சென்னை, ஆக.17 வெளிநாடுகளிலிருந்து வரும் இந்து அகதிகளுக்கு ஒரு பக்கம் வெண்ணெய்யும், ஈழத் தமிழர்கள் என்ற நிலையில் உள்ள அகதிகளுக்கு இன்னொரு பக்கத்தில் சுண்ணாம்பும் வைக்கிறது மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான மோடி அரசு.
பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த 36,000 குடும்பங்களுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்து ரைத்துள்ளது. ஆனால், இலங்கையி லிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ளதமி ழர்களின் நலனை மத்திய அரசு உதா சீனப்படுத்தி வருகிறது. இதையடுத்து இலங்கை தமிழர்களுக்கு ஓரவஞ்ச னையா?எனமத்தியஅரசை மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாகச் சாடியுள்ளனர்.
அகதிகள் பிரச்சினை பல்வேறு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகள் பிரச்சினை குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நாடுகளில் இந்துக்கள் சிறுபான்மையினர், முஸ்லிம்கள் பெரும்பான்மையினர். எனவே, சிறு பான்மையினரான இந்துக்களை பெரும்பான்மையான முஸ்லிம்கள் விரட்டியடிப்பதாகக் கூறப்படுகிறது. மனிதநேய அடிப் படையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்து வந்துள்ள அகதிகளுக்கு உதவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட 36,000 இந்து குடும்பங்களைச் சேர்ந் தவர்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களின் மறு வாழ்வுக்கு வழிவகை செய்யும் வகையில் ரூ.2,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
மத்திய அமைச்சரவை இது குறித்து பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்கும். உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று டில்லி அரசியல் வட்டார தகவல் தெரிவிக்கிறது. இலங்கையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளி யேயும் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், இதுகுறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டால்தான் அவர்களால் கவுரவமான வேலைகளை தேடிக் கொள்ள முடியும். இலங்கைத் தமிழர்களிலும் இரு பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் இலங்கையின் ஆதி குடிகள் ஆவர். மற்றொரு பிரிவினர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது தோட்டத் தொழிலில் ஈடுபட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் மலையகத் தமிழர்கள் என்று குறிப் பிடப்படுகிறார்கள்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரி லிருந்து புலம் பெயர்ந்தவர்களின் மறுவாழ்வுக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கலாம் என்று பரிந்துரைத்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்துள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு கணிசமான தொகையை ஒதுக்கலாம் என்று பரிந்துரைக்காதது உள்துறை அமைச்சகத்தின் பாரபட்சமான அணுகுமுறையையே பிரதிபலிக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு ஓரவஞ்சனை செய்யும் மத்திய அரசை பொதுநல நாட்டம் கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் கடுமையாக விளாசியுள்ளனர்.
↧
ஈழத் தமிழ் அகதிகள் என்றால் இளக்காரம் பாகிஸ்தானிலிருந்து வரும் இந்து அகதிகளுக்கு மட்டும் ரூ.2000 கோடியாம்
↧