Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மாவட்டத் தலைநகரங்களில் எழுச்சியுடன் நடத்துக!

$
0
0

மாநில உரிமைக்கு, சமுகநீதிக்கு எதிரான

இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வுகளை எதிர்த்து

ஜூன் 15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்


ஆர்.எஸ்.எஸின் மொழிக் கொள்கை யான சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு, அதன் சமுகநீதிக்கு எதிரான மனப் பான்மைக்கு அடையாளமான ‘நீட்'  திணிப்பு  இவற்றை எதிர்த்து வரும் ஜூன் 15 அன்று மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒத்த கருத் துள்ளவர்களையும் ஆங்காங்கே இணைத்துக்கொண்டு நடத்துமாறு திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை விவரம் வருமாறு:

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு என்பது அடிப்படையில் இந்துத்துவ மதவாதக் கோட்பாடுகளைக் கொண்டதாகும். ஒரு தேர்தல் அறிக் கையிலேயே (2019) ராமன் கோவில் கட்டுவோம் என்று அறிவிக்கப்படுகிறது அதுவும் மதச்சார்பற்ற அரசியல் சட்டம் உள்ளபோது என்றால், அதன் பொருள் என்ன?

இந்தி - சமஸ்கிருதம் என்பது

ஆர்.எஸ்.எஸ். கொள்கை

ஆர்.எஸ்.எஸைத் தாயாகக் கொண் டதுதானே பி.ஜே.பி.? ஆர்.எஸ்.எஸ். வகுக் கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய கட்டாயம் பி.ஜே.பி. அரசுக்கு உண்டு.

ஆர்.எஸ்.எஸைப் பொருத்தவரை இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம் என்பதுதான் அதன் கொள்கை. குருஜி கோல்வால்கரின் ‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்' (‘ஞானகங்கை') எனும் நூல் அதனைத்தான் குறிப்பிடுகிறது.

மாநிலங்களே கூடாது என்பதுதான்

ஆர்.எஸ்.எஸின் கோட்பாடு

அதேபோல, மாநிலங்களே இருக்கக் கூடாது - இந்தியா ஒற்றை நாடாகத்தான் (ஹிஸீவீtணீக்ஷீஹ்) இருக்கவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் கோட் பாடாகும். அப்படியிருந்தால்தானே ஒற்றை நாடு, ஒற்றை கலாச்சாரம், ஒரே மொழி, ஒரே மதம் என்ற ஆர்.எஸ்.எஸின் கோட்பாட்டை நிறைவேற்ற முடியும்.

இந்தக் கண்ணோட்டத்தில்தான் மத்திய பி.ஜே.பி. அரசு மேற்கொண்டுள்ள இந்தி, சமஸ்கிருதத் திணிப்பைப் பார்க்க வேண்டும்.

1937-1938 ஆம் ஆண்டுகளில் சென்னை மாநில பிரதமராக வந்த ராஜ கோபாலாச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் முதன்முதலில் இந்தியைத் திணித்தார். அப்பொழுதே அதனை எதிர்த்துத் தந்தை பெரியார் தலைமையில் சென்னை மாநிலமே போர்க்கொடி தூக்கியது.

1938 இல் ஆச்சாரியார் என்ன சொன்னார்?

அப்பொழுது இலயோலா கல்லூரியில் பேசும்போது, சமஸ்கிருதத்தைப் படிப் படியாகக் கொண்டு வரவே முதற்கட்டமாக இந்தியைப் புகுத்துகிறேன் என்று சொன் னதையும்  கணக்கில் கொண்டால், இப் பொழுது மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு சமஸ்கிருதத்தையும், இந்தியையும் ஒரே நேரத்தில் திணிக்க முயலுவதன் பின்னணியும், நோக்கமும் மிக மிக எளிதாகப் புரியும்.

மூன்றாவது மொழியாக ஜெர்மன் மொழியை நீக்கி சமஸ்கிருதத்தைத் திணித்தவர்கள் யார்?

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் நெடுங்காலமாக இருந்து வந்த ஜெர்மன் மொழியை அகற்றி விட்டு, அதற்குப் பதில் சமஸ்கிருதத்தை இந்த அரசு கொண்டு வரவில்லையா?

சமஸ்கிருதத்துக்கும், மக்களுக்கும் என்ன ஒட்டுறவு? எந்தக் காலகட்டத்திலுமே சமஸ்கிருதம் ஏட்டு மொழியாக இருந்து வந்திருக்கிறதே தவிர நாட்டு மக்கள் பேசும் மொழியாக,   வீட்டு மொழியாக இருந்த தில்லையே!

பார்ப்பனர் வீட்டு மொழியாக சமஸ்கிருதத்தில் பேசுவது உண்டா?

அப்படிப் பார்க்கப் போனால் இந்தியா முழுவதும் இருக்கும் பார்ப்பனர்கள் மத்தி யிலே அவர்களின் தாய்மொழியான சமஸ் கிருதம் பேச்சு மொழியாக இருந்தால், சமஸ்கிருதம் பேசும் மக்கள் தொகை குறைந்தபட்சம் ஆறு கோடி என்று அரசு புள்ளி விவரத்தில் இடம்பெற்றிருக்கும். ஆனால், அரசு எடுத்த கணக்கின்படி இந்தி யாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண் ணிக்கை 24,821 அதாவது 0.1 விழுக்காடாகும்.

இந்த மொழியைத்தான் அனைத்துப் பள்ளிகளில் படிக்கவேண்டும் என்று பஞ்சக் கச்சத்தை இறுக்கிக் கட்டி செயலில் இறங் குகிறார்கள்!

உண்மையைச் சொல்லவேண்டுமானால், சமஸ்கிருதத்தை செத்த மொழியாக்கிய கைங்கரியத்தைச் செய்தவர்களே இந்தப் பார்ப்பனர்கள்தான். அது ‘‘தேவ பாஷை'' என்றும் (தமிழ் நீஷ பாஷை என்றும்), இந்நாட்டில் உள்ள பெரும்பாலான மக் களான சூத்திரர்களும், பஞ்சமர்களும் சமஸ்கிருதத்தைப் படிக்கக்கூடாது, பேசக் கூடாது என்று சாஸ்திர ரீதியாகவே ஆக் கியவர்கள் அன்று இதே பார்ப்பனர் கள்தானே!

‘‘வேதம் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; கேட்டால், ஈயத்தைக் காய்ச்சி காதுகளில் ஊற்றவேண்டும்'' என்று எழுதி வைத்தவர்களே இப்பொழுது ‘‘சமஸ் கிருதத்தைப் படியுங்கள், பல்டி அடித்துப் படியுங்கள், பள்ளிகளில் படியுங்கள்!'' என்ற கூப்பாடு போடும் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்லுவது!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, 23 ஜனவரி 1968 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கீழ்க்கண்ட முடிவுகள் இதில் உள்ளடங்கியிருந்தன.

1.மும்மொழித்திட்டம் கைவிடப்பட்டு இந்தி முழுமையாகக் கல்வித்திட்டத்திலிருந்து விலக்கப்பட்டது. தமிழும், ஆங்கிலமும் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டது.

2. தேசிய மாணவர் படையில் இந்தி ஆணைச் சொற்கள் விலக்கப்பட்டன.

3. அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படும்.

4. அய்ந்து ஆண்டுகளுக்குள் தமிழ் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

5. நடுவண் அரசை இந்திக்கு  அளிக்கப்படும்  தனிநிலையை  முடிவுக்குக்  கொண்டுவந்து அனைத்து மொழிகளுக்கும் சமநிலை அளிக்க வற்புறுத்தியது.

6. அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது  அட்டவணையில்  உள்ள அனைத்து  மொழிகளின் வளர்ச்சிக்கும்  நிதிஉதவி அளித்திட இந்திய அரசைக் கோரியது.

இந்த  நடவடிக்கைகளால்  இந்தி எதிர்ப்பாளர்கள் அமைதியடைந்து மாநிலத்தில் இயல்பு  நிலை திரும்பியது

ஓராண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்தார்களே!

அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி, ஓராண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து கோடிக்கணக்கான ரூபாய் களை கொட்டியழுதார் - பிள்ளை பிழைக்க வில்லையே! கலைஞர் முதல்வராக இருந்த போது, தமிழ் ஆண்டு அறிவிக்குமாறு, கேட்டார்; மத்திய பா.ஜ.க. அரசு செவி சாய்க்கவில்லையே!

விவேகானந்தர்

என்ன கூறுகிறார்?

மோடி தலைமையிலான ஆட்சியில்கூட சமஸ்கிருத வாரம் கொண்டாடக் கட்டாயப் படுத்தவில்லையா? எதற்காக சமஸ்கிருதம் தேவை? இந்துத்துவாவை அமெரிக்காவரை சென்று ஏற்றுமதி செய்த விவேகானந்தர் என்ன சொல்லுகிறார்?

‘‘மதச் சண்டைகளும், ஜாதி வேற்று மைகளும், கலகங்களும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாக இருந்ததும், இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத நூல்கள் தொலைந்து போகுமானால், இப் போராட்டங்களும் தொலைந்து போகும்!'' என்று விவேகானந்தர் கூறியுள்ளாரே!

மத அடிப்படையில் கலவரங்களில் ஈடுபட்டிருக்கும் சங் பரிவார்களுக்கும், பி.ஜே.பி.க்கும் சமஸ்கிருதம் இப்பொழுது தேவைப்படுகிறது என்று எடுத்துக் கொள்ளவேண்டும்!

இதற்கான எதிர்வினையாக மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற் படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்ட வர்களும், சமுக நீதியாளர்களும் களம் காணவேண்டும். முதலாவதாக கோவி லுக்குள் இருக்கும் சமஸ்கிருதத்தை வெளி யேற்றுவதற்கான மக்கள் போராட்டம் வெடிக்க ஆவன செய்யப்படவேண்டும். வேரில் கை வைத்தால்தான் இந்த வேதி யர்களின் கொட்டங்கள் அடங்கும். நோய் நாடி நோய் முதல்நாடி, அதன் மூலத்தில் கை வைக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை

என்பதுதான் சட்டம்

அதேபோல, இந்தியையும் மூன்றாவது மொழியாகப் படிக்கவேண்டும் என்று சொல்லுவது எந்த வகையில் நியாயம்? தமிழ்நாட்டைப் பொருத்தவரை இருமொழிக் கொள்கை என்பது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே சட்ட ரீதியாக ஆக்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட நிலையில், 50 ஆண்டுகாலமாக உள்ள நிலையில், மத்திய அரசு ஏன் வீண் வம்பை விலைக்கு வாங்க ஆசைப்படவேண்டும்?

தந்தை பெரியார் அறிவித்த தேசியக் கொடி எரிப்புப் போராட்டம் - நினைவிருக்கிறதா?

1955 ஆம் ஆண்டில் பள்ளிகளில் இந்தியைத் திணித்தபோது,  தேசியக் கொடி யைக் கொளுத்தும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவிக்கவில்லையா? (1.8.1955) பிரதமர் நேரு பதறி, முதல்வர் காமராசரைத் தொடர்பு கொண்டார்.

அப்பொழுது முதலமைச்சராக இருந்த காமராசர், பிரதமரிடமிருந்து வாக்குறுதியைப் பெற்று, மத்திய - மாநில அரசுகளின் சார்பில்  தமிழகப் பள்ளிகளில் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்று உறுதிமொழி கொடுத்தாரே - இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் எரிமலையில்  கைவைக்கலமா? அமர்ந்து மகுடி வாசிக்கலாமா?

அந்த நேரத்தில்கூட தந்தை பெரியார் என்ன அறிக்கை வெளியிட்டார்? முதல மைச்சரின் வாக்குறுதியை ஏற்று, தேசியக் கொடி கொளுத்தும் போராட்டத்தை ஒத்தி வைக்கிறேன் என்று சொன்னதை இப் பொழுது நினைவூட்டுவது பொருத்த மானதாகும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழ்நாட்டில் ஒரு வீர காவியம்!

தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு என்பது ஒரு வீரக் காவியமாகும். ஆட்சிகளை அசைத்திருக்கிறது - ஏன் வீழ்த்தியும் இருக்கிறது - பல கட்டங்களில்!

உடம்பெல்லாம் மூளை என்று பார்ப் பனர்களால் போற்றப்படும் ராஜாஜி அவர் களையே மனமாற்றம் செய்தது ஆகும்.

மக்களின் பண்பாட்டு ரீதியான நுண்ணிய உணர்வுகளில் கை வைத்தால், அதன் விளைவு விபரீதமாகும்.

இந்தக் காரணங்களுக்காகவும் -

‘நீட்' எனும் கொடுவாள்!

போராடிப் போராடிப் பெற்ற சமுகநீதியின் ஆணிவேரை வீழ்த்தும் வகையில், ‘நீட்' என்னும் கொலைவாளினைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது மத்திய பி.ஜே.பி. அரசு.

‘நீட்' தேர்வின் முடிவுகள்

‘நீட்' தேர்வின் முடிவுகள் எவற்றைத் தெரிவிக்கின்றன? தாழ்த்தப்பட்டவர்கள் 20,009 பேர்களும், பிற்படுத்தப்பட்டவர்களில் 63,479 பேர்களும், உயர்ஜாதியினரில் 7,04,335 பேர்களும்  தகுதி பெற்றுள்ளனர் என்கிற இந்தப் புள்ளி விவரம் போதாதா? ‘நீட்'டால் பாதிக்கப்படுவோர் யார்? பலன் பெறுவோர் யார் என்பதற்கு?

சமஸ்கிருதம் இந்தி, ‘நீட்'டை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு, ‘நீட்' ஏற்பாடு இவற்றைக் கண்டிக்கும் வகையிலும், மத்திய அரசு இவற்றைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியும் வரும் 15.6.2019 சனியன்று காலை 10.30 மணியளவில் தமிழ்நாடு எங்கும் மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஒத்தக் கருத்துள்ள அனைவரையும், கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கழகப் பொறுப்பாளர்கள், இந்தக் காலகட்டத்தில் நாம் ஆற்றவேண்டிய, முன்னெடுக்க வேண் டிய முக்கிய கடமையாகக் கருதி இவ் வார்ப்பாட்டத்தை மக்கள் போராட்டமாக எழுச்சியுடன் நடத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தஞ்சையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில் நடக்கவிருக்கும் ஆர்ப்பாட் டத்தில் நான் பங்கேற்கிறேன். சென்னையில் நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பங் கேற்பார்.

மற்ற மற்ற மாவட்டங்களில் எழுச்சியுடன் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத் துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

9.6.2019

 

 

 

 


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles