர்களின் பார்வையில் திராவிடத் தளபதியின் பன்முக ஆளுமை' எனும் தலைப்பில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தலைமை வகித்து  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:

திராவிடத்திற்கு உறவுக்காரர்களான நீதியரசர்கள்

திராவிட இயக்கத்தின் காவல் அரணாக அரசியல் துறையில் அதனுடைய மாட்சி உலகெங்கும் தெரியக் கூடிய அளவில் செயலுக்கும் உரியவராக இருந்த மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர்'' அவர்களுடைய நினைவைப் போற்றி, அவரால், அவருடைய பட்டறையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய குருகுலத்தில் வார்த்தெடுக்கப்பட்டவர் கலைஞர். அவரால் வார்த் தெடுக்கப்பட்டவர் நம்முடைய ஒப்பற்ற தலைவர் செயல்வீரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களாவார்கள். அவருடைய 66 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா - இளைஞர்களுக்குத் திருவிழா - இளைஞர் எழுச்சி நாள் என்ற இந்தப் பெருமை மிகுந்த நிகழ்ச்சியை,  நீதியரசர்களின் பார்வையில் திராவிடத் தளபதியின் பன்முக ஆளுமை' என்ற தலைப்பில் நடைபெறும் விழாவிற்கு நம்முடைய அன்பான அழைப்பினை ஏற்று, கருத்துரை - தீர்ப்புரை - ஏனென்றால், நீதியரசர்களின் கருத்தெல்லாம் தீர்ப்பாகத்தான் ஒருகாலத்தில் மட்டு மல்ல, நாளைக்கும் இருக்கக்கூடிய அளவிற்கு, வலி மையும், நேர்மையும், ஆற்றலும், திறனும் உள்ள நீதியரசர்கள், திராவிடத்திற்கு உறவுக்காரர்களான நீதி யரசர்கள் - அப்படிப்பட்ட நீதியரசர்கள் நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி யோடு இங்கே வந்து உரையாற்ற இருக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்தினுடைய மேனாள் நீதியரசர் அய்யா எஸ்.மோகன் அவர்களே,

தளபதி சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களின் பேரன்

நீதியரசர் டாக்டர் ஏ.கே.ராஜன் அவர்களே, சென்னை உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி என்பதைவிட, தனிச் சிறப்பு திராவிடத் தளபதி என்று தந்தை பெரியாரால், பேரறிஞர் அண்ணாவால், கலைஞரால் அறிவிக்கப்பட்ட, திராவிட இனத்தினுடைய லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் பறைசாற்றப்பட்ட சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள், திராவிட இயக்கத்தினுடைய தளபதிகளில் ஒருவராக, பெரியாருக்குத் தளபதியாக, அண்ணாவிற்கு வழிகாட்டியாக இருந்தார். அவருடைய பேரன் நம் முடைய சி.டி.செல்வம் அவர்கள். எனவே,   திராவிட இயக்கத்திற்குத் தொடர்பு எப்பொழுதும் உண்டு. அப்படிப்பட்ட அய்யா நீதிபதி சி.டி.செல்வம் அவர்களே,

அதேபோல, நம்முடைய தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், திருவாரூரிலிருந்து, திருக்குவளையிலிருந்து நமக்கெல்லாம் இந்தத் தீரமிக்க உலகிற்கே அளிக்கப்பட்டு இருக்கிறாரோ, அதே திருவாரூரிலே இளைஞராக இருக்கும்பொழுதே ஈர்க்கப்பட்டவர் நீதிபதி அக்பர் அலி அவர்களாவார்கள்.  நம்முடைய பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும், உரியவர்கள். இத்தனை அறிஞர்கள் பங்கேற்கக்கூடிய இந்த நிகழ்ச்சியை நம்முடைய கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய செயல்வீரர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு அவர்கள் எதைச் செய்தாலும், அது ஒளியூட்டக் கூடிய தாக இருக்கும். தளபதியே ஒளிதான். ஏனென்றால், கதிரவனின் ஒளியிலிருந்துதான் கதிர்களாக அவர்கள் வந்திருக்கிறார்கள். அந்த ஒளிக்கு, சேகர்பாபு அவர்கள், நம்முடைய தோழர்களை வைத்துக்கொண்டு ஒளியூட் டுகிறார்கள். அது மேலும் கலங்கரை விளக்கம்போல ஒளியூட்டுவதற்கு நம்முடைய நீதியரசர்கள் நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று வந்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில், நம்முடைய மகளிருக்கு, சகோதரிகளுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கே போராடிய நிலையில், இன்னமும் அது நிறைவேறவில்லை என்று சொல்லக்கூடிய காலகட்டத்தில், இங்கே 50 சதவிகிதத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள், இந்தப் பெரியார் திடலிலே என்று சொன்னால், வருங்காலத்திலே இதே தாய்மார்கள், அந்த உரிமையை நம்முடைய ஆட்சி அமைகின்ற நேரத்தில் பெறுவார்கள் என்பதற்கு அடையாளமாகத்தான் இங்கே சிறப்பாக இருக்கக்கூடிய நிலையில் இருக்கிறீர்கள்.

இங்கே சிறப்பாக கலந்துகொண்டு வரவேற்புரை யாற்றிய சேகர்பாபு அவர்களே,

நன்றியுரை கூறவிருக்கக்கூடிய ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களே, மற்றும் திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர்களே, இங்கே அமர்ந்திருக்கக்கூடிய பெரியோர்களே, சட்டப்பேரவை உறுப்பினரும், சிறந்த கொள்கையாளருமான அன்பிற்குரிய அருமைச் சகோதரர் தாயகம் கவி அவர்களே,

ஏனைய நண்பர்களே, தாய்மார்களே, திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே, கழகப் பொருளாளர் அருமை நண்பர் குமரேசன் அவர்களே, இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற அத்துணை நண்பர்களே, செய்தியாளர்களே, ஊடகவிய லாளர்களே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக் கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டோருக்குத் தெரிவிக்கவேண்டிய மிக முக்கியமான நேரம்

இங்கே ஒரு சிறப்பான நிகழ்ச்சி. இன்றைக்கு நம்மு டைய தளபதி அவர்கள், இந்த ஆண்டு தன்னுடைய பிறந்த நாளினை கொண்டாட விரும்பவில்லை. கார ணம், நம்முடைய அருமைத் தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்து ஓராண்டுகூட நிறைவடையாத ஒரு சூழ்நிலையில், நான் பிறந்த நாளினை கொண்டாட விரும்பவில்லை என்று தன்னுடைய மனவேதனையை தெரிவித்தார். ஒரு வகையில் அவருடைய உணர்வை நாம் மதிக்கின்றோம் என்று சொன்னாலும், இன்னொரு வகையில், இங்கே சிறப்பாக அவரைப்பற்றிய தெளிவு, நாட்டோருக்குத் தெரிவிக்கவேண்டிய மிக முக்கியமான நேரம் இது. ஏனென்றால், அரசியலிலே திருப்பங்களை உருவாக்கக்கூடிய ஆற்றல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கின்ற ஒரு சிறந்த கொள்கைக் கூட்டணிக்கே உண்டு.

ஆனால், எப்பேர்ப்பட்டவர் அதற்குத் தலைமை தாங்குகிறார். அதிலும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்ற மிகப்பெரிய மாமலை. அதற்கு முன் அறிஞர் அண்ணா என்ற மிகப்பெரிய மலை. அத்தனை பேரும் பெரியார் அவர்களாலே ஈரோட்டுப் பாசறையில் தயாரிக்கப்பட்டவர்கள் என்ற சூழ்நிலையில், இன்றைக்கு இருக்கின்ற காலகட்டத்தில், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, நல்ல தோழர்களைப் பெற்றிருக்கிறார். ரவிச்சந்திரன், விஜயகுமார், வேலு, ஏகப்பன், புனிதவதி, எத்திராஜ் போன்றவர்களை இங்கே முன்னிலைப்படுத்துகிறார் என்று சொன்னால், தலைவரைப் பொறுத்தவரையில், தொண்டர் - தலைவர் என்ற இடைவெளியே இல்லாது கலைஞரிடத்தில் கற்றுக்கொண்டிருக்கக்கூடிய மிகப் பெரிய ஆற்றல் அது.

"என்னுடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!''

கலைஞர் அவர்கள் எந்த ஒரு மேடையில் பேசினாலும், ஒவ்வொருவரையும் மரியாதைக்குரிய அந்த வரிசைப்படி சொல்வார்கள். அந்த நினைவாற்றல் கலைஞரை தவிர மற்றவர்களுக்கு அவ்வளவு எளிதில் வராது. அவரே  ஒரு தனிக்கலை.  அவரிடமிருந்து தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி. யார் பெயரையும் விடுபடாமல் சொல்வார். அப்பேர்ப்பட்ட கலைஞர் அவர்கள், எல்லோரையும் விளித்துக்கொண்டே வரும்பொழுது, என்னுடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'' என்ற வார்த்தையை சொல்லும்பொழுது, அது ஏற்படுத்துகின்ற மின்சாரத் தாக்கம், தொண்டர்களிடையே, தோழர்களிடையே வேறு கிடையாது. அதே தாக்கத்தை இப்பொழுது ஏற்படுத்தக்கூடிய வகையில், கலைஞர் அவர்கள் எதைவிட்டுவிட்டுப் போகிறார்கள் என்று சொன்னால், அந்த உணர்வை விட்டுவிட்டுப் போயிருக்கிறார், நம்முடைய தளபதி அவர்களிடத்தில்.

அவருடைய சிறப்பான 66 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், சில செய்திகளை நான் சொல்கி றேன். நீதியரசர்கள் பல்வேறு செய்திகளை சொல்ல விருக்கின்றார்கள். இது நீதியரசர்கள் இருக்கின்ற மேடை ஆகையால், அரசியல்பற்றி பேசினால், அவர்களை சங்கடப்படுத்துவதாக ஆகும். ஆனால், இங்கே வந்திருக்கின்றவர்கள் எல்லாம் தெளிவானவர்கள். நீதியரசர்கள் தீர்ப்பு சொன்னால், அது எந்தப் பக்கம் நியாயம் இருக்கிறதோ, அந்தப் பக்கம்தான் தீர்ப்பு இருக்கும் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

குருதியில் உறைந்தும், கொள்கையாய் நிறைந்தும் இருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர்!

இங்கே சொல்வதற்கு எத்தனையோ செய்திகள் இருக் கின்றன. ஆனால், சுருக்கமாக ஒரு சில செய்திகளை மட்டும் சொல்கிறேன்.

கலைஞர் அவர்கள், மானமிகு சுயமரியாதைக்காரன் என்று ஒரு வரியில் தன்னை விமர்சித்துக் கொண்ட நமது தலைவர், மறைந்தாலும், நம்முடைய நெஞ்சில் நிறைந்தும், குருதியில் உறைந்தும், கொள்கையாய் நிறைந்தும் இருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர்  அவர்கள், சில ஆண்டுகளுக்குமுன்பு,

நம்முடைய இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்கள் பொறுப்புக்கு வந்தவுடன், கலைஞர் அவர்களை ஆங்கில நாளிதழான இண்டியன் எக்ஸ்பிரஸ்' பேட்டி கண்டது.

அதை ஒரு உயில் போன்று - உரிமைச் சாசனம் போன்று கருதவேண்டும்.

கலைஞர் பேசுகிறார் கேட்போம்:

ஒரு தந்தை என்ற முறையில், ஸ்டாலின் முன்னேற்றத்திற்கு நான் எந்தக் கடமையும் ஆற்றவில்லை. ஆனால், ஒரு மகன் என்ற முறையில், தனது கடமைகளை சரிவர ஆற்றி, என்னைப் பெருமைப்பட வைத்திருக்கிறான். இப்படிப்பட்ட ஒரு மகன் கிடைத்ததற்காகப் பெருமைப்படுகிறேன் என்று சொன்னார்.

மகன் தந்தைக்காற்றும் நன்றி!

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்று வள்ளுவர் சொன்னார். இவரைப் பொறுத்தவரையில், தம்மின் தம்மக்கள் ஆற்றலுடைமை - அதுதான் மிக முக்கியம். அவருடைய ஆளுமை - அதைத்தான் நீதியரசர்கள் இங்கே சுட்டிக்காட்ட வந்திருக்கிறார்கள்.

குடும்பம் ஒரே கொள்கையில் இருப்பதுதான் சரியானது

தளபதி ஸ்டாலின் அவர்கள், படிப்படியாக வந்தவர்; திடீரென்று நடப்பட்ட செடியல்ல அவர். போன்சாய் அல்ல; எங்கிருந்தோ கொண்டு வந்து பூந்தொட்டியில் வைக்கப்பட்டவர் அல்ல. அவர், விதையாக விதைக் கப்பட்டு, படிப்படியாகப் பக்குவப்பட்டு, பரிணாம வளர்ச்சிப்போல அவர்கள் வளர்ந்து, இந்நிலையை அவர்கள் அடைந்திருக்கிறார்கள். எனவே, எதிரிகள்கூட அந்த வகையில் குற்றம் சொல்ல முடியாது. சிலர் பொறுப்பில்லாமல் சொல்வார்கள். குடும்ப ஆட்சி என்று சொல்வார்கள். குடும்பம் ஒரே கொள்கையில் இருப்பதுதான் சரியானது. அதுதான் மிக முக்கியம்.

இது திராவிட இயக்கம். தாத்தாவாக இருந்தாலும், மகனாக இருந்தாலும், பேரனாக இருந்தாலும் அந்தக் கொள்கையில் இருக்கிறார்கள். உதாரணமாக நம்முடைய நீதியரசர் சி.டி.செல்வம் அவர்கள் இங்கே வந்திருக்கிறார் என்று சொன்னால், அவருடைய தாத்தா திராவிடத் தளபதி, திராவிட லெனின் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம். இன்றைய இளைஞர்களில் பல பேருக்குத் தெரியாது. இந்த இயக்கத்திற்கு அடித்தளமிட்டவர்கள் அவர்கள். அவர்கள் கட்டிய மேடையில்தான் நாம் இப்பொழுது அமர்ந்திருக்கிறோம், உயர்ந்திருக்கிறோம்.

குடும்பம் என்றால், கொள்கையோடு இருப்பது தவறில்லை. அப்படி இருக்கத்தான் வேண்டும். என்னு டைய மகன் இன்னொரு கொள்கையில் இருந்தால், என்ன சொல்வார்கள்? இவருக்கு ஒரு கொள்கை; மகனுக்கு ஒரு கொள்கையா? என்று அப்பொழுதும் கேட்பார்கள். நாக்கு எப்படியும் திரும்பும் - நாக்கு எப்படியும் திரும்பும் என்பது இப்பொழுது தேக்குகள் நாணலாய் சாய்ந்து கொண்டிருக்கின்ற நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே, தளபதி அவர்கள் எப்படி வளர்ந்திருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

கழகத் தொண்டன், ஒரு இளைஞன். இளைஞரணியில் இருந்த ஒரு கழகத் தொண்டன். 15 வயதிலே அவர் பொதுவாழ்விற்கு வந்திருக்கிறார். இன்றைக்கு அவருக்கு 66 வயது. எனவே, ஒரு அரை நூற்றாண்டுக்கு மேற்பட்டு, பொன்விழா காணக்கூடிய அளவிற்கு, அவருடைய பொதுவாழ்வில் பொலிவோடு இருக்கக்கூடியவர். திடீ ரென்று அவர் இந்த இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

அறிவாயுதமாக, போர்க் கருவியாக...

இளைஞரணித்தொண்டர்,பொதுக்குழுஉறுப்பினர், அதைவிட ஒன்றை மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். நெருக்கடி காலத்தில் மிசா கைதி. எங்களைப் போன்றவர்களை அதற்கு முன்பே மிசாவில் கைது செய்து அடைத்தார்கள், நாங்கள் முன்னோடிகள். எங்க ளுக்கென்று ஒரு அருமையான இடத்தை, அப்போது இருந்த காருண்யம் மிக்க சில அதிகாரிகள், கருணை மிக்க மனிதநேயர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதற்குப் பெயர்தான் 9 ஆவது வார்டு. எங்கள் வாழ்நாளிலேயே நாங்கள் பெற்ற பேறுகளிலேயே அதுதான் தலையாய பேறு. அதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், எவ்வளவுக்கெவ்வளவு இரும்பு நெருப்பில் காய்ச்சிப் பதப்படுத்தப்பட்டு, அடிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அது அறிவாயுதமாக, போர்க் கருவியாக பின்னாளில் பயன்படுத்தப்படும் என்பதற்கு மிகப்பெரிய அடையாளம்.

அந்த வகையில்தான், நாங்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டு, 1976, பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு. சிறைக்கதவுகள் எல்லாம் மாலை 6 மணிக்கு மூடப்பட்டு விடும். இப்பொழுதெல்லாம் கைது செய்து மாலையில் விட்டுவிடுகிறார்கள்; அவர்களெல்லாம், மண்டபங்களில் இருந்து பழக்கப் பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால், ஓராண்டு காலம் தண்டனை பெற்று சிறைச்சாலைக்கு செல்லும்பொழுது, தொழுநோயாளிகளாக இருக்கின்ற சகோதரர்கள் இருந்த இடத்தில், அந்தத் தொழுநோயாளிகள் பயன்படுத்திய பஞ்சுகள் ரத்தக் கறையோடு இருக்கின்ற பஞ்சுகள்தான் எங்களுக்கு நண்பர்களாக அங்கே இருந்தார்கள். எட்டடிக் கொட்டடி என்றே அதற்குப் பெயர். ஆனால், அந்த அறையில் 10 பேரை அங்கே அடைத்து வைப்பார்கள்.

அரசியல் கைதிகள் என்று பெயர் வாங்கியவர்கள் நாங்கள்

பஜ கோவிந்தம், பஜ கோவிந்தம்' என்று சொல்லி உருண்டு கொண்டு போகிறார்களே, அதுபோல, உரு ளக்கூட முடியாத அளவிற்கு இருந்தது. இரண்டு பானைகளைக் கொடுப்பார்கள். ஒரு பானையில் தண்ணீர், ஒரு அலுமினியக் குவளை. இன்னொரு பானை, தாய்மார்கள் மன்னிக்கவேண்டும்; அந்தப் பானை நாங்கள் எல்லாம் சிறுநீர் கழிப்பதற்காக. பல பேருக்கு அந்நிலையில் சிறுநீரே வரவில்லை. கூச்சப்பட்ட காரணத்தினால். பிறகு எங்களுக்கு வேறு வழியில்லை. ஆகவே, அது பழகிப் போன நிலையில், மற்றவர்கள் வேறு பக்கம் திரும்பிக் கொள்ள, ஒருவர் அந்தப் பானையில் சிறுநீர் கழிக்கவேண்டும். அதை நாங்களே எடுத்துக்கொண்டு போய், ஒரு அரை மணிநேர இடைவெளியில் சுத்தம் செய்யவேண்டும். அரசியல் கைதிகள் என்று பெயர் வாங்கியவர்கள் நாங்கள்.

இரவு 9 மணிக்குமேலே திடீரென்று சிறைக் கதவைத் திறந்து,  பைல் என்று ஆங்கிலத்தில் அவர்கள் சொல்வார்கள்; வரிசைப்படுத்தி உட்கார்ந்தவுடன், ஆயுள் கைதிகளாக இருந்த அரைக்கால் சட்டை அணிந்தவர்கள், தடியோடு வந்து, எங்களை அடித்தார்கள். ரத்தம் சிந்தச் சிந்த அடித்தார்கள். எதற்கு அடிக்கிறார்கள்? ஏன் அடிக்கிறார்கள்? என்று யாருக்குமே காரணம் தெரியாது. நாங்கள் ஏன் சிறைக்கு வந்திருக்கின்றோம் என்பதே தெரியாது. எப்பொழுது வெளியில் போகப் போகின்றோம் என்பதும் தெரியாது. அதுதான் மிசா.

தளபதி ஸ்டாலின் அவர்கள், ரத்தக் கறையோடு வந்து விழுந்தார்

இரவு 11 மணியளவில் சிறையில் நாங்கள் படுத்துக் கொண்டிருக்கும்பொழுது, எனக்குப் பக்கத்தில் சிட்டிபாபு இருந்தார். அந்த நேரத்தில், சிறைக்கதவைத் திறக்கப்பட்டு, ஒரு இளைஞன் என் மேல் வந்து விழுந்தார். மங்கலான வெளிச்சத்தில் யார் அது? என்று பார்த்தபொழுது, தளபதி ஸ்டாலின் அவர்கள், ரத்தக் கறையோடு வந்து விழுந்தார். அவருக்குத் திருமணமாகி ஒரு மாதம்கூட ஆகவில்லை. அவருக்குத் தேனிலவே சென்னை சிறைச்சாலை. இப்படிப்பட்ட ஒரு தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரர்தான், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இன்றைக்குத் தலைவராக வந்திருக்கிறார்.

போராட்டக் களத்தினால் பக்குவப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவர் திடீரென்று வந்துவிடவில்லை. எனவே, குடும்ப அரசியல் என்று பொறுப்பற்று பேசுகிற வர்கள், இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.

நான் சொல்கின்ற செய்தி, கற்பனையான ஒன்றல்ல!

அப்பேர்பட்ட சூழ்நிலையில், சிறைச்சாலையில் அவருடைய தைரியத்தை அன்றைக்கே பார்த்தேன். ஏனென்றால், எங்களுக்கு அது பழக்கமானது. அவருக்கோ அதுதான் முதல் அனுபவம். முதலிரவு என்பதுபோல, சிறைச்சாலையில் முதலிரவு, முதல் அனுபவமான இரவு - தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் சொல்கின்ற செய்தி, கற்பனையான ஒன்றல்ல. இது பதிவான ஒன்று. அரசியல் வரலாற்றில் பதிவாவதைப்போல, நீதியரசர்கள் இங்கே வந்திருப்பது மிகவும் பெரிது. அதற்குமுன்பே, ஒரு நீதியரசர் எங்களைப்பற்றி, தளபதி ஸ்டாலினைப்பற்றி மிசா கொடுமைப்பற்றி பேசினார். அவர்தான் நம் நெஞ்சில் நிறைந்து வாழ்கின்ற நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் அவர்களாவார்கள்.

நேர்மை மிகுந்த நீதிபதி - யாரும் அண்ட முடியாத நெருப்புப் போன்ற ஒரு நீதிபதி - அவர் தீர்ப்பு எழுதினால், அந்தத் தீர்ப்புக்கு மாற்றம் இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு நீதிபதி - இத்தனைக்கும் திராவிட இயக்கக் கொள்கையை ஏற்காத ஒரு நீதிபதி - அப்படிப்பட்டவர்.

இஸ்மாயில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு, அந்த ஆணைய அறிக்கையில், தளபதி எப்படியெல்லாம் தாக்கப்பட்டார்; நாங்கள் எல்லாம் எப்படி தாக்கப்பட்டோம்; எவ்வளவு இழிந்த சொற்களை எங்கள்மீது வீசினார்கள் என்பதுபற்றியெல்லாம் இருந்தது. ஆனால், அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய ஆட்சியில், இப்படி செய்தவருக்குத் தண்டனை கொடுக்கவில்லை; மாறாக பதவி உயர்வு கொடுத்தார்.

நடவடிக்கை எடுக்கச் சொல்லி கோட்டையை நோக்கிப் பேரணி

அதற்காக நாங்கள் ஒரு போராட்டம் நடத்தினோம். அப்பொழுது ஒரு சம்பவம்.  மிசாவால் கைது செய்யப்பட்டவர்களை கொடுமையாக நடத்தியமைக்காக அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நடந்த பேரணியில், என்னுடைய தலைமையில் கோட்டையை நோக்கிச் செல்கின்றோம். நாங்கள் ஊர்வலமாகக் கோட்டையை நோக்கிச் செல்கிறோம்; கடற்கரை சாலையில் சென்று கொண்டிருக்கின்றோம். ஒரு கார்  நின்றது. அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் அவர்கள் எதிரில் வருகிறார். அந்தக் காரிலிருந்து கலைஞர் அவர்கள் இறங்குகிறார்.

தன்னுடைய துண்டை எடுத்து, என்னுடைய கழுத்தில் போட்டார் கலைஞர்

நீங்கள் செய்கின்ற பணி மிகவும் அற்புதமானது. நான் பயனாடை எதுவும் எடுத்துக்கொண்டு வரவில்லை என்று சொல்லி, தன்னுடைய துண்டை எடுத்து, என்னுடைய கழுத்தில் போட்டார். இன்னமும் அந்தத் துண்டு மிகப்பெரிய சான்றாவணமாக, ஒரு பெரிய சொத்தாக அதனை நான் மதிக்கிறேன். என்னுடைய துண்டை எடுத்து, அவர் தோளிலே போட்டுக்கொண்டு போனார்.

இது ஒரு பெரிய வரலாற்றுச் சம்பவம். இது ஒரு கொள்கைக் குடும்பம் என்றால், எத்தனைத் தியாக வரலாறுகள். இதைப்பற்றி மணிக்கணக்காக சொல்லிக்கொண்டு இருக்கலாம்.

எனவே, அரசியல் மிசா கைதி; இளைஞரணியின் மாநில செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், பிறகு மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர். அவர் மேயராக இருந்த காலம், ஒரு பொற்காலம். இன்றைக்குப் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், பல்வேறு இடங்களில் பாலங்களில் ஏறி, சுலபமாக செல்கிறோமே, அத்துணைப் பாலமும், ஸ்டாலின் வாழ்க! ஸ்டாலின் வாழ்க!! ஸ்டாலின் வாழ்க!!!'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

அதுமட்டுமல்ல, மேயாத மேயர்; சாயாத மேயர்; அப்படிப்பட்ட ஒரு மேயராக இருந்து, பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், பிறகு செயல் தலைவர். கலைஞர் அவர்கள் இருக்கும்பொழுதே, தளபதி ஸ்டாலின் அவர்களுடைய பணிகளையெல்லாம் பார்த்து பார்த்து பூரித்துப் போனார். கலைஞர் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்த நேரத்தில், அந்தப் பணிகளையெல்லாம் செய்து செய்து பழக்கப்பட்டவர்.

தலைமைப் பொறுப்பு என்பது தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு சட்டப்பூர்வமாக வந்தது

எனவே, தலைமைப் பொறுப்பு என்பது இருக்கிறதே, அவருக்கு சட்டப்பூர்வமாக வந்தது. அதிலேகூட ஒரு தனி சிறப்பு - கலைஞருக்கும் தாண்டி, தன் மகன் தந்தையைவிட தாண்டி இருப்பதில், எந்தவிதமான சங்கடமும் கிடையாது.

அந்த வகையில், கலைஞரையும் தாண்டி, தளபதி அவர்களுக்கு இயக்கத்தில் உண்டு. திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில் அது ஒரு சிறந்த பொன்னேடு.

கலைஞர் அவர்கள் காலத்தில், அண்ணா அவர்கள் மறைகிறார்; இளைஞர்களுக்குத் தெரியாது; எங்களுக்குத் தெரியும். அந்த வரலாற்றை நினைவுபடுத்தவேண்டும்.

அண்ணா அவர்கள் மறைந்தவுடன், இயக்கம் எப்படி ஆகுமோ? இந்தக் கப்பல் கரை சேரவேண்டுமே என்பதற்காக, கலங்கரை விளக்கமாக தந்தை பெரியார் அவர்கள் வழிகாட்டுகிறார்.

அடுத்த தலைவர் யார் என்றிருந்த நேரத்தில், கலைஞர்தான்  தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் என்னிடத்தில் சொல்லியனுப்பினார். தயங்கினார் கலைஞர் அவர்கள். இது என்னுடைய கட்டளை என்று சொல் என்றார் தந்தை பெரியார்.

போட்டியே இல்லாமல் தலைவரான பெருமை நம்முடைய தளபதியையே சாரும்!

அதேபோல, அவர்கள் பொறுப்பேற்ற நேரத்தில், ஒரு பெரிய கவலை. இந்த இயக்கம் சரியானபடி போகவேண்டுமே என்று. காரணம் என்னவென்றால், தலைமைப் பதவிக்குப் போட்டி - இது ஒரு ஜனநாயக இயக்கம். எனவேதான், அதை அனுமதித்தார்கள். அப்படி போட்டி வந்த நேரத்தில், கலைஞர் அவர்கள் வழக்கம்போல  அதிலும் வெற்றி பெற்றார். பிறகு நாவலர் அவர்கள் பின்வாங்கிக் கொண்டார். ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது.

எனவே, கலைஞருக்குக்கூட தலைமைக்குப் போட்டி இருந்தது; போட்டியே இல்லாமல் தலைவரான பெருமை நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. இது கலைஞருக்குப் பெருமை. கலைஞர் எப்படி கட்டுக்கோப்பாக இந்த இயக்கத்தை வைத்திருக்கிறார் என்பதற்கு அடையாளம்.

எனவே நண்பர்களே, ஒரு நல்ல தலைவர், சிறந்த கொள்கைகள், தேவைப்படுகின்ற நேரத்தில், ஆட்சியை வெறும் காட்சியாக நடத்தத் தெரியாதவர். இந்த இனத்தின் மீட்சியாக நடத்தவேண்டியவர் என்கிற காரணத் தினால்தான், அவரை நாம் வரவேற்கிறோம்.

தளபதி ஸ்டாலின் அவர்கள் சமுகநீதியில் அவர் செய்த பல்வேறு பணிகளைப்பற்றி பக்கம் பக்கமாக எடுத்துச் சொல்லலாம்.

நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறார்

எழுத்தாளர் சோலை அவர்கள், இன்றைக்கு நம் நெஞ்சில் வாழ்ந்துகொண்டிருக்கிறார், வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். திராவிட இயக்கத்தைச் சார்ந்தவரல்ல. அவர் உயிருடன் இருந்தபொழுதே, ஒரு அற்புதமான வரலாற்றை எழுதியிருக்கிறார், பல்வேறு கோணங்களில். அன்றைக்கே இந்தத் தகுதிகளைப் பெற்றிருக்கிறார். திடீரென்று அவர் தலைமைப் பொறுப்பிற்கு வந்து விடவில்லை. நெருப்பாற்றில் நீந்தி வந்திருக்கிறார். இன்றைக்கு அவர் ஆற்றல்மிகுந்த எதிர்க்கட்சித் தலைவர். இன்னுங்கேட்டால், நடைமுறையில் முதல்வரைப் போல, எதை எதை ஆளுங்கட்சி செய்யவேண்டுமோ, அதை அத்தனையும் செய்துகொண்டிருக்கிறார்.

ஊராட்சி மன்றமே மக்களுக்கு மறந்துவிட்டது; கிராம சபைக் கூட்டங்களை எல்லா இடங்களிலும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வருமுன் காப்போர் என்று சொல்லக்கூடிய அளவில், எல்லாவற்றையுமே மிகப்பெரிய அளவிற்கு செய்துகொண்டிருக்கின்ற ஒரு நல்ல தளபதியினுடைய ஆளுமை இருக்கிறதே, அது பெருமை மிகுந்தது.

தாய்க்கழகமான திராவிடர் கழகம் இதனை எடுத்துச் சொல்வதில் மிகுந்த பெருமை அடைகின்றோம். இந்த நான்காவது அத்தியாயத்தை திராவிடத் தளபதிதான் எழுதுகிறார்; அது பொன்னேடு அத்தியாயமாக இருக்கும் என்பதற்கு அடையாளம்.

எனவே, நண்பர்களே! நீண்ட நேரத்தை நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அத்தகைய தளபதி பல்லாண்டு காலம் வாழவேண்டும். அவருடைய மனித நேயம், நான் மறைவுற்றாலும், என்னுடைய உடல் உறுப்புகளைக் கொடையாக கொடுப்பேன்; பலமுறை குருதிக் கொடை அளித்திருக்கிறேன் என்று சொன்ன மனிதாபிமானி அவர்.

மாமனிதர் - சிறந்த மனிதர்

எனவே, அவர் சிறந்த கொள்கையாளர் - உயர்ந்த லட்சிய வீரர் - ஒப்பற்ற போர் வீரர் - இணையற்ற தளபதி என்பதையெல்லாம்விட மாமனிதர் - சிறந்த மனிதர் என்று சொல்லி, அவர் பல்லாண்டு காலம் வாழ்க என்று சொல்லி,

எனக்கு அடுத்தபடியாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் அவர்கள் உரையாற்றவிருக்கிறார். நான் ஆசிரியர் என்று அழைக்கப்படுகின்றேன், பலரால். ஆசிரியருக்கு ஆசிரியர் அவர். அவரை உரையாற்ற அவருடைய மாணவன் மரியாதையுடன் அழைக்கிறேன். வருக, கருத்துகளைத் தருக!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles