"நீட்'' தேர்வின் விளைவு - நமது மாணவிகள் பலி ஆவதா?
படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தான் வாய்ப்பு
இந்த ஆண்டிலும் மூன்று மாணவிகள் தற்கொலை - நெஞ்சம் பிளக்குது அந்தோ!
பெற்றோர்களே, வேடிக்கை பார்க்காதீர் - எங்களோடு களத்திற்கு வாருங்கள்!
"நீட்'' தேர்வின் முடிவுகள் - படித்த மேல்தட்டு மக்கள், பொருளாதாரத்தில் வலுவுள்ளவர்கள் வீட்டுப் பிள்ளை களுக்குத்தான் வாய்ப்பு என்று நிரூ பித்துள்ள நிலையில், இதனை எதிர்த்துப் போராடும் களத்தில் பெற்றோர்களும் பங்கு பெறவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நமது 38 உறுப்பினர்களும் போர்க்குரல் கொடுப்பார்கள் என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை நம்பிக்கை அளிப்பதாக இருக் கிறது என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:
"நீட்'' தேர்வின் முடிவுகள் வெளிவந்து விட்டன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அகில இந்திய அளவில் 23 ஆம் இடம்தான்; 2018 ஆம் ஆண்டில் 38.83 விழுக்காடு வெற்றி என்றால் இவ்வாண்டு 39.56 விழுக்காடுதான் - பெரிய அளவில் மாறுதல் ஒன்றும் இல்லை.
டாக்டர்களின் பிள்ளைகள் டாக்டர்கள்
இதில்கூட மதிப்பெண்கள் பெருமளவு பெற்றவர்களின் பெற்றோர்கள் டாக்டர்களா கவும், அதிகக் கல்வி கற்றவர்களாகவும்தான் இருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
தமிழ் வழியில் படித்துத் தேர்வு எழுதி யோரின் எண்ணிக்கை 31,239. ஆனால், இதில் தேர்ச்சி என்ன தெரியுமா? 2.06 விழுக் காடே!
இப்பொழுது வெளிவந்திருக்கிற முடிவு கள்கூடத் தகுதிக்கான தேர்வே தவிர, மருத் துவக் கல்லூரிக்கு இடம் கிடைப்பதற்கான முடிவுகள் அல்ல.
'நீட்' மாணவிகளின் பலி பீடமா?
"நீட்'' தேர்வின் முடிவால் கடந்த ஆண் டைப்போலவே தமிழ்நாட்டில் இவ்வாண்டும் மாணவிகள் மூவர் தங்கள் உயிரை முடித்துக் கொண்டுள்ளனர்.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நம்பிராஜ் மீன் வியாபாரி, அவரின் மகள் "வைஸ்யா'' உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டு துடிதுடித்து மரணம் அடைந்திருக்கிறார்.
திருப்பூர் பின்னலாடையில் பணியாற்றும் செல்வராஜ் - ராஜலட்சுமி ஆகியோரின் மகள் ரிதுசிறீ'' பன்னிரெண்டாம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் பெற்றும், நீட்'' தேர்வில் வெறும் 68 மதிப்பெண்களே பெற்ற நிலை யில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கூனிமேட்டைச் சேர்ந்த மோனிஷா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். (தமிழர்கள் வீட்டு பிள்ளைகள் தமிழ்ப் பெயர் இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்).
1.அனிதா, 2.பிரதீபா, 3.சுபசிறீ, 4.ஏஞ்சலின், 5.சுருதி ஆகியோரின் தற்கொலை களைத் தொடர்ந்து அந்தத் தற்கொலைப் பட்டியலில் 6.வைஸ்யாவும், 7.ரிதுசிறீயும் 8. மோனிஷா இடம்பெற்றுவிட்டனர்.
இதற்கோர் முடிவைக் காண வேண்டாமா?
நீட்'' என்பது ஒடுக்கப்பட்ட மக்களைத் தலையெடுக்கச் செய்யாத கொலை வாளாக ஆகிவிட்டதே! இதற்கொரு முடிவைக் காண வேண்டாமா? குருதிக் கொதிக்கிறதே!
பயிற்சிக்குப் பத்து லட்சம் ரூபாய் வரை செலவு
நீட் தேர்வில் முதலிடம் வர பெற்றோர்கள் மருத்துவர்களாக இருக்கவேண்டும் ரூ.10 லட்சம் வரை செலவிட தயாராக இருக்கவேண்டும்
கார்ப்பரேட் கொள்ளையோ, கொள்ளை!
இந்த ஆண்டு நாடுமுழுவதும் 7,97,031 பேர் நீட் தேர்வெழுதினார்கள் இதில் 3 51278 மாணவர்கள் மற்றும் 4,45,761 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் முதலிடம் பெற்ற நளின் கண் டேல்வாலின் தந்தை, தாய் மற்றும் அண்ணன் மருத்துவர்கள்,
இவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், நான் அலைன் நீட் பயிற்சிவகுப்பில் படித்தேன் அவர்கள் கொடுத்த பயிற்சியினால் இந்த இடத்தைப் பெறமுடிந்தது'' என்று கூறினார், இவரது தாயார் அளித்த பேட்டியில் நாங் கள் மருத்துவக் கல்வியின் முக்கியத்துவம் கருதி இரவு பகலாக எனது மகனின் படிப் பிற்கு பெரிதும் துணையாக இருந்தோம்'' என்று கூறினார்.
இரண்டாம் இடம் பிடித்த பாவிக் பன்சாலின் தந்தை டில்லி மாநில கல்வித் துறையின் அதிகாரியாக உள்ளார், தாயார் இயற்பியல் பேராசியர்! இவர் 2018-ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு ஆகாஷ் நீட் தனியார் பயிற்சி வகுப்பில் ஓர் ஆண்டு பயின்று வந்தார்.
மூன்றாம் இடம் பிடித்த அக்சாத் கவுசிக் என்ற மாணவனின் பெற்றோரும் மருத்து வர்கள்தான்; இவரும் ஆகாஷ் பயிற்சி வகுப்பில் பயின்றதால்தான் மூன்றாமிடம் பிடித்தேன் என்றார்.
தமிழகத்தில் முதல் இடம் பிடித்த சுருதி என்பவரின் பெற்றோரும் பிரபல மருத்து வர்கள் தான், இவரை கடந்த 3 ஆண்டுகளாக தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தி அதில் அவர் ஒரு தனியார் பள்ளியில் நீட் பயிற்சி பெற்று வந்தவர் என்று குறிப் பிட்டுள்ளார். பொதுத் தளமான கொரா என்ற தளத்தில் ஆகாஷ் என்ற தனியார் பயிற்சி வகுப்பு- ஓராண்டு பயிற்சிக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் கட்டணமாக வாங்குகிறது என்றும், அலைன் பயிற்சி வகுப்பில் ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கின்றனர்.
இதன்பொருள் என்ன? ஏற்கெனவே படித்த குடும்பம் பொருளாதார வசதி மிக்கக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் தான் நீட்'' தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். டாக்டர்களாகவும் ஆக முடியும் என்பதற்கு இனிமேலும் ஆதாரங்கள் தேவைப்படாது. மேலும் ஓராண்டு நீட்'' பயிற்சி பெற்று, இவ்வாண்டு எழுதி அதிக மதிப்பெண் பெற்றோரும் அதிகம்.
தொலைநோக்கோடு நாம் கூறியதுதான் நடந்திருக்கிறது
நீட்''டைக் கொண்டு வந்த தருணத்தி லிருந்தே இதன் அபாயத்தைத் தொலை நோக்கோடு குறிப்பிட்டு வந்தோம்.
சமுகநீதிக்கு எதிரான மத்திய அரசு, எப்படியும் உயர்ஜாதியினரின் ஆதிக்கம் மீண்டும் மருத்துவத் துறையில் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்ற உள்நோக்கத் துடன்தான் நீட்'' என்ற ஒன்றை சூழ்ச்சியாகத் திணிப்பதை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்கள், சமுகநீதியாளர்கள் கிளர்ந்து எழுவேண்டும்.
தமிழ்நாட்டின் சட்டம் என்னாயிற்று?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை - தமிழ் நாட்டுக்கு நீட்'' தேர்விலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கெதி என்ன? எந்தக் குப்பைக் கூடையில் வீசி எறியப்பட்டுள்ளது? அத்தகு சட்டத்தைப் பரிசீலிப்போம் என்று வாக்குறுதி கொடுத்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதவி உயர்வு கிடைத்து மத்திய நிதியமைச்சராகவும் ஆகிவிட்டார்.
கண்டும் காணாத அ.தி.மு.க. அரசு!
சட்டத்தை நிறைவேற்றிய அ.தி.மு.க. அரசோ, ஏதோ கடனுக்கு சட்டத்தை நிறை வேற்றிய மனநிலையில் மத்திய அரசுக்கு மண்டியிட்டுக் கிடக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றோர் 72.6 விழுக்காடு; தமிழ் நாட்டிலோ 92.54 விழுக்காடு.
ஆனால், நீட்'' தேர்விலோ அந்த மாநிலம் முதலிட மாநிலங்களில் இடம் பெற்றுவிட்டது. பன்னிரெண்டு ஆண்டுகள் படித்த படிப்பில் வாங்கப்படும் மதிப் பெண்கள் மலந்துடைக்கும் காகிதமாகவும், மேல்தட்டுக் கல்வி முறையில் படிப்ப வர்களுக்கு மலர்ச்செண்டும் கொடுத்து வாழ்த்தும்; இந்த சமுக அநீதிக்கு முடிவு கட்டப்பட வேண்டாமா?
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - வரவேற்கத்தக்கது
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தொடரில் தமிழக உறுப்பினர்கள் நீட்'' குறித்து ஆணித்தரமாக எழுப்பி - உரிய தீர்வு காண்பார்கள் என்று தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக் கது - நம்பிக்கை அளிப்பதாகும்.
பெற்றோர்களுக்கு வேண்டுகோள்!
மக்கள் மத்தியிலும் இதனை வேகமாகக் கொண்டு செல்லுவோம். பெற்றோர்களும் யாருக்கோ வந்த விருந்தென்று கருதி, நாம் களம் காணும்பொழுதெல்லாம் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு, களத்திற்கு வந்து ஒத்துழைக்க வேண்டும் என்பதும் நமது முக்கிய வேண்டுகோளாகும்.
நமது போராட்டம் - நீட்'' ஒழிப்புக்காக எத்தனை ஆண்டுகளானாலும் தொடரவே செய்யும்!
நுழைவுத் தேர்வை 21 ஆண்டுகளுக்குப் பின் - தொடர் போராட்டத்திற்குப் பின் ஒழித்தோம் என்பது வரலாறு. ஆகவே நம்பிக்கை இழக்கவேண்டாம்!
உங்கள் பிள்ளைகளுக்காகத் தானே நாங்கள் களமாடுகிறோம்!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
6.6.2019