சமையல் உதவியாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களை இடமாற்றம் செய்வதா?
தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்த அவலமா?
சமையல் உதவியாளர்களாகப் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட இரு தாழ்த்தப்பட்ட பெண்களை, ஊரார் எதிர்ப்பு என்ற காரணம் கூறி, வேறு இடத்திற்கு மாற்றியது சட்டப்படி குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும். எடுக்கா விடின், போராட்டம் வெடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி யில் உள்ள வலையப்பட்டி என்ற கிரா மத்தில் அங்கன்வாடியில் உதவியாளராகப் பணிபுரிய மாவட்ட ஆட்சியரால் 3.6.2019 அன்று (10 நாள்களுக்கு முன்பு) அன்ன லட்சுமி என்ற தாழ்த்தப்பட்ட சமுக(எஸ்.சி.,)த்தைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்கச் சென்றுள்ளார்.
சமையல் பணி உதவியாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் மாறுதல் செய்வதா?
இவரது பணி குழந்தைகளுக்கான சமையல் கூட உதவியாளர் பணியாகும். இதை அறிந்த அந்த கிராமத்து மற்ற ஜாதி யினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். அதனால், அவர் வேறு ஒரு கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். (இதுவே தவறான முடிவாகும். சட்டத்தை அமல் படுத்தவேண்டிய அதிகாரிகளே இப்படி வளைந்து கொடுக்க ஆரம்பித்தால், நிர் வாகம் நடத்த இயலுமா?)
மற்றொரு தாழ்த்தப்பட்ட சமுகப் பெண் - ஜோதிலட்சுமியை மதிப்பனூர் என்ற ஊரில் அங்கன்வாடி ஊழியராக - சமையல் உதவியாளராக நியமனம் செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர். அவரும் வேறு இடத் துக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த இரு பெண்களாலும் எங்கள் பிள்ளைகள் உண்ணும் உணவு தீட்டுப் பட்டு விடும்'' என்று கூறி, ஜாதி வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்!
அந்த இரு பெண் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை; அச்சத்தோடு, என்ன செய்வது என்று அறியாமல் வேதனையில் வெந்து கருகுகின்றனர் என்று செய்திகள் வருகின்றன.
ஜனாதிபதியாகக்கூட தாழ்த்தப்பட்டவர் வரலாம் - ஆனால் சமையல் உதவியாளர் பணிக்கு வரக்கூடாதா?
2019 இல்கூட இந்நிலையா?? தாழ்த்தப் பட்ட சமுகத்தினர் ஜனாதிபதி என்றாலும் இந்நிலையா?
அதுவும் பெரியார் மண்ணிலா? தமிழ் நாட்டிலா? வடநாட்டினைப் பார்க்கும் பொழுது, இங்கு வெள்ளை உடை மீது பட்ட கறுப்புப் புள்ளி பளிச்'சென்று தெரியவே செய்யும்.
இதன்மீது தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர் அவர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த கிராமத்தின் ஜாதி வெறியர்களுக்கும், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை மதிக்காமல், ஜாதி ஆணவப் போக்கை நிர்வாணத் தன் மையில் காட்டியவர்களுக்கும் தக்க தண்டனை தேவை! வழக்கும்போட வேண்டும்.
சம்பந்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண் கள்மீது இனிமேல் கற்பனைக் குற்றச்சாற்றுகள் - பொய்ப் புகார்கூட ஜோடனை செய்யப்பட்டு, மேல்ஜாதி என்ற ஆணவம் கோர நிலைப்பாட்டுக் கொடுமையை நியா யப்படுத்த முயலக்கூடும்.
முதலமைச்சர் தலையிடவேண்டும்!
முதல்வரின் துறை காவல் துறை என்ப தால், இதில் குற்றமிழைத்தவர்களை தக்க வகையில் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
உதாரணத்திற்குக் கூறுகிறோம்,
மாவட்ட ஆட்சியர் தாழ்த்தப்பட்டவர் என்றால், ஜாதி வெறியர்கள் அவரை நிரா கரிப்பார்களா? ஏற்க மாட்டோம் என்பார் களா?
அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக் காகச் செல்லும்பொழுது, மருத்துவர் தாழ்த் தப்பட்டவராக இருந்தால், மறுப்பார்களா? மறுத்தால் அரசுதான் ஏற்று உடனே மாற்றம் செய்யுமா?
வழக்கை விசாரிக்கும் நீதிபதி, தாழ்த்தப்பட்ட சமுகத்தவர் என்றால், இவரை ஏற்கமாட்டோம் என்று கூறினால், அதை உயர்நீதிமன்றம் ஏற்குமா?
பார்ப்பனர்களின் சந்தர்ப்பவாதம்
இப்படிப்பட்டவைகளை நாம் எடுத்துக் காட்டி கண்டித்தாலும், பார்ப்பன ஆதிக்க வாதிகள் உடனே என்ன சொல்லுவார்கள்? பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நாங்களா கலவரம் செய்கிறோம்? பார்ப்பனரல்லாத ஜாதிக்காரர்கள்தானே கலகம் செய்கிறார் கள்'' என்று கூறி, தங்களை ஏதோ ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்டவர் களைப்போல காட்டி, நம் அரைவேக்காடு நுனிப்புல்லர் களை ஏமாற்றுவர்!
விஷ விருட்சத்தின் இந்த ஜாதிப் பழம் என்பதற்கான மூலம் - வேர் அல்லவா? அதிலிருந்துதானே முளைத்தது!
புரட்சியாளர் அம்பேத்கர் கூறிய அடுக்குமுறை ஜாதிய அமைப்பு ‘Graded Inequality' யின் படிக்கட்டு முறையின் தீய விளைவு இப்படித்தான் வெளிப்படுவதும் உறுதி!
தண்டனை கொடுக்கப்பட வேண்டும்
ஜாதி வெறி, ஆணவக் கொலை வெறி போன்ற கொடுமைகள் தமிழ்நாட்டில் தலை தூக்குவதே கூடாது; இதற்குத் தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகத்தினைப் போன்ற ஜாதிவெறி, ஜாதி தீண்டாமை ஒழிப்பு அமைப்புகளின் பிரச்சாரங்களை ஊக்கப் படுத்த முன்வராவிட்டாலும், குறைந்தபட்சம் தடுக்காமலிருந்தாவது ஒத்துழைப்புத் தந்தால், அதன் பளு - சுமையாவது குறையும்.
போராட்டங்கள் வெடிக்கும்!
அரசு சரியான ஒத்துழைப்புக் கொடுத் தால், தமிழக அரசுக்கும், முற்போக்கு இயக்கங்களுக்கும் முன்தோன்றும் இத் தகைய அறைகூவல்களும் அகலும் வாய்ப் பும் ஏற்படுமே!
தமிழ்நாட்டில் இனிமேலும் இத்தகு அவலம், கொடுமை எங்கும் நடைபெறக் கூடாது.
இதில் மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் சமரசம்' செய்து கொண்டு சட்டத்தின் மரியாதையை, நிர்வாகத்தின் உறுதியைக் குலைத்துவிடக் கூடாது. இல்லையேல் போராட்டங்கள் வெடிப்பது உறுதி!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
13.6.2019