நமக்கு நாமே திட்டம் குறித்து விமர்சனம்
திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு, கூச்சல் குழப்பம்
குண்டுகட்டாக தூக்கப்பட்டு மு.க.ஸ்டாலின் வெளியேற்றம்
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு வாரம் இடைநீக்கம்
பேரவைத் தலைவரின் போக்கிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஆக.17- சட்டமன்றத்தில் இன்று (17.8.2016) சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தேர்தலுக்கு முன் மேற்கொண்ட நமக்கு நாமே திட்டம் குறித்த நடை பயணத்தை விமர்சனம் செய்து அதிமுக உறுப்பினர் பேசியதற்கு, திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை அவைக் காவலர்கள் குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றினர்.
சட்டமன்றத்தில் இன்று (17.8.2016) வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கான மானியக் கோரிக்கைமீது பங்கேற்று பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், தேர்தலுக்கு முன்பு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட நமக்கு நாமே திட்டம் குறித்து விமர்சனம் செய்து பேசினார்.
இதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர் பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதற்குப் பேரவைத் தலைவர் மறுத்ததால் அவையில் கூச்சல் குழப்பம் தொடர்ந்து ஏற் பட்டது. இதனால் பேரவைத் தலைவர் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் திமுக உறுப்பினர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவர்களை கூண்டோடு வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களையும் அவை காவலர்கள் வெளியேற்றினர். இந்நிலையில் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்ற நடவடிக்கைக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குந்தகம் ஏற்படும் வகையில் நடந்து வருவதால் அவர்களை ஒருவார காலம் தற்காலிக நீக்கம் செய்யப்பட வேண்டும் என தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இதையடுத்து, பேரவைத் தலைவர் இத்தீர்மானத்தை அவை குரல் வாக்கெடுப்புக்கு விட்டு, இத்தீர்மானத்தை நிறைவேற்றி ஒரு வார காலத்திற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது எனவும், இன்றைய நாள் எடுத்துக்கொள்ளப்பட்ட வீட்டுவசதி மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை மானியக் கோரிக்கைக்கு அமைச்சர்கள் பதிலளிப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டதோடு இன்றைய அவை நிகழ்ச்சிகள் இத்துடன் ஒத்திவைக்கப்படுகிறது என அறிவித்ததார்.
மு.க.ஸ்டாலின் விளக்கம்
அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரை உள்பட சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் திமுக உறுப்பினர்கள் முறையாக பங்கேற்றதாகக் குறிப்பிட்டார். திமுக உறுப்பினர்களை எப்படியாவது அவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என திட்டமிட்டே அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் பேசுவதாக சரமாரியாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், வேண்டும் என்றே திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதாக பேரவைத் தலைவர் அவதூறாக புகார் கூறுவதாகத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தாம் நடத்திய நமக்கு நாமே பிரச்சாரம் குறித்து அவமரியாதையாக அதிமுக உறுப்பினர் பேசியதாகக் குறிப்பிட்டார். அந்தச் சொல்லை நீக்க வலியுறுத்தியதால் திட்டமிட்டு அவையிலிருந்து வலுக்கட்டாயமாக தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பேரவைத் தலைவர் தனபால் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்வதாக கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், வரும் 22 ஆ-ம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை பேரவையில் விவாதிக்கப்பட உள்ளது. எனவே, இந்த விவாதத்தில் திமுகவினர் பங்கேற்பதைத் தடுக்கவே உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளதாக புகார் கூறியுள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கட்சித் தலைவருடன் விவாதித்து முடிவு செய்ய உள்ளதாக குறிப்பிட்டார்.